ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு மிகவும் குறைந்தளவு நாட்களே காணப்படும் நிலையில், சில அரசியல் கட்சிகள், குறிப்பாக பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றன.
பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியாக இருந்தாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் விடயத்தில் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் இருப்பது பகிரங்கமாகியுள்ளது.
இந்த நிலையில் இவ்வார ஆரம்பத்தில் பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அவர்களின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உறுப்பினர்கள் தமக்கிடையில் காணப்படும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்திருந்தனர். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர போன்றவர்கள் தமது நிலைப்பாட்டை இக்கூட்டத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், அன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியிருந்தார். அதேபோன்றதொரு நிலைப்பாட்டையே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.
மறுபக்கத்தில், எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன நாட்டின் பல பகுதிகளில் ஆர்வத்துடன் பேரணிகளை நடத்தி, கணிசமான மக்களை ஈர்ப்பதற்கான பிரசாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு அதிகம் என இரு கட்சிகளும் கருதுகின்றன. ஊழலை ஒழித்தல் மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்தல் போன்ற பொதுவான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே அவர்களின் பிரசாரங்கள் அமைந்துள்ளன. பொருளாதாரக் கொள்கையில் அவை முதன்மையாக வேறுபடுகின்றன.
இந்த இரு கட்சிகளினதும் பொருளாதார அணுகுமுறையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைப்பது குறித்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இருந்தபோதும், ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அறிவிக்கப்படும் பட்சத்தில் இக்கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்களேயாவர். அது மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் பல வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இயங்கியவர்கள் என்பதால், மீண்டும் தாய்க்கட்சியுடன் இணைவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகின்றது. தமது பழைய உறுப்பினர்கள் பலர் மீண்டும் தம்முடன் இணைந்து கொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களை முன்னெடுக்கும் அதேநேரம், கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி பக்கம் சேர்ந்துவிடாமல் இருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டிய நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தல்களில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருந்த அக்கட்சி அடிமட்டத்திலிருந்து கட்சியைக் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது. புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகக் களமிறக்கி அதற்கான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொதுவேட்பாளராக நிறுத்தி அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரைக் கொண்ட பாரியதொரு கூட்டணியை உருவாக்கி தேர்தலில் குதிப்பதே அவர்களின் திட்டமாக உள்ளது. இதற்கு பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அதிருப்தியாளர்கள், வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மை அரசியல் தலைவர்கள் எனப் பலரினதும் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான பிரயத்தனங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கட்சியிலிருந்து எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், ஜக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு இந்தச் சவாலை ஏற்று, நாட்டை மீட்டெடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய பங்காற்றியுள்ளார். எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கும் காணப்பட்ட நீண்ட வரிசைகள் யாவும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான சூழல் தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது.
இதனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏன் இன்னுமொரு பதவிக்காலத்துக்கான ஆணையை வழங்கக் கூடாது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றமையையும் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பலமுனைப் போட்டி கொண்டதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கிடையில்கடுமையான போட்டி நிலவுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.
இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படாதபோதும், செப்டெம்பர் மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுகின்றன. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் தமது பிரசாரங்களைத் தீவிரப்படுத்தும்.
தென்னிலங்கை அரசியல் நிைலவரம் இவ்வாறானதாக இருக்ைகயில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் தமது தெளிவான நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. மதில்மேல் பூனை போல அவர்கள் அமைதிகாத்து வருகின்றனர்.
மக்களின் அலை எந்தப் பக்கம் வீசுகின்றதோ அந்தப் பக்கம் தமது ஆதரவை வழங்குவது என்ற அவர்களின் நீண்டகால உத்தி இம்முறையும் பயன்படுத்தப்படலாம் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது. இருந்தபோதும், தேர்தல் திகதி குறித்த அறிவிப்புடன் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும்போது ஒவ்வொருவனரினதும் நிலைப்பாடு பகிரங்கமாகும்.
பி.ஹர்ஷன்