சரியாக 1924 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 8ஆவது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்து வருடங்களின் பின் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி 33 ஆவது ஒலிம்பிக் போட்டி அதே பாரிஸ் நகரில் ஆரம்பமாகிறது.
அதாவது ஒலிம்பிக் போட்டியை மூன்று தடவைகள் நடத்திய நகரங்களில் லண்டலுடன் பாரிஸும் முதலிடத்தை பெறுகிறது. பாரிஸில் 1900 ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆனால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒலிம்பிக்கை இப்போது ஒப்பிட முடியாது. போட்டி அம்சங்கள், தொழில்நுட்பம், வீரர்களின் திறன் எல்லாமே மாறிவிட்டது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீர, வீராங்கனைகள் 32 போட்டி நிகழ்ச்சிகளில் 329 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 592 வீர, வீராங்கனைகள் பங்கேற்பதோடு போட்டியை நடத்தும் பிரான்ஸ் 573 பேரை அனுப்புகிறது.
எனினும் பதக்கங்களை அள்ளக்கூடிய ரஷ்யாவுடன் பெலராஸ் நட்டுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் அதற்குக் காரணம். அந்த நாடுகளின் போட்டியாளர்கள் தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்களாக பங்கேற்பதோடு தனியே அகதிகள் ஒலிம்பிக் அணி ஒன்றும் இம்முறை பங்கேற்கவுள்ளது.
ஆரம்பமும் முடிவும்
ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடம்பெறும். என்றாலும் ஆரம்ப நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூலை 24 ஆம் திகதி ஒலிம்பிக் கால்பந்து மற்றும் ரக்பி ஆரம்ப சுற்றுப் போட்டிகள் தொடங்கிவிடும்.
கோடைகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஆரம்ப நிகழ்வு மைதானத்திற்கு வெளியில் நடத்தப்படுகிறது. பாரிஸின் மத்தியில் உள்ள சீன் நதியிலேயே ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஆரம்ப நிகழ்வுக்கு அடுத்த நாள் ஜூலை 27 ஆம் திகதியே ஒலிம்பிக்கின் முதல் பதக்கம் வழங்கப்படவுள்ளது. அதனை துப்பாக்கிச் சுடுதல் கலப்பு அணி வெல்லும். பாரிஸ் ஒலிம்பிக்கின் கடைசி பதக்கம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் வழங்கப்படவுள்ளது.
அதிக பதக்கங்களைக் கொண்ட போட்டி நிகழ்ச்சியாக நீச்சல் போட்டிகள் அமையும் அதில் மொத்தம் 49 பதக்கங்களை வெல்ல முடியும். அதற்கு அடுத்து தடகளப் போட்டிகளில் மொத்தமாக 48 தங்கப் பதக்கங்கள் உள்ளன.
முக்கிய விளையாட்டு நிகழ்ச்சியான தடகளப் போட்டிகள் ஓகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை நடைபெறும். இதன் உச்ச கட்டப் போட்டியான 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பெண்களுக்கான இறுதிப் போட்டி ஓகஸ்ட் 3 ஆம் திகதியும் ஆண்களுக்கான போட்டி 24 மணி நேரத்தின் பின்னர் ஓகஸ்ட் 4 ஆம் திகதியும் நடைபெறும்.
புதிய விளையாட்டு
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு புதிய விளையாட்டு இடம்பெற்றிருக்கிறது. அது பிரேகிங் என்ற விளையாட்டாகும். இதனை பிரேக்டான்சிங் என்றும் அழைப்பார்கள். இது ஒருவகை நடனப் போட்டியாகும். 1970களில் நியூயோர்க்கின் ப்ரோன்ஸ் பகுதியே இதன் பூர்வீகமாக இருக்கும் நிலையில் ஒரு விளையாட்டு போட்டியாக பிந்தைய காலத்தில் வளர்ச்சி பெற்றது.
ஒலிம்பிக் போட்டியின் பிற்பகுதியில் இந்த பிரேகிங் போட்டியை பார்க்கலாம். இதன் பெண்கள் பிரிவு போட்டி ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவிருப்பதோடு ஆண்களுக்கான போட்டி ஓகஸ்ட் 10 ஆம் திகதி இடம்பெறும். 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்த 32 பேர் பதக்கங்களுக்கு போட்டியிடவுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்ற பேஸ்போல் அல்லது சொப்ட்போல் மற்றும் கராட்டே போட்டிகள் இம்முறை கைவிடப்பட்டன.
அதேபோன்று இம்முறை ஒலிம்பிக்கில் கிளைம்பிங் போட்டியின் வடிவத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பாலாருக்கும் சேர்த்து ஒரு பதக்கமே வழங்கப்பட்ட நிலையில் இம்முறை இரு பாலாருக்கும் வெவ்வேறு பதக்க நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகிறது.
என்றாலும் ஒலிம்பிக்கில் கடந்த காலங்களில் எத்தனையோ சுவாரஸ்யமாக விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நின்ற இடத்தில் இருந்து உயரம் பாய்வது, நீருக்கடியால் நீந்துவது போன்ற போட்டிகளும் இருந்தன.
முதல் முறை பணப் பரிசு
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வழங்குதற்கு அப்பால் பணப் பரிசு வழங்கும் சம்பிரதாக இல்லை. அதுவும் 1896 ஆம் ஆண்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடைபெற்றபோது அதில் முதல் பதக்கத்தை வென்ற அமெரிக்காவின் முப்பாய்ச்சல் வீரர் ஜேம்ஸ் பி. கொனலியிற்கு ஒலிவ் கிளையும் வெள்ளிப் பதக்கம் ஒன்றுமே வழங்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் வெற்றி பெறும் வீரர்களுக்கு இராணுவ வீரர்கள் போன்று பதக்கம் நெஞ்சில் குத்தப்பட்டு வந்தது. 1960இல் தான் கழுத்தில் மாட்டும் மரபு ஆரம்பிக்கப்பட்டது.
இம்முறை ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பதக்கத்தில் பாரிஸ் நகரின் அடையாளங்களில் ஒன்றான ஈபில் கோபுரத்தின் உலோகப் பாகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பாரிஸ் ஒலிம்பிக் பதக்கத்தின் மையப்பகுதியில் ஈபிள் கோபுரத்தின் உலோகம் ஹெக்சகன் வடிவில் இடம் பெற்றுள்ளது.
இது கடந்த காலங்களில் ஈபிள் கோபுரத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொண்ட போது எடுத்த உலோகம் என்றும். அது சேமிப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வதென்பதே பெரும் பரிசாக இருக்கும் நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு வெற்றியாளர்களுக்கு பணப்பரிசு வழங்குவதில்லை. ஆனால் இம்முறை தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பணப்பரிசு வழங்கப்போவதாக உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதன்படி 2.4 மில்லியன் டொலர் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதோடு 48 தடகள போட்டி நிகழ்ச்சிகளிலும் தங்கப் பதக்கம் வெல்லும் வீர, வீராங்கனைகளுக்கு தலா 50,000 டொலர் பரிசு வழங்கப்படவுள்ளது. ஆனால் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு மாத்திரமே இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.
நடப்புச் சம்பியன்கள்
இம்முறை ஒலிம்பிக் தடகள போட்டிகளில் கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 36 பேர் தமது நடப்பு ஒலிம்பிக் சம்பியன் பட்டத்தை வெல்ல களமிறங்குகிறார். இதில் ஆடவர் தனிநபர் பிரிவில் ஒருவரும் மகளிர் தனி நபர் பிரிவில் 15 பேரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இவர்களில் பெயித் கிப்பியன்கோன் (1500 மீ.), சிட்னி மக்லோக்லின் – லவ்ரோன் (400 மீ. தடைதாண்டி), மொன்டோ டுப்லாண்டிஸ் (கோலுன்றிப் பாய்தல்), ரியான் க்ரூசர் (குண்டெறிதல்) மற்றும் அனிடா வ்லோடர்சிக் (சம்மட்டி எறிதல்) ஆகியோர் உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள் என்பதோடு அடுத்தடுத்து தங்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் வருகிறார்கள்.
நெதர்லாந்தின் சிபான் ஹசன் நான்கு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் 5000 மீ. மற்றும் 10,000 மீ. ஒட்டப்போட்டிகளில் நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க திட்டமிடும் அவர் 1500 மீ. மற்றும் மரதன் போட்டிகளிலும் பங்கேற்கிறார்.
இம்முறை ஒலிம்பிக் தடகள போட்டியில் களமிறங்கும் வயது குறைந்தவராக கிரிபாட்டியைச் சேர்ந்த கெனாஸ் கெனிவேட் இடம்பெற்றிருக்கிறார். அவர் ஆண்களுக்கான 100 மீ. ஓட்டப்போட்டியின் முதல் சுற்றில் ஓடும் தினத்தில் அவரது வயது 16 வருடம், 4 மாதம் மற்றும் 6 நாட்கள்.
அவுஸ்திரேலியாவின் சினீத் டைவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் மிக வயதான தடகள வீரராவார். பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டில் அவர் பங்கேற்கும் தினத்தில் அவரது வயது 47 வருடம், 4 மாதம் மற்றும் 24 நாட்கள்.
போட்டிகள் எங்கே?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் மொத்தமாக 35 இடங்களில் நடைபெறுகின்றன. இதில் ஒலிம்பிக் கிராமத்தில் 10 கிலோமீற்றர் பகுதிக்குள் 24 ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள் அமைந்திருக்கும்.
சில போட்டிகள் பாரிஸின் பிரபலமான இடங்களில் இடம்பெறுகின்றன. கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி ஈபில் கோபுரத்திற்கு கீழ் சாம்ப் டி மார்ஸில் இடம்பெறுகிறது. மரதன் போட்டி பாரிஸில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஹொடேல் டி வில்லே கட்டடத்திற்கு முன்னால் ஆரம்பமாகும்.
என்றாலும் அனைத்துப் போட்டிகளும் பிரான்ஸ் தலைநகரில் மாத்திரம் இடம்பெறாது. பிரான்ஸின் பிரபல விளையாட்டான கால்பந்து போட்டிகள் நாடெங்கும் உள்ள கால்பந்து மைதானங்களில் நடத்தப்படவுள்ளன. படகோட்டப் போட்டிகள் மத்தியதரைக் கடலிலும் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகள் நாட்டின் வடக்கில் லில்லி நகரிலும் இடம்பெறும்.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமான நீர் சறுக்கல் போட்டி 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் போட்டி உண்மையிலேயே பிரான்ஸுக்கு வெளியில் 12 நேர வலயங்களுக்கு அப்பால் பிரான்ஸ் ஆட்புல பகுதியான டஹிட்டி தீவின் டீஹுப்போ கடற்கரையில் நடைபெறப்போகிறது. பாரிஸில் இருந்து 15000 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இது உலகில் கடல் அலைகளுக்கு பிரபலமான இடங்களில் ஒன்றாகும்.
இலங்கையில் அறுவர்
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இலங்கையில் இருந்து ஆறு வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இது கடந்த முறை மற்றும் அதற்கு முந்திய முறை பங்கேற்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைவு. ஆனால் முந்தைய முறைகளை விடவும் அதிகமாக ஆறு பேரில் நால்வர் தகுதியை அடிப்படையில் நேரடி தகுதி பெற்றிருக்கிறார்கள்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு பூப்பந்துப் போட்டியில் விரான் நெத்தசிங்கவும், ஆண்களுக்கான 400 மீ. ஓட்டப்போட்டியில் அருண தர்ஷனவும், பெண்களுக்கான 800 மீ. ஓட்டப்போட்டியில் தரூஷி கருணாரத்னவும், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் டில்ஹாரி லேகம்கேவும் சர்வதேச தரநிலை அடிப்படையில் நேரடித் தகுதி பெற்று ஒலிம்பிக் செல்கிறார்கள்.
தவிர, ஆண்களுக்கான 100 மீ. பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கைல் அபேசிங்க மற்றும் பெண்களுக்கான 100 மீ. பாக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் கங்கா செனவிரத்ன ஆகியோர் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை இரண்டு பதக்கங்களையே இதுவரை வென்றிருக்கிறது. அதுவும் கடைசியாக சுசந்திக்கா ஜயசிங்க 2000 ஆம் ஆண்டு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று இற்றைக்கு 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இம்முறை ஒலிம்பிக் செல்பவர்களை பார்க்கும்போது தரூஷி கருணாரத்ன மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
19 வயதே ஆன தரூஷி இந்த வயதுக்குள் எட்டிய சாதனைகள் இலங்கை மட்டத்தில் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு பாங்கொக்கில் நடந்த ஆசிய தடகள சம்பியன்சிப் போட்டியின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அவர் கடந்த ஆண்டு செப்டெம்பரில் சீனாவின் ஹான்சுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். எனவே எந்த மட்டத்திலும் சாதிக்கும் திறன் அவரிடம் அதிகமாகவே இருக்கிறது.
எஸ்.பிர்தெளஸ்