கமிந்து மெண்டிஸ் சிட்டக்ராமில் 19 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்றார், ஓல்ட் டிரபர்ட்டில் 25 பந்துகளுக்கு 12 ஓட்டங்களைப் சேர்த்தார், லோட்ஸில் 5 பந்துகளில் நான்கு ஓட்டங்களைக் குவித்தார். அவர் இதுவரை ஆடிய 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் குறைகூறுவதென்றால் இந்த மூன்று இன்னிங்ஸ்களையும் தான் சொல்ல வேண்டும்.
மற்ற இன்னிங்ஸ்களில் அவர் தவறாது ஐம்பதுக்கு மேல் ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். இதில் மூன்று தடவைகள் சதம் பெற்றிருக்கிறார். அதாவது அவர் ஆடிய அல்லது ஆடி வரும் 7 டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸிலேனும் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதற்குத் தவறியதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது அதிகபட்சமாகும். பாகிஸ்தானின் சவூத் ஷகீலுடன் இந்த சாதனையை சமன் செய்திருக்கிறார்.
இதன்போது தொடர்ந்து முதல் ஆறு டெஸ்ட்களிலும் 50க்கும் மேல் ஓட்டங்கள் பெற்ற சுனில் கவாஸ்கர், சயீட் அன்வர் மற்றும் பசில் புட்சர் ஆகிய கிரிக்கெட் பெரும்புள்ளிகளை பின்தள்ளி இருப்பது முக்கியம்.
இதன்மூலம் அவரது ஓட்ட சராசரி கூட 80.90 ஆக உயர்ந்துவிட்டது. குறைந்தது 10 இன்னிங்ஸ்கள் ஆடியவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்ட சராசரியை பெற்றவர்களில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரட்மனுக்கு மாத்திரம் தான் பின்நிற்கிறார். பிரட்மனின் ஓட்ட சராசரி என்பது அசாத்தியமானது. விளையாட்டு உலகில் யாரும் எட்டாத அளவு 99.94 ஓட்ட சராசரி அவருடையது.
கமிந்துவின் இந்த ஆட்டம் என்பது இலங்கைக்கு பிரத்தியேகமானது. 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் அறிமுகம் பெற்ற இலங்கை வீரர் ஒருவர் இப்படி தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்துவது இது தான் முதல் முறை. முந்தைய சம்பவங்களைப் பார்த்தோம் என்றால் முதல் தரப்போட்டிகளில் சோபித்து அதே உற்சாகத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்று ஒரு சில இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடிவிட்டு காணாமல்போனவர்கள் ஏகத்துக்கு உள்ளனர். அப்படி ஓட்ட சராசரியை 50 க்கும் மேல் தனது டெஸ்ட் வாழ்வை ஆரம்பித்து 40 ஆகக் குறைந்து, 30க்கு சரிந்து பின்னர் 20 ஆகி காணமல்போனவர்கள் எப்போதுமே தேர்வுக் குழுவினருக்கு தலையிடி கொடுப்பவர்கள். அவ்வாறான வீரர்கள் நம்பிக்கை தந்துவிட்டு ஏமாற்றுவதால் தேர்வாளர்கள் புதிய வீரர்களை தேடும் பணியை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டி இருக்கும்.
கமிந்துவை இந்த வகையராவுக்குள் சேர்க்க முடியாது. அவர் இப்போது பதினொரு இன்னிங்ஸ்களில் ஆடி இருக்கிறார். அவரது துடுப்பாட்டத்தில் இதுவரை எந்தத் தொய்வும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது கன்னி டெஸ்டில் ஆடி அரைச்சதம் பெற்றபோதும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீதும் வாய்ப்புப் பெற்ற கமிந்து தொடர்ந்து உறுதியாகவே ஆடுகிறார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 11 இன்னிங்ஸ்கள் முடிவில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் என்ற பட்டியலை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.
கமிந்து தனது முதல் 11 இன்னிங்ஸ்களிலும் 809 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். இது முதல் 11 இன்னிங்ஸ்களில் வீரர் ஒருவர் பெற்ற அதிக ஓட்டங்கள் வரிசையில் 8 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் (968 ஓட்டங்கள்). இந்தியாவின் சுனிஸ் கவாஸ்கர் மூன்றாவது இடத்தில் இருப்பதோடு டொன் பிரட்மன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
இப்போது இலங்கை டெஸ்ட் அணியில் இன்றியமையாத வீரராக மாறிவரும் கமிந்து நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வரிசையில் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது முக்கியமான முடிவாகும். முன்னர் 7ஆவது வரிசையில் வந்த அவர் காலியில் நடைபெற்று வரும் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்தாவது வரிசையில் வந்து சதம் பெற்றார். அந்த சதம் தான் இலங்கை அணியை முதல் இன்னிங்ஸில் ஸ்தரம் அடையச் செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஆட்டத்தின் மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அன்றைய தினம் ஓய்வு நாளாக இருந்தது. இன்று (22) நான்காவது நாள் ஆட்டம் ஆரம்பமாகிறது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை அணி 4 விக்கெட்டு இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றிருப்பதோடு நியூசிலாந்தை விடவும் 202 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இதன்மூலம் இலங்கை அணிக்கு நியூசிலாந்துக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
என்றாலும் முதல் இன்னிங்ஸில் சோபித்த கமிந்துவால் இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஆனால் இலங்கை இன்னும் 150க்கு மேல் ஓட்டங்களைச் சேர்த்தால் வெற்றியை உறுதி செய்ய வாய்ப்பு அதிகம்.
எஸ்.பிர்தெளஸ்