இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐயும் தாண்டுமென்று அஞ்சப்படுகின்றது. உயிரிழப்புகளின் எண்ணிக்ைக நேற்று 300 ஐ நெருங்கியது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், கேரள பொலிஸார், தீயணைப்புப் படையினர் ஆகியோருடன் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப்படை ஹெலிெகாப்டர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000- இற்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவைச் சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் கதறி அழுதபடி உள்ளனர். பலர் மாயமான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முண்டக்கை பகுதியில் 500-க்கும்மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில், தற்போது 50 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
வயநாடு, மலப்புரம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை தொடரும் அபாயம் உள்ளதால்,மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரை இடம்பெறாத அளவுக்கு நிலச்சரிவு நடந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் குன்றுகள் மற்றும் மலைத் தொடர்களால் ஆனது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 பாகை வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
தொடர்மழை காரணமாக மண் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது.
காடுகளில் உள்ள பாரம்பரிய மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மண்ணை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. ஆனால் இறப்பர் போன்ற மரங்களின் வேர்களால் அவ்வளவாக மண்ணை இறுக பற்றிக்கொள்ள முடிவதில்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை பல ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில்ல் கடந்த 20 ஆண்டுகளில் நிலப்பயன்பாடு அதிகளவில் மாற்றமடைந்துள்ளது. குறிப்பாக இயற்கையாக அமைந்த மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளைத் தோண்டி, பிளந்து கட்டடங்களை எழுப்பி அப்பகுதியின் நில அமைப்பியலே மாற்றப்பட்டுவிட்டது. பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மண்ணை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இத்தன்மையை இழந்த நிலப்பரப்பில் அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன.
மக்கள் உறக்கத்தில் இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 பேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எஸ்.சாரங்கன்