போதையற்ற பிரதேசமாக இருந்த ஹோமாகம தேர்தல் தொகுதிக்கு கெட்டகாலம் ஆரம்பித்துள்ளது. 13 கிலோமீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘தர்ம ரஷ்மி’, பொசன் நிகழ்வின் சூடு தணிவதற்கு முன்னரே அதற்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது இலங்கை முழுவதற்குமான லேக்ஹவுஸ் பொசன் ஒளி விளக்கு கூடுகள் போட்டி இடம்பெற்ற அதே மைதானத்தில் முதற்தடவையாக ஹோமாகம தொகுதியில் வெளிநாட்டு மதுபான சாலை ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது பிடிபன சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவுகன புத்தர் சிலைக்கு சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் தர்ம அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரேயொரு பல்கலைக்கழகமாக விளங்கும் பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் அவ்விடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ளது. அது மாத்திரமன்றி, இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் உழைப்பு மற்றும் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவ விகாரை அல்லது பனாகொட போதிராஜாராம விகாரையும் அதற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இன்று, பிடிபன கிராமம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு புதிதாக எழுதப்பட்ட அத்தியாயத்தின் தாயகமாக உள்ளது. ஹோமாகம அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன் ஸ்தாபகராக உள்ளார்.
நாட்டில் எந்த ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இவ்வாறான அபிவிருத்தி இடம்பெறவில்லை.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு தர்ம அறிவை வழங்கும் பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம், ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் வழிபடும் பனாகொட போதிராஜாராம விகாரை, தெற்காசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஹோமாகம மஹிந்த ராஜபக் ஷ கல்லூரி, நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 13000 மாணவர்கள் உயர் கல்வி கற்கும் NSBM பசுமை பல்கலைக்கழகம், 4000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடம், அளவீட்டு மற்றும் தரநிலைகள் பணியகம், டெலிகாம் தரவுக் களஞ்சியம், முழு நாட்டு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் புத்தகக் களஞ்சியம் ஆகிய இவையனைத்தும் இணைந்து ஒரு கிராமம் நாடாக மாறிய பிடிபனவாகும்.
அங்கு பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி பயிலும் இளைஞர் யுவதிகளைக் கணக்கிட்டால் 35 ஆயிரத்துக்கும் மேலாகும். அவர்களில் பெரும்பாலானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பிரதேசங்களில் இருந்து பிடிபனைக்கு வந்து தங்கியிருப்பவர்களாகும்.
நாம் அந்த வெளிநாட்டு மதுபான சாலைக்குச் சென்று அங்கிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “இந்த பாரினை நடத்துபவரைக் கொஞ்சம் சந்திக்க முடியுமா?”
“இல்லை, இல்லை. அது முடியாது”
“எமக்கு தொலைபேசி இலக்கம் கிடைக்குமா?”
“எமக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தரமுடியாது. இங்கு போன் இல்லை” இன்று மாலை இதற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று நடக்க உள்ளது. அதனால் ஒருவரும் அங்கிருக்கவில்லை.
நாங்கள் செய்த அடுத்த விடயம், இந்த பிடிபனவில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு அருகில் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்தியதாகும். இந்த மதுபான சாலைக்கு முன்னால் சிறிதுதூரம் ஹோமாகம நோக்கிச் சென்ற போது அங்கு ஹோமாகம டிப்போ உள்ளது. கொடகம திசையில் உள்ள சந்திப்பில் இராணுவ விகாரை உள்ளது. பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் அருகில் உள்ளது. அதற்குச் சற்று தூரத்தில் பிடிபன உத்தரராம விகாரரை உள்ளது.
இதேவேளை, நாம் பிடிபன வெளிநாட்டு மதுபான சாலை தொடர்பில் விடயங்களை அறிந்து கொள்ளச் சென்ற அதே தினத்தின் மாலையில் அதற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கியது தற்போது ஹோமாகம மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி வரும் கலாநிதி பந்துல குணவர்தனவாகும்.
ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவித்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் மகா சங்கத்தினர் ஹோமாகம பிடிபன அவுகன சிலைக்கு அருகில் அன்றைய தினம் மாலை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் மக்களிடம் அமைச்சர் உரையாற்றினார்.
நீண்ட காலமாக ஹோமாகமவை அண்மித்த பகுதியில் வெளி நாட்டு மதுபானசாலைகளை ஆரம்பிக்க எவரும் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் ஹோமாகம பிரதேச செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வெளிநாட்டு மதுபானசாலையை ஆரம்பிப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியிருந்த போதிலும் இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் தற்போது பல கல்வி நிலையங்கள் மற்றும் பாலி பௌத்த பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் உள்ளதாகவும், தினமும் இலட்சக்கணக்கான மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்காக பிடிபன பிரதேசத்திற்கு வருவதால், மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவ்வாறு வெளிநாட்டு மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் கடும் வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் கூறினார்.
கலாநிதி பந்துல குணவர்தன, மகா சங்கத்தினர் மற்றும் மக்கள் இந்த வெளிநாட்டு மதுபான சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் நாம் தெரிந்து கொள்ள முயன்றது இந்த புதிய பிடிபன மதுபான சாலைக்கு அருகில் என்ன நிறுவனங்கள் உள்ளன என்பதைப் பற்றியாகும். மீகொட ஆயுர்வேத மருத்துவமனை, பிடிபன கனிஷ்ட வித்தியாலயம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (சென்டர் போர் டிபென்ஸ் ரிசேர்ச் என்ட் டெவலப்மென்ட்), அரசாங்கப் பாடநூல் களஞ்சியசாலை, பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மஹிந்தராஜபக் ஷ கல்லூரி, அளவீட்டு அலகு தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ள கல்விப் பீடம் போன்றவற்றை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இங்கு மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த ஜூன் மாதம் இந்தப் புதிய வெளிநாட்டு மதுபான சாலைக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்ததாகும். அது பொசன் பண்டிகைக்காக நிர்மாணிக்கப்பட்ட அலங்கார அமைப்பாகும். இந்த வருட பொசன் பண்டிகைக்கான தர்ம ரஷ்மி ஹோமாகம பொசன் வலயம் இடம்பெற்றது இந்த வெளிநாட்டு மதுபான சாலை அமைந்துள்ள பிரதேசத்திலாகும். இருபுறமும் வண்ணமயமான கூடுகள் அமைக்கப்பட்ருந்தன. இந்த பொசன் வலயம் பிட்டிபன – தம்பே, மீகொட, தியகம, கொடகம, பனாகொட, ஹோமாகமவை போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக 13 கிலோமீற்றர் வரை பரவியவாறு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பொசன் பிரமாண்டமான அன்னதான நிகழ்வு பிடிபனவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிடிபன அறிவை மையமாகக் கொண்ட நகரம் என்று கூறப்படும், இதுபோன்ற இடத்தில் வெளிநாட்டு மதுபானக் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணத்தை தெளிவாக கற்பனை செய்து பார்க்க முடியும்.
இந்த பௌத்த பூமியில் மதுபான சாலைகளைத் திறப்பதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
– ஹோமாகம பௌத்தப் பாதுகாப்பு சபையின் தலைவர் மாதோவிட்ட வஜிரபுத்தி தேரர்
“ஹோமாகம நிதானக் கொள்கை அமைச்சர் காமினி ஜயசூரியவின் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஹோமாகம என்பது ஒரு பௌத்த நகரமாகும். ஜெயசூரிய அனகாரிக தர்மபாலவின் பேரன் ஆவார். தர்மபால, பதநீர் குடிப்பவனும், மாமிசங்கள் உண்பனும் கோழை என்று அந்தக் காலத்தில் கூறியிருந்தார். பதநீரும் சாராயமும் ஒன்றுதான். அனைத்தும் குடும்பக் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் காரணிகளாகும். தற்போது சில காலமாக இருந்த ஹோமாகமவைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மதுக்கடைகள் முளைத்து வருகின்றன. மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மதுபானசாலை அமைக்க முயன்றனர். ஹோமாகம போன்ற பௌத்த நகரத்தில் மதுபானசாலைகளைத் திறப்பதை அப்பகுதியின் சங்கரத்னாவாகிய நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம். இந்த வெளிநாட்டு மதுக்கடையை மூடுவதற்கு கலால் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்” என்றார்.
வரலாறு முழுவதும், ஹோமாகம மக்கள் நிதானக் கொள்கைக்கு மதிப்பளித்தனர்.
– ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மாகம்மன பஞ்ஞானந்த தேரர்
“ஹோமாகம என்பது எமது மகாபோதி நிறுவனத்தின் தலைவராக இருந்த காமனி ஜயசூரியவின் சொந்த ஊராகும். இது ஒரு பௌத்த நகரம். ஜயசூரிய அங்கு இருக்கும் வரை ஹோமாகமவில் மாட்டிறைச்சி கடைகளுக்கு, மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர், கலாநிதி பந்துல குணவர்தன நிதான சக்திக்கு தலைமை தாங்கினார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பிடிபன வெளிநாட்டு மதுபான சாலையிலிருந்து எவ்வளவு மீற்றர் தொலைவில் பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது என பாருங்கள். அவற்றிற்கு அருகில் இன்னும் எத்தனை பல்கலைக்கழகங்கள், பிரதான பாடசாலைகள், அரசு நிறுவனங்கள் உள்ளன? இலங்கையில் அதிக சதவீத பௌத்தர்களைக் கொண்ட நகரம் ஹோமாகம ஆகும். வரலாறு நெடுகிலும் அநாகரிக தர்மபாலவின் நிதானக் கொள்கையின்படி பௌத்த ஒழுக்கத்துடன் வாழ்ந்த மக்களாகவே ஹோமாகம மக்கள் இருந்துள்ளனர்.
இந்த மதுபான சாலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை ஹோமாகம மக்களும் அப்பகுதியின் சங்கரத்தினராகிய நாமும் கடுமையாக எதிர்க்கின்றோம். இதன் பின்னணியில் சிங்கள பௌத்த சக்தியை அழிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருக்கலாம். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அநியாயத்தை ஹோமாகம மக்களுக்குச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோம்.
இந்த மதுபான உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அப்பகுதியின் பக்தியுள்ள மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்றார். மிக விரைவாக பிடிபன மதுபான சாலையை மூடிவிடுங்கள். – பிடிபன உத்தராராம விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதி மாதுலுவாவே தம்மிக தேரர்.
“காமினி ஜயசூரிய ஹோமாகம தொகுதியில் மாட்டிறைச்சிக் கடைகள், மதுபான சாலைகள் அனைத்தையும் மூடினார். ஹோமாகம என்பது 98% சிங்கள பௌத்தர்கள் வாழும் நகரமாகும். சமீபத்தில் தான் இந்த மதுபான சாலையைத் திறக்க முயன்றனர். இவ்வாறு புதிதாக திறக்கப்பட்ட இந்த மதுபான சாலையைச் சுற்றி தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறநெறி பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. தயவு செய்து இந்த பிடிபன வெளிநாட்டு மதுபான சாலையை சீக்கிரம் மூடுங்கள் என ஆட்சியாளர்களை வற்புறுத்துகிறோம்” என்றார்.