காற்றிலே புரண்ட காகிதப் பக்கங்களை மெதுவாகச் சரிசெய்துகொண்டே, யாரும் காணாதபடி கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளைத் துடைத்துக்கொண்ட உதயனை ஓடி வந்து கட்டித்தழுவினான் அவனது மகன் வசந்த்.
“அப்பா, இந்தக் கொப்பில அப்பிடி என்னதான் இருக்கு, எப்ப பாத்தாலும் இதையேதான் பாக்குறீங்க. என்னதான் இதுல இருக்குண்ணு எனக்கும் சொல்லுங்களேன்” என ஆர்வத்தோடே கேட்ட வசந்தை தனது மடியில் அமரவைத்து, “வசந்த் இது ஒரு அழகான கதை. உனக்கு வயசு வரும்போது அப்பா இதைக் கட்டாயம் சொல்லுவேன்” என தன் மகனை அன்போடு நோக்கினான்.
பத்தே வயதான வசந்தின் பார்வையில் தெரிந்த ஏக்கமும், பரிதவிப்பும் இப்போதே அந்தக் கதையை கூறிவிடுங்கள் என்பதை மௌன மொழியில் உணர்த்தியமையும் உதயனுக்கு தெரியாமலில்லை.
உதயன் வசந்தின் வயதில் இருக்கும்போது அவனால் செய்ய முடியாத, மாற்ற முடியாத சில விடயங்கள்தான் காற்றில் இன்று காகிதங்களாகப் பறந்துகொண்டிருந்தன. அதைப்போல பல காகிதப் பக்கங்கள் இனியும் சேரக்கூடாதெனில் அந்தப் பக்கங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்தக் கதை இப்போதே வசந்திற்கு தெரிவதும் அவசியமே என்ற எண்ணமும் உதயனின் மனதில் ஆழ வேரூன்றியது.
தனது மகனை அணைத்துக்கொண்டே, “இந்தக் கதை இப்போதே உனக்குத் தெரியவேண்டுமா?” எனக்கேட்க, அவனும் “ம்ம்ம்ம்” என தலையசைக்க, ஆறாத ரணமாய் காகிதங்களில் சேகரிக்கப்பட்ட வலிகளை கட்டுடைக்க ஆரம்பித்தான் உதயன்.
அப்போதெல்லாம் அந்தப் பாதைகள் முழுவதும் செம்மண்ணாகத்தான் இருக்கும். வீதியோரமெங்கும் பூவரசு மரங்கள் புன்னகைத்துக்கொண்டே காற்றின் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருக்கும். குழாய்களைத் திறந்தால் இப்போது தண்ணீர் வருவதைப்போல அப்போது இல்லை. குளிப்பு முழுக்குக்கும், குடிதண்ணிக்கும் 2 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் குளமும், கிணறும் தான். ஊரிலிருந்த பெண்களெல்லாம் இடுப்பிலும், தலையிலும் குடங்களை வைத்துக்கொண்டு 5 மணிக்கே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். வசதியாய் இருந்தவர்கள் வண்டிலில் மாடுகளைப் பூட்டிக்கொண்டு தண்ணீர் எடுத்துவந்து கிராமத்தில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வதும் வழக்கம்.
உனது பாட்டியும் தாத்தாவும் அப்போது பக்கத்து ஊரில் ஆசிரியர்களாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு ஒரேயொரு பிள்ளை. எங்கள் வீட்டின் மூலையில் ஒரு சிறிய குடில் இருக்கும். அங்கே ஒரு வயதான பாட்டி இருந்தார். அவரிடம்தான் என்னை விட்டுவிட்டு எனது அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போவார்கள். காலையில் பள்ளிக்கூடம், ரியூசன், மாலையில் ரியூசன் என ஓடிக்கொண்டேயிருந்தார்கள் அவர்கள். எனது வாழ்க்கையில் அந்தப் பாட்டி மட்டுமே எனக்கான ஒரேயொரு ஆறுதலாக இருந்தார்.
அவளுக்கென்று வேறு யாருமில்லை. நானும் எனது பெற்றோரும் மட்டும்தான். அவளுக்கும் ஒரேயொரு மகன் மட்டும்தான். இளமைக் காலத்திலேயே தனது கணவனை இழந்தவள். தனது ஒரே மகனுக்கு வறுமை தெரியக்கூடாது என்று, பல்வேறு கூலித்தொழில்களைச் செய்துதான் தன் பிள்ளையையும் வளர்த்தவள். அவள் நினைத்தபடியே அவள் பிள்ளையையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்தவள்.
உன்னைப்போல நானும் ஓரளவு வளர்ந்த பிறகு பாட்டி வீடே எனது வீடாகிப்போனது. அதிகாலையிலேயே எழுந்து என்னுடைய வீட்டின் உடுப்புக்களை பெரிய மூட்டையாகக் கட்டிக்கொண்டு அதை தலையில் வைத்து, கைகளால் பிடிக்காமலே நடப்பார். அந்த வயதிலும் அவரது உடலின் சமநிலையும், வலிமையும் இன்று நினைத்தாலும் என்னை வியக்கச்செய்கிறது. வீதியோரத்தில் இலந்தை மரங்களிலிருந்து விழுந்திருக்கும் பழங்களைப் பொறுக்கிக்கொண்டே அவருக்குப் பின்னால் நானும் நடப்பேன்.
குளக்கரையை சென்றடையும்வரை ஆர்வமாகச் செல்லும் நான், தண்ணீரைக் கண்டவுடன் கரையிலேயே உட்காந்துவிடுவேன். என்னை இழுத்துத் தூக்கி, தண்ணீரில் நனைத்து, ஒருவழியாக குளிக்கச்செய்துவிடுவது பாட்டியின் வழக்கம். குளக்கரையில் ஓங்கியுயர்ந்த ஆலமரத்தின் விழுதில் ஊஞ்சல் ஆடி, குறும்புகள் செய்து, கண்கள் சிவக்கும்வரை நான் குளித்து முடிக்கும்வரையில் எங்கள் வீட்டின் உடுப்புக்களை துவைப்பதிலே அவளது நேரம் போயிருக்கும்.
வீட்டுக்குப் போனதுமே என்னைத் தயார்ப்படுத்தி, உணவு ஊட்டிவிடுவாள், ஒவ்வொருமுறை வாய்க்குள் உணவை வைக்கும்போதும் பொய் சொல்லக்கூடாது, நல்ல பிள்ளையா இருக்கணும், குழப்படி செய்யக்கூடாதென்றெல்லாம் பல அறிவுரைகளைச் சொல்லி பாடசாலைக்கு அனுப்பிவைப்பது அவளது வழக்கமாகிப்போனது. நானும் உன்னைப்போல சிறுவனாக இருக்கும்போது அவற்றையெல்லாம் கருத்தில்கொள்வதேயில்லை. “ம்ம்ம்” என தலையை ஆட்டிவிட்டு ஓடிச்சென்றுவிடுவேன். பாட்டிக்கு நான், எனது குடும்பம், என்பதைத் தாண்டி அவளுக்கென்று வேறு உலகமே கிடையாது.
பாட்டிக்கென்று வருமானம் ஏதும் கிடையாது. அவளது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளும் காலப்போக்கில் காணாமலேயே போய்விட்டன. என்னுடைய தந்தை எப்போதாவது கொடுக்கும் பணத்தில்தான் அவளது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. இருளுக்குப் பின் அனைவருக்கும் ஒளி தோன்றினாலும், பாட்டி எதிர்பார்த்த ஒளி மட்டும் தோன்றவேயில்லை. அப்போது நான் மட்டும் அவளுக்கு ஒரு ஒளிக்கீற்றாக இருந்தேன். எத்தனையோ தடவைகள் அவளின் ஆசைகள், எதிர்பார்ப்புக்களை அறிய முயன்றபோதும் சிறுவனாகவிருந்த எனக்கு அவளது புன்னகையைத்தவிர வேறு பதிலேதும் கிடைத்ததுமில்லை.
எப்போதாவது அவளிடமிருக்கும் மிச்சப்பணத்தில் எனக்கென்று எதையாவது வாங்கிவைத்துக்கொள்வதற்கு அவள் மறந்துபோனதில்லை.
கடைப்பக்கம் சென்றாலே இனிப்புக்களை வாங்கி தனது சட்டைக்குள் முடிந்து வைத்திருந்து நான் வந்ததும் அதை கொடுப்பதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அவளது விழிகள் இப்போதும் என் கண்முன்னே வந்து போகின்றது. விளையாட்டுப் பொருட்கள், கலர் பெட்டிகளென எனக்குப் பிடித்தததையெல்லாம் வாங்கிக்கொடுப்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.
முன்பெல்லாம் இரவில் பெற்றோர்களுடன் சென்று உறங்கிக்கொள்ளும் நான், பின்னர் பாட்டியுடனே உறங்க ஆரம்பித்தேன். அவள் வீட்டின் கூரைகளிலிருந்த இடுக்குகள் வழியாக வானத்து விண்மீன்களை எண்ணிக்கொண்டே பாட்டி கூறும் கதைகளோடு உறங்குவதற்கு எனது விழிகள் பழக்கப்பட்டிருந்தன.
அவளும் சலிப்பின்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய கதைகளை எனக்காக தயார்ப்படுத்தி என் வரவிற்காக காத்திருக்கத் தொடங்கினாள். இவ்வாறே அன்பின் பிணைப்பால் நகரத்தொடங்கிய எம் நாட்கள் சடுதியாக முடிவுற்றுப்போகுமென அப்போது நாம் இருவருமே நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
வழமைபோல் அன்றும் பாடசாலை முடித்து வீடு வந்திருந்தேன். எனது பெற்றோர்கள் வழமைக்கு மாறாக அன்று நேரத்திற்கே வீட்டிற்கு வந்திருந்தனர். இருவரும் தமது அறையினுள்ளே மிகவும் காரசாரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். அது என்னவென்று என்னால் அப்போது பொருள்கொள்ள முடியவில்லை. ஆனால் ஏதோ பிரச்சினையிருப்பதை மாத்திரம் என் மனது உணர்ந்துகொண்டது. அதையெதையும் கருத்திலெடுக்காமல் வழமையைப்போலவே நான் பாட்டியின் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அங்குதான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாட்டியின் விழிகளை முழுவதுமாய் கண்ணீர்த்துளிகள் நிரப்பியிருந்தன. எப்போதும் புன்னகைக்கும் அவளது முகத்தில் இன்று வாட்டம் மாத்திரம் குடிகொண்டிருந்தது. நான் காணக்கூடாதென்று அவள் கரையிட்டிருந்த மிச்சக் கண்ணீரும் என்னைக் கண்டதும் கரைபுரண்டோடியது. அவள் என்னை அணைத்துக்கொண்ட அணைப்பில் வழமைக்கு மாறான பரிதவிப்பை என்னால் நிச்சயமாக உணரமுடிந்தது. என்ன பாட்டி?, என்ன நடந்தது? என கேள்விக்குமேல் கேள்விகேட்டும் கண்ணீரைத்தவிர பதிலேதுமில்லை. அவளது வாய் வார்த்தைகளுக்கு பூட்டிட்டவர் யார் என்பதைக் கண்டுகொள்ள என் மனம் தவியாய் தவித்தது. அவளுக்கு நாளை என்ன நடக்கப்போகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் எனக்குத் தெரியவேண்டாம் என அவள் நினைத்துக்கொண்டாள்.
அணைப்புக்களும், தவிப்புக்களும் மெல்ல விலக, அந்த இராப்பொழுதில் தன்னுடைய துணிகளையெல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டிருந்த அவளது முகத்தைப் பார்த்தபடியே அன்று என்னுடைய கண்கள் உறங்கிப்போனன.
வழமைபோல மறுநாள் காலையில் விழித்துக்கொண்டேன். அன்பாய் என்னை எழுப்பும் பாட்டியின் குரல் அன்று கேட்கவில்லை. வெளியில் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. இந்த இடமும் புதிதாய் இருந்தது. உயர்ந்த கட்டடங்கள், ஒலியெழுப்பும் வாகனங்களெல்லாம் வீதியை நிறைத்திருந்தன. வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த எனது வீட்டுப் பொருட்களை யாரோ இறக்கி உள்ளே கொண்டுசென்று கொண்டிருந்தார்கள். அம்மாவும் அப்பாவும் மும்முரமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். என் இரு விழிகள் மாத்திரம் இடுக்குகளிலெல்லாம் பாட்டியைத் தேடிக்கொண்டிருந்தது. பாட்டியும் இல்லை, பாட்டி எங்கே என்ற கேள்விக்குப் பதிலும் இருக்கவில்லை. பாட்டி மீதான ஏக்கத்தில் என் உடல்நிலையும் பல நாட்களாக மோசமாயிருந்தது. காலப்போக்கில் பாட்டி இல்லாமலேயே என்னை வாழப் பழக்கிவிட்டனர்.
என் பெற்றோருக்கு நகரத்திலுள்ள பாடசாலையொன்றிற்கு இடமாற்றம் கிடைத்திருந்தது.
அதனால்தான் இங்கு வந்துவிட்டோம் என்பதைக் காலப்போக்கில் தெரிந்துகொண்டேன். ஆனால் பாட்டிக்கு என்ன நடந்தது?, ஏன் வரவில்லை? என்பதெல்லாம் என் மனதில் கேள்விகளாய் சேர்ந்துகொண்டேயிருந்தது.
தான் சொல்லிக்கொண்டிருப்பது தனது சொந்தப் பாட்டியின் கதைதான் எனும் உண்மை தனது குழந்தைக்குத் தெரியாமல், அவன் மனதைக் காயப்படுத்த விரும்பாமல் உதயன் கதையைக் கூறிக்கொண்டிருக்க, “நீங்க வளர்ந்த பிறகும் அந்தப் பாட்டியைத் தேடவில்லையா அப்பா” எனக் கேட்டான் வசந்த்.
அவனது கேள்விகள் தொடரும்போதே உதயனின் தாய் பழங்கள் நிறைந்த பையுடன் அறையினை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அப்பம்மா” என பாய்ந்தோடிக் கட்டிணைத்து “அப்பா ஒரு பாட்டிய சின்னவயசில தொலச்சிட்டாராம், நீங்க என்ன விட்டு எங்கயும் போயிராதீங்க” என்றான்.
இந்தக் கதையூடாக வசந்திற்கு விளங்கவைக்க வேண்டுமென உதயன் கருதிய அத்தனையும், வசந்தின் அந்த ஒற்றை வார்த்தையில் நிறைவேற்றப்பட்டதையெண்ணி மனத்திருப்பியுற்றான் உதயன்.
தங்களது இடமாற்றத்துக்காக முதியோர் இல்லத்திற்குப் பாட்டி அனுப்பப்பட்டதை அன்றுவரை மகனிடமிருந்து மறைத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் உதயனின் தாயின் மன நிலையும், பாட்டியின் நிலையை பிற்காலத்தில் அறிந்திருந்தும் தன் பெற்றோருக்கு அது தெரிந்ததாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருபத்தைந்து ஆண்டுகளாக மனதிற்குள்ளே புழுங்கிக்கொண்டிருக்கும் உதயனின் மன இரணங்களும் பார்வைகளின் பரிதவிப்பால் ஒன்றித்துப்போயின.
“என் பேரனுக்கு” என எழுதப்பட்டு காற்றில் பறந்துகொண்டிருந்த பாட்டியின் காகிதச்சுவடியோடு
உங்கள் சிறுகதைகளை 1300 சொற்களுக்கு மேற்படா வண்ணம் எழுதி, sirukathaithinakaran@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் அதிகமான சொற்களைக் கொண்ட சிறுகதைகள் பிரசுரிக்கப்பட மாட்டாது. அதேபோல நூல் விமர்சனங்களை 600 சொற்களுக்கு மேற்படாமலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கிரிஜா அருள்பிரகாசம் ஊடகக் கற்கைகள் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.