‘அந்த கல்முனைக்குடி நாட்கள்’ எனும் தலைப்பில் தன் பால்யகால நினைவுகளையும், அனுபவங்களையும் வேட்டையாடி, நம் கைகளில் விருந்தளித்திருக்கும் கவிஞர் மு.நி.காரியப்பருக்கு என் இதயபூர்வ வாழ்த்துக்கள். அந்த கல்முனைக் குடிநாட்கள்’ அவருக்கு முதல் தொகுப்பாகும். இது, ஒருபுதுக் கவிஞனுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளுக்கும், விடுபாட்டுக்கும், தவிர்ப்புக்களுக்கும் உட்பட்டதொகுப்பாகும். தனது எண்ண அலைகளை, தனது பார்வையை, தனது தனித்துவத்தை, வித்துவத்தை மொழிவடிவில் கொண்டு வருவதற்கான பிரயத்தனங்களின் தொகுப்பாகும் என்று இதனைப் புரிந்துகொள்ளலாம். தனக்கான தனித்துவக் கவிதைகளைத் தனது கல்விமொழியல்லாத தமிழ் மொழியில் தீவிரமாகக் கண்டடையத் தொடங்கியமை கவிஞரின் ஆளுமைக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. இக்கவிதைகள் கவிஞனின் அனுபவங்களாகவும், அகப்பொருளாகவும், செறிவான எழுத்தாகவும் விஷேடமாக வாழ்வியல் தத்துவத்தை நோக்கியும் நகரத் தொடங்கியுள்ளது. கவிஞரின் பின்வரும் கவிதையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ‘
இல்லை என்பதே எல்லாம்’ இல்லை என்பது இல்லாமை அல்ல அதுவே எல்லாம்.
உன்னிடம் இருப்பதோ கையளவு கொடுத்துவிடு.
அப்போதுஉலகே உன்னுடையது உணர்ந்துவிடு. (ப:60)
சொற்ப வரிகளில் மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களைக் கட்டியெழுப்பும் சூட்சுமம் இக்கவிஞனுக்கு வாய்த்துள்ளது. கவிஞர் தனது நூலின் முன்னுரைக் குறிப்பில், ‘கதை எழுதவரவில்லை. கவிதை சுத்த சூனியம்’ என்று பதிவுசெய்துள்ளார். ஆனால், நான் இல்லாத என்னை…! எனும் கவிதையில் இல்லாத சிறையில் என்னை நான் சிறையடைத்துவிட்டேன்.
வராத வெள்ளத்தில் நான் மூழ்கிவிட்டேன்.
புரியாத யுத்தத்தில் நான் மாண்டுவிட்டேன்.
என்னை நானே தொலைத்து விட்டேன்.
இங்கே நீ காண்பது நான் இல்லாத என்னை… (ப:51)
‘நான் ஒரு முடக்கவிஞன்’ என்ற பிரகடனத்துடன் எழுத ஆரம்பித்த உங்களால் எப்படி இந்தக் கவிதை சாத்தியமானது? நிச்சயமாக, கவிதைத் தொழில்நுட்பங்களையெல்லாம் உதறிவிட்டு, உயிர் நுட்பத்தை மட்டும் நம்பித் துணிச்சலோடு எழுதப்பட்டதால்தான் இக் கவிதை அருமையாக வாய்த்துள்ளது. இது நிரப்பப்படாத வெற்றிடங்கள் நோக்கி நகரும் ஜீவனுள்ள காற்றாக அமைந்திருக்கின்றது. இலைகள், மலர்களைக் கண்டு மயங்கிய கவிஞன் ஏன் இலைகள் கண்டு வியக்கவில்லை…! (ப:19)
இக்கவிதை மூலம் தங்களது எழுத்துகள், இலகுவாக, துலக்கமாக, செறிவானதாக உள்ளன. யதார்த்தமான, நுட்பமான கவிதைகளை, கட்டடக் காடுகளுக்குள் வாழ்ந்து, நவீனத்துவத்தைப் புசித்து, சட்ட ஓட்டைகளை சல்லடைபோடும் மிகவும் ‘பிசியான’ ஒரு சட்டத்தரணியால் இது எவ்வாறு சாத்தியமானது? அதுவேறொன்றும் இல்லை. வாழ்வியலின் படிமங்களை, அவற்றில் மென்மையாய் இழையோடும் மானுட உணர்வுகளை, இக் கவிஞன் ஆழமாக நேசித்தமையினாலேயே அது சாத்தியமானது. எது கவிதையாகும் கணம் என்று யோசிப்பதற்குள், இக்கவிஞனின் மென்மையான இதயத்திலிருந்து ஒரு வானம்பாடி எழுந்து பறக்கத் தொடங்குகிறது. இது விடுதலைபாடும் வானம்பாடி மாத்திரமல்ல, ஞானம்பாடும் வானம்பாடியுமாகும். இன்று போதுமானது, பொய்யான நாளை பறிபோன நேற்று போதுமான இன்று
இதுவே உண்மை புரிந்தோர் அமைதி, புரியாதோர் அவதி..! (ப:56)
இக்கவிஞன் தனது அழகியல் சித்திரத் தெறிப்பிற்கு வெளியே, கூடுதலாய் ஏதோவொன்றைக் கண்டடைய விரும்பும் ஆத்ம தவிப்பு எங்கும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தவிப்பே அவரது கவிதைப் பயணத்தில் ஒருசிறு திசைமாற்றத்தை அவருக்கு வழங்கியிருக்கக் கூடும். கவிதை வரிகளானவை,’ எதிலும் மூழ்கிவிடாதே. மிதக்கக் கற்றுக் கொள்’ என்ற வாழ்வியல் தத்துவத்தை மிகவும் சுலபமாகச் சொல்லிவிட்டுச் செல்கின்றது. எதிலும் திருப்தி காணாமல் அலைந்து திரியும் எமது வாழ்வுக்கும், மனதுக்கும் இடும் கடிவாளமே இக்கவிதையாகும். ஒரு பறவைபோல் பறந்து விரியும் இக்கவிதை, உதிர்ந்த சிறகாக அவதிப்படும் எமது திருப்தியுறாத வாழ்விற்கு ஒத்தடமாகவும், உண்மையாகவும் ஒரு பொறியாகவும் இயங்குகிறது. எமது ஆன்மிகத்தை, வாழ்வின் தீராத பக்கங்களுக்குள் போதுமானதாக அழைத்துச் செல்கிறது. மு.நி.காரியப்பரின் படைப்புலகம் தாளமுடியாத அளவிற்கு மென்மையானதாக, அதில் அன்பு எங்கும் விரவிக் கிடக்கின்றது. இவரின் கவிதைகள் போன்று உண்மையில் இவரின் நடைமுறை யதார்த்த உலகமும் அப்படியானதுதானா என்ற கேள்வி என்னிடம் உண்டு. எனினும் நிச்சயமாகச் சொல்லமுடியும், மு.நி.காரியப்பரின் பலமும் பலவீனமும் இந்தமென்மைதான். மென்மையானவர்கள் தோற்கமாட்டார்கள். அவர்களிடம் நன்றியும், அன்பும், கருணையும், இறைவிசுவாசமும் உண்டு. அவர்களிடம் நயவஞ்சகம் இருக்காது. அவர்கள் வெள்ளந்திக் காரர்கள். கவிஞரின் கவிதைகள் அனைத்தும் இலகுவானதாகவும், அனுபவிக்கக் கூடியதாகவும், வாழ்வியல் தத்துவங்களாகவும் உள்ளன. மு.நி.காரியப்பரின் கவிதைகள் போன்று கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை புகைப்படங்களிலும் காணொளிகளிலுமே நான் பார்த்துள்ளேன். நான் பார்த்த எந்தப் புகைப்படத்தையும், காணொளியை விடவும் அவர் குழந்தைபோல், மென்மையும், கருணையும் மிக்க இதயமுடையவராக இருந்தார். குறிப்பாக இந்நூலை வேதாந்திசேகு இஸ்ஸதீனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தமை நிசாம் காரியப்பரின் நன்றியுணர்வைக் காட்டுகின்றது. கவிதை வெளியீட்டுவிழாவின் மரபார்ந்த சம்பிரதாயங்களுக்கு அப்பால் தனது நூலின் முதற்பிரதியை தனது அன்புத் தாய்க்கு வழங்கி வைத்தமை மகிழ்ச்சியான தருணமே. நூலாசிரியர், ஏற்புரை வழங்கும்போது கவிதைகள் எழுதுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைகளை ஒளிவுமறைவின்றிச் சொன்னபோது மேலும் எனக்கு அவரின் மேல் மதிப்புக் கூடியது. இக் கவிதை நூலின் வெற்றிக்குப் பின்னால் உந்துகோலாக தங்களது அன்பு மனைவி மிஸ்ரி காரியப்பர் இருந்துள்ளமை மிகப் பெரும் சிறப்பே. இந்த அன்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இந்நிகழ்வுக்கு வருகைதந்த பெண்களையெல்லாம் வரவேற்று, உற்சாகத்துடன் உபசரித்த பாங்கு, கவிஞர் தனது கவிதையில் குறிப்பிடுவதுபோல், அவர் ஓர் ‘அதிசயப் பெண்’ தான் (ப:34).மேலும் குறிப்பாகத் தங்கள் அன்புப் புதல்வன் சகோதரர் இல்ஹாம் காரியப்பர், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஒரு தந்தையின் வெற்றிக்காக தனது அத்தனை உழைப்பையும் வெளிப்படுத்தியதுடன் அயராது பாடுபட்டிருந்தமை தெரிந்தது. அவர் மிகவும் திறமையானவராக இருக்கக் கூடும். கவிஞர் தனது கவிதையில் சுட்டிக்காட்டியதுபோல், அவர், ‘இதயத்தில் துடிக்கும் தொப்பிள் கொடி’உறவல்லவா..! (ப:54).மேலும் வரவேற்புரை நிகழ்த்திய பாராஹ், மிகவும் சிறப்பாகப் பேசினார். அவருக்கு மொழி வாய்த்துள்ளது. குறிப்பாகத் தமிழ் உச்சரிப்புக்களும் பேச்சு ஆளுமையும் ஒருசேரக் கொண்டுள்ளார்.
அவர் பெண் அரசியல் ஆளுமையாக வரக்கூடும். மேலும் இந்நிகழ்வின் தொகுப்பாளினியின் தெரிவும் சிறப்பானதாக அமைந்தது. விசேடமாக, நான் நேசிக்கும் எச்.ஏ. அஸீஸ் சேர் பற்றிக் குறிப்பிடவேண்டும். அவர் மு.நி.காரியப்பர் எனும் கவிஞரை இச் சமூகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார். அவரின் உரையை நான் ரசித்திருந்தேன்.
சாதி, மத, இன அடையாளங்கள் கடந்து மனிதகுலத்தை நேசிக்கும் ஒருவர். ‘முடியும் எழுது’ என்று நூலாசிரியரை ஊக்குவித்த அவர் என்றும் போற்றப்படவேண்டியவர். இறுதியாக, இந்த நூல் வெளியீடானது மனநிறைவான விடயமாகும். உண்மையைச் சொன்னால், மனம் மட்டும் அல்ல, வயிறும் நிறைந்தது. உங்கள் அருகே தயக்கத்துடன் வந்த வாசகர் ஒவ்வொருவரையும் தோளோடுதோள் நிறுத்தி ஒரு தோழனைப் போல பரவசப்படுத்தினீர்கள்.
அன்போடு அனைவரிடமும் பேசி வழி அனுப்பினீர்கள். இவையெல்லாம் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பண்புகள். நான் நம்புவதுபோல் சட்டத்துறையில் சாதித்த நீங்கள், அஷ்ரப் போன்று அரசியலிலும் சாதிப்பீர்கள் (இன்ஷா அல்லாஹ்). அரசியல் எனும் காட்டில், மனித முகமூடிகளில் கொடிய மிருகங்கள் வாழ்கின்றன. அவசரப் படாமல் சூதானமாக நடந்துகொள்ளுங்கள்.
பாராளுமன்றம் செல்ல அனைத்துத் தகுதிகளையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள். நிச்சயம் ஒருநாள் பாராளுமன்றம் செல்லவேண்டும். உங்களை நேசிக்கும் முஸ்லிம்களின் இதயங்களைத் தலைமை தாங்கி வழிநடத்தக் கூடும். இவற்றுக்கு அடிநாதமாக இருப்பது சகமனிதர்களின் மீதான அன்பும்,கரிசனமும்தான் அவருக்கு எனது இதயபூர்வமான அன்பும் பிரார்த்தனைகளும்
சர்ஜூன் ஜமால்தீன் அக்கரைப்பற்று