லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி நான்காவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது. அதாவது ஐந்து முறை நடந்த தொடரில் நான்கு தடவைகள் கிண்ணத்தை வெல்வதென்பது சாதாரணமானதல்ல. அணியின் கட்டமைப்பு, நிர்வாகம் எல்லா தொடர்ந்து சரியாக இயங்கினாலேயே இது சாத்தியமாகும்.
கடந்த ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக், சுருக்கமாக எல்.பி.எல். தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றன. இந்திய பிரீமியர் லீக் பாணியில் உலகெங்கும் உருவான எச்சசொச்சங்களில் எல்.பி.எல்லும் ஒன்று.
இந்திய கிரிக்கெட்டுக்கு பொருளாதாரம் மற்றும் திறமை அடிப்படையில் ஐ.பி.எல். பெரும் உந்துதலாக இருந்து வருகிறது. அதேபோக்கு எல்.பி.எல். தொடரிலும் இருந்தாலேயே அதன் வெற்றி முழுமை பெறும். கடந்த எல்.பி.எல். தொடர்களில் அவ்வாறான போக்கை காண முடியவில்லை. தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிகள், களியாட்டங்களைத் தாண்டி திறமைகளை தேடுவதில் மற்றும் இருக்கும் திறமைகளை மேம்படுத்துவதில் இந்த டி20 லீக் கிரிக்கெட் கடந்த காலத்தில் பெரிதாக உதவியதாகத் தெரியவில்லை.
என்றாலும் அதனை இம்முறையும் பொருத்திப் பார்ப்பது முன்கூட்டிய அனுமானமாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடருக்கான இலங்கை அணித் தேர்வில் இந்த எல்.பி.எல். தொடர் பெரிதும் தாக்கம் செலுத்தி இருக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த தினேஷ் சந்திமால், அதேபோன்று அதிரடி வீரராக இருந்தாலும் கடந்த உலகக் கிண்ணத்தில் கவனிக்கப்படாத குசல் ஜனித் பெரேரா, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ அதேபோன்று புதுமுக வீரரான 21 வயது சகலதுறை ஆட்டக்காரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவர்கள் எல்.பி.எல்.இல் சோபித்ததாகும்.
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே தம்புள்ள தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஆட்டநிர்ணய சர்ச்சையில் சிக்கியது, பின்னர் அந்த அணியின் உரிமை மாற்றப்பட்டது என்ற பெரும் குழப்பங்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
என்றாலும் இம்முறை தொடரில் கடந்த முறைகளை விட மைதானத்தில் சில முன்னேற்றங்களை காண முடிந்தது.
கடந்த முறைகளை விடவும் இம்முறை தொடரில் ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட ஓட்டங்கள் முதல் முறையாக 7000ஐ கடந்தது. அதாவது மொத்தமாக 7796 ஓட்டங்கள் பெறப்பட்டதோடு அது 2020 தொடரில் பெறப்பட்ட 6739 ஓட்டங்கள் என்ற அதிகபட்ச சாதனையை முறியடித்தது.
அதேபோன்று அதிக ஓட்ட வேகத்தை பதிவு செய்த தொடராகவும் இம்முறை உள்ளது. அது 146.26 ஓட்ட வேகம் என்பதோடு இதற்கு முன்னர் 2020 தொடரில் பெறப்பட்ட 136.42 ஓட்ட வேகமே அதிகமாக இருந்தது.
கடந்த நான்கு தொடர்களையும் பார்த்தால் ஒவ்வொரு தொடர்களிலும் தலா ஒரு சதம் வீதமே பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் இம்முறை மொத்தம் 6 சதங்கள் பதிவாகின. லங்கா பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகள் பெறப்பட்ட தொடராகவும் இம்முறை தொடரை குறிப்பிடலாம்.
அதாவது 2024 எல்.பி.எல். தொடரில் மொத்தமாக 722 பௌண்டரிகள் மற்றும் 372 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. முன்னதாக 2020 தொடரில் அதிகபட்சமாக 672 பௌண்டரிகள் மற்றும் 276 சிக்ஸர்கள் பெறப்பட்டதே சாதனையாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணமாக ஆடுகளங்களை குறிப்பிடலாம். அவை துடுப்பாட்டத்திற்கு உதவியதோடு பந்துவீச்சாளர்களையும் கைவிடவில்லை. போட்டி நடைபெற்ற கடந்த 21 நாட்களில் கொழும்பு மற்றும் பல்லேகலவுக்கு அவ்வப்போது மழை குறுக்கிட்டபோதும் எந்தப் போட்டியும் பாதிக்கப்படாது 24 ஆட்டங்களும் முழுமையாக நடைபெற்றமை தொடரின் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது.
கடந்த எல்.பி.எல். தொடர்களை பார்க்கும்போது பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச தரத்தில் பெரிதாக சோபிக்காதவர்களாகவே இருந்தனர். என்றாலும் இம்முறை அந்தக் குறை கணிசமான அளவில் நீங்கி இருந்தது. உலகின் பலம்மிக்க அணிகளின் வீரர்கள் கூட இம்முறை பங்கேற்றிருந்தார்கள்.
கடந்த தொடர்களில் ஐ.சி.சி. தரவரிசையில் இலங்கைக்கு கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகமாக பங்கேற்றிருந்தனர். ஆனால் இம்முறை இலங்கைக்கு முன்னால் இருக்கும் முன்னணி அணிகளின் வீரர்கள் கூட கலந்துகொண்டனர்.
அதாவது இம்முறை தொடரில் மொத்தமாக பங்கேற்ற 30 வெளிநாட்டு வீரர்களும் ஒன்பது நாடுகளில் இருந்து வந்திருந்தனர். இதில் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் நாடுகளின் தலா 4 வீரர்கள் அவுஸ்திரேலியாவின் இரு வீரர்கள் இங்கிலாந்தின் ஒருவரும் அடங்குகின்றனர். எனினும் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானின் 6 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
அதாவது இலங்கையை விட முன்னிலையில் இருக்கும் அணிகளின் 18 வீரர்கள் மற்றும் இம்முறை டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற 18 வெளிநாட்டு வீரர்கள் இம்முறை தொடரில் பங்கேற்றிருந்தனர். சர்வதேச மட்டத்தில் போட்டிகள் குறைவாக இருந்ததும் முன்னணி வீரர்கைள எல்.பி.எல். ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது என்று குறிப்பிடலாம்.
எல்.பி.எல். வரலாற்றில் வீரர் ஒருவர் இரண்டாவது முறையான மொத்தமாக 400 ஓட்ட இலக்கை பெறுவதற்கு இந்த முறை முடிந்தது. டி20 செய்பர்ட் தொடரில் அதிகபட்ச ஓட்டங்களால் 400 ஓட்டங்களை பெற்றார். எனினும் 2020 தொடரில் தனுஷ்க குணதிலக்க மொத்தமாக 476 ஓட்டங்களை பெற்றதே தொடர்ந்து சாதனையாக உள்ளது.
எனினும் இந்தத் தொடரில் மொத்தம் ஏழு வீரர்கள் 300க்கும் அதிகமான ஓட்டங்களை சேர்த்தனர். இவர்களில் நால்வர் வெளிநாட்டு வீரர்கள் என்பதோடு இலங்கையின் அவிஷ்க பெர்னாண்டோ (374), பத்தும் நிசங்க (333) மற்றும் குசல் மெண்டிஸ் (329) ஆகியோர் இதில் அடங்குவர்.
எல்.பி.எல். வரலாற்றில் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவிச்சாளர்களின் முதல் பத்து இடங்களில் இம்முறை தொடரில் மூன்று வீரர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். 2024 எல்.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ஷதாப் கான் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மதீஷ பதிரண மற்றும் வனிந்து ஹசரங்க தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனினும் 2023 தொடரில் வனிந்து ஹசரங்க மொத்தமாகப் பெற்ற 19 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடிக்க முடியாமல்போனது.
அதாவது இம்முறை தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுடன் இலங்கை வீரர்கள் சரிக்கு சமமாக திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
குறிப்பாக வீரர்கள் ஏலத்தில் போதுமான விலைக்கு வாங்கப்படாத பத்தும் நிசங்க மற்றும் குசல் பெரேரா தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்களில் இடம்பெற்றனர். குசல் மெண்டிஸ் தொடரின் ஆரம்பத்தில் சோபிக்கத் தவறியபோதும் கடைசிப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு ஒரு சதம் மற்றும் அரைச்சதத்தைப் பெற்று சோபித்தார். பானுக்க ராஜபக்ஷவும் கடைசி போட்டிகளில் தமது வழக்கமான திறமைக்குத் திருப்பினார்.
இளம் வீரர்களை கண்டறிவது மற்றும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இம்முறை தொடரில் 23 வயதுக்கு உட்பட்ட இலங்கை வீரர் ஒருவர் பதினொரு பேர் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டிருந்தது.
இதில் அதிக அவதானம் பெற்ற வீரராக சமிந்து விக்ரமசிங்கவை குறிப்பிடலாம். அதிரடி வீரராக தம்மால் செயற்பட முடியும் என்றும் சகலதுறை வீரராக சோபிக்க முடியும் என்றும் இவர் நிரூபித்திருக்கிறார். இதனாலேயே அவர் தொடரில் வளர்ந்து வரும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு கடைசியில் இலங்கை டி20 அணிக்கும் அழைக்கப்பட்டார். தம்புள்ள அணிக்காக ஆடிய அவர் 8 போட்டிகளில் 186 ஓட்டங்களை பெற்றதோடு இரண்டு அரைச்சதங்களுடன் 62.00 ஓட்ட சராசரியை பதிவு செய்திருந்தார்.
எனினும் இந்த விதியை கச்சிதமாக பயன்படுத்தி 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களை கொண்ட அதிகம் பயன்பெற்ற அணியாக கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை குறிப்பிடலாம். அவர்கள் 23 வயதுக்கு உட்பட்ட மதீஷ பதிரண மற்றும் துனித் வெள்ளாலகேவை வாங்கியதன் மூலம் பயன்பெற்றனர். இருவரும் தொடரில் சிறப்பாக செயற்பட்டனர்.
ஜப்னா அணி இளம் வீரர் விஜயகாந்த வியாஸ்காந்தை தேர்வு செய்திருந்ததோடு அவர் கடைசி இரு போட்டிகளிலும் திறமைக்கு திரும்பி இருந்தார்.
23 வயதுக்கு உட்பட்ட 14 வீரர்கள் இந்தத் தொடர் முழுவதிலும் ஆடியிருந்தனர். கண்டி அணி தவிர்த்து மற்ற நான்கு அணிகளும் இந்த இளம் வீரர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்கி இருந்தன. கண்டி அணி 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களை முறையாக பயன்படுத்தவில்லை என்பதோடு 11 வீரர்களை நிரப்பும் வகையிலேயே அவர்களை தேர்வு செய்தது.
குறிப்பாக கண்டி அணியில் இடம்பெற்றிருந்த பவன் ரத்னாயக்க, தேசிய சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றவராவார். ஆனால் கண்டி அணியில் அவருக்கு நான்கு போட்டிகளிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அதுவும் சரியான இடத்தில் அவர் ஆடுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அதேபோன்று உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியபோதும் எல்.பி.எல்.இல் போதுமான வாய்ப்புகளை பெறதா பல வீரர்களை குறிப்பிடலாம். லசித் க்ரூஸ்புள்ளே (கோல்), நிஷான் மதுஷ்க (ஜப்னா) நிபுன் தனஞ்சய (கொலம்போ), மொஹமட் ஷிராஸ் (கோல்) போன்ற வீரர்கள் முக்கியமானவர்கள்.
அதாவது, எல்.பி.எல். தொடரில் மேலும் ஒரு அணியை சேர்ப்பதற்கு போதுமான வீரர்கள் இன்னும் வெளியே இருக்கிறார்கள் என்றே குறிப்பிட முடியும். அதுவே வீரர்களின் திறமையை அதிகரிப்பதற்கு இன்னும் உதவியாக இருக்கும். அப்போதுதான் எல்.பி.எல். இன் நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதி இலக்கு சர்வதேச மட்டத்தில் இலங்கை வீரர்களின் திறமையை அதிகரிப்பதாகத் தான் இருக்க வேண்டும். அது வெற்றி தருமா என்பதை எதிர்காலத்திலேயே கணிக்க முடியுமாக இருக்கும்.
எஸ்.பிர்தெளஸ்