இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக செயற்படும் சனத் ஜயசூரியவின் பொறுப்பு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. கிறிஸ் சில்வர்வுட்டுக்கு பதில் கடந்த இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மத்திரமே சனத் ஜனசூரிய நியமிக்கப்பட்டிருந்தார்.
இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் கூட, ‘இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக நான் பங்கேற்கும் கடைசி தொடர்’ என்று ஜயசூரிய ஊடகங்களுக்கு உறுதிப்பட கூறியிருந்தார். எதிர்காலத்தில் பயிற்சியாளராகத் தொடரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
எனவே, இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் அது பற்றி பெரிதாக பேச்சு இல்லை. இத்தனைக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் இலங்கை வந்த விரைவிலேயே இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடப்போகிறது. இந்தத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இந்த குறுகிய இடைவெளிக்குள் புதிய தலைமை பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பது எந்த அளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. தலைமை பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்களின் மூலம் தெரியவருகிறது.
இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னரே புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரி இலங்கை கிரிக்கெட் விளம்பரம் வெளியிட்டிருந்தது.
‘எமது ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியை வழிநடத்துவதற்கு அதிக திறமை மற்றும் அனுபவம் பெற்ற தலைமை பயிற்சியாளர் ஒருவரை நாம் தேடுகிறோம். பொருத்தமான அபேட்சகர் பயிற்சியாளராக உயர் மட்டத்தில் நிரூபிக்கப்பட்ட களப் பதிவு, இந்த விளையாட்டுப் பற்றிய ஆழமான அறிவு மற்றும் உயர்மட்ட கிரிக்கெட் வீரர்களை கவர்தல் மற்றும் மேம்படுத்தும் திறனை பெற்றிருத்தல் வேண்டும்’ என்று குறிப்பிட்ட அந்த விளம்பரத்தில் பதவிக்கான தகைமை மற்றும் பொறுப்புகள் பற்றிய உச்ச தேவைகள் கோரப்பட்டிருக்கிறன.
இதனையொட்டி இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த விண்ணப்பங்கள் தற்போது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த உயர் மட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அல்லது பிரபலமான பயிற்சியாளர்கள் இருப்பது பற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை.
புதிய பயிற்சியாளர் நியமனத்தில் கடைப்பிடிக்கப்போகும் அளவுகோல்கள், திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை. குறிப்பாக உள்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பது அல்லது மீண்டும் வெளிநாட்டு பயிற்சியாளரை நாடுவது பற்றி இன்னும் உறுதியாகவில்லை.
எப்படி இருந்தாலும் கடந்த ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் டி20 உலகக் கிண்ணத்தில் தோற்ற பின்னர் அணியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டி தருணம் ஏற்பட்டிருக்கும் சூழலிலேயே புதிய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
எனவே, வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து கிடைத்த விண்ணப்பத்தை வைத்து பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்யும் நடைமுறை எவ்வளவுக்கு வெற்றி அளிக்கும் என்பது தெரியவில்லை. குறிப்பாக கிடைக்கும் விண்ணப்பங்களில் தேவைக்கு ஏற்ற ஒருவர் இருப்பார் என்று முழுமையாக எதிர்பார்க்க முடியாது. எனவே பயிற்சியாளர் தேர்வில் விண்ணப்பங்களுக்கு அப்பாலும் பொருத்தமான ஒருவரை தேட வாய்ப்பு இருக்கிறது.
கடைசியாக இலங்கை அணியின் நிரந்தர தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் சில்வர்வுட் 2022 தொடக்கம் இரண்டு ஆண்டுகள் அணியை வழிநடத்தினார். அவரது பயிற்சிக் காலம் என்பது ஏற்றத்தாழ்வு மிக்கது. முதலில் அணியை கட்டியெழுப்ப வேண்டி பொறுப்பு அவருக்கு இருந்ததோடு அந்த முயற்சியும் முழுமை பெறாததற்கு அவர் மீது முழுமையாக குற்றம் சுமத்த முடியாது.
எப்படியோ, ஜூன் மாதத்தில் நடந்த டி20 உலகக் கிண்ணம் முடிய அதனுடன் தனது பதவிக் காலமும் முடிய தனிப்பட்ட காரணத்தைக் கூறி பதவி விலகிச் சென்றுவிட்டார்.
இலங்கை அணிக்கு உள்ளூர் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற குரல் ஆங்காங்கே எழுந்தபோதும் கடந்த காலத்தை பார்க்கும்போது அது முழுமையாக வெற்றி அளித்ததாக குறிப்பிட முடியாது.
கடைசியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய உள்நாட்டவர் சந்திக்க ஹத்துருசிங்க. 2017–19 காலப்பகுதியில் பயிற்சியாளராக செயற்பட்ட அவரது காலம் சர்ச்சை கொண்டது. பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளராக அவர் சிறப்பாக செயற்பட்டதை அடுத்தே அந்தப் பதவிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் ஒழுக்காற்று பிரச்சினைக்கு முகம்கொடுத்த அவர் பதவியில் இருந்து நீக்கப்பட அதற்கு எதிராக வழக்குக் கூட தொடுத்தார்.
முன்னாள் வீரர்களான ரோய் டயஸ், மார்வன் அத்தபத்து ஆகியோரும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டிருக்கிறார்கள். தற்போது இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ருமேஷ் ரத்னாயக்க கூட சில்வர்வுட்டுக்கு முன்னர் சிறிது காலம் ஆடவர் அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக இருந்தார்.
சனத் ஜயசூரிய இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் அணியில் சாதகமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 27 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் தொடர் ஒன்றை வெல்ல முடிந்தது. அணியின் கட்டமைப்பில் மாற்றங்களை செய்ததோடு இலங்கை அணியில் அண்மைக் காலமாக குறைபாடு இருந்து வந்த ஒழுக்க விடயங்களிலும் அவர் அவதானம் செலுத்தினார். முடியை வெட்டிக் கொள்வது, நேரத்தியாக வருவது, ஆடை அணிவது போன்ற சின்னச் சின்ன விடயங்களிலும் அவர் அவதானம் செலுத்தினார்.
கடந்த காலத்தில் இலங்கை அணி உலக அரங்கில் சோபித்ததற்கு மைதானத்தில் அணி காட்டிய திறமைக்கு அப்பால் மைதானத்திற்கு வெளியில் அணியின் ஒழுக்கமும் முக்கியமாக இருந்திருக்கிறது. உள்ளூர் வீரர் மற்றும் இலங்கைக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்த வீரர் என்ற வகையில் சனத் ஜயசூரிய அதனை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளராக உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது என்றாலும் அதற்கான தேர்வாக யார் இருப்பார் என்பது முக்கிய கேள்வி. இப்போதைக்கு இலங்கையில் இருக்கும் சிறப்பான பயிற்சியாளர் என்று பார்த்தால் மஹேல ஜயவர்தனவை குறிப்பிடலாம்.
என்றாலும் அவர் இந்திய பிரீமியர் லீக் மற்றும் சர்வதேச அளவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை பயிற்சியாளர் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.
மற்றது முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் கதையும் இது தான். அவர் இலங்கையில் இருப்பதை விடவும் வெளிநாட்டில் அதுவும் இங்கிலாந்தில் அதிக காலத்தை செலவிடுவதோடு இங்கிலாந்து தலைமை பயிற்சியாளராகவும் முயற்சித்தார். எனவே, இலங்கை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
மார்வன் அத்தப்பத்து மற்றும் ரோய் டயஸ் போன்றவர்களின் காலம் கடந்து விட்டதாகவே கருதப்படுகிறது. சந்திக்க ஹத்துருசிங்க மீண்டும் பங்களாதேஷ் பயிற்சியாளராக செயற்பட்ட நிலையில் தற்போது அந்தப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே பிரச்சினைப்பட்ட அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு இல்லை.
எனவே, இலங்கை அளவில் தேசிய அணிக்கு பயிற்சியாளர் ஒருவரை தேர்வு செய்வதாக இருந்தால் அதற்கான தேர்வு என்பதும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.
தற்போது இடைக்கால பயிற்சியாளராக இருக்கும் சனத் ஜயசூரியவே மேலும் சில காலத்திற்கு அந்தப் பொறுப்பில் நீடிப்பதற்கு கோரப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் அடுத்து வரும் மாதங்கள் இலங்கை அணிக்கு போட்டிச் சுமை அதிகமாக உள்ளது.
அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இலங்கை அணி ஒக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் ஆடப்போகிறது.
இதனையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பரில் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டு டிசம்பர் மற்றும் ஜனவரியில் நியூசிலாந்து சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடும். இந்த பரபரப்புக்கு மத்தியிலேயே புதிய பயிற்சியாளர் ஒருவரை தேட வேண்டிய தேவையும் உள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை உள்நாட்டு பயிற்சியாளர்களை விடவும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கடந்த காலத்தில் நன்றாக செயற்பட்டிருக்கிறார்கள். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்வதற்கு எத்தனையோ அளுமைகள் பின்னணியில் இருந்தார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் அணி பயிற்சியாளர் டேவ் வட்மோர். அதேபோன்று அவுஸ்திரேலியாவின் டொம் மூடியும் பயிற்சியாளராக இலக்கைக்கு முக்கியமானவராக இருந்தார்.
இலங்கை விளையாட்டுத் துறையில் அதிக சம்பளம் பெறும் பதவிகளில் ஒன்றாக இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரை குறிப்பிடலாம். முன்னர் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட்டின் மாதாந்த சம்பளமாக 30,000 அமெரிக்க டொலர்களை பெற்றார். இதனை இலங்கை நாணயத்தில் மதிப்பிட்டுப்பார்த்தால் 9 மில்லியன் ரூபா இருக்கும்.
என்றாலும் சர்வதேச தரத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் குறைவுதான். இந்திய பிரிமியர் லீக் போன்ற சர்வதேச கிரிக்கெட் லீக்குகளில் பயிற்சியாளர்களாக செயற்பட்டு குறுகிய கால வேலைக்காக அதிக சம்பளத்தை பெற வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்னணி பயிற்சியாளர்கள் அது போன்று பணிகளுக்கு ஆர்வம் காட்டுவது அதிகரித்திருக்கிறது.
இதனைத் தாண்டி இலங்கை பயிற்சியாளர் பதவிக்கு பெரும்புள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. இந்த நெருக்கடிக்கு இடையிலேயே புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை கிரிக்கெட் தள்ளப்பட்டிருக்கிறது.
என்றாலும் நல்ல பயிற்சியாளர் ஒருவரை அணி ஒன்று பெற்றுவிட்டால் அந்த அணிக்கு பாதி வெற்றி. அணியை கட்டியெழுப்புவது, வழிநடத்துவதில் நல்ல பயிற்சியாளர் ஒருவரின் செல்வாக்கு அதிகம் இருக்கும். எனவே, பொருத்தமான ஒருவரை பயிற்சியாளராவது கட்டாயம் என்பதோடு அதற்கு அர்ஷ்டமும் கைகூட வேண்டும்.