சர்வதேச அரசியல் களம் ஒரு புதிய திசையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கின்றது. இது என்றும் இல்லாதவாறு மேற்காசிய அரசியலில் பதற்றத்தையும் போரையும் அதற்கான உத்திகளையும் தீவிரப்படுத்தி வருகின்றது. குறிப்பாக அண்மையில் ஹமாஸ் அமைப்பினுடைய அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது ஒரு பாரிய நெருக்கடியை மேற்காசிய அரசியலில் ஏற்படுத்தியிருக்கின்றது. இத்தகைய நெருக்கடியில் இருந்து விடுபட முடியாத பகைமையின் எல்லைக்கு அரபுலகம் சென்றுள்ளது. இதன்போது ஏற்படக்கூடிய விளைவுகள் அனைத்தும் மேற்காசியா மட்டுமின்றி உலகளாவிய அரசுகளின் ஏகாதிபத்திய சக்திகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் மேற்காசியாவில் ஏற்பட்டிருக்கின்ற பழிவாங்கும் அரசியல் தொடர்பில் தெளிவையும் புரிதலையும் ஏற்படுத்த முயல்கிறது.
1962 இல் பிறந்த இஸ்மாயில் ஹனியே அராபிய மொழியியலில் காஸாவில் அமைந்துள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆரம்ப காலப்பகுதி மனித உரிமைகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அதிகம் முதன்மைப்படுத்துவதாக விளங்கியது. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். அதன் விளைவாக 1987ஆம் ஆண்டு இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் அமைப்பின் படைப்பிரிவில் இணைந்து கொள்கின்றார். 1993ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போரில் இஸ்மாயில் ஹனியே பாரிய பங்காற்றியதோடு அவருடைய தலைமைத்துவம் ஹமாஸ் அமைப்பில் முதன்மை பெறத் தொடங்கியது. அன்றிலிருந்து அவர் மரணிக்கும் வரை தனித்துவமான தலைவராகவும் அதேநேரத்தில் ஹமாஸ் அமைப்பினுடைய கொள்கை வகுப்பாளராகவும் போரியல் உத்திகளை வகுப்பவராகவும் காணப்பட்டார்.
இவர் மீதான படுகொலை ஈரானிய தலைநகரான தெஹ்ரானில் அவரது வாசஸ்தலத்தில் வைத்து நடைபெற்றுள்ளது என்பது அதிர்ச்சியான செய்தியாக ஈரானியர்களுக்கு மட்டுமல்ல அராபியர்களுக்கும் உள்ளது. இஸ்ரேலிய இராணுவமும் அதனுடைய புலனாய்வுப் பிரிவும் திட்டமிட்டு இப்படுகொலையை மேற்கொண்டதாக ஈரானிய தரப்பும் அரபுலகமும் குற்றம் சாட்டுகிறது. இத்தகைய படுகொலை கடந்த மே மாதம் (19திகதி) ஈரானிய ஜனாதிபதி இஸ்மாயில் ரைசியின் படுகொலைக்குப் பின்னர் ஈரானை அதிகம் பதற்றத்துக்குள்ளாக்கி இருக்கின்றது. ஈரானில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மசூத் பெசெஷ்கியன் இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டு, வலிமையான பதில் தாக்குதலுக்கும், பழிவாங்கலுக்கும் வழிவகுத்துள்ளது என்றார். அதனை வெளிப்படுத்தும் விதத்திலேயே ஈரானிய ஜம்கறாம் பள்ளிவாசலில்; பறக்க விடப்பட்டிருக்கும் சிகப்பு வர்ணத்தாலான கொடி உணர்த்துகின்றது. ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி ஹனியேவின் படுகொலைக்கு பழிவாங்க வேண்டியது தெஹ்ரானின் கடமை என்றுரைத்துள்ளார்.
இத்தகைய படுகொலை மேற்காசிய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் ஒரு மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்துமா என்ற கேள்வியை உருவாக்கி இருக்கின்றது. பதிலைத் தேட வேண்டிய பொறுப்பு தவிர்க்க முடியாது அதன் அடிப்படையில்.
முதலாவது, மேற்காசியாவில் எழுந்திருக்கும் போர் பதற்றம் மூன்றாவது உலகப்போருக்கான அடிப்படையை ஏற்படுத்துமா என்பது அதிகம் விவாதிக்கப்படுகிறது. அத்தகைய சூழலை நோக்கி ஏகாதிபத்தியங்கள் செயற்படாத போதும் அல்லது செயல்படுவதற்கான அனுமதியை வழங்காத போதும் ஈரானின் அணுகுமுறை இஸ்ரேல் மீது ஹமாஸ் மற்றும் ஈரானின் நகர்வுகள் போரை உலகப்போராக மாறுவதற்கான சூழமைவை அல்லது கொதிநிலையை கொண்டிருக்கின்றது என்று அளவீடு செய்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக யுத்தத்தை சமரசம் செய்ய முயற்சித்தாலும் அந்த சமரசத்தில் இன மோதல் சார்ந்த எழுந்திருக்கின்ற பாரிய வன்முறைக்குரிய குரோத உணர்வுகள் பரஸ்பரம் பலஸ்தீனர்களையும் ஈரானியர்களையும் யூதர்கள் மீது ஏவிவிடுவதற்கும் யூதர்கள் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இஸ்மாயில் ஹனியே மீதான படுகொலை அடிப்படையாக அமைய வாய்ப்புள்ளது. ஹனியே மட்டுமன்றி ஹிஸ்புல்லா அமைப்பையும் அதன் இராணுவ தளபதிகளையும் இலக்கு வைத்து மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது இஸ்ரேல் மீது ஹமாஸ் ஹிஸ்புல்லா ஈரான் அவர்களோடு இணைந்து செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களின் படைப்பிரிவு செயற்பட முனைகின்ற போது உலகளாவிய போருக்கான முனைப்புகளை இது ஏற்படுத்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.
இரண்டாவது இரு தரப்புக்குமான போரானது நீடிப்பதற்கும் நிலையான சூழலை முதன்மைப்படுத்துவதற்கும் அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு ஒரு நீண்ட நிலையான போர் முகம் மேற்காசியாவில் தீவிரமடையும் போது, அதனை ஆதாரமாகக் கொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற தரப்புகளாக ஏகாதிபத்திய அரசுகள் காணப்படுகின்றன. இதன் விளைவு உலகப்போரை நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும், அதற்கான காரணம் ரஷ்யாவும் சீனாவும் மறைமுகமாக ஆயுத உதவிகளையும் போரியல் உத்திகளையும் வழங்குகின்ற அதேவேளை, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேல் பக்கம் செயல்படுகின்ற போது, இரு ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையில் மோதலுக்கான முன் ஆயத்தங்கள் மேற்காசிய களத்தில் உருவாகத் தொடங்கி இருக்கின்றது.
இது எதிர்காலத்தில் நீடித்து நிலைத்திருக்குமாயின் படிப்படியாக அரசுகளையும் ஏகாதிபத்தியங்களையும் மோத வைப்பதற்கான ஒத்திகை உருவாக்கும். அத்தகைய சூழல் ஏற்படுகின்ற போது, பாரிய போருக்கான வாய்ப்பை மேற்காசியா வழங்கும் என்ற சந்தேகம் வலுவானதாக மாறி வருகின்றது.
மூன்றாவது, இரு தரப்புக்களின் நெருக்கடிமிக்க சூழலையும் போரியல் தலைமைகளையும் தலைவர்களையும் இலக்குகளையும் முதன்மைப்படுத்துகின்ற போராக அது அமைகின்ற போது இராணுவ ரீதியில் தொழில்நுட்பம் சார்ந்த போராக மாறுவதற்கான வாய்ப்பை தனக்குள்ளே அது கொண்டிருக்கின்றது குறிப்பாக தொழில்நுட்ப ஆயுதங்களினுடைய பிரயோகம், இந்தப் போரின் ஊடாக மேலெழத் தொடங்கியிருப்பது. இந்த போரின் முக்கியமான தாக்குதல்களும் அதன் விளைவுகளும் தொழில்நுட்ப போருடன் கூடிய முனைப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது மேலும் தீவிரமடைந்து தொழில்நுட்பம் சார்ந்திருக்கக் கூடிய ஆயுத பலத்தை கொண்டிருக்கும். தேசங்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்த போரின் இருப்பு செயற்படக்கூடிய வாய்ப்பை பிரதிபலிக்கின்றது.
இது படிப்படியாக போரின் விளைவுகள் தொழில்நுட்ப ரீதியான ஆயுதங்களையும் இயந்திர மயப்படுத்தப்பட்ட உத்திகளை அதிகம் பிரயோகப்படுத்துகின்ற போராக மாறுகின்ற சூழல் என்பது அணுவாயுத பிரயோகத்திற்கான சூழலாகவே கருதப்படுகின்றது. அத்தகைய நிலை ஏற்படுகின்ற போது உலகம் மீண்டும் ஒரு வரலாற்று துயரை அனுபவிக்க வேண்டிய விளைவை தரக்கூடியதாக அமையும்.
நான்காவது உலகளாவிய ரீதியில் எழுந்திருக்கின்ற ஏகாதிபத்திய போட்டி, போர் பதற்றத்தை தனக்கே உரித்துடைய அரசியல் இலாபங்களோடு நகர்த்த ஆரம்பித்துள்ளது.அவ்வாறு நகர்த்த முயலுகின்ற போது அணு ஆயுதம் பிரயோகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குள், ஈரான் அல்லது இஸ்ரேல் அல்லது அவற்றுக்கு பின்னால் இருக்கின்ற ஒரு நாடு முனைகின்ற வாய்ப்பு நிலவுவதாகவே தெரிகின்றது. அடிப்படையில் ஏகாதிபத்தியங்கள் வர்த்தக நலனையும் பொருளாதார வாய்ப்புகளையும் போரியல் உத்திகளையும் சமரசம் செய்ய முயன்ற போதும் அடிப்படையில் அதற்கான வாய்ப்பை மேற்காசிய அரசியல், நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றது. அதிலிருந்து மீண்டு கொள்வதற்கும், அதனை எதிர்கொள்வதற்கும் போர் என்பது ஒரு தீவிரத் தன்மையை பெறவேண்டிய நிலைக்குள் தள் ளப்பட்டிருக்கிறது. மேற்குதேச ஏகாதிபத்தியத்துக்கும் கீழைத்தேச ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில் ஏற்பட இருக்கின்ற போரானது, அல்லது போட்டியானது, போரை மேலும் தீவிரபடுத்த வழி வகுத்துள்ளது. இத்தகைய சூழலுக்குள் அவதானிக்கப்பட வேண்டிய முக்கியமான யதார்த்தம் சர்வதேச அரசியல் அணுகுமுறையிலும், ஒழுங்கிலும் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்ற முனைப்போடு மேற்குலக ஏகாதிபத்தியம் பயணிக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் மேற்குலக ஏகாதிபத்தியத்தோடு இணைந்து பயணிக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அபாயமான ஆபத்துமிக்க உலக தரிசனத்தை ஏனைய கீழைத்தேச ஏகாதிபத்தியங்களும் ஏனைய அரசுகளும், எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இது படிப்படியாக ஒரு அணு ஆயுதப் போர் தயார் படுத்துவதற்கு முனைப்பான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடகொரியா தனது அணுவாயுதத்தை அல்லது அதற்கான தொழில் நுட்பத்தை ஈரானுக்கு வழங்குகின்ற சூழல் என்பது கீழத்திசை ஏகாதிபத்தியங்களில் போருக்கான முனைப்பாகவே தெரிக்கின்றது. இதனை கருத்தில் கொண்டே அணுவாயுத போருக்கான சூழல் அல்லது மீண்டும் ஒரு உலகப் போருக்கான சூழல் தயாராவதாக அளவிடு செய்து கொள்ள முடியும்.
ஐந்தாவது ஈரான் அணுவாயுதத்தை தயார் செய்கின்ற முனைப்போடு பயணிப்பதாகவே மேற்குலக நாடுகளும் அவற்றினுடைய புலனாய்வுத்துறைகளும் வெளிப்படுத்தி வருகின்றன. இத்தகைய வலிமையான சூழல் பலமடையுமாக இருந்தால் மேற்காசியா அணுவாயுதத்தின் களமாக மாறுவதற்கான தன்மையினை பெற்றுவிடும். ஏற்கனவே அணுவாயுத திறனோடு இஸ்ரேல் விளங்குவதனால் ஈரானுடைய அணுவாயுத உற்பத்தியை தடுப்பதற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. காரணம் ஈரானின் அணு ஆயுதம் என்பது அரபு உலகத்தின் அணுவாயுதமாக மாறும் என்ற அச்சம் இஸ்ரேலிடம் காணப்படுகின்றது. இதனால் ஈரான் அணுவாயுத பரிசோதனையில் வெற்றி பெறுமாக இருந்தால் மேற்காசியா ஒரு பதற்றமான சூழலை மட்டுமின்றி மீண்டும் உலகப் போருக்கான சூழலை தருவிக்கக் கூடியதாக மாறும். அதற்கான ஒரு களத்தை நோக்கியதாக மேற்காசிய அரசியல் விளங்குகின்றது. அதனையே சர்வதேச அரசியல் வலுக்கோட்பாட்டாளர்களும் யதார்த்தவாதத்தை முதன்மைப்படுத்தும் அரசுகளும் மேற்கொள்ள முனைகின்றன. அதனால் மீண்டும் உலக போரென்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.