நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று தொடரை கைப்பற்றுவதற்கு இன்னும் ஐந்து விக்கெட்டுகளே தேவையாக இருப்பதோடு தோல்வி ஒன்றை தவிர்ப்பதென்றால் நியூசிலாந்து அணி எஞ்சிய இரண்டு நாட்களில் அசாதாரண ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.
காலியில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 என்ற இமாலய ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று (28) தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி 39.5 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கே சுருண்டது.
கடைசி வரிசையில் மிட்சல் சான்ட்னர் பெற்ற 29 ஓட்டங்களே அதிகம் என்பதோடு மேலும் இருவர் மத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர்.
இதன்போது காலியில் தொடர்ந்து தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் பிரபாத் ஜயசூரிய 18 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பதம்பார்த்தார். இது அவர் ஒன்பதாவது முறையாக ஐந்து விக்கேட்டுகளை வீழ்த்துவதாக இருந்தது.
ஒருவேளை பிரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமானால் அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு நூற்றாண்டுக்கு மேல் நீடிக்கும் சாதனையை சமன் செய்ய முடியும்.
இங்கிலாந்தின் ஜோர்ஜ் லோமன் 1896 ஆம் ஆண்டு 16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை அடைந்ததே இன்று வரை சாதனையாக உள்ளது.
அதேபோன்று நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கைக்கு எதிரான அந்த அணி பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 1992 இல் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததே குறையாக இருந்தது.
அதேபோன்று இந்த இன்னிங்ஸில் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதல் சிலிப்பில் இருந்து ஐந்து பிடியெடுப்புகளைப் பெற்றார். அதாவது விக்கெட் காப்பாளர் அன்றி இன்னிங்ஸ் ஒன்றில் அதிக பிடியெடுப்புகளைப் பெற்ற வீரர்கள் வரிசையில் தனஞ்சய முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த மைல்கல்லை அவர் 15 வீரர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையை விடவும் 514 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் நேற்று பகல்போசன இடைவேளைக்கு முன்னரே நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸுக்காக பலோ ஓன் செய்ய வேண்டி ஏற்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் நியூசிலாந்து அணி ஓட்டங்களைப் பெறுவதற்கு முன்னரே விக்கெட்டை பறிகொடுத்தது. டொம் லதம் டக் அவுட் ஆனதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு டெவோன் கொன்வோய் (61) மற்றும் கே வில்லியம்சன் (46) 97 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
எவ்வாறாயினும் மேலும் 24 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நியூசிலாந்து அணி தடுமாற்றம் கண்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய ஆட்ட சற்று முன்கூட்டியே நிறுத்தப்படும்போது நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
டொம் பிளன்டல் 47 ஓட்டங்களுடனும் கிளன் பிலிப்ஸ் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
இலங்கை சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு பிரபாத் ஜயசூரிய மற்றும் தனஞ்சய டி சில்வா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இதன்படி நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு ஐந்து விக்கெட்டுகள் மாத்திரமே கைவசம் இருக்க இன்னும் 315 ஓட்டங்களைப் பெற வேண்டி உள்ளது. இலங்கைக்கு அந்த ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் போதுமானது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.