நல்லூர் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.
கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது கோயில். கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும், தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் ஏழு நிலைகளுடனும் காட்சியளிக்கின்றன. தெற்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் அமைந்திருக்கிறது. கிழக்கு கோபுரத்தின் முன்பு, அழகிய வேலைப்பாடுகளைக்கொண்ட தோரண வளைவு ஒன்றும் உள்ளது.
‘யாழ்ப்பாண வைபவமாலை’, ‘கைலாய மாலை’ ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `15ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த, ‘கோட்டே’ சிங்கள அரசரின் பிரதிநிதியாக இருந்து, பிற்காலத்தில் ‘சங்கபோதி’ என்னும் பட்டம் பெற்ற புவனேகவாகு என்னும் ‘செண்பகப் பெருமாள்’ என்பவரால் கட்டப்பட்டது’ என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாகக் கோயிலில் சொல்லப்படும் கட்டியத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர். இன்னும் சிலர், `புவனேகவாகு தன்னுடைய காலத்தில் ஏற்கெனவே இருந்த கோயிலைப் புதுப்பித்துக் கட்டியிருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர்.
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துகீசியர்களின் தளபதியாக இருந்த ‘பிலிப்பே டி ஒலிவேரா’ (Phillippe de Oliveira) யாழ்ப்பாணத்தைத் தலைநகரமாக மாற்றினார். நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும் செய்தார். அங்கே ஒரு தேவாலயமும் கட்டினார். பின்னர் வந்த டச்சுக்காரர்கள் அந்த தேவாலயத்தை தங்கள் மரபுக்கு உரிய முறையில் வழிபடக்கூடிய தேவாலயமாக மாற்றிக்கொண்டனர்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் மீண்டும் இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டபோது, நல்லூர் கந்தசுவாமி கோயிலும் நிர்மாணிக்கப்பட்டது. பின்னர், தமிழ் இலக்கியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இந்தக் கோயிலின் பூஜைமுறைகளை நெறிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கோயிலில் வியப்புக்குரிய செய்தி ஒன்றும் உள்ளது. கந்தசுவாமி கோயிலின் கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. ஆம்! கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக வழிபடப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேலைத்தான், இந்தக் கோயிலில் வழிபடு தெய்வமாக எழுந்தருளச் செய்திருக்கிறார் முருகப் பெருமான். திருவிழாக்களின்போது இந்த ‘வேல்’ வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர்.
கோயிலின் நீண்ட அழகிய பிராகாரங்களில் மரவேலைப்பாடுகளுடன் கூடிய வண்ணப்பூச்சுகள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானை, குழந்தை கிருஷ்ணன், சூரியன், சூலம் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். ஆறுமுக சுவாமியின் உற்சவ மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. கோயிலும் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது.
வருடம்தோறும் ஆடி, ஆவணி மாதங்களில் 27 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்த 6ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, ஆவணி மாதம் அமாவாசையன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறும். 24ஆம் நாள் தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெறும். திருவிழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மாதம்தோறும் கிருத்திகையன்று வள்ளி, தெய்வானை இருபுறமும் இருக்க, வேலை சிறப்பாக அலங்கரித்து வழிபடுகின்றனர். மேலும் தைப்பூசம், மார்கழி திருவாதிரை, கந்த சஷ்டி ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன.
கோயிலின் வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திய ஆறுமுக நாவலருக்கு அவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் ஒன்றும் கோயிலுக்கு இடப்புறம் அமைந்துள்ளது. சைவ சமயத்துக்கு அரும் தொண்டாற்றிய ஆறுமுகநாவலர், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் சைவம் தழைக்கச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்த நிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபத்தில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்கள் பண்ணோடு கற்றுக் கொடுக்கின்றனர்.
கோயிலில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் திருநல்லூர் முருகன் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன.
மாலையில் நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. முருகப்பெருமானுக்கு ஊஞ்சல் பாட்டுப் பாடி, சிறிய மஞ்சத்தில் வைத்துத் துயில்கொள்ளச் செய்கின்றனர். பள்ளியறை பூஜையைத் தரிசிக்க பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 4:30 முதல் 12 வரை; மாலை 4 முதல் 5:45 வரை.
இலங்கை செல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள், வேலையே வேலவனாக வழிபடும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டால், ‘வேலுண்டு வினையில்லை’ என்பதற்கேற்ப, வினைகள் யாவும் தீர்ந்து, அனைத்து வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.
அமலன்