Home » தேயிலைத் தோட்டங்களில் வெளியார் உற்பத்தி முறைமை

தேயிலைத் தோட்டங்களில் வெளியார் உற்பத்தி முறைமை

by Damith Pushpika
August 4, 2024 6:24 am 0 comment

(கடந்த வாரத் தொடர்)

இவ்வழிகாட்டல் குறிப்புகள் விமர்சிக்கப் படத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளன. சம்பளப் பட்டியலிலுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பத்தாருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென்பது சரியானது. அதேவேளை ஓய்வுபெற்ற தொழிலாளர்களை குறிப்பிடாமல் விட்டுள்ளனர். இன்றும் கூட தோட்ட முகாமையாளர்கள் இவர்களை ‘கைக்காசு’ வேலைக்கு அமர்த்துவதனை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

‘நீண்ட கால குத்தகை அடிப்படை ‘என்பதற்கான கால வரையறை குறிப்பிடப்படாமல் விடப்பட்டுள்ளது. பிராந்திய கம்பெனிகள் அரசாங்கக் காணிகளை குத்தகைக்கு பெற்றுள்ளன .இவற்றுக்கு ‘உப குத்தகைக்கு’ கொடுக்கும் அதிகாரம் சட்டபூர்வமாக உண்டா என்பதில் தெளிவில்லை.

காணி வாழ்வாதாரத்திற்கான வருவாயினைத் தரும் வரையில் தோட்டத்தில் கூடிய நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் எனும் விதி, கைவிடப்பட்ட, செழிப்பற்ற காணி எவ்வாறு வாழ்வாதார வருவாயைத் தரும் என யோசிக்க வேண்டியுள்ளது.

தோட்ட நிர்வாகம் காணிகளுக்கு உள்ளீடுகளை வழங்கி அதற்கான கொடுப்பனவுகளை உற்பத்தியாளர்கள் வருவாயில் இருந்து பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டில் இவ் உள்ளீடுகளின் விலையினை மட்டுமா, விலைக்கு மேலான லாபத்தினையுமா உற்பத்தியாளர்கள் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவின்மை உண்டு.

நட்டத்தை மட்டுமே காட்டும் கம்பெனிகளின் ஐந்தொகைப் பதிவுகளை வெளியிடும் கம்பெனிகள் தேயிலை ஆணையாளர் குறிப்பிடும் பசுந்தேயிலையின் விலையினை பகிரங்கப் படுத்துமா என்ற வினாவும், தேயிலை ஆணையாளர் யாருக்குச் சார்பானவராக இருப்பார் என்ற வினாவும் எழுகின்றது.

நிர்வாகத்தினர் காணி உரிமைத் தொகைக்காக ஒரு தொகையினை உற்பத்தியாளர்களிடம் பெறுவது கம்பெனிகளின் பொறுப்பினை அவர்கள் மேல் சுமத்துவதாகாதா? தோட்டக் காணிகளுக்கு பங்காளர்களாக இருக்கும் தொழிலாளருக்கு அல்லவா இவ்வுரிமைத் தொகை கொடுக்கப்பட வேண்டும்.

வெளியார் பயிர்ச் செய்கை முறையினை ஆதரிப்போர் இதன் மூலம் தொழிலாளர்களின் வருமானம் கூடி, வாழ்க்கை நிலை உயரும் என்று கூறுகின்றனர். தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் ஆய்வு செய்த எல்கைடுவ கம்பனிக்குச் சொந்தமான செலகம தோட்டத்தில் இது சாத்தியமானதாகக் கூறியுள்ளனர். வலப்பனைப் பிரதேச மஹா ஊவா தோட்டத்தில் இம்முறையாலேயே பாதிக்கப் பட்டதாக தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பு பொறிமுறை அவசியமாகின்றது.

இந்த முறைமையின் அமுலாக்கத்தின் போது தொழிலாளர்களின் வேலைப்பளு கூடுவதோடு, சிறார்கள் உட்பட முழுக் குடும்பத்தினரும் வேலையில் ஈடுபட வேண்டிய சாத்தியம் பற்றியும், பிற சமூக நடவடிக்கைகள் முடமாவதற்குமான சாத்தியம் பற்றியும் எதிர்வு கூற வாய்ப்புண்டு. மேலும்,தோட்டத்திற்குள் வேலையில் உள்ளோர், இல்லாதோர் என இரு பிரிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.தவிர, தோட்டத்திற்குள் பதிவில் உள்ளோர், இல்லாதோர் என இரு பிரிவுகள் ஏற்பட்டு அவர்களிடையே முரண்பாடுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதற்கும் மேலாக பதிவில் உள்ளோரின் வேலை நாட்கள் குறைந்து வருமானம் வீழ்ச்சியால் வறுமை கூடும் அபாயமும் உண்டு.

இந்த முறைமை தொழிலாளர்கள் அனுபவித்து வந்த அற்ப,சொற்ப சலுகைகளையும் இல்லாமல் ஆக்கியுள்ளது. இதில் முதன்மையானது ஊழியர் சேமலாப, நம்பிக்கை நிதிகள், ஓய்வுக் கொடுப்பனவு ஆகியவை இல்லாமல் போனதாகும். ஓய்வுகால வரப்பிரசாதங்களாக இருந்துவந்த இந்த சேமிப்புகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன. புகுத்தப்பட்டுள்ள முறையில் எதிர்காலத்திற்கான சேமிப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை .

எதிர்கால சேமிப்பு நிர்மூலமாகப் பட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் உழைப்பால் கொழுத்த முதலீட்டாளர்கள் செய்து வந்த சேமநல ஏற்பாடுகள் யாவும் பறிபோயுள்ளன. பராமரிப்புச் சூழல் துப்புரவு, மரண ஆதரக் கொடுப்பனவு, பிரசவ சகாய நிதி உட்பட சகல ஏற்பாடுகளும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளன.

பிரித்துக் கொடுக்கப்படும் காணி, மயான பூமியையும் உள்ளடக்கியுள்ளபோது சவ அடக்கத்திற்கான இடமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்த காலத்தில் இருந்த ஏற்பாடுகள் யாவும் இல்லாமல் போயுள்ளன. கடைசியாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில், அது நடைமுறைப் படுத்தப்படும் கட்டத்தில் இந்த முறைமை நடைமுறைப் படுத்தப்படும் என்ற ஷரத்து உள்ளது. அதனைக் கிரகிக்க நிதானம் அற்ற தொழிற்சங்கத் தலைவர் ஒருவரே ஒப்பந்தத்தில் முதலாவதாக ஒப்பம் இட்டுள்ளார். தமக்கான புதை குழியைத் தோண்டச் செய்யும் பாசறையான அத் தொழிற்சங்கம் இவ்வாறான அவச் செயல்களுக்கு தனி உரிமை பெற்றது. இம்முறைமையினை தொழிலாளர்களுக்குச் சாதகமாக அமைப்பதற்கு பின்வரும் ஏற்பாடுகள் அவசியமாகின்றன.

1 அ) குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்.

ஆ) ஒப்பந்தம் காணி சீர்திருத்த ஆணைக்கு குழுவுக்கும், காணியைப் பெறும் தொழிலாளிக்கும் இடையிலானதாக இருக்க வேண்டும்.

இ) உள்ளீடுகளையும், பிற வசதிகளையும் கம்பெனிகள் வழங்குவதற்குப் பதிலாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு அப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.

2) தோட்டத்தில் நிரந்தரமாக வசிக்கும் சகல தொழிலாளர் குடும்பங்களுக்கும் சம பரப்பளவான காணி கொடுக்கப்படவேண்டும்.

3) தேயிலைச் செய்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளையில் கோப்பி, மிளகு போன்ற ஊடு பயிர்களைப் பயிரிட அனுமதிக்கவும் வேண்டும்.

4) நடைமுறையில் உள்ள வீடமைப்புத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரப்பளவு நெகிழ்ச்சி உள்ளதாக மாற்றப்பட வேண்டும்.

5) குத்தகை உரித்து பின் சந்ததியினருக்கு, அவர்கள் இல்லாத விடத்து விரும்பியோருக்கு கை மாற்றப்படக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

6) தொழிலாளர்கள் குடும்பங்களில் இருந்து மேனிலை அடைந்துள்ள மலையகத்தாருக்கும் காணி ஒதுக்கீடு செய்யப்படக் கூடிய ஏற்பாடுகள் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும்.

7) குத்தகைக் காலம் வரையறை செய்யப்பட்டு, முடிவில் காணி குத்தகைக் காரர்களுக்கு உரித்தாக்கப்படக் கூடிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பீ.மரியதாஸ்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division