சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் மதீனா கவர்னர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல் அஸீஸுக்கு புனித மதீனா நகரில் நடுவதற்காக இலங்கையின் ‘போகன்விளா’ செடிகளை அன்பளிப்புச் செய்தார். இதன் மூலம் தூதுவர் சவுதி அரேபியாவின் 2030 இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டு முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானால் முன்னெடுக்கப்பட்டுள்ள சவுதி அரேபியாவின் பசுமை சார் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான இலங்கையின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் மதீனா மாநகர சபை “Here It Was Planted” என்ற மகுடம் தாங்கி ஒரு மர நடுகை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. அதன்போது குறித்த பிராந்தியத்தின் காலநிலை மற்றும் சுற்றாடலுக்கு பொருத்தமான செடியாக ‘போகன்விளா’ தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவின் பசுமை சார் முன்னெடுப்பானது (SGI) காலநிலை மாற்றம், பச்சை வீட்டுத் தாக்கத்தை குறைத்தல் மற்றும் தூய்மையான வலுப் பயன்பாட்டை அதிகரித்தல் போன்றவற்றை மையப்படுத்தி 10 பில்லியன் மரங்களை நாடு பூராகவும் வளர்ப்பதை நோக்காகக் கொண்டிருக்கின்றது. இந்த அன்பளிப்பின் மூலம் உயிர்ப் பல்வகைமை கொண்ட ஒரு நாடு என்ற வகையில் இலங்கையின் பூரண ஆதரவை சவுதி அரேபியாவின் பசுமை சார் முன்னெடுப்புகளுக்கு வழங்க முடியும் என இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக்காட்டினார்.
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை புனித மதீனா முனவ்வரா நகருக்கு மேற்கொண்ட தூதுவர் மதீனா மாகாண ஆளுநருடனான சிநேகபூர்வமான சந்திப்பொன்றையும் மேற்கொண்டார். மேலும் இச்சந்திப்பானது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவுகளைத் தொட்டுக்காட்டிய தூதுவர் அமீர் அஜ்வத் இரு நாடுகளுக்குமிடையிலான நவீன இராஜதந்திர உறவுகள் 1974 ஆம் ஆண்டு முதல் கட்டியெழுப்பப்பட்ட போதிலும் இரு நாடுகளுக்குமிடையிலான புராதன கால இராஜதந்திர உறவுகள் கி.பி. 7ம் நூற்றாண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டது என்பதையும் நினைவு படுத்தினார். கி.பி. 7ம் நூற்றாண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த மூன்றாம் அகபோதி மன்னன் (கி.பி. 623 – 640) இலங்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களின் வேண்டுகோளின் பேரில் மதீனாவை நோக்கி முஹம்மத் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இஸ்லாம் மதத்தை அறிந்து கொள்வதற்காக ஒரு தூதுவரை அனுப்பி வைத்த வரலாற்றை மதீனா கவர்னர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல் அஸீஸுக்கு எடுத்துரைத்தார். அக்கால அரேபியர்களால் இலங்கை ‘செரண்டிப்’ என அழைக்கப்பட்டது. இந்த வராற்றுப் பின்னணி கொண்ட மதீனா நகருக்கான தனது விஜயம் உணர்வுபூர்வமான பெறுமானங்களைக் கொண்டிருப்பதாகவும் தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக் காட்டினார்.
இலங்கை தூதரகம்
ரியாத்
24.07.2024