Home » ‘நல்லூர் கந்தன்’
நலமெல்லாம் தந்திடுவான்

‘நல்லூர் கந்தன்’

by Damith Pushpika
September 1, 2024 6:43 am 0 comment

உத்தமனாம் வேல் முருகன் ஓங்கும் நல்ல
உயர்பதியாம் நல்லூரில் மயில்மீதேறி
பத்தியுடன் அடியவர்கள் சூழ்ந்தே நிற்கப்
பார்முழுதும் தனதழகால் ஈர்த்து என்றும்
நித்தமொரு வடிவோடு நெஞ்சை அள்ளி
நேர்நின்று பொழிகின்ற அருளைக் கண்டார்
எத்திசையில் இருந்தாலும் ஓடிவந்து
ஏத்துவராம் அவன்தாளில் இதயம் வைத்தே.

ஓங்கார மணியோசை செவியிற் பாய
ஓடிவிடும் வினையதுவும் ஒன்றாய்ச் சேர்ந்தே
ஆங்காரம் அறுத்தந்த சூரன்தன்னை
அடியவனாய் ஏற்று அருள் செய்தற்காக
நீங்காது உடன் வைத்தான் நேயம் பொங்க
நிமிர் சேவல் மயிலதுவாய்
ஆக்கிக் கொண்டான்
நாங்காதல் கொள்கின்ற நல்லூர்க் கந்தன்
நமையுந்தான் ஏற்றிடுவான் நலிவு நீக்கி.

வல்லரக்கன் இராவணனை மலையின் கீழே
வைத்தழுத்தி இசைபாட அருளே செய்த
தள்ளரிய புகழ்க்கைலை ரதத்திலேறி
தரணியெலாம் மயக்கிடவே வேலன் வந்தால்
அல்லவரும் நல்லவராய் ஆகி அந்த
அருட்காட்சி தனில் மூழ்கி அழுதே நிற்பார்.
மல்லதனில் செயம் கொண்டு மயிலிலேறும்
மாமுருகன் நமைக்காக்க மண்மேல் வந்தான்.

சந்தமதில் தமிழ் சேர்த்துத் தரணி பொங்க
சாற்றரிய திருப்புகழைத் தந்து ஆண்ட
எந்தைபிரான் அருணகிரி ஏற்றுகின்ற
எழிற்கந்தன் நல்லூரில் கொடியும் ஏற
பந்தமொடு இளையரெலாம் பக்தராகி
பாரதனில் கிடந்தே தம் உடலதாலே
கந்தனையே நினைந்துருகி கண்ணீர் பொங்க
கைகூப்பி உருண்டுவரும் காட்சி என்னே!

மாதரெலாம் அடியளந்து மனத்துள் கந்தன்
மங்காத அருள் நிரப்பி மாங்கல்யத்தை
நாதனவன் காத்திடவே வேண்டி நின்று
நல்லூரான் வீதியிலே உருகி நிற்பார்
ஏதமிலா நல்வாழ்வை எமக்குக் கந்தன்
எப்போதும் தந்திடுவன் என்றே சொல்லி
வேதனையில் உழல்வாரும் வேலன் காலை
விருப்புடனே பற்றி அருள் வேண்டிநிற்பர்.
தாழவரும் பெற்றோரின் கைகள் பற்றி
தனியாத ஆர்வத்தால் ஓடிவந்த
பாலகரும் பந்தலிலே ஊற்றுகின்ற
பல்சுவைசேர் பானங்கள் பருகித் தீர்ப்பார்
தாளமொடு சங்கதிகள் சேர்த்து நல்ல
தரமான இசையோடு பிரசங்கங்கள்
வீழவரு வயதினிலும் முதியோர் எல்லாம்
விரும்பி நிதம் கேட்டிடுவர் வீதி மொய்த்தே.

கோபுரத்து மணியோசை கூடிநிற்கும்
கும்பிடுவோர் எழுப்புகிற குரலினோசை
நூபுரத்து அசைவதனால் பெண்களெல்லாம்
நுட்பமதாய் எழுப்புகிற மணியின் ஓசை
நாபியிலே இருந்தெழுந்து ஓங்குகின்ற
நன்மைதரு நாயனமாம் குழலின் ஓசை
பாபிகளின் அழும் ஓசை பரந்து எங்கும்
பாரெல்லாம் அதிர்ந்திடவே தேரும் சுற்றும்.

ஆட்கடலில் தேரதுவும் மலைபோல் நிற்க
ஆயிரமாய் இளையரெலாம் அன்பு பொங்கி
பாற்கடலைத் தேவர்களும் கடைந்தாற் போல
பாம்பெனவே நீண்ட பெரும் வடத்தைப் பற்றி
நாட்டவரும் வியப்பெய்த நலமே பொங்க
நழுங்காமல் தேரதனை இழுக்கும் காட்சி
கூட்டதனின் பெருமை சொலும் தமிழரெலாம்
கொண்டாடிக் கந்தனையே குறியாய்க் கொள்வர்.

தேரேறி நல்லூரான் வீதி வந்தால்
திரண்டேதான் பக்தரெலாம் ஒன்று கூட
பார் மாறிக் கடல்போல ஆகிநிற்கும்
பல தலைகள் அசைவதுவும் அலைகள் ஒக்கும்
கார் போன்ற கருந்தலைகள் மேலே கந்தன்
கனிந்த ரதம் அசைந்துவரும் காட்சி கண்டார்.
தேர் மீது முருகன் என நினைய மாட்டார்
திரண்ட கடல் மீது வரும் பரிதி என்பார்.

அருணகிரிக்கருள் செய்த ஐயன் எங்கள்
அரும் புலவன் நக்கீரன் பாடும் ஐயன்
பெரும் புகழை யாழ் மண்ணும் பெற்றுக் கொள்ள
பிறந்தவனாம் நாவலனும் ஏற்றும் ஐயன்
அருந்தமிழால் யோகர் அவர் போற்றும் ஐயன்
அற்புதமாம் தமிழ்க் கடவுளான ஐயன்
வெறும்பிறவி நீக்கி எமை ஆண்டுகொள்வான்
வேலிருக்க அஞ்சாதே மடமை நெஞ்சே!

கம்பவாரிதி இ. ஜெயராஜ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division