ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று, பொதுத்தேர்தலிலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்தார். கொள்கை அடிப்படையில் கூட்டிணைந்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்டமைப்புக்குள் பதவிகள், பொறுப்புகளுக்கான எந்தப் போட்டியும் இல்லையென அவர் குறிப்பிட்டார். தனியார் தொலைக்காட்சியொன்றின் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கே: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இந்த நிலையில் அநுர குமார திசாநாயக்கவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி நியமிக்கப்பட்டு அவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏன் இது நிறைவேற்றப்படவில்லை?
பதில்: ஜனாதிபதியின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு லக்ஷ்மன் நிபுணாராச்சியின் பெயர் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இது விடயத்தில் இரு நிலைப்பாடுகள் காணப்பட்டன. வர்த்தமானி அறிவித்தலில் பெயர் வெளியிடப்பட்ட பின்னர் அமைச்சுப் பொறுப்புகளை அவர் ஏற்க முடியும் என்றதொரு நிலைப்பாடு முன்வைக்கப்பட்ட போதும், பாராளுமன்றத்தில் பதவிச்சத்தியப் பிரமாணம் செய்த பின்னரே அவர் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்க முடியும் என்றதொரு நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறான பின்னணியில் சட்டத்துக்கு மதிப்புக் கொடுப்பது என்ற கொள்கையைக் கொண்ட நாம், பாராளுமன்ற உறுப்பினராக சபையில் பதவிச்சத்தியப் பிரமாணம் செய்வதற்குப் போதிய காலம் இன்மையால் ஜனாதிபதி உட்பட மூவருக்குள் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வதற்கும், மூவரைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கும் தீர்மானித்தோம்.
கே: ஆட்சிமாற்றம் ஒன்றின் போது அமைச்சின் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள். எனினும், உங்கள் அரசாங்கத்தில் சகல அமைச்சுக்களுக்குமான செயலாளர்களை மாற்றவில்லை. அந்தந்தப் பதவிகளில் இருந்த செய லாளர்கள் பலர் அவ்வாறே இருக்க, புதிய செயலாளர்கள் சிலர் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை எவ்வாறு சிந்தித்தீர்கள்?
பதில்: உண்மையில், குறுகிய காலத்துக்குள் பொதுத்தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அதற்கான ஆயத்தப்படுத்தல்களே மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. அமைச்சுகளை வினைத்திறனான முறையில் செயற்படுத்தி மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அவர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை சரியான முறையில் கொண்டு செல்லவேண்டிய தேவையும் உள்ளது. எனவே புதிய செயலாளர்களை நியமித்து அவர்களின் ஊடாக இதனை முன்னெடுப்பதற்கு சிறிது காலம் ஏற்படும். எனவேதான் ஏற்கனவே இருந்த அமைச்சின் செயலாளர்களைக் கொண்டு அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்தோம்.
கே: ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் அனைவரும் கடுமையாக செயற்பட்டிருந்தீர்கள். இவ்வாறான நிலையில் பொதுத்தேர்தலில் இந்தளவு மட்டத்திற்குச் செல்ல முடியும் எனக் கருதுகின்றீர்களா?
பதில்: நாங்கள் உண்மையில் 2021 டிசம்பர் 21ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்படுத்தலுக்கான திட்டத்தை வகுத்து 24 மாதங்கள் இதற்காகப் பாடுபட்டோம். எனினும், பொதுத்தேர்தலுக்கு 52 நாட்கள் என்ற குறைந்தளவு நாட்களே இருக்கின்றன. இருந்தபோதும் நாம் களைப்படையவில்லை. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும் பெருமளவில் எமக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இதேபோன்று, பொதுத்தேர்தலிலும் மக்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்று வெற்றிகொள்ள முடியும் என நாம் நினைக்கின்றோம். பலம்மிக்க மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
கே: ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அப்படியே பொதுத்தேர்தலுடன் இணைத்துப் பார்க்கும்போது பெரும்பான்மையைப் பெறுவது கடினமானதொன்றாக இருக்கலாம். இருந்தபோதும், ஜனாதிபதித் தேர்த லில் வெற்றிபெற்ற கட்சி பொதுத்தேர்தலிலும் வெற்றிபெறுவது கடந்த காலங்களில் காணப்பட்ட நிகழ்வாகும். உங்களுடைய கணிப்பு எவ்வாறானதாகும்?
பதில்: 3 வீதமாக இருந்த எமது வாக்கு வங்கி ஜனாதிபதித் தேர்தலில் 42 வீதமாக அதிகரித்தே இந்த வெற்றியை அடைய முடிந்தது. தேர்தல் காலத்தில் எமது கட்சி தொடர்பில் மக்களைக் குழப்பும் வகையில் போலியான பிரசாரங்கள், விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டன. இவ்வாறான சேறுபூசல்கள் மத்தியிலும் மக்கள் எமக்காக நின்றுள்ளனர். அது மாத்திரமன்றி, தேசிய மக்கள் சக்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளாத மக்கள் பலர் இருக்கின்றனர் என்பதை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்.
குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் எமக்கு வாக்களிக்காத பகுதிகள் எனப் பல இடங்களில் தேசிய மக்கள் சக்தி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதுவரை எம்முடன் இணைந்து கொள்ளாத மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தக் கஷ்டமான பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
கே: நடைபெறவிருக்கும் பொது த்தேர்தலில் புதியவர்கள் பலர் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்பாளர் பட்டியல்களைத் தயாரிக்கும்போது எவ்வாறான கொள்கைகளைக் கடைப்பிடிக்க எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: தேசிய மக்கள் சக்திக்கு இது பிரச்சினையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில், இது உண்மையிலேயே கூட்டு முயற்சியாகும். கடந்த 6 வருடங்களாக பல்வேறு தரப்பினர்களுடன் இணைந்து கூட்டாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் கட்டமைப்பாகும். தேசிய மக்கள் சக்தியை அமைப்பதில் ஜே.வி.பி பாரிய பங்காற்றியது. ஜே.வி.பி கடந்த பல வருடங்களாக இலங்கையில் முற்போக்கான இடதுசாரியைப் பின்பற்றிவந்த கட்சியாகும். எனவே, மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பது தொடர்பில் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வலுவான அனுபவம் உள்ளது. நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படுகின்றோம். எவரும் அதிகாரத்தையும், பதவியையும் எதிர்பார்த்துப் பணியாற்றவில்லை. எனவே எந்தவொரு பதவியையும், பொறுப்பையும் எம்மைவிடப் பொருத்தமானவர்களுக்கு வழங்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம். இதனால் தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட விடயங்கள் பிரச்சினையாக இருக்காது.
கே: இம்முறை தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்குப் பலர் முன்வருவார்கள். பொதுவாக கட்சிக்குள் விருப்பு வாக்குகள் குறித்த போட்டிகள் நிலவுவது வழமை. தேசிய மக்கள் சக்தியில் இது பற்றி யோசித்துள்ளீர்களா?
பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இது கூட்டாக இணைந்து உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பு. இதில் உள்ள எவரும் விருப்பு வாக்குகளுக்காக கட்சிக்குள் போட்டி போடுபவர்கள் இல்லை. மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து நாம் செயற்படுவோம்.