Home » பாரிய பொருளாதார மாற்றத்தை சட்டபூர்வமாக்கிய ஜனாதிபதி ரணில்!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக

பாரிய பொருளாதார மாற்றத்தை சட்டபூர்வமாக்கிய ஜனாதிபதி ரணில்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

by Damith Pushpika
September 1, 2024 6:00 am 0 comment

சுதந்திரத்திற்குப் பின்னர் வெவ்வேறு ஜனாதிபதிகள் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் வெவ்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதோடு, அரசாங்கங்களின் மாற்றத்துடன் அந்தக் கொள்கைகள் மாறி வெவ்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, இலங்கை தேசியக் கொள்கை இல்லாத நாடாக மாறியதன் இறுதி விளைவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததாகும்.

இதன் காரணமாகவே தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு பிரச்சினைகளுக்கு ப்ளாஸ்டர் ஒட்டும் தீர்வுகளை முன்வைத்து யதார்த்தமற்ற, தூர நோக்கற்ற வேலைத்திட்டங்களுக்காக மக்கள் ஆணையினைப் பெற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவது அல்லது நடைமுறைப்படுத்தாதது தொடர்பிலான சித்தாந்தங்களின் ஊடாக இலங்கையில் அரசியல் கலாசாரமொன்று உருவாகி அரசாங்கங்கள் மாறின.

நாடு வங்குரோத்தடைந்ததன் பின்னர் வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பாரிய சவாலை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான கடன் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்தார். சர்வதேச அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) வை அமைத்துக் கொண்டு சிறப்புத் திறமைகளைக் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், பாரிஸ் ஒருங்கிணைந்த உதவிக் குழு, சீன மக்கள் குடியரசு மற்றும் ஏனைய வெளிநாடுகளுடன் கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம் கையெழுத்திடப்பட்டது.

நாட்டைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தேசிய உடன்படிக்கைகளை நாட்டுச் சட்டத்தின் ஒரு அங்கமாக மாற்றுமாறு சர்வதேச சமூகம் அரச தலைமையிடம் கோரிக்கை விடுத்தது.

அதனடிப்படையில், 2024ஆம் ஆண்டு சர்வதேச உடன்படிக்கைகளின்படி, பாரிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, வறுமையை ஒழித்து துரித அபிவிருத்தியின் ஊடாக 2048ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாட்டிற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கி பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் மூலம் அது சட்டபூர்வமாக்கப்பட்டது.

அதன்பிரகாரம் நாட்டின் ஜனாதிபதிகள் மாறினாலும் சரி, அரசுகள் மாறினாலும் சரி, நீண்ட கால தேசியக் கொள்கை சட்டமன்றம் சட்டமாக்கப்பட்டுள்ளது.

நாட்டைக் காக்கும் பஞ்சாயுதங்களாக இருக்கும் அந்த 5 சட்டங்களும் வருமாறு :

1. பணம் அச்சிடுவதைத் தடுக்கும் புதிய இலங்கை மத்திய வங்கிச் சட்டம் (2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டம்)

2. அதிக வட்டிக்கு கடன் பெறுவதைத் தடுக்கும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம். (2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்கச் சட்டம்)

3. மக்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதைத் தடுக்கும் அரச நிதி முகாமைத்துவச் சட்டம். (2024ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்கச் சட்டம்)

4. நாட்டின் விவசாயம், கைத்தொழில், சேவைகள், வெளிநாட்டு முதலீடு, சுதந்திர வர்த்தக பிரதேசம் போன்றன தொடர்பில் பாரிய பரிமாற்றத்தைச் செய்யும் பொருளாதாரப் பரிமாற்றச் சட்டம். (2024ஆம் ஆண்டின் 45ஆம் இலக்கச் சட்டம்)

5. திருட்டு, மோசடி, ஊழல், முறைகேடுகளைத் தடுக்கும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், ஊடக நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், பணிப்பாளர்கள் போன்ற அனைத்து தரப்பினர்களும் பொறுப்புக் கூறலுக்கும், பொறுப்புக்கும் கட்டுப்படும் ஊழலை முற்றாக தடுக்கும், கடுமையான சட்ட வரையறைகள் அடங்கிய ஊழல் எதிர்ப்புச் சட்டம். (2023ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டம்)

இவ்வாறு 2048ஆம் ஆண்டளவில் வறுமையை ஒழித்து, இலங்கையின் தனிநபர் வருமானம் 20,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டும் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் தேசிய கொள்கையை சட்டமாக்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமேயாகும்.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித், அனுர, திலித், விஜேதாச உள்ளிட்ட 38 வேட்பாளர்களும் இந்த தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவார்களா இல்லையா? மேற்கண்ட 5 சட்டங்களுக்கு அமைவாக நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒத்துழைப்பு வழங்குவீர்களா இல்லையா? என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். எமது எல்லா ஊடக நிறுவனங்களும் அத்தகைய வெளிப்பாட்டிற்கு சிறப்பு இடம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் நோக்கமும், இலக்கும்

இலங்கையினுள் பொருளாதார பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய கொள்கைகளை உருவாக்கும் நோக்கில் பொருளாதார பரிமாற்றச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரதான விடயம் என்னவெனில், நாட்டினுள் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதாகும். அதனுள், இலங்கை பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், இலங்கை முதலீட்டு வலயம் என்ற நிறுவன அமைப்பை உருவாக்குதல், சர்வதேச வர்த்தகத்திற்கான அலுவலகம் ஒன்றை அமைத்தல், தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழுவை நிறுவுதல், இலங்கை பொருளாதார மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனத்தை நிறுவுதல் போன்றவாறு ஐந்து நிறுவனங்களை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களின் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், போதுமான உணவு பானங்கள், உடைகள் மற்றும் வீட்டு வாழ்க்கைத் தரத்தில் நிலையான வளர்ச்சியை உருவாக்குதல், ஓய்வு மற்றும் ஓய்வு நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துதல் உட்பட போதுமான வாழ்க்கைத் தரத்தை அனைத்து குடிமக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதே முதலாவது நோக்கமாகும்.

அரச மற்றும் தனியார் துறையின் பொருளாதாரச் செயற்பாடுகளினுள் அந்த பொருளாதாரச் செயற்பாடுகள் நாட்டின் சமூக நோக்கம் மற்றும் பொதுவான முன்னேற்றத்திற்காக வழிநடாத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பிற்குத் தகுந்த திட்டங்கள், கட்டுப்பாடுகளை சட்டத்தினால் விதிப்பதன் ஊடாக முழு நாட்டிலும் துரித அபிவிருத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும், எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும் இதன் மூலம் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டாகும் போது மற்றும் அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்காக அரச கடன்கள் வழங்கும் வீதத்தை 95ஐ விட குறைந்த மட்டத்தில் பேணிக் கொள்வதற்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்காக மத்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கும் மொத்த நிதி வழங்கும் தேவையின் வீதத்தை 2032 ஆண்டும் அதன் பின்னரும் 13 வீதமாக அல்லது அதற்கு குறைந்த மட்டத்தில் பேணிக் கொள்வதும் அரசாங்கத்தின் இலக்காகும்.

மொத்த தேசிய உற்பத்திக்கு மத்திய அரசின் வருடாந்த கடன் சேவை வீதத்தை 2027ஆம் ஆண்டும் அதன் பின்னரும் 4.5 வீதத்தை விட குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதும் இதன் மூலம் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், 2050ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சுற்றுச்சூழல் பிரச்சினையான காபன் வெளியேற்றத்தை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிக் கொள்வதற்கும், நிலையான பொருளாதார சமநிலை மற்றும் நிலையான கடன் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், விவசாயிகளின் உற்பத்திதிறன், வருமானம் மற்றும் விவசாய ஏற்றுமதியினை உயர்த்திக் கொள்வதற்கும், மெதுவான பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கும் இந்த நிறுவனங்களை நிறுவுவதன் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பொருளாதார போட்டித் தன்மையை மேம்படுத்தல், ஏற்றுமதியினை மேம்படுத்தல், டிஜிட்டல் பொருளாதாரமாக எமது பொருளாதாரத்தை மாற்றுதல் போன்ற பல நோக்கங்களை இந்தச் சட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது.

செலுத்தும் இருப்பின் கணக்குப் பற்றாக்குறை வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

நாட்டில் இயங்கி வந்த பொருளாதார ஆணைக்குழுவிற்கு பதிலாக இலங்கை பொருளாதார ஆணைக்குழு என மாற்றப்பட்டு, அதற்குரிய அதிகாரங்கள், உறுப்பினர்களை நியமித்தல், நிதி நிருவாகம் இடம்பெறும் முறைகள், ஆணைக்குழுவின் நோக்கங்கள் என்ன, எவ்வாறு கணக்காய்வை மேற்கொள்வது? போன்ற அனைத்து விடயங்களும் விபரிக்கப்பட்டுள்ளன.

முதலீட்டு வலயங்களை உருவாக்குதல், சர்வதேச வர்த்தகத்திற்கான அலுவலகத்தை உருவாக்குதல், தேசிய உற்பத்தி திறன் ஆணைக்குழு, இலங்கை பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனம் போன்ற ஒவ்வொரு நிறுவனங்களின் அமைப்பு, நோக்கங்கள் மற்றும் அதிகாரங்கள் எவ்வாறானவை? எவ்வாறு நியமிப்பது, நீக்குவது எவ்வாறு? அதற்கான நிதி கிடைப்பது எவ்வாறு என்ற விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division