1960களில் இலங்கை மலையக மக்களிடையே புதியதொரு மாற்றம் ஏற்பட்டது. 1952இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமைச் சட்டத்தால் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட இவர்கள் தமது உரிமைகள் இந்த நாட்டில் கேள்விக்குறியாகி வருவதை உணர்ந்தனர். 1956இல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிங்களம். மட்டும் மொழிச்சட்டம் மேலும் இவர்களது இருப்பை இருளடையச் செய்வதாக அமைந்தது. அக்காலத்தில் எழுத்தாளர்கள் சிலர் சீற்றத்தோடு தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். இவர்களை ஆத்திரப் பரம்பரையினர் என்று அiழைப்பர். இவர்களுள் முதன்மையானவர் திருச்செந்தூரன்.
1959இல் தமிழகச் சஞ்சிகையான ‘கல்கி, நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘உரிமை எங்கே என்ற சிறுகதை இரண்டாம் பரிசுபெற்றது. இக்கதை, இலங்கையில் பிரஜா உரிமை மறுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் உரிமை பற்றியது. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இக்கதைமூலம் தமிழ்கூறு நல்லுலகெங்கும் கொண்டுசெல்ல இலக்கியத்தைப் பயன்படுத்தியவர்; என்ற பெருமையையும் மலையக நவீன இலக்கிய எழுச்சியின் முதல்வர் என்ற தகைமையையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.
சிறந்த சிறுகதை எழுத்தாளராக மிளிர்ந்த இவர் நடுக்கடலில், என்ன செய்துவிட்டேன், சாமிக்கடன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.
திருச்செந்தூரன் கண்டி மாவட்டத்தில் உள்ள கலகா பகுதியில் மந்திரமலை என்னும் தேயிலைத் தோட்டத்தில் 30-.08-.1936இல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கலகா பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.இந்துக்கல்லூரியிலும் உயர்கல்வியை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பெற்றார்.
1959இல் ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் பின்னர் ஹைலன்ட் கல்லூரியில் முதலில் ஆசிரியராகவும் பின்னர் 01-04-71 முதல் 31-.03-.76வரை அதிபராகவும் கடமையாற்றியவர். அக்கல்லூரிக் கீதத்தை இயற்றியவரும் இவரே. கல்லூரி அதிபராகப் பணியாற்றிக் கொண்டே தனது நண்பர் இர.சிவலிங்கத்துடன் இணைந்து மலையகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திருவள்ளுவர் நற்பணிமன்றம், மலைநாட்டு வாலிபர்சங்கம், மலையக இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளை உருவாக்கி இவற்றினூடாக இளைஞர்களை ஒருங்கிணைத்து மலையகத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
மலையகத்தில் பல கற்றறிவாளர்களையும் அரசியல் பிரமுகர்களையும், கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்குரியது.
நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருச்செந்தூரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் என்ற துறையில் பட்டமேற்படிப்பு டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர். மலையக நாட்டார்கலையான காமன்கூத்தை நவீனமயப்படுத்தி கொழும்பில் மேடையேற்றியவர். தனது மாணவர்கள் பலருக்கு நாடகத்துறையில் பயிற்சி வழங்கியவர். சிலைகள் என்ற நாடகத்தில் நடித்ததோடு தாளலய நாடகங்களையும் நெறிப்படுத்தினார்.
பிற்பட்ட காலத்தில் மாத்தளை பாக்கியா வித்தியாலயத்தில் பணியாற்றும்போது அங்கும் பல கலை இலக்கியவாதிகளை உருவாக்கினார். மாத்தளை கார்த்திகேசு தயாரித்த ‘அவள் ஒரு ஜீவநதி| என்ற தமிழ்த் திரைப்படத்தில் பாதிரியார் பாத்திரமேற்று நடித்தார்.
1980களில் தமிழகம் திரும்பிய திருச்செந்தூரன், நீலகிரி மாவட்டத்தில் மலையக மக்கள் மறுவாழ்வுமன்றம் என்ற அமைப்பினூடாகத் தனது நண்பர் இர சிவலிங்கம், மற்றும் அருட்பணி அல்பொன்ஸ் ஆகியோருடன் இணைந்து 1984முதல் பதினாறு வருடங்கள பணியாற்றியபின் 31-. 03-.2001இல் திருச்சியில் அமரரானார்.