Home » ஆடவரை விஞ்சும் இலங்கை மகளிர் கிரிக்கெட்

ஆடவரை விஞ்சும் இலங்கை மகளிர் கிரிக்கெட்

by Damith Pushpika
August 4, 2024 6:00 am 0 comment

பல்லேகலவுக்கும் தம்புள்ளைக்கும் இருக்கும் தூரம் மிஞ்சிப்போன இரண்டு மணிநேரம் பயணிக்கும் இடைவெளி. இந்த இரு இடங்களிலும் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஆடவர் கிரிக்கெட்டை மகளிர் கிரிக்கெட் விஞ்சிவிட்டது.

கடந்த ஜூலை 28 ஆம் திகதி தம்புள்ளையில் மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர்கள் இந்தியாவை வீழ்த்தி முதல் முறை சம்பியன் கிண்ணத்தை வென்ற அதே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த ஆடவர் கிரிக்கெட்டி இலங்கை அணி இந்தியாவிடம் மீண்டும் ஒருமுறை தோற்று தொடரையும் இழந்தது.

இலங்கை ஆடவர் கிரிக்கெட் தனது வீழ்ச்சியில் இருந்து எழுந்து நிற்க தடுமாறும் நிலையில் இலங்கை மகளிர் அணியின் ஏறுமுகம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் என்பது அண்மைக் காலத்தில் முழுக்க முழுக்க சமரி அத்தபத்துவை மையப்படுத்தி சுழன்று வருகிறது. என்றாலும், இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சமரி மாத்திரமல்ல ஹர்ஷிதா சமரவிக்ரம, கவீஷா டில்ஹாரி மற்றும் அனுஷா சஞ்சீவனி போன்ற வீராங்கனைகள் அபார திறமையை வெளிப்படுத்தினார்கள். இதனாலேயே இலங்கை மகளிர்களால் ஆசிய சம்பியன்களாக முடிந்தது.

இலங்கை ஆடவர்கள் தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் நிலையில் இந்த வெற்றி மிகையாக தென்பட்டது, அதற்கான கொண்டாட்டங்களும் உச்சம் பெற்றிருந்தன. அதற்கு இலங்கை மகளிர்கள் தகுதியானவர்களும் கூட.

இங்கே போட்டியை காண வந்த ரசிகர்களையும் குறிப்பிட்டுக் கூற வேண்டி உள்ளது. இலங்கை மகளிர் அணி இதுவரை காணாத அளவுக்கு இறுதிப் போட்டியில் தம்புள்ளை அரங்கு நிரம்பி இருந்தது. அது அண்மையில் முடிந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கூட காணாத ரசிகர்கள் கூட்டம். அதிலே பெரும்பான்மையானவர்கள் பெண், சிறுமிகள். இது மகளிர் கிரிக்கெட்டில் புதிய திருப்பத்தை தரக் கூடியது. அதன் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

இதற்கு முக்கியமான ஓர் ஆளுமையாக சமரி அத்தபத்துவதை குறிப்பிடலாம். 1996 இல் இலங்கை ஆடவர் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுடன் ஒப்பிடும் அளவுக்கு அவர் இருக்கிறார். என்றாலும் அவரது துடுப்பாட்டம் என்பது சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைகளில் ஒருவர் எனும் அளவுக்கு உள்ளது.

அண்மைக் காலம் வரை இலங்கை மகளிர் அணி என்பது சமரி என்ற ‘ஒரு பெண்ணின் அணி’ என்றே பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. அதற்கும் சமரி தான் காரணம்.

இதற்காக சமரியை இலங்கை ஆடவர் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பது போன்று சமூக ஊடகத்தில் வெளியாகும் நையாண்டி கதைகள் எல்லாம் பொருந்தாத ஒன்று. ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் என்பது வித்தியாசப்பட்டது. இரண்டையும் ஒப்பிட முடியாது. பெண்கள் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆடவர் கிரிக்கெட் என்பது உடல் வலிமையுடன் அதிக வேகமாக ஆடப்படும் விளையாட்டு. அங்கே சமரி போன்ற வீராங்கனைகளுக்கு ஜஸ்பிரிட் பும்ரா, மிட்சல் ஸ்டார்க், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் அன்ட்ரிச் நொட்ஜே போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதென்பது சாத்தியப்படாதது.

ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் சமரி என்பவர் உலகத் தரம் வாய்ந்தவர். அந்த அளவுக்கு இலங்கை ஆடவர் கிரிக்கெட்டில் உலகத் தரம் வாய்ந்த வீரர் ஒருவர் தற்போது ஆடும் வீரர்கள் இடையே இல்லை.

சம்பள விவகாரமும் இதே நிலை தான். இலங்கை மகளிர் அணிக்கு கடந்த 2023 பெப்ரவரியில் போட்டிக் கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் சபை அதிகரித்திருந்தது. அது போட்டி ஒன்றுக்கு 750 டொலர்கள். இது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஒன்றில் இலங்கை ஆடவர் அணி பெறும் கட்டணத்துடன் ஒப்பிட்டால் 25 வீதம் தான். ஆடவர்களின் அணி வீரர்களுக்கான ஒப்பந்த தொகையும் மிகச் சிறந்ததாக இருக்கும்.

என்றாலும் இந்த சம்பள முறையை பொத்தாம்பொதுவாக மதிப்பிட முடியாது. அது ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி போட்டிகளில் ஈட்டும் வருவாயுடன் பொருந்திப் பார்க்க வேண்டி இருக்கும்.

ஆனால் இலங்கை ரசிகர்களிடையே இலங்கை மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதோடு ஆசிய கிண்ணத்தை வென்ற பின் நிலைமை இன்னும் மாறி இருக்கிறது. மகளிர் அணியை பார்க்க அரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலத்தில் அதிகாரிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். அது ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இடையிலான சம்பள ஏற்றத்தாழ்வை குறைக்க வழி செய்யும்.

கடந்த 14 மாதங்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் பெற்ற வெற்றிகள் முக்கியம் வாய்ந்தவை பங்களாதேஷ், இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களை வென்றதோடு இந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலும் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணி, பங்களாதேஷில் எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடைபெறப்போகும் மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அது மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் சாதிக்க முடியாத தூரத்தில் இல்லை.

மறுபுறம் இலங்கை ஆடவர் கிரிக்கெட் கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் எந்தப் புள்ளியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறது. நடந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் ஒருமுறை தொடர்ந்து தோல்விகளை சந்தித்திருக்கிறது. அதிரடி சீர்திருத்தங்கள் தேவையாக இருப்பது மாத்திரம் புரிகிறது.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்து நாடு திரும்பியபோது, ஊடகங்களிடம் பேசிய குசல் மெண்டிஸ் ‘போட்டிகளில் தோற்பது பற்றி பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது அது எமது கையில் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மகளிர் ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம, ‘களத்தடுப்பின்போது நான் இரு பிடியெடுப்புகளைத் தவறவிட்டேன், இந்தியா எத்தனை ஓட்டங்களை அடித்தாலும் நான் துரத்தி அடிப்பேன் என்று அப்போதே நினைத்துக் கொண்டேன்’ என்று இந்தியாவை வீழ்த்திய பின் குறிப்பிட்டிருந்தார்.

ஹர்ஷிதா கூறியது போன்று, அவர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் 166 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தி கடைசி வரை ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்களை பெற்றார்.

இதுவே இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டின் இப்போதைய நிலைமை.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division