அக்சிபிட்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த வலுவான பெரிய ஊனுண்ணியான கழுகு, “பறவைகளின் அரசன்” என போற்றப்படுகிறது. அதிகாரம், சுதந்திரம் மற்றும் மேன்மையின் அடையாளமாக கருதப்படும் கழுகுகள், உலகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
கழுகுகள் 74 வகைகள் கொண்டவை. இவற்றில் 60 வகைகள் மேற்கூறிய மூன்று பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாகக் கடல் கழுகுகள், கால் வரை ரோமம் உள்ள கழுகுகள், பாம்பு உண்ணும் கழுகுகள் மற்றும் இராட்சத கழுகுகள் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
பறவை இனங்களில், கழுகு மட்டும் 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும் திறன் கொண்டது. அதிக உயரம், பறக்கும் திறனும் கழுகுக்கு உண்டு. பெண் கழுகு ஆண் கழுகை விட சற்றுப் பெரியது. பெண் கழுகு ஆண் கழுகை பரிசோதித்து பார்த்த பின்னரே அதன் மீது நம்பிக்கை வைக்கும்.
மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத மிக உயரமான மரக்கிளைகள் அல்லது மலைச்சரிவுகளில் கூடு கட்டும். ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள் மற்றும் வைக்கோல் கொண்டு கூடு கட்டும். பெண் கழுகு இதில் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.
எலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை உண்ணும் கழுகு மிக அபாரமான பார்வைத் திறன் கொண்டது. இக் கழுகு 1,000 அடி உயரத்தில் பறந்தாலும் தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.
புயல், காற்றின் மூலம் மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடியும். மணிக்கு 32 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயனப் பொருட்கள் மற்றும் மின் கம்பிகள் காரணமாக கழுகுகள் அழிந்து வருகின்றன.
இதனால் கழுகுகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம், முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாமும் கழுகுகளைப் பாதுகாக்க வேண்டும்.