இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களே மீண்டும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார். பிம்ஸ்டெக் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், இந்தியாவின் என்.டி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனைத் தெரிவித்திருந்தார்.
கே: பிம்ஸ்டெக் அமைப்பின் விரிவாக்கம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவித்திருந்ததுடன், நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியும் வலியுறுத்தியிருந்தார். இது ஏன் முக்கியம் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துகளையும், நிலைப்பாடுகளையும் முன்வைத்துக் கலந்துரையாடக் கூடியதாகவிருந்தது. விரிவாக்கத்தின் முக்கியம் உள்ளிட்ட புதிய யோசனைகளை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் முன்வைத்திருந்தார். இதில் பல விடயங்கள் இணங்கக் கூடியவகையில் அமைந்தன. இந்தியப் பிரதமர் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்தபோது, தெற்காசிய நாடுகள் இருக்கும் நிலையையும், ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் நிலையையும் ஒப்பிட்டிருந்தார். நாடுகளுக்கிடையிலான தொடர்புகளின் காரணமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெற்றிபெற முடிந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அடிப்படையில் இந்தியாவுடனான தொடர்புகளை மேம்படுத்துவதில் நாம் ஆர்வமாக இருக்கின்றோம். இலங்கை ஐந்து விடயங்களில் இந்தியாவுடனான இணைப்புகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளது. மக்களுக்கிடையிலான தொடர்புகள், கடல் மற்றும் ஆகாய மார்க்கமான தொடர்புகள் மற்றும் எரிசக்தித்துறையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்தியாவின் தரப்பிலிருந்து பார்க்கும்போது இலங்கையுடன் மாத்திரமன்றி, தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான இணைப்புக்களை வலுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்துகின்றது.
கே: வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் மீண்டும் பதவியேற்றதும் முதன் முதலில் இலங்கைக்கே விஜயம் மேற்கொண்டிருந்தார். இது இருநாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பாலமாக அமைந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இணைப்புகளை வலுப்படுத்துவதில் காணப்படும் மூலோபாய முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: இலங்கையின் தரப்பிலிருந்து பார்க்கும் போது இது முக்கியமானது. விரைவாக வளர்ச்சியடைந்துவரும் இந்தியாவின் மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் தென்பகுதியில் காணப்படுகின்றன. இவை இலங்கைக்கு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகின்றன. சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவற்றின் ஒத்துழைப்புக் கிடைப்பது இலங்கைக்கு முக்கியமானது. தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இருக்கின்றனர். இராமேஸ்வரம் எமக்கு மிகவும் அருகில் உள்ள பகுதியாகும். இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையில் கப்பல் சேவைகளை ஆரம்பித்தால் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இரு நாட்டிலிருந்தும் ஈர்க்க முடியும்.
கே: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுக்கு மத்தியில் சீனாவின் பிரசன்னம் குறித்த இந்தியாவின் கரிசனையை எவ்வாறு இலங்கை கையாள்கின்றது? சீனாவின் உளவுக் கப்பலொன்று இலங்கைக்கு வந்திருந்தது அல்லவா?
பதில்: கப்பலுக்கான நிரப்பும் சேவையைப் பெறுவதற்காகவே வந்திருந்தது. துருக்கி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்தும் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தன. அவை யாவும் கப்பலுக்கு அவசியமான நிரப்புதல்களைப் பெற்றுக் கொள்வதற்காக வந்தவையாகும். அவை எமக்கு சேவை செய்வதற்காக வரவில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கே: சீனா இலங்கையுடன் கொண்டிருக்கும் உறவுகள் தொடர்பில் இந்தியா பாதுகாப்பு ரீதியிலான கரிசனையைக் கொண்டிருக்கவில்லையென்று நீங்கள் கருதுகின்றீர்களா? ஏதாவது முறையில் இலங்கையை சீனா பயன்படுத்திக் கொள்ளவில்லையென நினைக்கின்றீர்களா?
பதில்: இந்தியாவுக்குப் பாதுகாப்புக் குறித்த கரிசனைகள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பெரியதொரு சக்தியாக உருவாகும்போது, உலக அரசியலில் முக்கியதொரு வகிபாகத்தை வகிப்பவராக இருக்கும்போது, பல்வேறு விடயங்கள் குறித்து கரிசனைகள் மற்றும் கவலைகள் கொள்ள வேண்டி ஏற்படுவது இயற்கையானது. எனினும், இலங்கையின் பார்வையில், இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த கரிசனைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நாடும் இலங்கையைப் பயன்படுத்தாது என்பதை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்துள்ளோம். அதற்காக நாம் சீனாவுடன் வர்த்தக உறவுகளை மேற்கொள்ள விரும்பவில்லையென அர்த்தப்படாது.
கே: மறைமுகமான நிகழ்ச்சி நிரல்களில் இலங்கை சிக்கியிருப்பதாகக் குறிப்பாக கடன்பொறி போன்றவை இலங்கையைப் பொரு ளாதார ரீதியில் பாதிப்படையச் செய்திருப்பதாக இந்திய வெளி விவகார அமைச்சர் முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார். இது பற்றி நீங்கள் நினைப்பது என்ன?
பதில்: இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியாக என்ன கூறினார் என்பது எனக்குத் தற்பொழுது தெளிவாக இல்லை. எனினும், கடன்பொறி எனக் கூறும்போது கடன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சீனா எங்களை கட்டாயப்படுத்தியது என நான் நினைக்கவில்லை. கடன் குறித்த பிரச்சினை காணப்படும்போது இந்த நாட்டையும் அந்த நாட்டையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை. இவ்வாறானதொரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டமைக்கு எமது செயற்பாடுகளே காரணமாகும். இவ்வாறான நிலையில் வேறு நாடுகளைக் குற்றம் சுமத்துவதில் பயனில்லை. இலங்கைக்கு சீனக் கடன்பொறியே காணப்படுவதாக சில மேலைத்தேய நாடுகளில் சித்தரிக்கப்படுவதைப் பார்க்கக் கிடைத்தது. எனினும், நான் இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு முகங்கொடுக்கும் போது இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 10 வீதமே சீனாவின் கடனாகக் காணப்பட்டது. எனவே, இன்னாருவர் மீது குற்றஞ்சாட்டும் நிலைக்குச் செல்வதை நான் விரும்பவில்லை. நாம் அவ்வாறானதொரு நிலைக்குச் சென்றமைக்கு நாமே காரணம். வேறு எவருடைய தவறும் காரணமல்ல.
கே: இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துக் கதைக்கும்போது, இந்திய மீனவர்களின் கைது தொடர்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்குக் கடிதமெழுதியுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: இரு நாட்டுக்கும் இடையில் காணப்படும் இந்த விவகாரம் பல வருடங்களாகக் காணப்படும் பிரச்சினையாகும். வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் பழைய பதிவுகளைப் பார்க்கும்போது இந்தியாவின் அப்போதைய பிரதமர் நேருவுக்கும், சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்ட முதலாவது விடயமாக இந்த மீனவர் விவகாரம் காணப்பட்டது. எனவே, அந்தக் காலத்திலிருந்து காணப்படும் பிரச்சினையாக இது உள்ளது. எனினும், ஒரு சில மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இல்லை இது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து மீன்பிடிக்கின்றனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து தமிழக அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது மாத்திரமன்றி இந்திய மீனவர்களின் மீன்பிடி முறை அதாவது ‘பொட்டம் ட்ரோலிங்’ போன்ற முறைகள் நிறுத்தப்பட வேண்டும். எனவே இரு நாடுகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவேதான் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புக்களை வலுப்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகளைத் தேட முடியும்.
கே: பூகோள அரசியலில் உலக ஒழுங்கு மீண்டும் வடிவமைக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக ஐ.நா பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களில் நாடுகளின் நிலைகள் குறித்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. தெற்கு உலகின் தலைவர் என்ற ரீதியில் இந்த உலக ஒழுங்கு மாற்றத்தில் இந்தியாவின் வகிபாகம் எவ்வாறானதாக இருக்கும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்: தற்போதைய உலக ஒழுங்கைப் பார்த்தால், இது இரண்டாம் உலகப் போர் வெற்றியாளர்களின் கழகமே காணப்படுகின்றது. உதாரமாக 1945 ஆம் ஆண்டில், இங்கிலாந்து உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 வீதத்தைக் கட்டுப்படுத்தியது. எனினும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. சனத்தொகை போன்றவை முக்கியமானவையாக கருதப்படவில்லை. இது இந்தியாவின் பிரச்சினை மாத்திரமன்றி, ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் ஐ.நா பாதுகாப்புச் சபை போன்ற அரங்குகளில் அவற்றுக்கு குரல்கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. எனவே, நிச்சயமாக, அரசியல் மற்றும் நிதி கட்டமைப்புகள் இரண்டும் மாற வேண்டும். மேலும் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது உலகளாவிய தெற்கில் ஒரு தலைவராக இருந்து வருகிறது.
ஆனால், சில சமயங்களில், உலகளாவிய தெற்கின் நலன்களுக்கு எதிராக இந்தியாவும் தனது நலனை சமரசம் செய்து, தலைமை நிலையை எடுக்க வேண்டும்.”