ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளது. அனைத்து முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் தமது கொள்கை அறிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், அவை தற்போது ஜனாதிபதி தேர்தல் களத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
ஜனாதிபதி ரணிலுக்கு மகத்தான வரவேற்பு
ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க மும்முரமாகச்செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் முழுவதும் அக்குரணை, மாவனல்லை, எஹெலியகொட, மொனராகலை மற்றும் திஸ்ஸமஹாராம போன்ற பிரதேசங்களில் இருந்தார்.
அந்த பிரதேசங்களில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி ரணிலுக்கு அப்பிரதேச மக்களிடமிருந்தது உற்சாக வரவேற்பு கிடைத்தது. வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக வந்திருந்தனர். ஜனாதிபதி ரணில் பல பிரசாரக் கூட்டங்களுக்கு ஹெலியிலேயே சென்றார். அதற்காக விமானப்படைக்கு தனிப்பட்ட முறையில் கட்டணத்தைச் செலுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் மறக்கவில்லை.
திங்கட்கிழமை வழமை போன்று பிளவர் வீதியிலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் அங்கு அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தவில் பகிரங்கமாக கூறியதைப் போல் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்ட முறை
அன்று மாலையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதோடு, ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கொள்கைப் பிரகடனம் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் தனது கொள்கை அறிக்கையை உருவாக்குவது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் குழுக்களை கண்டறியும் பொறுப்பை செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் ஒப்படைத்தார்.
அவர் இந்த விடயத்தை பல குழுக்களிடம் ஒப்படைத்ததோடு, அவர் ஜனாதிபதி மற்றும் அந்தக் குழுக்களுடனான ஒருங்கிணைப்பை மாத்திரமே மேற்கொண்டார் உரைகளுக்குப் பொருந்தும் வகையில் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு கலாநிதி சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அந்தப் பணியை புதன்கிழமை மாலை வரை செய்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில், பிற்பகல் நிதியமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் பேசினார். இந்த நாட்களில் கட்சித் தாவல்களும் அதிகமாக இடம்பெறுவதால், ரணிலைச் சந்திப்பதற்காக கோட்டே முன்னாள் நகராதிபதி ஜனக ரணவக்க உள்ளிட்ட மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு வருகை தந்து தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
ஐந்து வருட “இயலும் ஸ்ரீலங்கா” திட்டம்
இதற்கிடையில், ஜனாதிபதி ரணில், ஆயர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆயர் ஹெரல்ட் எண்டனி மற்றும் சிலாபம் ஆயர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி ரணில் கடந்த வியாழன் அன்று தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டதோடு, அதில் “இயலும் ஸ்ரீலங்கா”வுக்கான ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டம் உள்ளடங்கி இருந்தது.
கொள்கை அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் தனது அரசியல் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடியிருந்ததோடு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பிரசன்ன கூறியது என்ன?
“நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம். எனினும் சஜித் இன்று கண்டியில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதாகக் கூறினாலும் மாலை வரையிலும் அதனை வெளியிட முடியாது போயுள்ளது” என்றவாறு இங்கு அமைச்சர் பிரசன்ன கதையை ஆரம்பித்தார்.
“கடைசியில் மாலையில் மல்வத்து அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டு செப்டெம்பர் 4ஆம் திகதி மக்களுக்கு வழங்கப்படும் என ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி விடயத்தை முடித்து விட்டார். கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்றார் வஜிர அபேவர்தன.
சமுர்த்தி சங்கம் இல்லாமல் சென்ற ஜகத்
“பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சென்ற போதிலும் சமுர்த்தி சங்கம் இன்னமும் எம்முடனேயே இருக்கின்றது.” என்றார் ஷெஹான் சேமசிங்க.
“ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையப் போகிறார் எனப் பேசப்படுகிறது. அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றதே” ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் வினவினர்.
“அவரது பிரச்சினை தொடர்பில் என்னிடம் கூறினார். அரசியல் பழிவாங்கலின் கீழ் அதற்கு இழப்பீடு வழங்க அனுமதிக்கப்பட்டது. எனினும் சட்டரீதியாக அதனை வழங்குவதற்கு தடை உள்ளது” என தனக்குத் தெரிந்ததை ஜனாதிபதி அங்கு கூறினார்.
“ஆமாம். அதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவைக்கு வரவுள்ளது” என அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தலதாவுக்கா?
தலதா அத்துகோரளவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வழங்க இருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றதே” என பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்தை வினா எழுப்பினார். “அவரைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் இன்னும் சிலருக்கு வழங்குமாறும் எம்மிடம் கேட்கிறார்கள்” என்றார் பிரதித் தலைவர் ருவன்.
இவற்றுக்கு ஜனாதிபதி ரணில் தலையை ஆட்டினாரே தவிர வேறு எதனையும் கூறவில்லை.
கம்பஹா கிராமங்களில் இறங்கி செயற்படும் பிரசன்ன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் கிராம மட்டத்திற்கு இன்னும் அதிகமாகக் கொண்டு செல்லப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதிக்கு ஆதரவான ஏனைய கட்சிகளும் நீண்ட நேரம் கலந்துரையாடின.
“நாம் முடியுமானளவுக்கு பிரசாரப் பணிகளை கிராமங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். நான் கம்பஹாவில் ஏற்கனவே வேலைகளை ஆரம்பித்து விட்டேன்” என்றார் அமைச்சர் பிரசன்ன.
“ஆமாம்…. நாம் இப்போது கிராம மக்களுடன் பேச வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அனைவருடனும் நாம் பேச வேண்டும்” என்றவாறு முன்னாள் அமைச்சர் மனுஷவும் அவர்களோடு இணைந்து கொண்டார்.
“புதிய முன்னுதாரணத்தை வழங்கும் வகையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாமும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கிராமத்திற்குச் செல்வோம். இந்த ஒற்றுமையை கிராமத்தில் கொண்டு சேர்ப்போம்” என்ற அமைச்சர் பிரசன்னாவின் பேச்சை அங்கிருந்த அனைவரும் அங்கீகரித்தனர்.
இன்னும் இருவரின் வருகை உறுதியாம்
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் இந்தக் கட்சி மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணிலைச் சந்திக்க வந்த அந்த ராஜபக்ஷ யார் ?
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 உள்ளுராட்சி மன்றங்களின் 9 மன்றங்களின் தலைவர்கள், பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் ஒன்பது பேரும் மற்றொரு ராஜபக் ஷவுடன் அங்கு வந்திருந்ததே விசேட அம்சமாகும். அந்த ராஜபக் ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ராஜபக் ஷ என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷவே இவ்வாறு அந்த 9 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதியை சந்திக்க வந்திருந்தவராகும்.
ஹம்பாந்தோட்டை மாநகரசபை, ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, சூரியவெவ, பெலியஅத்த, அங்குனுகொலபலஸ்ஸ, கட்டுவன, லுணுகம்வெஹர ஆகிய உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க வந்திருந்தவர்களாவர்.
“உங்களுடைய தீர்மானம் என்ன?” என பேச்சை ஆரம்பித்தார் ஜனாதிபதி
“ஜனாதிபதி அவர்களே! இவர்கள் கீழ் மட்டத்தில் மக்களோடு இருக்கும் தலைவர்களாகும். இவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பது நாட்டைப் பற்றிச் சிந்தித்தாகும். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக் ஷவுடன் மிக நெருங்கிச் செயற்பட்டவர்களாகும்.
எனினும் நாட்டைப் பற்றிச் சிந்தித்து இப்போது உங்களை வெற்றி பெறச் செய்வதற்கே தீர்மானித்திருக்கின்றார்கள்” என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷ விடயத்தைத் தெளிவுபடுத்தினார். “இந்நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்திருப்பது நாட்டுக்காகவாகும்.
எனவே உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். எதற்கும் நான் உங்களோடு இருக்கிறேன்” என ஜனாதிபதி அங்கு கூறினார்.
நாமல் வெள்ளி விகாரைக்கு
தொடங்கஸ்லந்தவிற்கு வந்த நாமல் கூட்டத்திற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் வெள்ளி விகாரைக்குச் சென்றார். வெள்ளி விகாரையின் விகாராதிபதியைச் சந்தித்த நாமல் அங்கிருந்த நேராக தொடங்கஸ்லந்தவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். நாமலுக்கு இங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர், நிக்கவெரட்டிய தொகுதியில் ஜொனி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு அனைவரும் சென்றனர். நாமலைச் சுற்றியிருந்தவர்கள் நாமலின் கையைப் பிடித்து செல்ஃபி எடுக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாமல் மிகச் சிரமத்துடன் வாகனத்தில் ஏறிக் கொண்டதோடு. தாய் ஒருவரைப் பார்த்து நாமல் தனது வாகனத்தில் கண்ணாடியை இறக்கினார்.
“மகனே, நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என அந்த தாய் நாமலிடம் கூறிய போது, “கூறுங்கள் அம்மா?” என நாமல் கேட்டார். “மகனே, இந்த முறை நீதான் ஜனாதிபதியாவாய். ஏனெனில் மௌன வாக்குகள் உனக்கே கிடைக்கும்” என்றார் அந்தத் தாய்.
மீண்டும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம்
நாமல் ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி ரத்னதீப ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நாமல் ராஜபக் ஷ தலைமையில் கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். “இம்முறை நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம்,” என்று நாமல் கூறினார். “அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மட்டுமல்ல, அடுத்த ஐம்பது நூறு வருடங்களுக்குப் பொருந்தும் வகையில் அபிவிருத்தி செய்யும் தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டத்தையே நாங்கள் முன்வைக்கிறோம்” என நாமல் மேலும் கூறினார்.
“அப்படியானால் மஹிந்த சிந்தனை இதற்கு அடிப்படையாகாதா?” என பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க நாமலிடம் வினவினார். “இந்த அனைத்து விடயங்களுக்கும் அடிப்படையானது மஹிந்த சிந்தனையே” என அதற்கு பதிலளித்தார் நாமல்.
பத்து பஸ் சங்கங்களுடன் பஸ் கெமுனுவின் ஆதரவு ரணிலுக்கு
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 10 பிரதான போக்குவரத்து சங்கங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற விசேட கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு மகாவலி மத்திய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அழைக்கப்பட்டிருந்தார். கெமுனு விஜேரத்ன தலைமையிலான இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 முக்கிய போக்குவரத்து சங்கங்களின் ஒத்துழைப்பை இதன் போது ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வஜிர அபேவர்தனவுடன் அவர் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழில் எம். எஸ். முஸப்பிர்