சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற மரங்களை விட உலகின் விலை மதிப்புமிக்கது அகர் மரம்.
‘அக்குலேரியா’ என்ற மரத்தின் ஒரு வகை, இது. ‘மரங்களின் கடவுள்’ மற்றும் ‘பசுமைத்தங்கம்’ என்றும், புகழப்படுகிறது.
இந்த மரங்கள், இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேஷியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பெருமளவு காணப்படுகின்றன.
உலகிலேயே மிக அரிதான, விலைமதிப்பு மிக்க மரம், அகர். ஒரு கிலோ அகர் மரக்கட்டையின் விலை, 73 இலட்சம் ரூபாய்.
கட்டைகள் மட்டுமின்றி, இம்மரம் சிதைந்த பின்பும், அதன் எச்சங்களை, நறுமண பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என்பதால், அவற்றிற்கும் மதிப்பு அதிகம். வாசனை திரவியங்கள் மற்றும் பிற நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன அகர் மரங்கள்.
இந்த மரத்திலிருந்து கிடைக்கும் பிசினிலிருந்து, ஒரு வகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வாசனை திரவியங்களின் தயாரிப்பில், இந்த எண்ணெய், அத்தியாவசியப் பொருளாக உள்ளது. இதன் தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ எண்ணெய் விலை, 25 இலட்சம் ரூபாய்.
மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக விலைக்கு விற்கப்படுவது அகர் எண்ணெய் தான்.
சித்த மருத்துவம் மற்றும் அரோமா எனும் வாசனை மருத்துவத்தில், உயரிய இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, உலகிலேயே செயற்கை முறையில் தயாரிக்க இயலாத திரவியமாக இது திகழ்கிறது.
ஓரளவு ஈரப்பதம் மிக்க இடங்களில் மிகவும் வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்து, குறைந்தபட்சம் ஆறாவது ஆண்டுகளிலிருந்து பலன்களைத் தரும்.
இந்தியாவில், அதிக மழைப்பொழிவை சந்திக்கும் மாநிலங்களில் ஒன்றான அசாமில், அதிக அளவில் அகர் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. வறண்ட பகுதிகளில், இந்த மரம், வளராது.
சீனா, ஜப்பான் மற்றும் ஹொங்கொங் போன்ற நாடுகளில் அகர் மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்றாலும், கூடுதல் விலை காரணமாக, பல நாடுகளில் மிகப்பெரிய கடத்தல் தொழில்களும் நடைபெறுகின்றன.
அதிக அளவு கடத்தலால், இந்த மர வகைகளை சில நாடுகள் அழித்தும் வருகின்றன. சட்ட விரோதமாகவும் சிலர் இந்த மரத்தை வளர்க்கின்றனர்.