லண்டன், ஓவல் மைதானத்தில் இலங்கை அணிக்கு இனியும் டெஸ்ட் போட்டி கொடுப்பது பற்றி இங்கிலாந்து அணி ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசிக்கும். 1998 இல் சனத் ஜயசூரியவின் இரட்டைச் சதம் மற்றும் முரளியின் 16 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தை முதல்முறை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதும் இந்த ஓவல் மைதானத்தில் தான். அதன் பின்னர் ஓவலில் முதல்முறை களமிறங்கிய இலங்கை மீண்டும் ஒருமுறை வெற்றியீட்டி இருக்கிறது.
அதனால் ஓவலில் இலங்கை அணி நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஆனால் கடந்த முறையை விடவும் இம்முறை பெற்ற வெற்றி முக்கியம் என்கிறார் இலங்கை இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜனசூரிய.
‘சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜுன (ரணதுங்கவின்) கீழ் நாம் இங்கு வெற்றிபெற்றோம். முரளி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நான் இரட்டைச் சதம் பெற்ற நிலையில் அரவிந்த (டி சில்வா) 150 ஓட்டங்களை பெற்றார்’ என்று கடந்த காலத்தை நினைவுகூர்கிறார் சனத்.
‘அதனால் நாம் ஓவல் மைதானத்தை ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால் போட்டிச் சூழலை பார்க்கும்போது இம்முறை முழுமையாக வித்தியாசமாக இருந்தது. புற்கள், காலநிலை என கடினமாக இருந்ததோடு அனைத்துமே மேகமூட்டத்துடன் குளிராக இருந்தது. வீரர்களுக்கே அனைத்துப் பாராட்டும் சேர வேண்டும்’ என்கிறார் சனத்.
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையிலேயே ஓவலில் களமிறங்கியது.
எனினும் இலங்கை அணியின் போட்டித் தந்திரத்தை இங்கிலாந்து எதிர்பார்த்திருக்காது. முதலில் சுழற்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்தவை இருக்கையில் வைத்துவிட்டு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது பெரும் திருப்பம்.
மற்றது முதல் இரு டெஸ்டிலும் இலங்கை அணிக்கு தலையிடியாக இருந்த ஜோ ரூட்டை இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஓட்டம் பெறாமல் கட்டுப்படுத்தியது சாதாரணமாகச் செய்திருக்க முடியாது. அவரை கட்டுப்படுத்துவதற்காக போட்டி உத்தியுடன் இலங்கை களமிறங்கி இருப்பது அவருக்கு எதிராக பந்துவீசிய பாணியை பார்த்தாலே புரிந்துவிடும். இதனால் ஜோ ரூட்டினால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 13, 12 ஓட்டங்களையே பெற முடிந்தது.
மற்றொரு முக்கியமான மாற்றம் மூன்றாவது டெஸ்டில் பத்தும் நிசங்கவை ஆரம்ப வீரராக களமிறக்கியது. முதல் இரு டெஸ்டிலும் சோபிக்கத் தவறிய ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்கவுக்கு பதில் குசல் மெண்டிஸை அழைத்ததாலேயே பத்துமுக்கு ஆரம்ப வீரராக களமிறங்க முடிந்தது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களைப் பெற்ற பத்தும், இலங்கைக்கு 219 வெற்றி இலக்கை நிர்ணயித்தபோது வேகமாக துடுப்பெடுத்தாடி 124 பந்துகளில் 13 பெண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்களை சேர்த்து வெற்றிக்கு உதவினார்.
பத்தும் நிசங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்ட அவர் தாம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போன்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு தேர்ந்த வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஓவல் டெஸ்ட் வெற்றி இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக கடந்த பத்து ஆண்டுகளில் பெறும் முதல் வெற்றியாகவும் இருந்தது. என்றாலும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியால் ஓவல் டெஸ்டை வென்றதற்கு என்ன தொடரை வெல்ல முடியாமல் போனது.
தொடர் தோல்வி
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் ஆடுவதென்பது சவாலானது என்றபோதும் முதல் இரு டெஸ்டிலும் இலங்கை அணி தோற்றதற்கு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக முழுமையாக குறைகூற முடியது. போட்டித் தந்திரத்தில் இருந்த ஓட்டைகள், சின்னச் சின்னத் தவறுகள் முழு தொடரையும் இழக்கச் செய்துவிட்டது.
முதலில் அணியில் இருந்த அனுபவ வீரர்கள் சோபிக்கத் தவறியது பெரிய குறை. மற்றது ஆரம்ப வீரர்கள் ஆடுகளத்தில் நின்றுபிடிக்காது இருந்தது முழு துடுப்பாட்ட வரிசையும் சரிவுக்குத் தள்ளிவிட்டது.
மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில் பத்தும் நிசங்க அழைக்கப்படாதது பெருத்த கேள்விகளைத் தந்தது. நிஷான் மதுஷ்க ஆரம்ப வீரராக அணியில் சற்று ஸ்திரமான நிலையை தக்கவைத்திருந்ததால் பத்துமுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
என்றாலும் முதல் டெஸ்டில் இலங்கை அணியால் கடைசி வரை சரிக்கு சமமாக போட்டியிட முடிந்தது. இரண்டாவது இன்னிஸில் கமிந்து மெண்டிஸின் அபார சதத்தின் மூலம் இலங்கை அணிக்கு 326 ஓட்டங்களைச் சேர்க்க முடிந்தபோதும் இங்கிலாந்து அணிக்கு சலாவான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல்போனது.
லண்டன் லோட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இதே நிலைதான் பத்தும் நிசங்க அணிக்கு அழைக்கப்பட்டார். என்றாலும் துடுப்பாட்ட வரிசை தடுமாற்றம் கண்டது. மீண்டும் ஒருமுறை கமிந்து மெண்டிஸ் முதல் இன்னிங்ஸில் தனியே 74 ஓட்டங்களைப் பெற்றபோது அவரைச் சுற்றி வேறு எவரும் இன்னிங்ஸ் ஒன்றை கட்டியெழுப்ப முடியாமல் போனது. இதனால் போட்டி முழுவதும் அதன் தாக்கம் தெரிந்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கையின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய மூவரும் ஒரு சாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் கூட போட்டி முடிவை இலங்கைக்கு சாதகமாக்கி இருக்க முடியும்.
தினேஷ் சந்திமால் ஐந்து இன்னிங்ஸ்களில் 2 அரைச்சதங்களுடன் 177 ஓட்டங்களைப் பெற்றதோடு, அஞ்சலோ மத்தியூஸ் 6 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச் சதத்துடன் 158 ஓட்டங்களையே பெற்றார். திமுத் கருணாரத்னவால் 6 இன்னிங்ஸ்களிலும் 1 அரைச்சதத்துடன் 108 ஓட்டங்களையே பெற முடிந்தது.
இதனாலேயே அடிக்கும் ஐம்பது ஓட்டங்களால் வீரருக்கும் பயனில்லை, அணிக்கும் பயனில்லை, நாட்டுக்கும் பயனில்லை என்று சனத் ஜயசூரிய கடிந்துகொண்டார்.
என்றாலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கமிந்து மெண்டிஸின் ஆட்டம் குறிப்பிடும்படியாக இருந்தது. இலங்கை அணிக்காக இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றவரான கமிந்து தொடரில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராகவும் மாறினார். அவர் தனது 5 இன்னிங்ஸ்களிலும் ஒரு சதம் இரண்டு அரைச்சதங்களுடன் 267 ஓட்டங்களைப் பெற்றார். இதன் ஓட்ட சராசரி 62.97 ஆகும்.
எனினும் அவரது துடுப்பாட்ட வரிசையில் இன்னும் கரிசனை காட்டுவது முக்கியம். அவர் ஏழாவது வரிசையில் துடுப்பெடுத்தாட வரும்போது சில நேரம் பின்வரிசை வீரர்களுடன் தான் ஆட வேண்டி இருக்கும். சில நேரம் அது கால தாமதமானதாக இருக்கவும் கூடும்.
தொடர்ந்து சோபித்து வருவதால் அவரை சற்று முன்னால் களமிறக்கினால் இன்னும் ஓட்டங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்றாலும் அவர் தொடர்ந்து மத்திய பின்வரிசையிலேயே களமிறக்கப்படுவதற்கு கூறப்படும் விளக்கங்களும் முழுமையாக பொருந்துவதாக இல்லை.
அதாவது அவர் ஏழாவது வரிசையில் சிறப்பாக ஆடுவதாலேயே அந்த இடத்தில் களமிறக்கப்பவதாக அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தப் பார்வையை மாற்றிக் கொண்டால் எதிர்காலத்தில் அணிக்கு உதவியாக இருக்கும்.
மற்றது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அசித்த பெர்னாண்டோ சிறப்பாக செயற்பட்டு இலங்கை டெஸ்ட் அணியில் நம்பிக்கை தரும் வீரராக மாறி இருப்பதோடு மிலான் ரத்னாயக்க பந்துவீச்சில் மாத்திரம் அன்றி துடுப்பாட்டத்திலும் அவசரத்துக்கு உதவுகிறார்.
எனவே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் சாதக, பாதகங்களை சரியாக புரிந்துகொண்டாலேயே எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
நியூசிலாந்து டெஸ்ட்
இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய விரைவிலேயே இலங்கை அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடப்போகிறது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி காலியில் ஆரம்பமாகிறது.
செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனதிபதி தேர்தல் இருப்பதால் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அரிதான நிகழ்வாக அன்றைய தினம் போட்டிக்கு இடையே ஓய்வு நாளாக உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியும் காலியில் நடைபெறுவதோடு அந்தப் போட்டி செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற உற்சாகத்துடன் இலங்கை அணி இந்தத் தொடரை எதிர்கொள்வது முக்கியம் என்றபோதும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததற்கான குறைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதும் முக்கியம்.
இதில் குறிப்பாக டெஸ்ட் அணியில் குசல் மெண்டிஸின் இடம் என்பது நாளுக்கு நாள் கேள்விகளையே அதிகரித்திருக்கிறது. முதல் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் குசல் மெண்டிஸ் ஒரு பயனுள்ள டெஸ்ட் வீரராக தம்மை காட்டிக் கொள்ள தவறி வருகிறார்.
மான்செஸ்டர் டெஸ்டின் 24 மற்றும் 0 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டில் அவர் நீக்கப்பட்டார். என்றாலும் ஓவல் டெஸ்டில் அவர் மீண்டும் அழைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 39 ஓட்டங்களைப் பெற்றார்.
இதற்காக அவரை தொடர்ந்து தக்கவைக்க நினைப்பது தர்க்கரீதியில் சரியாக தெரியவில்லை.
இங்கிலாந்து தொடரில் அணியுடன் சென்று வாய்ப்புக் கிட்டாத சதீர சமரவிக்ரம அதேபோன்று தற்போது தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை ஏ அணிக்காக உத்தியோகபூர்வமற்ற முதல் டெஸ்டில் சதம் பெற்ற ஓஷத பெர்னாண்டோ போன்ற வீரர்களை பயன்படுத்த முடியும்.
இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஆடுவதால் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மண்ணில் ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் 7 இல் வென்று 5 இல் தோற்றிருப்பதோடு 5 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன.
எனினும் நியூசிலாந்து அணி முழு ஏற்பாட்டுடன் இலங்கை வருவதோடு இலங்கை அடுகளத்திற்கு முகங்கொடுப்பதற்காக இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தையும் இந்தத் தொடருக்கு பயிற்சி அளிக்க நியமித்திருக்கிறது.
அதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்சிப் பட்டியலில் இடம்பெறுவதாலும் இலங்கைக்கு முக்கியமானது.
உலக டெஸ்ட் சம்பியன்சிப்
உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் இன்னும் 12 தொடர்கள் (30 டெஸ்ட்கள்) எஞ்சியுள்ளன. இதன் முதலிடத்தை பிடிப்பதற்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது. அதாவது இந்தப் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி லண்டன், லோட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஓவல் டெஸ்டில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி இந்தப் புள்ளிப்பட்டியலில் 42.83 புள்ளி வீதத்துடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இதன் முதலிடத்தில் இந்தியாவும் (68.52), இரண்டவது இடத்தில் அவுஸ்திரேலியாவும் (62.50) இருப்பதோடு மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து (50.00) காணப்படுகிறது.
எனவே, உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது என்பது இலங்கையை பொறுத்தவரை இலகுவானதல்ல. இந்தப் பருவத்தில் இலங்கைக்கு நியூசிலாந்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் தென்னாபிரிக்காவுடனும் அவுஸ்திரேலியாவுடனும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
இலங்கை எஞ்சியுள்ள இந்த ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியீட்டினால் அது 69.23 புள்ளி வீதத்துடன் இந்தப் பருவத்தை பூர்த்தி செய்ய முடியும்.
இந்தப் புள்ளிகள் இலங்கை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல போதுமானது. ஆனால் தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளை வெல்வதென்பது சாதாரணப்பட்டதல்ல.
ஒருவேளை இலங்கை அணி ஆறில் ஐந்தில் வென்றால் அதன் புள்ளி வீதம் 61.54 ஆக இருக்கும். இதுவும் இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்க போதுமானது.
இதிலே நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடவிருப்பதோடு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டை எதிரணியின் மண்ணில் ஆடவுள்ளது.