பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறப்போகிறது. என்றாலும் பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் அளவுக்கு இந்த விளையாட்டுப் போட்டியை உலகம் பெரிதாக அவதானிக்காது.
ஆனால் சமூகத்தில் உள்ள விசேட தேவையுடையோருக்கான இந்த விளையாட்டுப் போட்டி சாதாரண ஒலிம்பிக் போட்டி அளவுக்கே முக்கியத்துவத்துடன் நடத்தப்படுகிறது. என்றாலும் சாதாரண ஒலிம்பிக்கின் பிரமாண்டத்தை பாராலிம்பிக்கில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.
பாராலிம்பிக்கை இணை ஒலிம்பிக், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் என்றும் அழைக்கலாம். உடலியக்கக் குறைபாடுகள் உள்ளோர், உறுப்பு நீக்கப்பட்டோர், கண் பார்வை குறைவுள்ளோர், மற்றும் பெருமூளை வாதம் உள்ளோர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் நகர் கோடைகால ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்தி இருந்தாலும் அங்கு பாராலிம்பிக் நடைபெறுவது இது தான் முதல்முறை. 17 ஆவது முறையாக நடைபெறும் பாராலிம்பிக்கில் கடைசியாக 2020 டோக்கியோவில் நடந்தது போல் 22 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
மொத்தமாக 549 பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கடந்த முறையை விடவும் பெண்களுக்காக 235 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சம்.
கோடைகால ஒலிம்பிக் அளவுக்கு நாடுகள் பங்கேற்காத போதும் இந்த விளையாட்டு விழாவில் நூற்றுக்கும் அதிகமான நாடுகள் பங்கேற்பது நிச்சயம். தெற்கு சூடான், சாட், குவாம் என 12 நாடுகள் முதல் முறையாக பாராலிம்பிக்கில் பங்கேற்கின்றன.
பொலிவியா 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாகவும், பங்களாதேஷ் 2008 இற்குப் பின்னர் முதல் முறையாகவும் பங்கேற்பதோடு மேலும் பல நாடுகளும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாராலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளன.
இம்முறை பாராலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 4,400க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
சாதாரண ஒலிம்பிக் போன்று பாராலிம்பிக்கிற்கு என்று தனி மரபு இருக்கிறது. 1948 இல் லண்டன் ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தபோது பிரிட்டனில் உள்ள ஸ்டொக் மன்டவில்லே கிராத்தில் இரண்டாம் உலகப் போரில் காயமடைந்தவர்களுக்கு இடையே சக்கர நாற்காலி விளையாட்டுப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பாராலிம்பிக்கின் பூர்வீகம்.
ஆரம்பத்தில் ஸ்டொக் மன்டவில்லே விளையாட்டுப் போட்டி என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டி, 1960 இல் இத்தாலி ரோம் நகரில் பாராலிம்பிக் போட்டியாக உருவெடுத்தது. இதுவே படிப்படியாக முன்னேற்றம் கண்டு 1989 இல் சர்வதேச பாராலிம்பிக் குழு நிறுவப்பட்ட பின்னர் ஓர் உறுதியான கட்டமைப்பை பெற்றது.
இந்த மரபை நினைவுகூரும் வகையில் பிரிட்டனின் அதே ஸ்டொக் மன்டவில்லே கிராத்தில் ஓகஸ்ட் 24 ஆம் திகதி (நேற்று) ஒலிம்பிக் தீப்பந்தம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அந்தத் தீ பிரான்ஸுக்கு எடுத்துவரப்பட்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி நடைபெறும் ஆரம்ப நிகழ்வின்போது ஏற்றப்படவுள்ளது.
பாரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டி போன்றே பாராலிம்பிக் போட்டியும் அரங்கிற்கு வெளியில் முதல் முறை நடைபெறவுள்ளது. என்றாலும் சீன் நதிக்கு பதில்; போட்டியில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகளின் அணிவகுப்பு வீதி நெடுக நடைபெறப்போகிறது.
சாதாரண ஒலிம்பிக் போட்டி நடந்த பல மைதானங்கள் மற்றும் இடங்கள் பாராலிம்பிக்கிற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒலிம்பிக்கின் அதே பிரமாண்டத்தை இணை ஒலிம்பிக்கிலும் பார்க்கலாம்.
இலங்கையின் வாய்ப்பு எப்படி
இம்முறை பாராலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் எட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஆறு தடகள வீரர்கள் மற்றும் ஒரு நீச்சல் மற்றும் டென்னிஸ் வீரர்கள் அடங்குவர். இதில் குறைந்தது மூன்று பதக்கங்களை வெல்ல இலங்கை எதிர்பார்க்கிறது.
குறிப்பாக சமித்த துலான் (எப்–44 ஈட்டி எறிதல்), பாலித்த பண்டார (எப்–42 குண்டெறிதல்) மற்றும் நுவன் இந்திக்க (டீ–44 100 மீ.) ஆகியோர் பற்றி அதிக நம்பிக்கை உள்ளது.
கடைசியாக 2020 ஆம் ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை இரு பதக்கங்களை வென்றது. தினேஷ் பிரியன்த ஹேரத் எப்–46 ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரம் வீசி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் மீண்டும் ஒரு முறை பதக்கம் வெல்ல தயாரானபோதும் அவரது பயணம் தடுக்கப்பட்டுவிட்டது.
அவரது போட்டி பிரிவான எப்–46 ஈட்டி எறிதல் போட்டியானது முழங்கைக்கு கீழ் கையொன்று செயலிழந்திருக்கும் வீரர்களுக்கான பிரிவில் தொடர்ந்து இடம்பெறாத நிலையிலேயே அவரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. இதனால் பாரிஸ் பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்றிருந்த அவர் திடுதிடுப்பென்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
என்றாலும் டோக்கியோ பாராலிம்பிக்கின் எப்–64 பிரிவின் ஈட்டி எறிதலில் 65.61 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலம் வென்ற சமித்த துலான் இம்முறை களமிறங்குவதோடு அவரிடம் இருந்து பதக்கம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.
பர்மிங்ஹாமில் நடந்த பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பரிதிவட்டம் எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார பாராலிம்பிக்கில் பங்கேற்கிறார். எனினும் அவர் எப்–42 குண்டெறிதல் பிரிவிலேயே பங்கேற்கவுள்ளார்.
மற்றொரு பதக்க எதிர்பார்ப்பான நுவன் இந்திக்க டீ–44 பிரிவின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்கிறார். அவர் 2022 இல் சீனாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றவராவார்.
இவர்கள் தவிர டீ–46 ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் பிரதீப் சோமசிரி, டீ–42 ஆண்களுக்கான 100 மீற்றர் பிரிவில் அனில் பிரசன்ன ஜயலத், டீ– 47 பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஜனதி தனஞ்சனா, எஸ் –9 ஆண்களுக்கான 400 மிற்றர் பிரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் நவீட் ரஹீம் மற்றும் டபிள்யு.எஸ். ஆண்களுக்கான சக்கர நாற்காலி ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோர் இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கை சார்பில் பங்கேற்கின்றனர்.
பாராலிம்பிக் போட்டியில் இலங்கை முதல் முறை பங்கேற்றது 1996 ஆம் ஆண்டிலாகும். அப்போது இலங்கை சார்பில் ஒரே ஒருவராக காலிக்க பத்திரண பங்கேற்றிருந்தார். என்றாலும் அது தொடக்கம் இலங்கை எல்லா பாராலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறது. இதுவரை இலங்கையால் மொத்தம் நான்கு பதக்கங்களை வெல்ல முடிந்திருக்கிறது. இது கோடைகால ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இலங்கை இதுவரை வென்ற இரண்டு பதக்கங்களை விடவும் அதிகமாகும்.
இதில் இலங்கை அணியின் தலைவராக சமித்த துலான் செயற்படவிருப்பதோடு ஆரம்ப நிகழ்வில் இலங்கை தேசியக் கொடியை அவரே எடுத்துச்செல்லவிருக்கிறார். மாத்தறை தெனியாயவில் பிறந்த துலான் பாடசாலை காலத்தில் இருந்து விளையாட்டில் ஆர்வம் காட்டினார். 2009 இல் இராணுவ பொலிஸ் சேவை படைப்பிரிவில் இணைந்தார். 2016இல் இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் களமிறங்கிய அவர், ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
அவரது விளையாட்டு வாழ்க்கை சாதாரண வீரராகவே கடந்து சென்றது. என்றாலும் 2017 இல் நடந்த சம்பவம் ஒன்று அவரது வாழ்வை புரட்டிப்போட்டது. ஈட்டி எறிதல் பயிற்சிகளை முடித்து விட்டு விடுதிக்கு செல்லும் போது, துரதிஷ்டவசமாக துலான் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றுக்கு முகங்கொடுத்தார். இதன் காரணமாக அவரது வலதுகால் செயலிழந்ததுடன், சுமார் இரண்டு ஆண்டுகளாக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
‘என்னால் விளையாட முடியாது என்பதை அறிந்ததும், நான் உலகம் முழுவதையும் இழந்தது போல் உணர்ந்தேன். மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒரே விடயத்தைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை. யோசிக்கவும் கூட இல்லை. ஈட்டி எறிதல் விளையாட்டு எனது உடம்பில் வேரூன்றியது. அதை எனது மனதிலிருந்து எளிதாக நீக்க முடியாத அளவுக்கு இருந்தது.
அதேபோல, விபத்தினால் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட முடியாது என்ற விடயம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியது’ என்கிறார் துலான்.
என்றாலும் அவரது விளையாட்டு வாழ்க்கை அத்தோடு முடியவில்லை. பாரா விளையாட்டில் அவதானம் செலுத்தினார். 2018 இராணுவ பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அவர் அதே ஆண்டில் நடைபெற்ற தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
அது தொடக்கம் அவரது விளையாட்டு வாழ்க்கை ஏறு முகத்தை கண்டது. இன்று இலங்கைக்கு தங்கம் வெல்லும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். இது பாராலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் பொருந்தும்.
பாராலிம்பிக் போட்டி என்பது ஏதோ ஒரு வகையில் உடல் ரீதியில் சவால்களை வென்று முன்னோக்கிச் செல்பவர்களின் விளையாட்டு என்றும் கூட குறிப்பிடலாம்.
எஸ்.பிர்தெளஸ்