Home » பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதேன்?

பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதேன்?

by Damith Pushpika
August 4, 2024 6:00 am 0 comment
நாட்டைப் பற்றிச் சிந்தித்த சட்ட மூலம்

பேராசிரியர் பிரதிபா மஹனாம

பொருளாதார மாற்றச் சட்ட மூலத்தைக் கொண்டுவருதற்கு பல விடயங்கள் காரணமாக அமைந்துள்ளன. நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து அந்த இணக்கப்பாட்டிற்கு அமைய செயற்படுவதாக இருந்தால், எமக்கு அந்த ஒப்பந்தம் மட்டும் போதாது. அதற்குக் காரணம், ஒப்பந்தங்களிலிருந்து தரப்பினர் விலகலாம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நோக்குக்கு அமைவாக, இலங்கைக்கு ஏற்ற எதிர்காலப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இலங்கை 1966ஆம் ஆண்டு பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள போதிலும், இன்னமும் பொருளாதார உரிமைகள் அரசியலமைப்பில் கூட இல்லை. இது தனியார் துறை, அரச துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு கொண்டுவருவதற்கு உகந்த ஒரு சட்டமூலமாகும். இதனைப் பற்றி தற்போது சர்வதேச அளவில் பேசப்படுறது. இதற்குக் காரணம், கடந்த செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இது தொடர்பில் கவனத்தைச் செலுத்தியதாகும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, அனைவரும் இணக்கத்தைத் தெரிவித்த சட்டமூலமாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைப் பற்றிச் சிந்தித்த சட்டமூலமாகவே இதை நான் பார்க்கிறேன். இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவது மாத்திரம் போதாது; இதை ஒரு செயல்முறையாக மாற்ற வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் மக்களின் தொழில் முயற்சிகளை மேம்படுத்தி, சர்வதேச உறவுகள் மூலம் முன்னேற வேண்டும் என்றே நான் கூறுகிறேன். காலத்திற்கு காலம் அரசியல் வாக்குறுதிகள் வரும்; அவை மீண்டும் மறைந்து விடுகின்றன. இது நாட்டின் சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது; அவை அரசுடன் முன்னேறிச் செல்கின்றன என்பதை நாம் காட்ட வேண்டும். அனைத்துப் பொருளாதாரத் திட்டங்களையும் ஒரு குறிப்பிட்ட மையப்படுத்தப்பட்ட இடத்திற்குக் கொண்டுவருவதற்கு இதன் மூலம் வாய்ப்புள்ளது.


முக்கியத்துவம் மிக்க சட்டமூலம்

மக்கள் வங்கியின் தலைவர் பட்டய கணக்காளர் சுஜீவ ராஜபக்ஷ

உண்மையில், இந்தச் சட்டமூலம் அண்மைய காலத்தில் நிறைவேற்றப்பட்ட மிகவும் முக்கியமான சட்டமாகவே நான் பார்க்கிறேன். தொழில் துறையினராக நாம் தனிப்பட்ட முறையில் எதிர்பார்த்த விடயம் இந்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

நாட்டின் பொருளாதாரம் எந்த திசையில் எந்த வகையில் பயணிக்கின்றது என மிகத் தெளிவாக இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகவே நான் பார்க்கிறேன். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நமது அரசியல் பாதை, அரசியல் கருத்துக்கள், தொலைநோக்கு ஆகியவை முன்வைக்கப்படுகின்றன. மற்றொரு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அது முற்றாகவே மறுபக்கத்திற்கு மாற்றமடையும் சந்தர்ப்பங்களை நாம் பார்க்கின்றோம்.

எனினும் இங்கு நான் கண்ட விடயம் என்னவென்றால், இந்தச் சட்டத்தின் காரணமாக எமது நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்படுகின்றது. அதேபோன்று நாட்டின் செழிப்பு, உற்பத்தித் திறன் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அதேபோன்று சமூகச் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% ஆக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான விடயமாகும். அதேபோன்று, அதை எப்படி செய்வது என்பது தொடர்பில் பேசும்போது, ​​இந்நாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.


இனங் காணப்பட்டுள்ள முதலீட்டு வலயங்களை உருவாக்குவது முக்கியம்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரசன்ன பிரேமதாச

இந்தச் சட்டமூலத்தை நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் அங்கீகரிக்க வேண்டும். இலங்கை போன்ற நாடுகளின் அபிவிருத்தியில் வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் முக்கியமானதாகும். முதலீட்டுச் சபை போன்ற நிறுவனங்கள் இதனைவிடவும் தீவிரமாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள், பெண்களின் உழைப்பு பங்களிப்பு, வெளிநாட்டு தொழில்முனைவு போன்றவை மேம்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும். நாட்டின் நிலையான அபிவிருத்தியை அடைந்து கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு, அனைத்து தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். செயற்திறன், உற்பத்தித்திறன் போன்றவற்றை அதிகரித்துக் கொள்ள வேண்டியதோடு, தொழில்நுட்ப துறையில் இருந்து ஏற்றுமதி துறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதிலிருந்து அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்ப துறையை விரிவுபடுத்துவதில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பெரும் பொறுப்பு உள்ளது. அதேபோன்று, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குத் தேவையான சட்ட நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றைத் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கு முடியாதிருப்பமை பிரச்சினைக்குரிய விடயமாகும். எனவே, இச்சட்டத்தின் மூலம் பொருளாதார ஆணைக்குழுவை உருவாக்குவது மிகவும் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும்.

இந்தச் சட்ட மூலத்தில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என இனங்காணப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான விடயமாகும். பெண்களின் தொழில் முயற்சியை அதிகரிப்பதன் மூலம் பெண்களின் உழைப்பு பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டில் உலகளாவிய தொழில்முனைவோர் கண்காணிப்பு அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் ஆண்களை விட அதிகமான பெண்கள் சுயதொழில் செய்பவர்கள் என அவதானிக்கப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட தொழில்களை நடத்திச் செல்லும் அனைத்து தொழில்முயற்சியாளர்கள் மூவரில் ஒருவர் பெண்ணாகும். சிங்கப்பூர் திறந்த மற்றும் பாரியளவிலான வர்த்தகத்தைக் கொண்ட பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்று அபிவிருத்தியை நெருங்கியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள முதலீட்டு வலயங்களை உருவாக்குவது முக்கியமாகும். திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் இவ்வாறான உத்தேச வலயங்களை உருவாக்குவதன் மூலம் நாம் பெரும் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். திறந்த முதலீட்டுக் கொள்கைகள் மற்றும் தடையற்ற சந்தைப் பொருளாதாரக் கொள்கைகள் இதற்கு முக்கியமானவை. டிஜிட்டல் புதிய கண்டுபிடிப்புக்கள், மருந்து உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற துறைகளில் முதலீடுகளை நாட்டிற்குப் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.


பொருளாதார சட்டங்கள் மாற்றம் பெறவேண்டும்

சாரங்க அழகப்பெரும – தலைவர், கைத்தொழில் அபிவிருத்திச் சபை

உண்மையிலேயே, இந்தச் சட்டமூலத்தின் மூலம் எமது நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இலகுவாகச் சொல்லப்போனால், இதற்காக சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கை கட்டமைப்புக்கள் கண்டிப்பாகத் தேவை. பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்புக்கள் தேவை. அதை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும். உலகில் உள்ள புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டியது அவசியமாகும். அதைச் செய்வதே ஜனாதிபதியின் நோக்கமாகும். எனவே, இந்த பொருளாதாரம் தொடர்பான சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும். அதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் தேவையாகும். வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அதிக முதலீடுகளைக் கொண்டு வர முடியும். தற்போது ஏனைய நாடுகளிலிருந்து முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு சட்டங்களும் தடைகளும் உள்ளன. அதேபோன்று எமது நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். பெண்களின் உழைப்புப் பங்களிப்பு 34% அளவிலேயே உள்ளது, இந்த அளவு அதிகரிக்க வேண்டும். பொதுவாக இது 50% ஆக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதார மாற்றம் தொடர்பாக இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.


ஒப்பந்தம் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பீடத்தின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க

பொருளாதார பரிமாற்றச் சட்டத்தில் முக்கியமாகப் பேசப்படும் விடயம் என்னவெனில், ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமான பொருளாதார இலக்குகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்தல், கடன் சுமையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95 வீதமாகப் பராமரித்தல், செலுத்தும் இருப்பு பற்றாக்குறையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% என்ற அளவில் பராமரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை 5 வீதத்திற்கு குறையாத மட்டத்தில் பராமரித்தல் போன்ற விடயங்கள் இதனுள் அடங்குகின்றன. மொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்குப் புறம்பாக மூன்று முக்கிய இலக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இலக்குகளை எடுத்துக் கொண்டால் அண்மைய கடந்த ஆறு, ஏழு தசாப்த காலத்தினுள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணக்கூடிய மூன்று அடிப்படை பண்புகளை அடைவது தொடர்பான இலக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி 21.5% ஐ தாண்டியுள்ளது. அதை அடைவதற்கான இலக்குகள் இங்கே உள்ளன. பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 34% வீதமானோர் பொருளாதாரத்தில் பங்களிக்கின்றனர். இந்தத் தொகையை 50% ஆக உயர்த்த அரசு இலக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். . தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான ஒரே வழி பெண்களின் உழைப்புப் பங்கேற்புதான். மொத்த தொழிலாளர் பங்களிப்பு 55% வீதம் என்பதோடு, இதனை 75% ஆகக் கொண்டு வருவது மிகவும் முக்கியமாகும். பொருளாதார வளர்ச்சிக்கு முதலீட்டு விநியோகத்தை விரிவுபடுத்துவது முக்கியமாகும். . இலங்கையில் முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32% ஆகும். அரசின் முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் ஆகும். மீதமானவை தனியார் முதலீடுகளாகும். இந்த அளவு எமக்குப் போதுமானதாக இல்லை. அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் கடன் பெறுவதன் மூலம் நாம் நெருக்கடிக்குள் சென்றிருக்கின்றோம்.


சட்டமூலத்தை எவரும் எதிர்ப்பதற்கான வாய்ப்பில்லை

பேராசிரியர் சிறிமல் அபேரத்ன – கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவு

பொருளாதார பரிமாற்ற சட்டத்தின் மூலம் குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதாரப் பயணம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மைக்கு பொருந்தும் கொள்கைகள் தேவையாகும். இவை மக்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும். இப்போது, ​​பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டது, நாம் வழமைக்குத் திரும்பி விட்டோம் ஆனால் நாம் அடுத்த பொருளாதார நெருக்கடியைத் தடுத்துவிட்டோம் என்று அது பொருள்படாது. அதேபோன்று இன்னும் பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அடுத்த 25 ஆண்டுகளில் வளமிக்க நாடாக மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பான அடிப்படை பயணப் பாதை பொருளாதார பரிமாற்ற சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள அடிப்படை கூறுகள்: அதாவது, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மேம்பாடு, முதலீடுகள், வறுமை போன்ற விடயங்கள் அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தினை எதிர்ப்பதற்கான வாய்ப்புக்கள் எவருக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். இதற்குக் காரணம் இன்றைய அரசியல் சூழலினுள் பொருளாதாரப் பாதையை சரியாகப் பார்ப்பதே தவிர பல்வேறு அரசியல் கருத்துகளுக்குப் பின்னால் ஓடாமல் இருப்பதுதான். இது ஒரு பெரிய போக்காகும். இது போன்ற இணக்கங்கள் சர்வதேச சமூகத்தால் சாதகமான முறையில் பார்க்கப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டிற்கு வருவதில்லை. எமது நாடு வணிக ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளது. அயல் நாடுகளிடையே எமது நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு விடயங்களில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆனால், இத்தகைய முதலீடுகளில் நம்பிக்கை இல்லாததற்குக் காரணம், நாம் மிகவும் பிளவுபட்டிருக்கிறோம். இவ்வாறான விடயங்களில் பொது இணக்கப்பாடு கிடைப்பது என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது, அது பொருளாதாரத்தை வெல்வதற்கு மிகவும் முக்கியம் என்பதனாலாகும். இது மிகவும் நல்ல போக்காகும், அந்த போக்கின் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளினுள் மிகச் சிறந்த இடத்திற்கு செல்ல முடியும்.

 

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division