Home » மனிதருள் மாணிக்கம் முஹம்மத் நபி (ஸல்)

மனிதருள் மாணிக்கம் முஹம்மத் நபி (ஸல்)

by Damith Pushpika
September 15, 2024 6:16 am 0 comment

‘நபி (ஸல்) அவர்கள் அறையின் விரிப்பை விலக்கினார்கள். நின்ற நிலையிலே எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரது முகம் குர்ஆனின் ஒரு தாளைப் போன்று (மென்மையாகவும் அழகாகவும் தூய்மையாகவும், பிரகாசமாகவும், மகத்தானதாகவும், புனிதமானதாகவும்) இருந்தது. பின்னர் அவர் புன்னகைத்தார், சிரித்தார்’. (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இது ஹிஜ்ரி 11 ரபீஉல் அவ்வல் மாதம் சரியாக கி.பி 632 ஜூன் மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலைத் தொழுகையின் போது நடைபெற்ற நிகழ்வு. நபி (ஸல்) அவர்களது இறுதிப் புன்னகை இதுவேயாகும். இப்புன்னகையின் கருத்து என்னவாக இருக்கும்? தான் உருவாக்கிய மாணவர் பரம்பரை அதிகாலைத் தொழுகைக்காக திருப்தியோடு ஒன்றுகூடியுள்ள சந்தர்ப்பம் அது. அபூபக்கர் (ரழி) அவர்கள் தலைமையேற்று தொழுகையை நடாத்த முனைகிறார். தான் பின்வாங்கி நபியின் வருகையை எதிர்பார்க்கின்றார். நபியின் சைக்கினையை புரிந்துகொண்ட அவர் மீண்டும் முன்னால் சென்று தொழுகையை நடத்துகிறார்.

இறுதி நேர வலிகளை சகித்துக்கொண்டு மலர்ந்த முகத்துடன் கூடிய ஒரு பிரியாவிடைப் பார்வை அது. தனது தோழர்களை நினைத்து பூரிப்படைந்திருப்பாரா? தான் சுமந்திருந்த ரிஸாலத் என்ற செய்தியை எத்தி வைத்து விட்டேன் என்று திருப்தியடைந்திருப்பாரா? மனித குலத்துக்கு அவர்கள் செல்ல வேண்டிய பாதையை காட்டி விட்டேன் என்று கருதியிருப்பாரா? எனது தோழர்கள் இதனைப் பரம்பரை பரம்பரையாக தொடர்வார்கள் என்று நினைத்திருப்பாரா? அல்லாஹ் தான் அறிந்தவன். பல வருடங்கள் ஒன்றாக இணைந்தும் பிணைந்தும் இருந்து விட்டு ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு, ஒரு தலைவர் தன்னைப் பின்பற்றியவர்களுக்கு தனது நேசர்களுக்கு விடை கொடுக்கிறார்.

நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சில வருடங்கள் தான் சென்றன. முஸ்லிம்கள் பெரியதொரு நாகரிகத்தையே கட்டியெழுப்பி விட்டார்கள். கிழக்கு ஆசியாவில் சீனாவின் எல்லைப்புறத்திலுள்ள ஹிமாலயா மலைத்தொடரிலிருந்து மேற்கு ஐரோப்பாவின் பிரான்ஸ், சைபீரியத் தீவுகள் உள்ளடங்கலாக பிரான்ஸ் மலைத்தொடர் வரை இது பரவிக்காணப்பட்டது. பல இனங்களைச் சார்ந்தவர்கள், பல மொழிகளைப் பேசக்கூடியவர்கள், பல தேசியங்களை கொண்டவர்கள் மகிழ்ச்சியாக அங்கிருந்தார்கள்.

ஈராக்கின் ‘பக்தாத்’ நகரங்களின் முத்தாக இலங்கிக் கொண்டிருந்தது. இருண்ட ஐரோப்பாவின் இருள் நீக்கி ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது’ குர்துபா’. ஆபிரிக்காவின் பெரும் பாலைநிலங்களை அறிவாலும் வியாபாரத்தாலும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது ‘தும்புக்து’ நகரம். இஸ்லாத்தின் நீதியும் சகிப்புத்தன்மையும் உலகமெங்கும் பரவியது. இதுவெல்லாம் எப்படி நிகழ்ந்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்வியலைப் பார்த்தால் அதன் இரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், குடும்பத்தவர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள், மொத்தமாக அனைத்து மனிதர்களுடன் மாத்திரமல்லாமல் ஏனைய படைப்புக்களுடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொண்டார்கள். இதுவே அவரது மாபெரும் வெற்றியின் இரகசியமாகும். அன்னார் தனது குடும்பத்தவரோடு அன்பாக நடந்து கொள்வது போன்று நான் யாரையும் காணவில்லை’ என்று நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்த அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்திருக்கிறார்.

(ஆதாரம்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களைப் போன்று தோற்றத்திலும் நடைமுறையிலும் பண்புகளிலும் (இன்னொரு அறிவிப்பில் பேச்சிலும்) மகள் பாத்திமா (ரழி) அவர்களுக்கு ஒப்பான ஒருவரை நான் காணவில்லை என நபிகளாரின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பாத்திமா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது இல்லம் வந்து விட்டால் தந்தையாரை நோக்கி எழும்பிச் சென்று விடுவார்கள். அவர்களது கையைப் பிடிப்பார்கள். முத்தமிடுவார்கள். தான் அமரும் இடத்தில் அவரை அமர்த்திக் கொள்வார். அதேபோன்று நபியவர்கள் மகள் பாத்திமா (ரழி) அவர்களின் வீட்டுக்குச் சென்றால் அவரும் தனது தந்தையோடு அப்படியே நடந்து கொள்வார்கள்.

(ஆதாரம்: தக்ரீஜூ மிஷ்காதில் மஸாபீஹ்)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டபோது அருகில் அக்ரஃ இப்னு ஹாபிஸ் அத் தமீமி (ரழி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். இதனைக் கண்ணுற்ற அவர் ‘எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டது கிடையாது’ என்றார்கள். அதற்கு நபியவர்கள் ‘யார் அன்பு காட்டவில்லையோ அவர் அன்பு காட்டப்பட மாட்டார்’ என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சிறியவர்களுக்கு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். ‘சிறியோருக்கு அன்பு காட்டாதவர்களும் பெரியவர்களின் கண்ணியத்தை அறிந்து கொள்ளாதவர்களும் என்னைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்றார்கள்.

(ஆதாரம்: திர்மிதி, அபூ தாவுத், அஹ்மத்)

நாட்டின் தலைவர் என்ற பல பொறுப்புகளும் சுமைகளும் அவரது தலையில் இருந்த போதிலும் சிறுவர்களோடு சுவாரசியமாகக் கதைப்பதற்கும் விளையாடுவதற்கும் அவர்களது சிறிய முயற்சிகளிலே பங்கேற்பதற்கும் நபியவர்கள் தவறவில்லை. அவர்களது அறிவையும் உணர்வுகளையும் மதித்தார்கள். அவர்களைத் தட்டிவிடாது தட்டிக்கொடுத்தார்கள். அவர்களைத் தடைக்கற்களாக நோக்காது படிக்கற்களை அமைத்துக் கொடுத்தார்கள். பண்பாட்டையும் அடிப்படைகளையும் பதிப்பதற்கான முதலாவது இடம் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிலே சிறந்த பண்பாடு உள்ளவராக இருந்தார்கள்.

அபூ உமைர் என்று எனக்கொரு சகோதரன் இருந்தான். நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டால் ‘அபூ உமைரே உமது சிறிய குருவுக்கு என்ன நடந்து விட்டது? என்று கேட்பார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

நாட்டின் தலைவர், ஆன்மிகத் தலைவர், குடும்பத் தலைவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு இந்த சிறுவனை மனதில் இருத்திக் கொண்டு காணும் போதெல்லாம் அதுபற்றி விசாரிப்பதென்பது எவ்வளவு ஆச்சரியமான விடயம். இது நபியின் பறவைகள் மீதான நேசத்தையும் காட்டக்கூடியதாக உள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த நபியவர்கள் எமக்கு ஸலாம் சொன்னார்கள்.

(ஆதாரம்: தபரானி)

சிறுவர்களுக்கு ஸலாம் சொன்னது மாத்திரமல்லாது அவர்களுடன் விளையாடியுள்ளார்கள். அவர்களை பெரியவர்களோடு சமமாக அமரச் செய்தார்கள். அதுமட்டுமல்லாது நாட்டுத் தலைவர் தனக்கு வந்த பானத்தை பெரியவர்களுக்கு வழங்க அனுமதி கேட்டார்கள். அவர்கள் அதற்கு அனுமதிக்காத போது திட்டித் தீர்க்கவுமில்லை. கோபப்படவுமில்லை. சிறுவர்களின் கருத்துக்களை மதித்தார்கள். அவர்களுக்குப் பெறுமதி கொடுத்தார்கள். பண்பாடான முறையில் தமது கருத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அவர்களுக்கு துணிவைப் பழக்கினார்கள். தமது உரிமையை அறிந்து கொள்ளவும் அதனைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் அனுமதித்தார்கள். சிறுவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்க முனைந்தார்கள். அவர்களது தனித்துவமான சுதந்திர செயற்பாட்டுக்கு அனுமதித்தார்கள்.

(ஆதாரம்: புஹாரி)

பலர் வியாபாரங்களில் முதலீடு செய்யும் போது, நபியவர்கள் மனிதர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்கள். எதிர்கால சவால்களை முறியடிக்கக்கூடிய அறிவும் ஆளுமையுமுள்ள பலம் வாய்ந்த ஒரு சமூகத்தைக் கனவு கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பாதையை மிக நீண்ட காலத்துக்கு கொண்டு சென்றவர்கள் அவர்கள் தான். எதிர்காலத் தலைமைகளை நன்றாக புடம்போட வேண்டும் என்பதை நபியவர்கள் நன்றாக புரிந்திருந்தார்கள்.

அன்னார் நற்பண்புகளின் சிகரமாகவும் மனிதருள் மாணிக்கமாகவும் திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

அஷ் ஷெய்க் யூ.கே. ரமீஸ் எம்.ஏ (சமூகவியல்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division