இலங்கை தபால் துறையானது, 209 வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட, நாட்டின் மிகவும் பழமையான திணைக்களங்களில் ஒன்றாகும். 1798 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இலங்கையில் தபால் சேவை ஆரம்பமானது. 1799 ஆம் ஆண்டு இலங்கையை ஆக்கிரமித்திருந்த ஒல்லாந்தர்கள், முதன்முதலில் தபால் ஒழுங்குமுறைகள் மற்றும் நிலையான தபால் கட்டணங்களை அறிவித்து, 05 கரையோர மாகாணங்களில் தபால் சேவையை ஆரம்பித்து நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். நாட்டின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் வரலாற்றையும் குறிக்கும் இலங்கை தபால் சேவை, அதன் வெற்றிப்பாதையில் அண்மையில் மற்றுமொரு பெருமையையும் சேர்த்துள்ளது.
அதன்படி, உலகின் மிக நீளமான முத்திரையை இலங்கை தபால்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் கண்டி மகா பெரஹரா திருவிழாவின் இறுதியில் நடைபெற்ற பாரம்பரிய வைபவத்தில், இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா பெரஹரா என்ற கருப்பொருளை கொண்ட இந்த முத்திரை 205 மில்லிமீற்றர் நீளம் கொண்டதுடன் இதன் பெறுமதி 500 ரூபாவாகும்.
தியவடன நிலமே, அரச தலைவரான ஜனாதிபதி, சதர மஹா தேவாலயம் மற்றும் பிடிசர தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமே, ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளுக்கு மத்தியில், இந்த முதல் முத்திரையும், முதல்நாள் அட்டையும் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்கவினால், வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமைச்சர் அதனை, ஜனாதிபதி மற்றும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவிடம் கையளித்தார்.
உலகின் மிக நீளமான முத்திரையைப் பற்றி, இந்த வரலாற்று நிகழ்வின் தலைவராக பார்க்கப்படும், தபால் திணைக்களத்திற்கு பொறுப்பாளரான சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்கவிடம் வினவியபோது அவர் எம்மிடம் கூறியதாவது,
“நாம் உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிட்டுள்ளோம். 205 மில்லிமீற்றர் நீளம் கொண்ட இந்த முத்திரையை, கலைஞர்களான ருவான் உபசேன மற்றும் இசுரு சதுரங்க ஆகியோரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையில் 3 இலட்சம் பிரதிகளை அச்சிடவுள்ளோம். இது ஒரு நினைவு முத்திரை என்பதனால் இந்த முத்திரை மீண்டும் அச்சிடப்படமாட்டாது. நினைவு முத்திரைகள் என்பது மீண்டும் வெளியிடப்படாத முத்திரைகள் ஆகும். இந்த நீளமான முத்திரையின் பெறுமதி 500 ரூபாய் ஆகும். இம் முத்திரையின் அட்டை மிகவும் கவர்ச்சிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 800 ரூபாய் ஆகும்.
ஒரு சில முறைக்கமைய நாட்டின் முத்திரைகள் வெளியிடப்படுகின்றன. இது தொடர்பாகவும் பிரதி தபால் மா அதிபர் தெளிவுப்படுத்தினார்.
“நாட்டில் முத்திரை ஆலோசனைக் குழுவொன்று உள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு 36 தபால் தலைகளை வெளியிடுகிறோம். அதற்காக பத்திரிகைகளில் வெளியிட்டு முன்மொழிவுகளும் பெறப்படுகின்றன. அதன்மூலம் எமக்கு கிடைப்பெற்ற முன்மொழிவுகளுக்கமைய, இந்த நீளமான முத்திரையை வெளியிடுவதற்கு எமது முத்திரை ஆலோசனைக்குழு முடிவெடுத்தது.”
முத்திரை ஆலோசனைக் குழு என்பது தபால் திணைக்களத்தின் தலைமையிலான ஒரு வெளிப்புற பங்குதாரர் குழு ஆகும். வருடாந்திர முத்திரைத் திட்டம் இந்த குழுவினாலேயே தயாரிக்கப்படுகிறது. அந்த வருடாந்திர முத்திரைத் திட்டத்துக்கமையவே இந்த முத்திரையும் தயாரிக்கப்பட்டது.
“உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிடுவதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உள்ளதா?” என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபரிடம் வினவியபோது அவர் இவ்வாறு விளக்கமளித்திருந்தார்.
“இதற்கு முன்னதாக நாம் வைஸ்ராய் புகையிரதத்தைக் குறிக்கும் நீளமான முத்திரையொன்றை வெளியிட்டோம். அந்த முத்திரையின் நீளம் 175 மி.மீ. ஆகும். தலதா மாளிகை பெரஹரா மிகவும் பழைமையான எமது காலாசார விழா என்பதனால், உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின் கலாசார அம்சங்கள் பன்முகப்படுத்தப்பட்டு பிரபலமடைந்தமையினால், முத்திரையை உருவாக்கும் திட்டத்தை நாம் கொண்டு வந்தோம். எனவே முத்திரையை உருவாக்க முடிவு செய்தோம். பெரஹராவின் படக்காட்சிகள் தலதா மாளிகையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. அதனை கொண்டு இந்த இரு ஓவியர்களும் முத்திரையை வடிவமைத்துள்ளனர்” என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முத்திரையை உருவாக்கிய சிறந்த கலைஞர்களான இசுரு சதுரங்க மற்றும் ருவான் உபசேன பற்றி ஆரம்பத்தில் கூறியிருந்தோம். அதன்படி இசுரு சதுரங்க முதலில் வரைய ஆரம்பித்துள்ளார். ஓவியத்தின் இறுதி நுணுக்கங்களை செய்து முடித்தவர் ருவான் உபசேன ஆவார்.
இசுரு சதுரங்க, முத்திரை காரியாலயத்தில் சுமார் 14 ஆண்டுகளாக வடிவடைப்பாளராக கடமையாற்றி வருக்கின்றார். இந்த முத்திரை அவரது வாழ்க்கையின் 224 ஆவது படைப்பாகும். இந்நிலையில், இந்த வடிவமைப்பு எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பாக இசுரு சதுரங்க எம்மிடம் கூறினார்.
“முதலில் இந்த முத்திரையை எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதை காட்சிப்படுத்தினோம். தலதா பெரஹரா பாரம்பரியத்தின் மிக முக்கியமான அம்சங்கள் தலதா மாளிகையிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு ஓவியமாக வரையப்பட்டது. அந்த படங்களின் அடிப்படையில் நீர் வர்ணங்களை (Watercolours) பயன்படுத்தினோம். பின்னர் டிஜிட்டல் முறையினூடாக இறுதி கட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கையின் பெயரை உலகிற்கு எடுத்துச் செல்லும் விதமாக, முத்திரைகளை சேகரிக்கும் விருப்பமுடைய ஒரு ஓவியத்தை வரையவே நான் எதிர்பார்த்திருந்தேன்” என இசுரு தெரிவித்தார்.
ருவான் உபசேன மற்றும் இசுரு சதுரங்க இருவரும் நாட்டின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் எவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்பதை மட்டும் பார்ப்போம்.
தற்போது உலகின் மிக நீளமான முத்திரை எங்களுடையதே. இதற்கு முன்னர் உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிட்ட நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தபால் கூட்டுத்தாபனம் (PHLPost) முதல் பிலிப்பைன்ஸ் குடியரசின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 200மிமீ நீளமுடைய முத்திரையை வெளியிட்டது. இதன் மதிப்பு பிலிப்பைன்ஸ் பெறுமதியில் 125 பெசோக்கள் ஆகும். உலகின் மிக நீளமான முத்திரையை உருவாக்கி உலக சாதனை படைத்ததாக பிலிப்பைன்ஸ் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூறியது. 2 மாதங்கள் 08 நாட்களின் பின்னர் இலங்கை தபால் திணைக்களம் பிலிப்பைன்ஸின் உலக சாதனையை முறியடித்துள்ளது.
எமது தலதா பெரஹராவின் வீரத்தை உணர்த்தும் இந்த முத்திரை, நமது பெரஹரா விழாவை மேலும் ஆற்றலுடன் உலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்ரி சுரேஷ்