Home » அரசியல் பின்புலமற்ற முதலாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய

அரசியல் பின்புலமற்ற முதலாவது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரிய

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அரசியலில் பெண்களின் பங்களிப்பை கூட்டுமா?

by Damith Pushpika
September 29, 2024 6:00 am 0 comment

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமர சூரிய 16ஆவது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து, பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியம் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

சிறிமாவோ பண்டார நாயக்க 1960இல் இலங்கையின் பிரதமரானார். அவர் இலங்கையின் முதல் பெண் பிரதமர் மட்டுமின்றி, உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். அவரைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிது காலம் பிரதமர் பதவி வகித்ததுடன். பின்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பல வருடங்கள் பதவி வகித்தார். எனினும் இவர்கள் இருவருமே அரசியல் பின்புலம் உள்ளவர்கள். ஆனால் ஹரிணி அமரசூரிய எந்த குடும்ப அரசியல் பின்னணியுமின்றி இந்த நாட்டில் பிறந்த முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது பெண் பிரதமரும் இவரே.

1970ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்த இவர், கொழும்பு பிஷப் கல்லூரியில் தனது ஆரம்பகல்வியை கற்றார். பின்னர் இந்தியாவிலுள்ள டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ஹரிணி அமரசூரிய, மெல்ல மெல்ல அரசியலை நோக்கி நகர்ந்தார். 2011 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார். கடந்த 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016 இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.

அதுமட்டுமின்றி தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வேகமாக வளர்ந்த ஹரிணி அமரசூரிய, தீவிர அரசியலில் ஒருகட்டத்தில் இறங்கினார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தார். பாராளுமன்றத்திலும் அவர் பல பதவிகளை வகித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டார். தேர்தலுக்கு முன்னர் அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 21500 கி.மீ நீண்ட பயணத்தை மேற்கொண்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பிரதமர் ஹரிணி போன்றவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பலருக்கும் இன்று முன்னுதாரமாக விளங்குகின்றது. இலங்கையில் 1931இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது. எனினும் பால்நிலை சமத்துவமின்மை என்பது இன்றும் பரந்தளவில் காணப்படுகின்றது.

பெண்களை வரிசையில் நிற்கவைத்து வாக்கு பெறும் கலாசாரமே நிலவுகின்றது. அவர்களுக்கான சுயமான அரசியல் பங்குபற்றல், பிரதிநிதித்துவம் என்பது ஒப்பிட்டளவில் குறைவாகவே உள்ளது.

ஆரம்பகாலங்களில் பெரும்பாலான குடும்பங்களில் அரசியல் பற்றிய கருத்தாடல்களில் அப்பா, மாமா, தாத்தா என ஆண்களே மட்டுப்படுவதை கண்டிருப்போம். அது ஆண்களுக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது

பெண்கள் பெரிதாக அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை.

குடும்பப் பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அறிவும் தெளிவும் அவர்களிடம் காணப்பட்டாலும் அந்த முடிவை அப்பாவோ அல்லது கணவனோ தான் எடுப்பார்கள். அவர்கள் சொல்லும் கட்சிக்குத்தான் நிறையப் பெண்கள் இன்றும் வாக்களிக்க பழகியுள்ளனர்.

பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை எடுத்துக்கொண்டால், இலங்கை கைச்சாத்திட்டுள்ள பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்களையும் அகற்றுவது தொடர்பான (சீடோ சமவாயம்)

ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் மூலம் பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் சட்டரீதியாக இலங்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் பெண்களை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுகின்றது.

1947 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான பாராளுமன்ற பொதுத்தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 13 ஐ ஒருபோதும் தாண்டவில்லை.

சட்டமன்றத்துக்கு தெரிவான முதலாவது பெண் மொலமுறோவாகும். அவரை தொடர்ந்து

1947ஆம் ஆண்டு 3, 1952ஆம் ஆண்டு 2 ,

1956ஆம் ஆண்டு 4, 1960 (மார்ச்) 3,

1960 (ஜூலை) 3, 1965ஆம் ஆண்டு 6,

1970ஆம் ஆண்டு 6, 1977ஆம் ஆண்டு 11,

1989ஆம் ஆண்டு 13, 1994ஆம் ஆண்டு 12,

2000 ஆம் ஆண்டு 9, 2001ஆம் ஆண்டு 10,

2004ஆம் ஆண்டு 13, 2010ஆம் ஆண்டு 13,

2015 ஆம் ஆண்டு 12, 2020ஆம் ஆண்டு 12

என்ற எண்ணிக்கையிலேயே பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.

அதேநேரம் மாகண சபைகளில் – 0 % உள்ளூர் அதிகார சபைகளில் – 1.9% மாகவும் பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.

அரசியலில் ஈடுபட வேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் பெண்கள் மத்தியில் இருந்தாலும் அவர்கள் தங்களை வலுப்படுத்த போதியளவு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவள் குடும்பம், கட்சி, சமூகம் என அனைத்து விடயங்களிலும் போராட வேண்டியுள்ளது. பெண்களால் ஆண்களை போல் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவதில்லை. குடும்பத்தையும் நிர்வகிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இத்தகைய சந்தர்ப்பத்தில் குடும்பம் எந்த அளவிற்கு அனுசரணையாகவிருக்கும் என்பதை கூறமுடியாது. இதனாலேயே பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர்.

அடுத்ததாக அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் பெண்கள் பட்டியலில் இடம் பெறுவதற்கே அதிகமாகப் போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இலங்கையிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கடந்தகால தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து பார்த்தால் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் எந்தவித புதிய வேலைத்திட்டங்களையும் காணமுடியாது.

அதுவும் ஒப்பீட்டளவில் சிறுபான்மைக் கட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மிக குறைவாகவே காணப்படுகின்றது.

நேசம் சரவணமுத்து, தங்கேஸ்வரி கதிர்காமன், சாந்தி ஸ்ரீ கந்தராஜா, பேரியல் அஷ்ரஃப், ஏ.டி அன்ஜான் உம்மா, விஜயகலா மகேஸ்வரன் போன்ற குறிப்பிட்ட சிலரே இதுவரை சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றுள்ளனர்.

இதுதவிர பெண்களுக்கு கள அரசியல், பொருளாதாரம் என எண்ணற்ற தடைகள் உள்ளன. அதுமட்டுமன்றி பெண்கள் மீது விழும் குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் கூட பெண்களின் அரசியல் பங்குபற்றலை தடுக்கிறது.

கடந்தகால தேர்தல்களில் போட்டியிட பல பெண்கள் வெறுப்புப் பேச்சுகளால் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் மொழி, உடை, நடை, வயதை வைத்து வெறுப்புப் பேச்சுகள் பகிரப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

எனவே பெண்களின் பிரத்தியேக பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதற்கு அவர்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிக்க வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் அதற்கு சிறந்த களமாக அமைய வேண்டும்.

வசந்தா அருள்ரட்ணம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division