நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த பாவனா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், கூடல் நகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் பாவனா. தற்போது ஹண்ட் என்ற மலையாள படம் இவரது நடிப்பில் ரிலீசாகியுள்ளது. இதனிடையே, தன்னுடைய கணவரை பாவனா பிரிந்து விட்டதாக தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து தற்போது பாவனா விளக்கம் அளித்துள்ளார்.
இதன் உண்மையை அறிய முடியாமல் அவரது ரசிகர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்த நிலையில் பாவனா இதற்கு பதில் அளித்துள்ளார். தான் எப்போதுமே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டதில்லை என்று பாவனா கூறியுள்ளார். தன்னுடைய கணவருடன் தான் இருக்கும்படியான புகைப்படங்களையும் பகிர்ந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனால்தான் தன்னுடைய கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து தவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
இத்தகைய கருத்துக்கள் தவறு என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் இப்படி வதந்திகள் பரப்பப்படுவதால் மட்டுமே கணவருடன் இணைந்திருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்க முடியாது என்றும் பாவனா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாவனா தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டார் என்ற வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.