அன்று அதிகாலைப் பொழுது ஆதவனை வரவேற்கப் பட்சிகளின் ஆரவாரம் தொடங்கி இருந்தது. ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து போனது சாருமதிக்கு. அரச வங்கி விடுதியில் தங்கியிருந்த சாருமதிக்கு எழுந்திருக்க அசதியாக இருந்தது.
அந்த விடியலில் பட்சிகளின் ஆரவாரம் அவளது மனதிற்கு மகிழ்வைத் தந்திருக்க வேணும். கண்ணை மூடி மெய் மறந்து அதனை ரசித்தாள். இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. வாகனங்களின் இரைச்சலும் மனித நடமாட்டமும் ஆக்கிரமிக்க அந்த நகரப் பிரதேசம் விழித்துக் கொண்டது.
“ஓ இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுதானே இன்னும் சற்று நேரம் படுக்கையில் கிடப்பம் மனதுக்கு இதமாக இருக்கும்”. நினைத்த மறு நிமிடம் சாருவின் போன் அலறியது.
“ஆராக..இருக்கும் இந்த வேளையில் மேசையில் கிடந்த போனை எழுந்து எடுப்பதா இல்லை விடுவதா”. அவள் மனதுக்குள் ஒரு ஒத்திகை நடந்தது.
“புதிய நம்பராக இருக்கே எதுக்கும் போனை எடுப்பம்”.
“ஹலோ சாருமதிதானே நான் உன் கிளாஸ்மேற் சிந்து கதைக்கிறன்”. எங்கோ ஒரு பொறி தட்டியது. புரிந்து போனது சாருமதிக்கு.
“ஓ சிந்துவாடீ நீ எப்படி இருக்காடீ”
“நான் நல்லா இருக்கன். எனக்கென்ன கணவன் பிள்ளைகள் என என் வாழ்க்கை போகுது. ஓய்வு நாளில் நான் உன் உறக்கத்த கலைச்சுப் போட்டனா”.
“நீ வேற சிந்து..என் உறக்கம் எப்பவோ கலஞ்சு போச்சுடி அதை விடு. நீ மட்டுந்தான் பள்ளியை விட்டு போன பின்னும் அப்பப்ப என்னோட கதைக்கிறா நானும் உன் போன் நம்பரை ‘சேவ்’ பண்ண மறந்திட்டன்”.
“சரிதான் போடி..குடும்பச் சுமை தலைக்குமேல எங்கதான் போன் கதைக்க நேரம் கிடைக்குது”. சிந்து சலித்துக் கொண்டாள்.
“என்னடி வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரி கதைக்கிறா”.
“நான் அப்படி சொல்லல்ல சாரு, குடும்பம் என்று ஆகிவிட்டால்.. ஓய்வு ஒழிச்சல் இல்லாட்டியும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிதான். சரி என்னை விடு. நீ என்னடீ.. செய்றா. உன் கலியாண வாழ்க்கை என்னாச்சு. புள்ள குட்டிகள் எத்தன அதச் சொல்லன் சாரு” மூச்சு விடாது மூணு கேள்விகளை சிந்து அடுக்கி விட்டாள்.
“இன்னும் கல்யாணமே ஆகல்லடி சிந்து..நான் பேராதனை கம்பஸ் போய் படிச்சன். உனக்கு அதாவது ஞாபகம் இருக்கா”.
“ம்ம்.. ம் சொல்லன் சாரு..”
“நான் பெஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான். அதனால அரச வங்கியில ஆரம்பத்தில உதவி மனேஜர் பயிற்சியாளராக நல்ல வேலயும் கிடச்சது சிந்து”.
“பிறகென்ன என்னதான்டி ஆச்சு.. உன் கல்யாணம் நீயேன் மனம் உடைஞ்சு போய்க் கதைக்கிறா”.
“எதைக் கேக்கிறா சிந்து? நான் எதை உனக்குச் சொல்றது. ‘டிகிரி’ முடிய வங்கியில வேலை கிடைச்சதால.. ஓய்வில்லா வேல, தொடர்ந்து படிச்சன். அதனால மனேஜர் புரோமோஷன் அதிலேயே என் காலம் எல்லாமே ஓடிப் போச்சுடீ”.
“ஓ..அப்பிடியா..பிறகு”.
“புறகென்ன மாஸ்டர் டிகிரிய நான் முடிச்சன். பிறகு வங்கியால் ‘ஸ்கொல்’ கிடைச்சு கொங்கொங் போய் வந்தன். வங்கியில நீண்ட கால உழைப்பு. நான் இப்ப வடக்கு பிராந்திய மனேஜராக இருக்கிறன்”.
“ஓ..எனக்கு பெருமையாய் இருக்கு சாரு “.
“சிந்து என்னை மறக்காமல் நீ எனக்கு போன் பண்ணிருக்கடீ. உனது அன்பைப்போல வேறு ஆருக்கு வரும்? உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குடி”.
“சாரு வெளியில போயிருக்காரு என் வீட்டுக்காரர். நானும் காலையில் சும்மாதான் வீட்டில இருக்கிறன். உன் நினைவு வந்தது அதுதான் போன் எடுத்தன்”.
“அதுக்கென்ன என்ன மறக்காமல் இருக்கியே அது போதும்”.
“சாரு நீ ஏன் கல்யாணமே கட்டாமல் இருக்கா. நீ ஏ.எல் படிக்கிறப்ப லவ் பண்ணினியே மோகன் அவன் என்னான்”.
“அதுவா..சொல்றன். நீதான் ஏ.எல் படிக்கிறப்ப லவ் பண்ணி இடையில ஓடிப் போயித்தாயே. உனக்கெங்க அந்தக் கதை தெரியப் போகுது”.
ஒரு கணம் சாருமதியின் சிந்தனை சுழன்றது..
அதிகாலையில் எழும்பி மரக்கறிக் காலைக்கு தண்ணி இறைக்கப் போகும் அப்பா..பெண் பிள்ளைகள் மூவரையும் ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு..ஏழு மணிக்கு பின் தண்ணிச் சோறும்..கொஞ்சம் தேங்காய்ப் பூவும் இரண்டு சின்ன வெங்காயமும் கணவன் கதிரேசனுக்கு எடுத்துக் கொண்டு கூட மாட உதவிக்குப் போவதை வழமையாக்கிக் கொண்ட அம்மா..குடியிருக்க ஒரு சாதாரண வீடு..இரண்டு தங்கைகள்..இதுதான் சாருவின் குடும்பம்.
“உங்கள் மூவருக்கும் படிப்புத்தான் மூலதனம். கவனமாப் படிச்சுக் கொள்ளுங்க” பிள்ளைகளுக்கு கறாராகச் சொல்லி விட்டார் அப்பா கதிரேசன்.
படிப்பில் சாரு கெட்டிக்காரிதான். சாரு ஏ.எல் வகுப்புக்குள் நுழைந்த போதுதான் அவள் கடைசித் தங்கை கல்யாணி பெரியவளாகி இருந்தாள். மற்றவள் காவேரி பத்தாம் வகுப்பு அப்போது.
சாருமதியின் அழகில் எவரும் குறை சொல்ல முடியாது. அவள் அழகும் சுட்டித்தனமும் அவளுக்கு கூடவே காதலையும் இழுத்துக்கொண்டு வந்து சேர்த்தது.
“சாரு நீதான் இனி என் வாழ்க்கையே” ஏ.எல் வகுப்பில் கூடவே படிக்கும் மோகன் குழைந்து நின்றான். இருபது வயதில் ஒரு காதல்..சாருமதிக்கு மோகனின் காதலைத் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை .
“மோகன்..நம்ம காதல உங்கட வீட்டில ஏற்பாங்களா”.
“அதப்பத்தி நீ கவலப்பட வேணாம் சாரு”.
“நான் எப்பிடி மோகன் கவலப்படாம இருக்கிற நீயே சொல்லு”.
“எனக்கு நீதான் வேணும் சாரு”.
“சரி..மோகன் எங்கட குடும்ப நிலமை உனக்குத் தெரியாதா”.
“நீ ஏன் சாரு பயப்படறா..வீட்டில நான் ஒரே பிள்ள எல்லாம் எனக்குத்தான் அத நான் பாத்துகுவன்”.
“ஹலோ சாரு..என்னடி உன் சத்தத்த காணல்ல..”.போனில்..சிந்துவின் குரல் சாருவை உசுப்பி விட்டது.அந்த ஒரு கணத்தில் மோகனின் காதல் சிந்தனையில் இருந்து மீண்டாள் சாரு.
“நீ சொல்ல வந்தத..சொல்லன் சாரு ஏன் அமைதியாகிட்டா”.
“அதுதான் சாரு என் பள்ளிக்காதல் அது படலையோடு முடிஞ்சு போச்சுடி. மோகன் காதலில் தீவிரம் காட்டினான். எங்க காதல்..அவன் வீட்டுக்கு அது தெரிய வந்த போது பிரச்சினை வெடித்தது.
“அத்தப் பிச்சக்காரியா..அவளையா நீ விரும்பினா வேணாம்டா அவள் உனக்கு”.
அவனது தாய் மோகனை எச்சரித்தாள். அவன் பிடிவாதம் தாயிடம் தோற்றுப் போனது. நகரப் பாடசாலை ஒன்றில் அடுத்த சில நாளில் அவனைச் சேர்த்து விட்டனர். அதோட மோகன் காதலும் காணாமப் போச்சுடி சிந்து”.
“நீ..பாவம்டி..உன்னக்கு பிச்சக்காரிப் பட்டமும் தந்து போட்டாங்க ”
“அதுதான்டி ‘சுள்’ என நெஞ்சில் குத்தியது. இப்பவும் அந்த வலி இருக்கு. என் காதல் அதோட முடிஞ்சு போகல்ல சிந்து”.
“என்னடி சாரு..சொல்றா”
“அதுக்குப் பிறகும் மோகன்கள் என் வாழ்க்கையில் வந்தாங்கள். எல்லாரும் சுயநலவாதிகள் வெறுத்துப் போச்சுடீ கல்யாணம்”.
“புரியல்ல சாரு..”
“உன்னோட கதைச்சதால.. மனச் சுமை சற்றுக் குறைஞ்சு இருக்குடி சிந்து. சரி புரியும் படியாச் சொல்றன் கேள். கம்பஸில் ஒரு குபேரன் வந்தான்”.
“ஓ..என்னடி குபேரனா”
“கம்பசில் என்னோடு படிச்ச குபேரன் லவ் பண்ணினான். நானும் அவன் காதல நினைச்சுக் கூடப்பாக்கல்ல”.
“ம்..ம்ம் சொல்லன்”
“நான் ஏ.எல் வகுப்பில் மோகன..லவ் பண்ணி சூடு கண்ட பூனை அல்லவா சிந்து”.
“அப்புறம்..”
“நானும் மனிசிதானே சிந்து எனக்கும் ஒரு வாழ்க்கை வேணும் என்ற யோசனை வந்தது. குபேரனின் பேச்சும் அவன் வசீகரமும் எனக்கும் பிடிச்சது நாங்க கம்பஸில் காதலர்களானோம் காலமும் அதன் காரியத்தை அரங்கேற்றிப் பாத்தது சிந்து”.
“சாரு.. என்னடி..சொல்றா”
“சிந்து அவசரப்படாதடி சொல்றன். நாங்க நாலு வருசம் படிச்சம். பிறகு பட்டம் பெற்றவுடன் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான் குபேரன்”.
“இடையில நான் உன்னக் குழப்பல்ல. நீயே சொல்லு..சாரு”.
குபேரன் அன்று சொன்னது அவள் மனதை இப்பவும் குடைந்து கொண்டு இருந்தது சாருமதிக்கு இன்னும் மறக்கவில்லை அவள்..
“குபேரன் என்ன புதுசாக குண்டைத் தூக்கி போடுறீங்க”
“சாரு நம்மட காதல் வீட்ட தெரிஞ்சு போச்சு. இப்ப நல்ல சம்பந்தம் தங்கச்சிக்கு வந்திருக்கு. காசு வேணும் எனக்கு. கிடைக்கிற சீதனத்தக் கொண்டு அவளக் கரையேத்த பாக்காரு அப்பா. ரவுணில வீடு வேணுமாம் மாப்பிள்ள வீட்டாருக்கு”
“குபேரன் உங்கட பிரச்சின அது..நீங்க சீதனத்த என்னிடம் எதிர்பாத்தா என்னை லவ் பண்ணினிங்க நான் எங்க குடும்ப நிலய சொல்லியுமா நீங்க..”.
“என்ட நிலைய யோசித்துப்பாரு சாரு எனக்கு எந்த வழியும் தெரியல்ல”.
“புரியுது குபேரன் உங்களுக்கு எது சரியாப் படுதோ அதச் செய்யுங்க” குபேரன் காதலும் கண்ணா மூச்சி காட்டி விட்டுப் போனது சாருவுக்கு.
“என்னடி சாரு..இப்பவும் நீ அமைதி ஆயிட்டா ..லைனில் இருக்கிறயா சாரு”
சுதாரித்துக் கொண்டாள் சாருமதி குபேரனின் சிந்தனையில் இருந்து மீண்டாள் .
“ம் ம்.. லைனிலதான் இருக்கன் சிந்து கம்பஸ் காதல நினைவு வந்தது. ஒரு சின்ன தடுமாற்றம்..இரு சொல்றன்”.
“நான் முன்பே சொன்னதுதான் சிந்து. எங்க ‘பட்டமளிப்பு’ முடிந்து சில நாட்களில்..குபேரன் கொழுத்த சீதனத்துடன் திருமணம் செய்து குபேரனாகி விட்ட செய்தி எனக்கு இடியாய் வந்து இறங்கியது “.
“கடவுளே.. உனக்கு இப்பிடியா இடி விழணும் சாரு. அவன் நல்லாவே இருக்க மாட்டான். கேக்கவே கண்ணீர் வந்து முட்டுது எனக்கு”.
“கடவுள் என்னதான் செய்வாரு சிந்து. நீயே சொல்லு. நீயேன் சிந்து அழுவுறா.காதல் எல்லாமே சுயநலம் அதில் என் காதல் பகடை உருட்டி விளையாடியது”.
“வேற எவரும் இந்த வலிகளைத் தாங்க மாட்டாங்க சாரு”.
“அந்த வலிகள்தான் சிந்து நான் இந்த உயரத்துக்கு வரக் காரணம். எனக்கும் மனேஜர் பதவி கிடைச்சதால் புதிதாக வீடு ஒன்றைக் கட்டி முடிச்சன். பட்டதாரி ஆசிரியையான தங்கை காவேரியின் திருமணம் கூடி வந்தது. ‘பிச்சைக்காரி’ என்றவர்கள் முன் குடும்பம் தலை நிமிர்ந்தது.நான் மாஸ்டர் டிகிரி செய்த போது அங்கு ஒரு சங்கர் வந்து குறுக்கிட்டான். அவனும் வங்கியாளன் எனக்கு இரண்டு வயது மூத்தவன்.
“என்ன சாரு இன்னுமொரு காதலா உனக்கு”.
“என்ன செய்வது..அது மூணாவது காதல் தான் சிந்து. மனசு ஒன்று இருக்குதே நாம விலகி..விலகி ஓடினாலும் வலிந்து வந்து நிற்குதே சிந்து”.
“அப்புறம் சாரு”.
“சங்கர்..அவனும் என் முன்னும் பின்னும் அலைஞ்சான். அவனுக்கும் நான் தெளிவாக எடுத்துச் சொன்னன்.”
சாருமதியின் நினைவுகள் பின் நோக்கிச் சுழன்றன.
“சங்கர்.. இது வாலிப பருவத்து பள்ளிக்காதல் இல்ல. கண்டி மழையப் போல வந்து சீதனத்துக்காக காணமல் போற கம்பஸ் காதலுமல்ல என்பதை முதலில் நீங்களும் புரிய வேணும்”.
“சாருமதி உங்கள நான் விரும்புறன் ஆனால் காதலுக்கு நீங்க விளக்கம் வேற சொல்றீங்க அதுதான் புரியல்ல”.
“வேறு என்ன செய்வது சங்கர் சில விடயங்களை நானும் புரியும்படி சொல்லத்தான் வேணும். நாங்க இப்ப விடலைகள் அல்ல சங்கர். தெளிவாக தீர்மானம் எடுக்கும் அறிவும் முதிர்ச்சியும் நமக்கு இருக்கு சங்கர்”.
“ஓ..நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள் அது தெரியுது சாருமதி”.
“உண்மைதான் சங்கர் நான் தெளிவாகத்தான் இருக்கன். நமக்குள் எதிர் காலத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வரக்கூடாது என்பதில்..”
“அது சரி..நான் என் விருப்பத்த தெளிவாக சொல்லி விட்டன் சாருமதி. நீங்க உங்கட விருப்பத்த சொல்லுங்க. நாம கல்யாணத்த முறைப்படி செய்து கொள்வம். இப்ப ஓ.கே தானே. இதற்கு ஏன்..இவ்வளவு பெரிய விளக்கம்”.
“ஓ.கே நீங்கள் என்னிலும் மூத்தவர். என்னை விடவும் நிறையவே அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். சரி உங்களுக்கும் எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்கும் சங்கர். நானும் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினன். அதனால்தான் இவ்வளவும் கதைச்சன்”.
“சாருமதி நீங்க சொன்னதை நான் தப்பாக எடுக்கல்ல. ஆனால் என் காதல நீங்க ஏற்றுக்கொண்டதாக இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்ல வில்லையே”.
“சரி சங்கர்.. நான் ஐ லவ் யூ சொல்ல ஆயத்தமாக இருப்பதால் இவ்வளவும் சொன்னன். ஆனால் நீங்கதான் உங்க எதிர்பார்ப்புகள் எதையும் என்னிடம் சொல்லவே இல்லயே”
“சாருமதி என் வீட்டாரிடம் உங்களப் பற்றி எல்லாமே சொல்லி விட்டன். எந்தவித எதிர்பாப்பும் எனக்கு இல்ல. ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் நான் எதிர்பாக்கிறன். பின்னாளில் நான் சொல்லவில்லை என்று நீங்க சொல்லக் கூடாது. நான் சொல்வதால் நீங்கள் என்னை பிழையாகவும் விளங்கிக் கொள்ள வேணாம்”
“சொல்லுங்க அதில் என்ன இருக்கு”.
“சாருமதி நீங்க மற்றைய ஆண்களோடு கதைப்பத எதிர்காலத்தில தவிர்த்துக் கொள்வது எனக்கு நல்லதாப்படுது அதால பின்னுக்கு ஏதாவது பிரச்சினை நமக்குள் வந்து விடக் கூடாதே”.
சாருமதிக்கு சுளீர் என்று தைத்தது. அந்த ஒரு நொடியில் சங்கரின் காதல் காணாமல் போனது. சாருமதி எழுந்து விட்டாள்.
“சாருமதி ஏன் எழும்பி விட்டீர்கள். நான் சொன்னது தப்பாக இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்க”.
“சொரி..சங்கர்..இது என் தப்புத்தான்”.
ஒற்றை வாக்கியத்தில் தெளிவாக உறைக்கும் படி பதில் சொன்னவள் திரும்பிப் பாராமலே நடந்தாள்.
“சாரு..சாரு..என்ன சாரு..போனில் உன் குரலைக் காணல்ல என்ன அமைதி ஆயிட்டா என்னாச்சுடி “.
சிந்துவின் பதற்றத்தை அவதானித்த சாருமதி இப்போது நிகழ் நிலைக்குத் திரும்பினாள் .
“ஒன்றை மறக்க இன்னும் ஒன்று வரத்தானே செய்யுது சிந்து. நானும் ஒரு சராசரி மனிசிதானே. நான் முதலே உனக்குச் சொன்னது ஞாபகம் இருக்கா. என் வாழ்வில் வந்த மோகன்கள்.. என்றேன் மறந்து போச்சா”
“அத மறப்பனா சாரு..நீ சொல்லாமல் விட்டாலும் நான் விடமாட்டன் சரி..சரி சொல்லன்”.
“சங்கர் சந்தேகக்காரன் அவனுடன் யாராச்சும் வாழ்வார்களா. நீயே சொல்லு சிந்து.அவன கட்டினா நரக வாழ்க்கைதான். அது தேவையா சிந்து. அந்த ஒரு நொடியில் அவன் காதல தூக்கி காலில் போட்டு மிதிச்சுப் போட்டு வந்திட்டன் சிந்து”
“சாரு சும்மா சொல்லக் கூடாது..பாரதி கண்ட புதுமைப்பெண் நீதான் போல”.
“போடி சிந்து. உனக்கும் பகிடி விடவும் தெரியும் போல”.
“உன் வாழ்க்கை இப்படிப் போச்சுதே சாரு”.
“இனி என்ன வேணும் சிந்து. மற்றத் தங்கை காவேரியும் ரீச்சராகி பிள்ள குட்டிகளோட நல்லா இருக்காள்.என் குடும்பம் எனக்கு உதவியாக இருக்குது அது போதும் சிந்து”.
“சரிதான் நீ கொஞ்சம் தூங்கி எழும்பு மனசில இருக்கும் பாரம் குறையும்”.
“தூக்கமா..நான் தூங்கி பல வருசம் ஆச்சுடி சிந்து. சரி இன்னுமொரு நாள் கதைப்பம். எனக்கு அவசரமான போன் அழைப்பு வருது”.
“ஓகே..சாரு..”.
வெல்லாவெளி விவேகானந்தம்