வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் மேற்கே இந்து சமுத்திரமும் கிழக்கே ஒல்லாந்தர் வெட்டு வாய்க்காலும் கொண்ட இயற்கையான சூழலில் உடப்பு என்ற தமிழ்க் கிராமம் அமைந்து காணப்படுகின்றது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றார்கள்.
தென்னிந்திய கிராமங்களின் அக்காமடம் தங்கச்சிமடம் போன்ற இறுக்கமான இந்து மத கலாசார பின்புலத்தில் வாழ்ந்த இந்த உடப்பூர் வாழ் மக்கள் தமது குலத்துக்கு ஏற்பட்ட மதமாற்ற தாக்கத்துக்குப் பயந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடப்புலங்களிலிருந்து விடுபட்டு நல்ல தண்ணீரும் நிரந்தரமான ஜீவனோபாய தொழில் இருப்பைகளை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் இந்த உடப்பு கிராமத்தைக் அறிந்துள்ளார்கள்.
ஆனால் இந்த மக்கள் எங்கெங்கெல்லாம் தங்கி இருந்தார்களோ அங்கெல்லாம் தமது குல தெய்வமான அன்னை திரௌபதி தேவிக்கு மற்றும் சக்திப் பெண் தெய்வங்களுக்கும் ஆலயம் அமைத்து கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளார்கள். ஆனால் உடப்பு மக்கள் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த பழக்க வழக்கங்கள் கலை கலாசார முறைமைகள் தெய்வ வழிபாடுகள் கூட முன்னோர்கள் பின்பற்றிய சாயலை இன்னமும் பிசகாமல் இடம்பெற்று வருவது முக்கிய கூறாகும். இவ்வழிபாடு இங்கு நடாத்தப்பட இரு காரணங்களை முன் வைக்கின்றனர்.
இங்குள்ள மூதாதையர்கள் இராமநாத புரத்திலிருந்து வழிபட்டு வந்த ஒரு தெய்வத்தையே இங்கும் பூஜித்தார்கள் என்பர் ஒரு சாரார். மற்றைய ஒரு சாரார் அதுவல்ல என்கின்றனர்.இருந்த போதிலும் இங்குள்ளவர்கள் சக்தி வழிபாட்டில் நாட்டம் உடையவர்கள் என்பது யதார்த்தமாகும். திரௌபதியம்மன் வழிபாடு பாரதக்கதையை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படுகின்றன. கரகம் பாலிக்கும் பூசகர் தன்னை ஜீவாத்மாவாக பாவனை செய்து பதினெட்டு நாள் உபவாசமிருப்பார். முதல் நாள் பாரதக் கதையின் யுத்தத்தின் ஆரம்பக்கதை படிக்கப்பட்டு சர்ப்பக்கொடியோடு துரியோதனின் ஞாபகக் கொடி ஏற்றி வைக்கப்படும்.
ஐந்தாவது நாளன்று ஐவர்களின் ஞாபகக் கொடியாகிய அனுமன் கொடி வெளிக் கொடியாக ஏற்றப்படும். அன்று தொடக்கம் ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரையும் பாரதக்கதை பூரணமாகப் படிக்கப்படும். இத்தினங்களில் ஒன்றுவிட்ட ஒரு நாள் பூசகர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கரகம் பாலித்து பக்தர்கள் பரவசமடைய திரௌபதியம்மன் ஆலயத்தை அடைவார்கள். நாட்கள் அண்மிக்க அண்மிக்க பூசகரின் உருக்கொள்ளும் நிலையும் பக்தி உணர்வூட்டும்.
இது பக்தி பரவசத்துக்கு எடுத்துக் காட்டாகும். பாரதக்கதை நகர்த்தலின் பதினொராவது தினம் பாண்டவர்களில் வனம் புகும் காட்சியில் வேடம் தரித்த நேர்த்திக்குத் தெரிவு செய்யப்பட்ட அடியார்கள் தத்துவார்த்தமாக பாண்டவர்களாக வேசமிட்டும் ஜிவாத்தமாகிய திரௌபதா தேவியாகவும் காட்சி கொடுத்து நிகழ்வுறும் விழாவானது அற்புத அதிசயமாக இருக்கும்.
அடுத்த நாள் பாரதத்தின் நாயகன் அருச்சுனனிடம் தவம் புரியும் காட்சி நடித்துக் காட்டப்படும். சிவபெருமானின் கையிலுள்ள பாசுபதா ஸ்திரத்தைப் பெறுவதற்காக 70 அடிக் கம்பத்தின் உச்சியில் தவம் செய்வது போல் அருச்சுனனாகப் பாவனை செய்தவர் உபவாசமிருந்து காளியம்மன் ஆலயத்திலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சேகண்டி சங்கு ஒலி ஒலிக்க பாரதக்கதை படிக்கப்பட்டு தவசி மரத்தை வந்தடைந்து அம்மரத்தில் ஏறி தவம்புரிந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றுக் கொண்டதாக பாவனை செய்வார். இதன் தத்துவ விளக்கமாக இவ்வாலயத்தில் பாவிக்கப்படும் அம்பு, வில்லு என்பன இந்நிகழ்வில் முக்கிய கருவியாக இருக்கும். இது பக்தியுடன் நிகழ்வுறும்.
அடுத்த தினம் கர்ணனின் படுகளக்காட்சி இடம்பெறும். அறத்தின் மடியில் பிறந்து முன்னைய ஊழ்வினைப் பயனாய் அரக்கர் குலத்தில் சேர்ந்து உயிர்விட்ட தியாகி கர்ணனாக ஒருவர் நடித்துக் காட்ட அருச்சுனனாக ஒருவர் தத்துவமாகத் தோன்றி யுத்த களத்தில் போரிட்டது போல் காட்சி கொடுத்து இறுதியில் கர்ணன் மாண்டு மடிவதை இவர் எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.
இறுதியாக திரௌபதாதேவி ஆலயத்தின் இறுதி வாதம் முடித்து துரியோதனனின் தொடையைப் பிளந்து அதில் வடியும் இரத்தத்தினால் அன்று விரித்த கூந்தலை திரௌபதாதேவியானவள் அள்ளி முடித்த அற்புதக் காட்சி இடம்பெறும். இதன் வெற்றிக் களிப்பிலே இவ்வூர் மக்கள் இந்திர விழாவான தீமிதிப்பு விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.
உடப்பு வாழ் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணையப்பட்டதாக அம்பாளின் சக்திகளே மூலாதாரமாக இருப்பதாக திடமான எத்தனமாகும். திரௌபதியின் அருளின்றி ஒன்றும் அசையாது. தமது பிறப்பிலிருந்து இறப்பு வரையும் அன்னையின் அருளாட்சியே மூல வேராகும் என்ற நாட்டுப் புற வாழ்வியலின் பண்பாடு என்பதை விளங்கக் கூடியதாக உள்ளது.
க. மகாதேவன் (உடப்பு குறூப் நிருபர்)