ஓல்ட் டிரபர்ட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழாவது வரிசையில் வந்த கமிந்து மெண்டிஸ் 113 ஓட்டங்களை பெற்றார். அவரது ஆட்டம் இலங்கைக்கான வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தியபோதும், இடையே இங்கிலாந்து பந்தை மாற்றிய சர்ச்சைக்கு மத்தியில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
என்றாலும் கமிந்து பெற்ற சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஓட்ட சராசரி 92.16 என உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது டெஸ்ட் போட்டிகளில் 500க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்ற வீரர்களில் அதிக ஓட்ட சராசரியை பெற்ற இரண்டாவது வீரராக கமிந்து இருக்கிறார். அவர் கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிராட்மென்னுக்கு (99.94) மாத்திரம்தான் இரண்டாவதாகிறார்.
தனது ஆட்டத்தின் ரகசியம் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அடிப்படையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமைதியாக இருக்க முயற்சிக்க வேண்டும்’ என்கிறார். அதாவது அநாவசியமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலே சாதிக்க முடியும் என்பதே அவரது கோட்பாடு.
கமிந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். தனஞ்சய டி சில்வாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்தே கமிந்துவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 61 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை அணியால் இன்னிங்ஸால் வெற்றியீட்ட முடிந்தது.
என்றாலும் அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக் கிட்டுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலேயே அவர் அணிக்கு அழைக்கப்பட்டார். சில்ஹெட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றார். அதுதான் அவரின் டெஸ்ட் வாழ்வின் திருப்பம். அந்த இன்னிங்ஸ் அவருக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொடுத்தது.
‘துடுப்பாட்ட வரிசை நிரம்பி இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த முறையில் செயற்பட நான் முயன்றேன்’ என்று கிரிக்கின்போ இணையதளத்திற்கு அண்மையில் பேட்டி அளித்த கமிந்து கூறுகிறார். ‘அணியில் இருந்து நான் நீக்கப்பட்டேன். ஆனால் அதனை ஒரு தவறாக நான் பார்க்கவில்லை. அணியை சமநிலைப்படுத்துவதற்கு பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். தனஞ்சயவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்தே நான் அணிக்கு வந்தேன். அவர் அணிக்குத் திரும்பிய பின், நான் வெளியேற வேண்டி ஏற்பட்டது. அது தான் நியாயம்’ என்றார்.
அவர் அணியில் இருந்து விடுபட்ட காலத்தில் கூட பதினொரு வீரர்களில் இடம்பெறாதபோதும் பெரும்பாலும் இலங்கைக் குழாத்தில் தம்மை தக்கவைத்துக்கொள்ள அவரால் முடிந்தது. அது தமக்கு பெரும் அனுபவத்தை தந்ததாகக் குறிப்பிடுகிறார். ‘என்னால் விளையாட முடியாதபோதும் கூட, கிட்டத்தட்ட அனைத்து தொடர்களிலும் நான் குழாத்தில் இருந்து அணியுடன் பயணித்தேன்’ என்று கூறுகிறார் கமிந்து. ‘அனுபவம் கொண்ட வீரர்களுடன் பல சுற்றுப்பயணங்களில் செல்வது எனது முதல் சில இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆட உதவி இருக்கிறது’ என்றார்.
ஓல்ட் டிரபர்ட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கமிந்து 12 ஓட்டங்களை பெற்றிருந்தபோது கிறிஸ் வொக்ஸ் வீசிய பந்து துடுப்பின் விளிம்பில் பட விக்கெட் காப்பாளர் ஜெம்மி ஸ்மித் பிடியெடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 113 ஓட்டங்களை பெற்றதொடு அந்த இன்னிங்ஸில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமாலுடன் சேர்ந்து முறையே 78 மற்றும் 117 ஓட்ட இணைப்பாட்டங்களை பகிர்ந்துகொண்டார்.
‘முதல் இன்னிங்ஸில் என்னால் ஓட்டங்களை பெற முடியாமல் போனது. ஆடுகளம் சவாலாக இருந்தது. எதிர்பார்த்ததை விடவும் குளிராக இருந்தது. ஓர் அணியாக எம்மால் முடிந்தவரை சிறப்பாக செயற்பட்டோம்’ என்றார்.
‘நான் துடுப்பெடுத்தாட சென்றபோது அஞ்சலோ மற்றும் சந்திமால் பெரும் உதவியாக இருந்தனர். சந்திமாலை குறிப்பாகக் கூற வேண்டும், ஏனென்றால் விரலில் காயத்துடனேயே அவர் ஆடினார். அணிக்கு முக்கியமான ஓட்டங்களை பெற்றுத்தந்தார். 100 ஓட்டங்களை பெறுவதற்கு அவர் எனக்கு பெரும் உதவியாக இருந்ததோடு அவரது அனுபவம் உண்மையில் எனக்கு உதவியது. ஆடுகளத்தில் செயற்பட வேண்டியது பற்றி அவர்களுக்கு தெரிந்ததை என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்’ என்றும் கமிந்து குறிப்பிட்டார்.
தாம் துடுப்பெடுத்தாடும்போது பின்பற்றும் எளிமையான போக்கை பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். ‘அடிப்படையான ஆட்டத்தை வெளிப்படுத்தி மைதானத்திற்கு நடுவே அமைதியாக இருக்க முயற்சிக்க வேண்டும்’ என்றார். அவரது ஓட்ட சராசரி பற்றிய கேள்விக்கு, ‘அணிக்கு என்ன தேவையோ அதனைத் தான் நான் செய்ய முயற்சிப்பேன். அது தான் எனது ஒரே இலக்கு. துடுப்பாட்டமாக இருந்தாலும், பந்துவீச்சாக இருந்தாலும், களத்தடுப்பாக இருந்தாலும் அணிக்கு என்ன தேவையோ அதனை என்னால் முயன்றவரை கொடுப்பதற்கு முயற்சிப்பேன்’ என்றார்.
கமிந்து இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் இங்கிலாந்தில் இதற்கு முன்னர் ஆடியதில்லை. அந்தக் கனவு நிறைவேறியதாக கூறுகிறார். ‘சின்ன வயதில் இருந்து லோட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆடுவது தான் எனது கனவாக இருந்தது. அது எனது கனவு மாத்திரம் அல்ல, ஒவ்வொரு வீரரதும் இலக்காக அது உள்ளது. என்னால் அந்த இடத்தை அடைய முடிந்தது’ என்றார்.
லண்டன் லோட்சில் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி ஆரம்பமான இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கமிந்துவும் இடம்பெற்றார். ஆனால் இது அவரது டெஸ்ட் வாழ்வின் ஆரம்பப் புள்ளியாகவே இருக்கப்போகிறது. அவர் பயணிக்க வேண்டிய தூரம் நெடியது.