உலகிலேயே வலுவான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுதற்கான நகர்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும் தேசியளவில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களே ஜனாதிபதித் தேர்தலில் அறியப்படுபவர்களாக உள்ளனர். அதனடிப்படையில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ஜோ பைடனும் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புமே போட்டியாளர்களாக உள்ளனர். இக்கட்டுரையும் இரு போட்டியாளர்களின் தற்போதைய நிலையை தேடுவதுடன் அமெரிக்க ஜனநாயகத்தின் தன்மையைத் தேடுவதாகவும் அமையவுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின் சிறப்புக்கள் பல உண்டு. அதாவது ஜனாதிபதிக்கு ஏதும் நெருக்கடி ஏற்பட்டால் இடைத் தேர்தல், பதில் தேர்தல் எதுவும் கிடையாது. அதற்கான ஏற்பாடாக 14 அமைச்சும் ஜனாதிபதி, பதில் ஜனாதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சபாநாயகர் என்ற வரிசையைக் கொண்டுள்ளது. இதில் எவருக்கேனும் மரணம் அல்லது படுகொலை நிகழ்ந்தால் மாற்றறையவர் ஜனாதிபதியாகும் நடைமுறையை அரசியலமைப்பாகக் கொண்டுள்ளது. தற்போது திட்டமிட்டு 18 பேரும் படுகொலை செய்யப்பட்டால் அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவாதத்தை செப்ரெம்பர் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க கொள்கைவகுப்பாளர்களும் புலமைசார் பல்கலைக்கழகழக பேராசிரியர்களும் உரையாடிவருகின்றனர். இவ்வாறு பல விடயங்கள் அமெரிக்க அரசியலமைப்புக்குள் பொதிந்துள்ளது. அவ்வாறே அமெரிக்கா 100க்கும் மேற்பட்ட தேசியங்களைக் கொண்ட ஒரு பல்லினத் தேசிய அரசாகவுள்ளது. அதன் ஜனநாயகம் வெள்ளையினத்திற்கானது. அதாவது வெளிளையினத்தின் ஜனநாயகமே மேற்குலக ஜனநாயகம் என்பது போலவே அமெரிக்க ஜனநாயகமும். அடிப்படையில் ஜனநாயகப் பண்புகளை அதிகம் கொண்டிருந்தாலும் அதன் முதன்மை வெள்ளையினத்தின் ஆதிக்கமாகவே தெரிகிறது. அதற்குள்ளேயே முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் ஜனாதிபதித்துவம் அமைந்திருந்தது. ஒபாமா கறுப்பராக இருந்தாலும் அவர் வெள்ளையினத்தின் ஜனநாயகத்திற்கே தலைமைதாங்கியவராகக் காணப்பட்டார்.
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்ட பின்னர் பென்சில்வேனியாவில் பட்லர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (14.07.2024) துப்பாக்கிதாரி ஒருவரால் ட்ரம்ப் சுடப்பட்டார். அத்தாக்குதலில் அவரது செவிப்பகுதியில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கிதாரி அமெரிக்கப் பொலிஸாரின் பதில் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழவதும் இத்தாக்குதல் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியதுடன் குடியரசுக்கட்சியினர் தமது வெற்றிவாய்ப்பினை அதிகரிக்க வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திவருகின்றனர். இதனை விரிவாக தேடுவது பொருத்தமானதாக அமையும்.
ஓன்று, இத்தாக்குதல் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் ட்ரம்பின் வெற்றிவாய்ப்பினை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. காரணம் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் பாரிய நெருக்கடியை ட்ரம்ப்க்கு ஏற்படுத்திய போது அவரை குடியரசுக் கட்சியினரே எதிர்த்திருந்தனர். குடியரசுக்கட்சி மட்டுமல்ல அமெரிக்க புலனாய்வுத் துறை மற்றும் இராணுவத்தினர் மத்தியிலும் அதிக குழப்பம் நிலவியது. ட்ரம்ப் அமெரிக்காவின் எதிர்காலத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கினர். ஆனால் ட்ரம்ப் எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாது முகங்கொடுத்ததுடன் எதிர்த்துப் போராடியும் வந்தார். அடிப்படையில் மிக மோசமான மனிதனாக இருந்தாலும் தனது வேட்பாளர் நிலையை தக்கவைக்க அதிக பிரயத்தனங்களை மேற்கொண்டார். அத்தகைய நெருக்கடியை எல்லாம் கடந்து கொண்டு நகர்ந்த ட்ரம்ப் தனது கட்சிக்குள் தன்னை எதிர்த்தவர்களை கையாளும் கலையைக் கற்றதுடன் முன்னர் எதிரியாகச் செயல்பட்ட JD. வன்ஸ்சை பதில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தார். அதனை அடுத்து பென்சில்வேனியாவில் நிகழ்ந்த பிரசாரத்தின் போது அவர் மீதான தாக்குதல் குடியரசுக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த ஆரம்பித்தது.
இரண்டு, அதற்கமைவாகவே புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. குறிப்பாக ட்ரம்ப் மீதான தாக்குதலை ஈரானுடன் தொடர்புபடுத்துவதில் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிக கவனம் கொண்டுள்ளது. காரணம் ஜனாதிபதி ட்ரம்ப்ன் ஜனாதிபதி வேட்பாளர் நிலையை தோற்கடிக்க எடுத்த அனைத்து நகர்வுகளையும் ட்ரம்ப் தோற்கடித்த நிலையில் குடியரசுக் கட்சியினருக்கு ஏற்பட்ட அதேநிலை அமெரிக்க புலனாய்வுத் துறையினருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் விரும்பியோ விரும்பாமலோ ட்ரம்ப் ஏற்று செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் நலனுக்கும் ஏகாதிபத்திய முகத்திற்கும் அமைய உருவாக்குதல் என்பது அவசியமானதாக அமைந்தது. அதற்கான நகர்வையே அமெரிக்க உள்நாட்டு புலனாய்வும் சர்வதேசப் புலனாய்வும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதற்கு வலுவான காரணங்களும் உண்டு.
கடந்த காலங்களில் ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக வந்தால் உக்ரைன் போரை 24 மணித்தியாலத்தில் நிறுத்துவேன் எனக் குறிப்பிட்டுவந்தார். ஆனால் அவர் இஸ்ரேல்- ஹமாஸ் போர் பற்றி எதுவும் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரது போர் பற்றிய எண்ணம் தற்போதைய ஜனாதிபதியைவிட வேறுபட்டதாக உள்ளது. அத்தகைய விடயம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு ஆபத்தானதாக காணப்படுகிறது. அதுவே ட்ரம்ப் மீதான பிரதான குற்றச்சாட்டாகும். அமெரிக்காவை அதன் வடிவத்தை முழுமையாக அழிக்கும் ஜனாதிபதி என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உடைத்துவிடுவார் என்ற எண்ணம், அமெரிக்க புலனாய்வு மற்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதனால் அவரை போர் பற்றிய இருப்பில் அமெரிக்க நலனுக்குட்பட்டவராக மாற்றுவதுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாக்கும் மற்றும் உலகளாவிய ஏகாதிபத்தியத்திற்கு தலைமைதாங்கு நபராக மாற்றுதல் அவசியமானதாக கருதுகின்றனர். அதனாலேயே ஈரானே ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு காரணம் என புலனாய்வுத் துறை உரையாடலை தொடக்கியுள்ளது.
ஈரானின் இராணுவத் தளபதி மற்றும் ஐந்திற்கு மேற்பட்ட அணுவிஞ்ஞானிகளை கொலை செய்வதில் அமெரிக்க- இஸ்ரேலியக் கூட்டு செயல்பட்டுள்ளது என்பது தெரிந்த விடயம். ஆனால் ட்ரம்ப் கட்டளை பிறப்பித்து ஈரானிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு ஈரான் ட்ரம்ப் மீதே குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதனைப் பலப்படுத்தவும் மேற்காசிய போரைத் திட்டமிட்டு நீடிக்கவும் அமெரிக்க உலகளாவிய ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் உத்தியை ஏற்படுத்தவும் அமெரிக்க புலனாய்வுத்துறை திட்டமிடுவாதகவே தெரிகிறது. இதுவே ஈரானிய துப்பாக்கிதாரி என்ற செய்திக்கு பின்னாலுள்ள அடிப்படையாகவுள்ளது. அவ்வாறே ஈரான் மீளவும் எழுச்சியடைய விடாது தடுப்பதே அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் பிரதான நோக்கமாகவுள்ளது. எதிர்காலத்திலும் ஈரான் மீதான தாக்குதலையும் முறியடிப்புகளையும் அமெரிக்கா கொண்டிருக்கும் என்பதற்கான நகர்வாகவே தெரிகிறது.
மூன்று, தற்போதைய ஜனாதிபதியின் அணுகுமுறைகளும் ஜனநாயக கட்சியினரின் நகர்வுகளும் ட்ரம்பின் வெற்றியை தெளிவாக்கியுள்ளதாகவே தெரிகிறது. ஜோ பைடன் மீதான அழுத்தங்கள் அவரது பிடிவாதம் என்பன குடியரசுக்கட்சிக்கு வாய்ப்பானதாக மாற்றியுள்ளது. அதனால் ட்ரம்ப்பை அமெரிக்க புலனாய்வத்துறை கையாளவேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர் முன்னாள் ஜனாதிபதியாகவும் உள்ளமை கவனத்திற்குரியதாகும்.
ஏனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ட்ரம்ப் பக்கம் திரும்பியுள்ளதாகவே தெரிகிறது. அவரது வெற்றியை அவர் மீதான தாக்குதல் பலப்படுத்தியுள்ளது. அவரது இரண்டாவது ஆட்சிக்காலம் அமெரிக்க நலனுக்குரியதாகவும் மேற்காசியப் போர் வலுவானதாகவும் திட்டமிடப்படுகிறது. இஸ்லாத்திற்கு எதிரான போரே அமெரிக்காவின் எதிர்கால ஏகாதிபத்திய நகர்வாக உள்ளது. அதில் அமெரிக்காவின் மிகப்பிரதான எதிரியாக ஈரானே விளங்கும்.