ஜனாதிபதி நிதியம் எதனை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது? அதன் மூலம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
ஜனாதிபதி நிதியம் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஜனாதிபதியின் நிதிச் சட்டத்திற்கு அமைவாக 1978ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகும். பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. வறுமைக்கு நிவாரணம் வழங்குதல், கல்வி அல்லது அறிவினை வளர்த்தல், மதங்களை வளர்ப்பதற்காக மதப் பழக்கவழக்கங்களை முன்னெடுத்துச் செல்லல், தேசத்திற்காக சேவை செய்தவர்களுக்காக மானியங்கள் வழங்குதல் மற்றும் ஜனாதிபதியின் மற்றும் நிதியத்தின் எண்ணங்களுக்கு அமைவாக பொதுமக்களின் நலன் அல்லது நல்வாழ்வுக்கான வேறு சில செயற்பாடுகளும் அவற்றுள் அடங்கும். அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தின் நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் என்பன நிர்வாகக் குழுவினால் மேற்காள்ளப்படுகின்றது. இந்தக் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
எந்தெந்த துறைகளுக்கு இந்நிதியத்தின் நிதி ஒதுக்கப்படுகிறது? ஜனாதிபதி நிதியத்தின் மூலம் தற்போது மக்களுக்கு என்ன சேவைகள் வழங்கப்படுகின்றன?
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இதற்கு முன்னர் வைத்திய சிகிச்சைக்கான நிதி உதவி வழங்கும் முறை மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய சிறந்த கல்வியின் மூலம் எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் கொள்கைத் தீர்மானங்களின் அடிப்படையில், இலங்கை மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான நிதியுதவி வழங்குதல், தகைமைகைளப் பூர்த்தி செய்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வித் தரத்தினை உயர்த்தும் நோக்கில் க.பொ.த உயர்தரக் கல்விக்காக நிதி உதவி வழங்குதல் மற்றும் ஏனைய திட்டங்களுக்காக நிதி உதவியளித்தல் என்பன தற்போது செயல்படுத்தப்படுகின்றன. இதனடிப்படையில் வைத்திய சிகிச்சைக்கான நிதி உதவி வழங்கும் செயற்பாட்டின் கீழ் இருதய சத்திரசிகிச்சை, சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மற்றும் இரத்த சுத்திகரிப்பு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் (சத்திர சிகிச்சை, மருந்துகள் மற்றும் ஊசிகள்), இடுப்பு, தோள்பட்டை, முழங்கால் மற்றும் முழங்கை மூட்டு எலும்பு மறுசீரமைப்பு, முதுகுத் தண்டு குறைபாடு திருத்த சத்திர சிகிச்சை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை, கோக்லியர் உள்வைப்பு சத்திரசிகிச்சை, மூளை சத்திர சிகிச்சை, எலும்பு மாற்று சத்திர சிகிச்சை, தலசீமியா நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், கண் சத்திர சிகிச்சை, பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை, சுவாச கருவிகள் கொள்வனவு செய்தல் மற்றும் காது கேட்கும் கருவிகளைக் கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்காக மருத்துவ நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும் போது ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் செயலற்றிருந்ததன் காரணமாக சுமார் 8,000 மருத்துவ நிதி உதவிக்கான விண்ணப்பங்கள் நிதியுதவி வழங்கப்படாமல் தேங்கிக் கிடந்ததோடு, அந்த விண்ணப்பங்களுக்கான நிதி உதவி வழங்கும் நேரத்தில் அவற்றுள் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மேலும் 4,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, அந்த 12,000 விண்ணப்பங்களுக்கும் 1,342 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் 4917 விண்ணப்பங்களுக்காக 915 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளினுள் 3 முதல் 5 கடமை நாட்களுக்குள் வைத்திய நிதி உதவி விண்ணப்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்குவதற்கு தற்போது முடிந்திருக்கின்றது. இதற்கு முன்னர் இதற்காக சுமார் ஆறு மாத காலம் எடுத்திருக்கின்றது. எனினும் அதே செயற்பாட்டை மேற்கொண்டு தற்போது ஒரு வாரத்தினுள் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி நிதியத்தின் அனைத்திற்கும் ஜனாதிபதியின் அனுமதி கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் சில காலம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தில் வவுச்சர்கள்தான் வழங்கப்பட்டன. கொடுப்பனவுகளைச் செய்வதற்கு நீண்ட காலம் எடுத்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கா ஆகியோரின் முறையான ஒருங்கிணைப்புடன் இதற்காக வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக ஒரு வாரத்திற்குள் பணம் செலுத்த முடிந்திருக்கின்றது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மருத்துவ நிதியுதவி தொகைகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் செயன்முறை எவ்வாறானது?
வைத்திய நிதியுதவிக்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த நோயாளிகளாலேயே பூரணப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை நோயாளி வசிக்கும் பிரிவின் கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பித்து சிபார்சினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பிரதேச செயலாளரின் சிபார்சினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிபார்சுகளைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பங்களை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். அதனடிபடையில் நாம் மூன்று அல்லது ஐந்து நாட்களினுள் அந்த விண்ணப்பத்திற்கான கொடுப்பனவினை வழங்குவோம். எப்படியாயினும் ஒரு வாரத்தினுள் கொடுப்பனவினை வழங்கி முடிப்போம். முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும். அதனடிப்படையில், செயற்திறன்மிக்க செயல்முறையைப் பின்பற்றுவதன் காரணமாக ஒரு வாரத்திற்கும் குறைந்த காலத்திற்குள் கொடுப்பனவினைச் செய்வதற்கு முடிந்திருக்கின்றது. விண்ணப்பத்திற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே நாளில் பெற்றுக் கொள்கிறோம். அதனால்தான் மூன்று முதல் ஐந்து நாட்கள் உள்ளிட்ட காலத்திற்குள் கொடுப்பனவுகளை வழங்க முடிந்திருக்கின்றது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிப்போம். பின்னர் நோயாளியின் வங்கிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்படும். பணம் வரவு வைப்பிலிடப்பட்டுள்ளது SMS மூலமும் அறிவிக்கப்படும். இந்த செயன்முறை இன்று பயனுள்ளதாகியிருக்கின்றது.
இன்று வரிசையின்றி மிகக் குறுகிய காலத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எங்கள் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், இது தொடர்பான அறிவுறுத்தல் கையேடும் உள்ளது. முன்னணி மருத்துவமனைகளிலும் விண்ணப்பங்கள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக சுகாதார அமைச்சின் பரிந்துரையின் பேரில் உள்ளூர் மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் பெறும் சிகிச்சைகளுக்காகவும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பிரதேச செயலக அலுவலகங்களிலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் எதுவும் எமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு முன்னதாக அரசியல்வாதிகளின் ஆதரவும் இதற்காகப் பெறப்பட்டது. ஆனால் இன்று யாருடைய உதவியும் தேவைப்படப் போவதில்லை.
ஜனாதிபதி நிதியத்திற்கு எவ்வாறு நிதி திரட்டப்படுகிறது?
அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் கிடைக்கும் வருமானமே ஜனாதிபதி நிதியத்திற்கான பிரதான வருமான வழியாகும். அந்த வருமானத்தின் ஒரு பகுதி அதற்கான சட்ட ஏற்பாடுகளின்படி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்துக்கு வழங்கப்படுகின்றது. இதன்பிரகாரம், அபிவிருத்தி லொத்தர் சபையினால் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் பணத்தில் சுமார் 50 வீதம் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்துக்கு வழங்கப்படுகின்றது.
இந்த ஒவ்வொரு துறைக்கும் ஆண்டுக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது?
பொதுவாக மருத்துவ உதவிக்காக வருடாந்தம் 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றாலும் தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் போன்றவற்றிற்காக பணம் செலவிட வேண்டியேற்பட்டால் அதற்காகவும் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகின்றது. அதேபோன்று ஜனாதிபதி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்காக 5000 மில்லியனுக்கும் அதிக தொகையினை வழங்க வேண்டியுள்ளது. க.பொ.த உயர் தரம் கற்கும் மாணவர்கள் 6000 பேருக்காக மாதத்திற்கு 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்காக 824 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையான ஒரு இலட்சம் மாணவர்களுக்காக மாதம் 3000 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 3600 மில்லியன் ரூபாயாகும்.
பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர் துறவிகள், பெண் துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்காக 288 மில்லியன் ரூபாவும், க.பொ.த. உயர் தரத்தில் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பிரிவில் கற்கும் மாணவர்களுக்கான தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் ஜனாதிபதி நிதியமும் இணைந்து வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்திற்காக 720 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்விக்காக என்ன நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன?
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உயர் தரத்தில் கற்பதற்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இந்த வேலைத்திட்டம் கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கான மாணவர்களைத் தெரிவு செய்வதில் ஜனாதிபதி நிதியம் எந்த வகையிலும் தலையிடுவதில்லை. கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக அதிபர்கள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு வலய கல்விப் பணிமனைகளினால் புலமைப்பரிசில் வழங்க வேண்டிய மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இதில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் பிரகாரம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அந்தப் பெயர்ப் பட்டியல் கல்வி பணிமனையினால் கல்வித் திணைக்கள பரிந்துரையுடன் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படும். பின்னர் கல்வி அமைச்சின் செயலாளரது பரிந்துரையுடன் அந்தப் பட்டியல் ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பப்படும்.
அவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்விக்கான செலவினை மேற்கொள்வதற்காக ஒரு மாணவருக்கு மாதம் 6000 ரூபாய் வீதம் 24 மாதங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் மாணவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவே வைப்பிடப்படுகின்றது. இவ்வாண்டில் முதலாம் வகுப்பிலிருந்து சாதாரண தரம் வரையான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப் பிரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் மாதம் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்காக மாதாந்தம் 3000 ரூபாய் வீதம் 12 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும். இதில் 10,126 பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதோடு, ஒரு பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அப்பாடசாலையின் மொத்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். 50 மாணவர்களிலும் குறைவான மாணவர் எண்ணிக் கை கொண்ட பாடசாலைகளிலிருந்து 4 மாணவர்களும், 3000 மாணவர்களுக்கு அதிகம் கொண்ட பாடசாலைகளிலிருந்து 22 மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். உயர்தரம் மற்றும் முதலாம் வகுப்பிலிருந்து 11<ஆம் வகுப்பு வரையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு வழங்கப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாண்டில் ஜனாதிபதி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் 116,000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மஹிந்த அளுத்கெதர தமிழில் - எம். எஸ். முஸப்பிர்