இறுதி யுத்தத்தின்போது மக்களோடு மக்களாக நின்று மக்கள் சேவைசெய்து ஒரு கதாநாயகனாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி. யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் பணிப்பாளராகப் பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி தினகரன் வாரமஞ்சரிக்காக மனம் திறந்து பேசுகின்றார்…
நீங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பதவியேற்றது முதல் அங்கு ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள் எவை? குறிப்பாக நீங்கள் தனிப்பட்ட ரீதியில் உங்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் எவை அரசின் மூலம் அங்கு நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகள் எவை?
எனக்கான வெளிநாட்டுத் தொடர்புகள் என்பது குறிப்பிடத்தக்களவில் இல்லை. இதுகாலவரையில் அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்திகள் எல்லாமே அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டவைதான். அது முக்கியமானது. 2015 அக்டோபரில் நான் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பதவியேற்றதன் பின்னர், வைத்தியசாலையின் உள்ளகக் கட்டமைப்பில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவுக்கென ஆறு மாடிக் கட்டடத்தை அரசு கட்டித் தந்திருக்கின்றது. விபத்து சத்திரசிகிச்சைப் பிரிவு. கண் விடுதி. நரப்பு சத்திரசிகிச்சைப் பிரிவுகள் என ஏறத்தாழ 300 படுக்கைகள் கொண்ட கட்டடத்தொகுதியை அரசு கட்டித்தந்தது.
சிங்கப்பூர் பொது வைத்தியசாலை மற்றும் குவைத் இளவரசரின் உதவியுடன் 600 மில்லியனில் புனர்வாழ்வு நிலையமொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.
இவை தவிர, வைத்தியசாலையின் உள்ளக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் வைத்தியசாலையில் தாதியர்களுக்கெனக் கட்டப்பட்ட விடுதியும் ஒன்று. நரம்பு சிகிச்சை விடுதி, இருதய சத்திர சிகிச்சை விடுதி என்பன இரண்டும் தற்போது பாவனையில் உள்ளன. தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புதிய கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டிருக்கின்றது.
சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?
உட்கட்டமைப்பு மேம்பாடென்பதும் ஒரு வகையில நோயாளர்களின் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கானதுதான். ஆனால் அதற்கு நவீன உபகரணங்களும் அவசியம் அந்தவகையில் ஒவ்வொரு வருடமும் பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை அரசு வழங்கி வருகின்றது. அதில் முக்கியமானது DSA என்ற உபகரணம். சத்திர சிகிச்சைக் கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என்பவற்றுக்குத் தேவையான உபகரணங்களை அரசு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கின்றது.
நவீன வசதிகளுடன் வைத்தியசாலை இற்றைப்படுத்தப்பட அவற்றைக் கையாளும் வகையில் நன்கு பயிற்றப்பட்ட ஆளணியினர் போதியளவில் இருக்கின்றனரா?
ஆளணியிலும் பாரிய மாற்றம் இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. நான் பதவியேற்கும்போது 205 ஆகவிருந்த வைத்தியர்களின் எண்ணிக்கை தற்போது 325ஆக அதிகரித்திருக்கின்றது. அதேபோல தாதியர்களின் எண்ணக்கையும் 407 இல் இருந்து. 732ஆக அதிகரித்திருக்கின்றது. நான் வரும்போது 60 வைத்திய நிபுணர்கள் கடமையாற்றினார்கள். தற்போது வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் இரண்டிலுமாக, சுமார் 115 மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். கடந்த எட்டு வருடங்களில், இருதய சத்திர சிகிச்சைப்பிரிவு பிளாஸ்திக் சத்திர சிகிச்சை பிரிவு கஸ்ரோ என்ரோலஜி பிரிவு என்பவும் அவற்றுக்கான விசேட வைத்திய நிபுணர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்
அப்படியானால் மேலதிக சிகிச்சைக்காக தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வடபகுதி நோயாளர்களை பரிந்துரை செய்வதற்கான தேவை தற்போது வெகுவாகக் குறைந்திருக்கின்றது எனக் கொள்ளலாமா?
நிச்சயமாக. கடந்த வருடத்தில் மாத்திரம் 130 பேருக்கு நாங்கள் இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் இலங்கையில் நாங்கள் 4ஆம் இடத்தில் இருக்கின்றோம். இருதய சத்திரசிகிச்சைகளில் முதலாமிடத்தில் கொழும்பு வைத்தியசாலையும் இரண்டாமிடத்தில் கண்டியும் மூன்றாமிடத்தில கராப்பிட்டிய வைத்தியசாலையும் நான்காமிடத்தில் யாழ்ப்பாண வைத்தியசாலையும் உள்ளன.
கண் சத்திர சிகிச்சைகளை அதிகளவில் செய்வது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைதான். அந்தவகையில் இலங்கையில் எங்களது வைத்தியசாலைதான் முன்னணியில் இருக்கின்றது. கொழும்பு கண்ணாஸ்பத்திரியை விடவும் அதிகளவிலான சத்திரசிகிச்சைகளைச் செய்கின்றோம். அன்ஜியோகிராம் பரிசோதனைகள் மற்றும் ஸ்டென்டிங் என்பவற்றிலும் இலங்கையில் மூன்றாவதாக சேவை வழங்கும் மருத்துவமனையாக நாங்கள் இருக்கின்றோம். எங்களது அதிநவீன விபத்து சிசிக்சைப் பிரிவையும் குறிப்பிட்டாக வேண்டும். எந்தவொரு விபத்து நேர்ந்தாலும் உடனடியாக சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் எங்கள் வைத்தியர்கள் குழாம் 24 மணிநேரமும் தயார் நிலையிலேயே இருக்கின்றனர். முன்னர் தலைக் காயங்கள் ஏற்பட்ட நோயாளர்களை; நாங்கள் கொழும்புக்குத் தான் அனுப்புவது வழக்கம். அது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்ல குறைந்தது 7, 8 மணிநேரங்கள் தேவை. இடையில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம். ஆனால் இப்போது எவ்விதமான தலைக்காயங்களையும் கையாளும் வல்லமையுடன் எங்களது மருத்துவர்களும் தாதியரும் தயார் நிலையில் இருக்கின்றார்கள். இலங்கையின் 4ஆவது தேசிய வைத்தியசாலையாக ஆவதற்கான எல்லா அடிப்படைத் தகுதிகளையும் எங்கள் வைத்தியசாலை கொண்டிருக்கின்றது.
வெளிநாடுகளில் உள்ள சில அமைப்புகள் எங்களுக்கு சில உபகரணங்களை தந்திருக்கின்றன. உதாரணத்துக்கு லப்ரஸ்கோப். இரண்டு நாட்களுக்கு முன்னரும் லண்டனில் உள்ள நிறுவமொன்று 3 !/2 கோடி ரூபா பெறுமதியான ஸ்கேனிங் இயந்திரத்தை வழங்கியிருந்தது.
பொதுவாகவே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மருந்து பொருட் தட்டுப்பாடு மற்றும் மருத்துவர்களின் வெளியேற்றம் என்பனவற்றால் யாழ். போதனா வைத்தியசாலையும் பாதிக்கப்பட்டதா, அவ்வாறாயின் அப்பாதிப்புகள் எவை?
மருத்துவ நிபுணர்கள் சிலர் நாட்டை விட்டு வெ ளியேறியிருக்கிறார்கள். ஆனால் அது எங்களை கடுமையாகப் பாதிக்கவில்லை. மருத்துவர்களைப் போலவே சில தாதியர்களும் வெளியேறியிருக்கின்றார்கள். ஆனால் எங்களை அதிகளவில் பாதித்தது மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுதான். அதிலும் குறிப்பாக சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு எங்களை பாதித்தது. சில சத்திர சிகிச்சைக்கான விசேட உபகரணங்களுக்கே தட்டுப்பாடு நிலவியது. அதனால் சில சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டன. அதுவொரு சிக்கலைக் கொண்டு வந்தது. ஆனால் அவ்வளவு தட்டுப்பாடுகள் மற்றும் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் யாழ். போதனா வைத்தியசாலையில்தான் இவ்வருடம் அதிகளவிலான கண் சத்திரசிகிச்சைகள் நிகழ்ந்துள்ளன. மருந்துத் தட்டுப்பாடென்பது இப்போதும் இருக்கின்றது. அமைச்சு எங்களுக்கு விநியோகிக்க வேண்டிய மருந்துப்பொருட்களில் 20 தொடக்கம் 40 விதமான மருந்துப் பொருட்களுக்கு காலத்துக்குக் காலம் பற்றாக்குறை நிலவும். கடந்த காலங்களில் இந்த எண்ணிக்ைக 150 ஆகவிருந்தது. இப்போது 20- 40 ஆகக் குறைந்து விட்டது. இன்னும் ஒருசில மாதங்களில் அதுவும் நிவர்த்தி செய்யப்பட்டுவிடும்.
யாழ். போதனா வைத்தியசாலை மீது சிலர் தற்போது முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று சத்திரசிகிச்சைகள் உரிய நேரத்தில செய்யப்படுவதில்லை என்பது. இந்த உபகரணப் பற்றாக்குறையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாமா?
மருத்துவ உபகரணங்கள், சில சத்திரசிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு அல்லது முள்ளந்தண்டு போன்றவற்றுக்கு மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சைகளுக்கு பொருத்தப்பட சில கருவிகள் தேவைப்படும் குறிப்பாக முழங்கால் சில்லு மாற்று சிசிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவியது. கடந்த காலங்களில் தான் அந்த நிலைமை நிலவியது. இந்த உபகரணப் பற்றாக்குறையால் சத்திரசிகிச்சைகள் நாங்கள் மேற்கொள்ளாதபோது பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். இனிமேல் அவ்வாறான நிலை ஏற்படாது.
கொரோனா மற்றும் பொருளாதார சரிவு காரணமாக எங்களால் ஒரு சீரான நிர்வாகத்தை மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அப்போதிருந்த மருந்துத் தட்டுப்பாடு. சிலவேளைகளில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தநோயாளிகளிடம் சில மருந்துகளை வெளியே வாங்கி வருமாறு சொல்லியிருக்கின்றோம்.
இப்போது அவ்வாறில்லாமல் நாங்களே அவற்றை கொடுக்கின்றோம். ஆனால் அவ்வாறு மருந்துத் தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகளை நாடியவர்கள் பெரும் பணத்தை செலவிட்டிருக்கிறார்கள். அதுபெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கும். அனேகருக்கு அது கட்டுப்படியானதல்ல. இந்த மருந்துத் தட்டுப்பாடும் உபகரணம் இல்லாமையால் சில சத்திரசிகிச்சைகளை எங்களால் மேற்கொள்ள முடியாமல் போனதும் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கும். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் இனிமேல் அந்நிலை தொடராது.
தலைக்காயங்களுக்கான சத்திர சிகிச்சைகள் யாவற்றையுமே தற்போது நாங்கள் செய்கின்றோம். அது மாத்திரமல்ல குழந்தைகள் பிறந்த பின்னரான பராமரிப்பு மற்றும் அவற்றுக்கான சத்திரசிகிச்சைகள் எல்லாமே இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்காக எவருமே கொழும்புக்குச் செல்வதில்லை.
இவை பற்றி பெரிதளவில் மக்களுக்கு தெரியவராமைக்கு என்ன காரணம்.?
ஒரு மூன்றாம்நிலை சுகாதார பராமரிப்பு மருத்துவமனையாக கொழும்பு, கண்டி வைத்தியசாலைகளுக்கு அடுத்ததாக நாங்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையும் ஒரே மட்டத்தில் இருக்கின்றோம். விசேட சேவைகளை வழங்கும்போது அது பொது மக்களுக்குத் தெரியவருவதில்லை. உதாரணமாக 520 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 72 நாட்கள் வைத்திருந்து உரிய சிகிச்சைகள் வழங்கி பராமரித்து சுகதேகியாக அக்குழந்தையை நாங்கள் ஆக்கியிருக்கின்றோம். அது ஒரு சாதனைதான், ஆனால் நாங்கள் அதனை பிரபலப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அது அந்த தாய்க்கும் குழந்தைக்கும் பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணி மருத்துவ ஒழுக்கத்துக்கு அமைய செயற்படுகின்றோம். மாறாக அது வெளியேதெரிய வரும்போது அந்த குழந்தையை 500 கிராம் பிள்ளை என்றே பிற்காலத்தில் அழைக்கத் தொடங்கி விடுவர், தற்போதைய சமூக ஊடகங்களின் செயற்பாடு அவ்வாறுதான் உள்ளது.
உண்மையில் எங்கள் பலவீனம் எங்கள் அபிவிருத்தி செயற்பாடுகள், சாதனைகள் குறித்து ஊடகங்களுக்கு நாங்கள் இற்றைப்படுத்துவதில்லை என்பதுதான்
இலங்கையின் முதலாவது நீரிழிவு நிலையம் எங்கள் மருத்துவமனையில்தான் அமைக்கப்பட்டது.
அப்படியானால் உண்மையில் எதற்கும் காத்திருக்கத் தயாரில்லாத நோயாளிகளின் மனப்பாங்குதான் இங்கு பிரச்சினைக்குரியது எனக்கூறலாமா?
உண்மைதான் மக்களின் எண்ணப்பாங்கில் மாற்றம் வரவேண்டியதுதான் அவசியமானது. ஹேர்னியா என்றாலும் உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். சிறிய கட்டியானாலும் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். காத்திருப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. சத்திரசிகிச்சையென்பது சிக்கலானது. அதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலைத்தேய நாடுகளில் காத்திருப்புப் பட்டியல் என்பது நீண்டது. இங்கிலாந்தில் இருந்து. கனடாவில் இருந்தெல்லாம் இங்கு வந்து சிகிச்சை செய்துவிட்டுச் செல்கின்றார்கள். குறிப்பாக அரச மருத்துவமனைகளில். காரணம் அங்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதால். சத்திரசிகிச்சை எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் சரியாகக் கணித்துத் தான் அதற்கு நாள் குறிக்கின்றோம். வெளிநாடுகளில் ஏதாவதொரு மருத்துவ அவசரம் என்றால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குத்தான் செல்லலாம். சாதாரண ஒரு மருத்துவரை அவர்கள் சந்திக்க வேண்டும் என்றால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறானால் எங்களது பொருளாதார நிலைமைதான் இன்னமும் திறம்பட மருத்துவசேவையை வழங்குவதில் தடையாக உள்ளது எனலாமா?
நிச்சயமாக. இங்கு சுகாதார சேவையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களுக்கான சம்பளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகவே இருக்கின்றது. எனவே அவர்கள் ஈடுபாட்டுடன் சேவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வாழ்வில் தினமும் போராடும் ஒரு தரப்பினரை வைத்து நாங்கள் பணி செய்ய வேண்டும். இக்காலத்தில் புதிதாக ஆளணியினர் உள்வாங்கப்படவில்லை. கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில் வீட்டில் இருந்தபடியே படித்தனர், அலுவலகப் பணிகளைச் செய்தனர். ஆனால் சுகாதார சேவைகளை அவ்வாறு செய்ய முடியாதே. சூம் செயலியில் சுகாதாரத்துறையினர் இயங்கவியலாது. எனவே சுகாதாரத் துறையை ஏனைய எந்தத் துறையுடனும் ஒப்பிடமுடியாது. இதில் அவலம் என்னவென்றால் சுகாதாரத்துறையில் இந்தக் குறைபாடுகள் எல்லாம் தோல்விகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மருத்துவர்கள் நாட்டை விட்டுச் சென்றது, மருத்துவர்கள் தவிர்ந்த ஏனைய ஆளணியினருக்கான போதிய வருமானமின்மை, ஆட்சேர்ப்புகள் நடைபெறாமையென்பன எல்லாமே மருத்துவசேவை திறம்பட இயங்க முடியாமைக்கான மறைமுகக் காரணங்கள்.
சமூக ஊடகங்கள் இந்த அடிப்படையான பிரச்சினைகள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கை இலவச சுகாதார சேவைகளை வழங்கும் நாடு. தனியார் மருத்துவ சேவை அபிவிருத்தியடைந்தாலும், இலவச சுகாதார சேவைக்கு இடையூறு நிகழ்ந்தால் அது ஆபத்தானது. திடீரென ஓரிரவில் எல்லாவற்றையும் மாற்ற இயலாது. இங்கு பொருளாதாரம் மேம்பட்டாலே சுகாதார சேவை பெருமளவு முன்னேற்றம் கண்டுவிடும். எல்லாவற்றுக்கும் அடிப்படை பொருளாதாரம். ஆனால் ஒப்பீட்டளவில் எங்கள் சுகாதார சேவை நல்ல நிலையிலேயே இருக்கின்றது. எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் ஆண்களுக்கு 77 ஆகவும் பெண்களுக்கு அது 80 ஆகவும் இருக்கின்றது. தென்னாசிய நாடுகளில் அது முதலாவதாக இருக்கின்றது. தாயிறப்பு, பிள்ளைகளின் இறப்பு வீதம் என்பன குறைவாக உள்ளன. ஆனால் எங்கள் முறைமை இற்றைவரைக்கும் நன்றாகவே உள்ளது. அதனை எங்கள் அண்டை நாடுகளுடன்தான் ஒப்பிடவேண்டும். பிரித்தானியாவுடனோ கனடாவுடனோ அல்ல. இலவச சுகாதரா சேவையை குற்றம் சாட்டுவது மறைமுகமாக தனியார் சுகாதார சேவையை ஊக்குவிப்பதாகவே அமையும். நேற்று நான் சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்றேன். அங்குள்ள மருத்துவர் ஒருவருடன் உரையாடியபோது. அவர் மிகவும் விரக்தியுற்றிருந்தார். பொது மருத்துவ சேவைகளில் இருந்து வெளியேறுமளவுக்கு விரக்தியுற்றிருந்தார். இலவச சுகாதார சேவைகளின் அடிப்படையை அறியாமலே வெறுமனே விமர்சிக்கவோ குற்றம்சாட்டவோ கூடாது. இலவச மருத்துவ சேவையைப் பலப்படுத்திய பின்னரே சிஸ்டம் சேஞ் பற்றிக் கதைக்க வேண்டும். திறமையின்மை பொதுவாக இருக்கின்றது. அது நிவர்த்திக்கப்பட வேண்டும். அர்ப்பணிப்பு இன்னமும் அதிகரிக்க வேண்டும். இலவச சுகாதார முறைமையக் கட்டியெழுப்புவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. உதாரணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வரும் ஒருவருக்கு இடையில் என்ன நோய் ஏற்பட்டாலும் வழியில் குறைந்தது 15 பொது மருத்துவமனைகள் உள்ளன. சிகிச்சைபெற. எனவே அந்த சேவையை வெறுமனே சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம் உடைத்துவிடக்கூடாது.
தற்போது யாழ்ப்பாணத்தில் சில சமூக ஊடகங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் நோயாளிகள் மருத்துவத்துறையினரை சந்தேகக் கண்கொண்டுபார்க்கும் மனோநிலை காணப்படுகின்றது. அவ்வாறு சந்தேகத்தோடு வருபவரிடம் மருத்துவரால் தனது சேவையை வழங்க முடியாது. அந்நிலை மருத்துவர்களை மேலும் மனதளவில் விரக்தியடையச்செய்யும். மருத்துவர்கள் பெருமளவில் வெளிநாடு செல்லத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில். வெளிநாடு களிலும் அவர்களுக்கான வசதிகளும் வாய்ப்புகளும் உள்ள நிலையிலும் மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது.
ஆனாலும் மருத்துவத்தை ஒரு சேவையாக நோக்கும் மனப்பாங்கு தற்போது குறைவடைந்துள்ளதா?
அது எல்லா சேவைகளிலும் இருக்கின்றது. இப்போதும் மருத்துவ சேவையை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்யும் அனேகர் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் இருக்கும்வரை அதன் மகத்துவம் கெடாது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகள் தங்கள் குற்றச்சாட்டுகளை, அதிருப்திகளைப் பதிவதற்கான வசதிகள் உள்ளனவா?
நிச்சயமாக உள்ளன. அதற்கென ஒரு வட்ஸ் அப் இலக்கமுள்ளது அதுபோலவே. மின்னஞ்சல் ஊடாகவும் தங்கள் முறைப்பாடுகளை நோயாளர்கள் பதியலாம் முறைப்பாடுகள் முறைப்படி விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலளிக்கப்படுகின்றது.
வாசுகி சிவகுமார்