Home » தமிழ் மக்களின் முருக வழிபாடும் அதன் பின்னணியும்

தமிழ் மக்களின் முருக வழிபாடும் அதன் பின்னணியும்

by Damith Pushpika
September 1, 2024 6:52 am 0 comment

‘கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்

நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்

அற்புதமாகிய அருப்பெரும் சுடரே அருள்மறை தேடிடும் கருணையென் கடலே’

இந்த வரிகள்தான் கந்தனை வணங்கும் ஒவ்வொரு தமிழனின் இருதயத்திலிருந்து வரும் பக்தி நாதமாகும்.

சமயச் சடங்குகள் என்பவை குறிப்பிட்ட கடவுளை வணங்கும் தனிப்பட்ட மனிதரின் நம்பிக்கை மட்டுமல்லாது, அவன் வாழும் சமூகத்தினரின் பன்முகத் தன்மையான நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதாகும். உலகில் பல்லினங்களும் பல்வேறு சடங்குகளைத் தொடர்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்தில் தமிழ்க் கடவுள் முருகனது வழிபாட்டுச் சடங்குகளையும் உளவியல் பார்வையில் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எமெய்ல் டேர்க்காய்ம் என்ற பிரான்சிய, யூத சமூகவியலாளர், சடங்கு நடத்தைக்கும் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிப்பதற்கும் இடையிலான உறவை முன்வைத்தார். புனிதமானவை என்று கருதப்படுகின்ற கூட்டு வணக்கமுறையை சமூக ஒற்றுமைக் கோட்பாட்டில் முன்வைத்தார். இதற்கு தமிழர்கள் முன்னெடுக்கும் அத்தனை சடங்குகளையும் உதாரணங்களாக காட்டினார். உலகெங்கும் பரந்து வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் இயற்கையை மதித்த, இயற்கைக்குப் பயந்த, இயற்கைக்குப் பணிந்த மக்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்களின் வழிபாட்டுச் சடங்குகளும் அந்த நம்பிக்கையிற்தான் ஆரம்பித்தது. குன்றுக் கடவுள் முருகனுக்கு ஆதித் தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய வழிபாடுகளின் நீட்சியே இன்று நடக்கும் பல சடங்குகள் என்று எடுத்துக் கொள்ளலாம். அதன் பிரதிபலிப்புத்தான் வேல் வழிபாடு, ஆடல்கள், பாடல்கள், காவடி எடுத்தல் போன்ற முருகக் கடவுள் சார்ந்த சடங்குகளாகும்.

தமிழ் கடவுள் முருகவழிபாடு உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு சமயச் சடங்குகளின் நீட்சியாகும். தமிழ்க் கடவுள் முருகனுக்குச் செய்யப்படும் பூஜை என்பது அதைச் செய்பவர்களின் வாழ்வையுயர்த்தும் தயவை எதிர்பார்த்துச் செய்யப்படுவதாகும். ‘முருகன் எங்கள் கடவுள்’ என்பதன் குறிக்கோள் வரையறையான சடங்குகள் ஆகும். இந்தச் சடங்குகள் காலம் காலமாகப் பரிந்துரைக்கப்பட்ட முறையான நடத்தைகளாக மக்கள் நம்பும் சக்தியின் மீதான பக்தியைப் பிரதிபலிக்கிறது.

உளவியல் சார்ந்த முருக வழிபாட்டில் தமிழர்கள் முருனை ‘ஆறுமுகனாக’ வணங்குகிறார்கள். ஆறுமுகம் என்பது தமிழரின் அறிவு, வீரம், ஆளுமை, செல்வம், அன்பு, கௌரவம் போன்ற ஆறு கூறுகளை முருகன் வெளிப்படுத்துகிறான் என்தை உணர்த்துகிறது. இது கி.மு 2ம் நூற்றாண்டு எழுதப்பட்ட திருமுருகாற்றுப்படையில்:

‘ அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்,

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்,-நெஞ்சில்,

ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்

முருகாவென்றோதுவோர் முன்’

என்றவாறு சொல்லப்பட்டிருக்கிறது..

தமிழரின் அரிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் முருகன் ‘சேயோன்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். இலங்கையின் முக்கிய ஆய்வாளரான கலாநிதி கைலாசபதி அவர்கள் தொல்காப்பியம் கி.மு 8ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்கிறார்.அதாவது முருக வழிபாட்டுச் சடங்குகள் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் மேலான பழமைவாய்ந்தது. அது தொல் தமிழர் உளவியலை இன்றும் தொடர்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

எந்தவிதமான சமயச் சடங்குக்கும் அதை முன்னெடுக்கும் மக்களின் சமய நம்பிக்கை, அவர்களின் இலக்கியம், சமுதாய வரலாறு, வாய்மொழி, தொல்லியல், கல்வெட்டு போன்ற ஏதோ ஒரு இடத்தில் இந்தச் சடங்கின் ஓரளவான விளக்கம் இருக்கும். அத்துடன் வானிலை தொடர்ந்த உளவியற் தொடர்பும் இருந்திருக்கலாம் என்பதை ச.வே.சுப்பிரமணியம், ஜி.இராஜேந்திரன்(1985) என்பவர்களின் கூற்றில் அறியலாம். அவர்கள், ‘தொல்காலத்தில், தமிழர்கள் வானிலை ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். அதன் பிரதிபலிப்பே முருகனைச் ‘சேயோன்’ என்று வழிபடுவதாகும். செவ்வாய்க் கிரகம் சிவப்பானது. செவ்வாய்க்கிழமையை முருகனின் நாளாகத் தமிழர்கள் வழிபடுவதன் மூலம் அவர்களின் வானறிவை மதிக்கும் உளவியல் தெரிகிறது.

தமிழ்நாட்டில் முருக வழிபாடு ஒரு குறிப்பிட்ட காலம் பெரிதாக இருக்கவில்லை என்றும், ஆனால் கி.பி 10ம் நூற்றாண்டின்பின் தமிழரின் பக்தி வழிபாட்டில் தமிழுணர்வு முருகனுடனிணைந்து வளர்ந்ததாகக் கருதுகிறார்கள். அக்காலகட்டம்தான் சோழனின் புலிக் கொடி தமிழ்நாடு கலந்து பல நாடுகளிற் பறந்த காலகட்டமாகும். அப்போதுதான் இலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் கோயில் கட்டப்பட்டது. ஆனால் இலங்கையில் முருக வழிபாடு பல்லாயிரம் வருட சரித்திரத்தைக் கொண்டது. சிங்கள மக்கள், தங்களின் வனப் பெண்ணை மணக்க வந்த முருகனைத் தங்களின் மைத்துனராக வணங்கும் வழக்கம் இதை மெய்ப்பிக்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து விஜயன் இலங்கைக்கு வரும்போது இலங்கையில் முருக வழிபாடு இருந்திருக்கிறது. அக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயதங்களின் கூரான வேல் அமைப்பானது இதனை மெய்ப்பிக்கிறது. இது சிங்களவர், தமிழர்களுக்கிடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு இருந்ததையும் காட்டுகிறது.

அதேபோலே தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு மிகவும் நீண்டது. ஆதித்த நல்லூரில் கிடைத்த முருக வழிபாட்டுத்தடயங்கள் போன்று இலங்கையில் வடக்கிலுள்ள கோயிலொன்றிலும் ஆண்தெய்வ சிலை வேலுடன் கண்டெடுக்கப்பட்டது. அதே போலவே இலங்கையின் வடமத்திய பிரதேசத்திலுள்ள அனுராதபுரம், தென்னிலங்கையிலுள்ள அக்குறகொட போன்ற இடங்களிலும் கிடைத்திருப்பதாகத் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் தமிழ்க் கடவுள் முருகனுக்காக எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை. திருத்தணி, பழமுதிர்சோலை போன்ற ஆறு படை வீடுகள் மிகவும் பிரசித்தமானவை.

தமிழர்கள் ஆறு விகிதத்திற்குமேல் வாழும் மலேசியாவில் கோலாம்பூர் நகரில் 42.7 மீட்டர் உயரத்தில் உலகத்திலேயே உயரமான முருகன் சிலை உயர்ந்து நிற்கிறது. இதை விட இலங்கையில் முருக தலங்களில் பெயர்பெற்றவைகளில் ஒன்றானதும், மிகவும் புராதனமுமான கதிர்காமத்தலம் இருக்கிறது. அத்துடன் வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மலையகம் என்று பல இடங்களில் முருகன் கோயில்கள் உள்ளன. இவற்றுள் நல்லூர் கந்தசாமி கோயில். மாவிட்டபுரம், செல்லச் சன்னிதி, சித்திரவேலாயுத முருகன் கோயில், வெருகல், திருகோணமலை மண்டூர் கந்தசாமி கோயில், திருக்கோயில் என்பன மிகவும் பிரசித்தமானவை.

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களால் இங்கிலாந்தில் பல இடங்களிலும் ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் முருகனுக்குச் சிறப்பான கோயில்களை அமைத்துப் பல சடங்குகளை நடத்தி தமிழர்களின் பக்தி அத்துடனிணைந்த கலாச்சாரப் பண்பாடுகளை வெளிப்படுத்தி அவர்கள் வாழும் நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

இன்று உலகெங்கும் முருகனுக்காக எடுக்கப்படும் சடங்குகள் தமிழர்கள் தங்கள் ‘தமிழ்க் கடவுளின்’ பன்முகத் தன்மையின் சிறப்பை உலகுக்கு அறிவிக்கும் ஒரு கூட்டு உளவியல் செயற்பாடு என்று எடுத்துக் கொண்டால் அது மிகையாகாது. ஏனென்றால் மிகப் பெரும் காலமாக அவர்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள் என்பனவற்றைத் திரிவுபடுத்தவும், திருடி எடுக்கவும் பல முயற்சிகள் நடப்பதை அவர்கள் கண்டு கொண்ட வெறுப்பின் ஒரு வெளிப்பாடாக இந்தச் சடங்குகளை நோக்கலாம்.

இந்தத் தத்துவங்களின் பிரதிபலிப்பாக முருக வழிபாட்டின் சடங்குகளும் அமைகின்றன. மிகவும் அழகான சோடனைகளுடன், அன்பான உற்றார் உறவினர் புடைசூழ, கம்பீரமான தோற்றத்துடன், ஆளுமையாகப் பால்காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக் காவடி, தொங்கு காவடி, தூக்குக் காவடி போன்றவற்றைத் தோளில் தாங்கி கண்ணைக் கவரும் வண்ணங்களால் அந்தக் காவடியை அலங்கரித்து, மத்தளம் கொட்ட சல்லரி ஒலிக்க, அரோகரா முழங்க முருக சடங்குகள் நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்தச் சடங்குகளில் காவடியாடுபவர்கள், வாயில் அலகு, முதுகில் பலதரப்பட்ட இரும்புக் கொழுக்கிகள், போன்றவற்றைத் தங்கள் தோலை ஊடுருவித் துளைத்துப் போட்டிருப்பது முருகனுக்கு அவர்கள் செய்யும் சடங்குகளை எவ்வளவு பக்தியுடன் செய்கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும். இந்த அலகுகளால் குருதி போவதோடு அளவுக்கு மீறிய வேதனையுடன் பக்தர்கள் அவதிப்படுவதையோ காணமுடியாது. அவர்கள் உளரீதியாகத் தங்களைத் தயார்படுத்தியிருப்பது அவர்களின் செயற்பாட்டில் விளங்கும். முருகனுக்கு காவடி எடுப்பது என்ற சாதாரண வார்த்தைகளுக்குள் எத்தனையோ வேறுபாடுகள் இருப்பதைக் காவடித் திருவிழாவை நுணுக்கமாகப் பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்..

தெய்வ வழிபாட்டில் தனிப்பட்ட சடங்குகளையும், பெண்களும் ஆண்களும் பாற்குடல் காவுதல், வாயில் அலகு போடுதல், அங்கப் பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல் போன்றவற்றையும் செய்வார்கள். ஆனால் அதுவும் குடும்பம் அல்லது அவர்களின் உற்றார் உறவினர் சார்ந்ததாக இருக்கும். கடவுளுக்கு வைத்த நேர்த்திகடன் காரணமாகத் தீ சட்டி எடுத்தல் போன்ற விடயங்களையும் திருவிழாக் காலங்களில் பெண்கள் செய்வார்கள். அந்த நிகழ்வு பக்தியுடன், கோட்பாடுகளை உள்ளடக்கிய, மரபை விட்டகலாத சடங்காக நடந்து முடிவதை அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாகச் செயற்படுத்துகிறார்கள்.

இலங்கைத் தமிழரின் கதிர்காம யாத்திரை ஒருகாலத்தில் இலங்கையின் வடக்கில் உள்ள செல்வச் சன்னிதி முருகன் திருக்கோயிலிலிருந்து ஆரம்பமாகி தெற்கிலுள்ள கதிர்காமத்தை நடந்து சென்று தரிசிப்பார்கள். இதன் தூரம் 1396 கிலோமீட்டர் என்று சொல்லப்படுகிறது. இந்த யாத்திரை பலவித மக்களை இணைப்பது, பல பிரதேசங்கள், பல வர்க்க, இன வேறுபாடுகள் அத்தனையும் கடந்து முருகனின் பக்தியின் செயற்பாட்டால் இரவு பகலாக அவன் பெயரைப் பாடிக்கொண்டு காடு, மலை, ஆறு, குளங்கள், கிராமங்கள், நகரங்ளைத் தாண்டி கதிர்காமம் செல்வார்கள்.

இந்தச் சடங்குகளில் பெரும்பாலும் பக்திப் பாடல்கள், சல்லரிச் சத்தம் நிறைந்திருக்கும். பெருந்தூரம் ஒன்றிணைந்த இந்த ஒன்றுபட்ட உந்துதல் தரும் உளவியலை வேறு எந்தக் கடவுள் யாத்திரையிலும் இலங்கையிற் காண முடியாது. இந்த பாரம்பரியம் மிக நீண்டகாலமாகவே மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழர்களைப் பொறுத்தவரையில் முருகன். கலியுகக் கந்தன், காக்கும் கடவுள். தமிழர்கள் கல்வி நிலையில் உயர உதபவுபவன், அறிவு தருபவன், எத்துயர் வந்தாலும் நின்று பிடிக்கும் வல்லமை தந்த வீரவேலன், அந்நிய நாட்டில் முகங்கொடுக்கும் அத்தனை துன்பத்தையும் நீக்குகிறான் அதனால் அவன் ஒரு மாபெரும் சக்தி,

தமிழரின் காதற்கடவுள், போர்க்கடவுள், திராவிடக் கடவுள், தமிழ் உணர்வுகளுடன் ஒன்றெனக் கலந்தவன் எனும் நம்பிக்கையிலேயே அவனுக்காக உடல் வலி பாராமல் சடங்குகளைச் செய்கிறார்கள்

தமிழரின் உளம் சார்ந்த முருகவழிபாட்டுச் சடங்குகளை விளக்க திருமூலர், ‘உள்ளமு பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’; என்று சொன்னார். இப்படியான உளவியல் காரணிகளால் முருகன் உலகெங்கும் தமிழரின் வாழ்வில் இன்றியமையாத அற்புத சக்தியாக இடம் பிடித்திருக்கிறான்.

தமிழர்களின் முருகன் பற்றிய உளவியலை,

‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய்ப் பணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’

என்ற கந்தரனுபூத வாசகங்கள் அற்புதமாக விளக்குகின்றன. முருகப்பெருமானுக்கான சடங்குகளை, உணர்வு நிலையுடன் தங்கள் உடலை மையமாய் அர்ப்பணித்து மேற்கொள்பவன் இந்த பிரபஞ்ச அமைப்பில் இறைபக்தியில் திளைக்கிறான்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division