இந்தியா- இலங்கை இடையே கடல் பகுதியில் உள்ள இராமர் பாலத்தின் முழு வடிவத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்த விடயங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
இராமர் பாலம் என்பது இராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் மன்னார்தீவுக்கும் இடையே உள்ள மணல் பாலமாகும். சுமார் 48 கி. மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாலம் இயற்கையாகவே சுண்ணாம்புப் பாறைகளால் உருவான மிக நீளமானதாகும்.
தமிழில் இராமர் சேது பாலம் என அழைக்கப்படும் இந்தப் பாலம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ‘ஆதாம் பாலம்’ என்று அழைக்கப்பட்டது. அக்கால மத நம்பிக்கையின்படி முதல் மனிதன் ஆதாம் இதன் வழியே இலங்கைக்குப் பயணம் செய்தார் என பலர் நம்புகின்றனர்.
அறிவியல் கருத்துகளின்படி இந்தப் பாலம் 600 ஆண்டுகள் முன்னால் உருவாகி இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தியது.
1997 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. 300 மீட்டர் அகலமும், 12 கி.மீட்டர் ஆழமும், 167கி.மீட்டர் நீளமும் கொண்ட இத்திட்டம் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே இந்து மதத்தின் நம்பிக்கைக்கு எதிராக இந்தப் பாலம் உருவாக்கப்படுவதாக சர்ச்சை வெடித்தது.
இந்தப் பாலத்தால் 30 மணிநேரம் குறையும் என்றும் கணிசமான எரிபொருள் செலவு மீதப்படும் என்றும் அந்நிய செலவாணி சேமிக்கப்படும் எனவும் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் இத்திட்டம் முடங்கியது.
இந்நிலையில் கடலுக்கு அடியில் உள்ள ஆதாம் பாலத்தில் முழு வரைபடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘மேப்பிங் எக்சர்சைஸ்’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அசல் வடிவம் கடலுக்கு அடியில் 29 கி.மீட்டர் நீளம் உள்ளதாகவும் கடல் பரப்பிலிருந்து 8 மீற்றர் அடியில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்கச் செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இப்போது ஆதாம் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அதாவது இராமர் சேது பாலத்தின் முழு வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.
“நாசா செயற்கைக்கோள் ICESat-2 நீர் ஊடுருவிச் செல்லும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இராமர் பாலம் பற்றிய விவரங்களைச் சேகரித்துள்ளது. பல காலமாக இந்தப் பாலம் பற்றிய பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், அதைப் புரிந்து கொள்வதற்கான முதல் அறிக்கையாக இதுவே அமைந்துள்ளது.
“ஆதாமின் பாலம் மற்றும் அதன் தோற்றம் பற்றிய புரிதலை வலியுறுத்த எங்களின் இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது” என இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் சென்டரின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செயற்கைக்கோளானது கடலின் ஆழமற்ற பகுதிகளில் உள்ள எந்தவொரு கட்டமைப்பின் உயரத்தையும் தொழில்நுட்பம் வழியே அளவிடும். அதாவது தண்ணீரில் ஊடுருவிச் சொல்லக் கூடிய ஒளித்துகள்கள் மூலம் குறிப்பிட்ட பகுதியில் என்ன உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்சிப்படுத்திவிடும்.
ஆதாம் பாலம் இந்தியாவின் இராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு பகுதியான தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாரின் வடமேற்கு முனை வரை நீண்டு காணப்படுகிறது என்பதை இது தெளிவுபடுத்தி உள்ளது. இந்த ஆய்வு நீருக்கடியில் உள்ள மலைமுகடு, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலி போன்று தொடர்ச்சியாக நீண்டுள்ள பாதையை முழுமையாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
இந்திய மிகப் பழைமையான இதிகாசம் எனக் கூறப்படும் இராமாயணத்தில், இலங்கையில் இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக இராமர் இலங்கையை நோக்கிப் புறப்பட்டார். அப்போது கடல்வழியே பயணிப்பதற்காகக் வானரப் படையால் கட்டப்பட்டதுதான் இந்த இராமர் சேது பாலம் என நம்பப்படுகிறது. இராமாயணக் கதையில் இந்தப் பாலம் மையப்பொருளாக இன்றுவரை உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பா என்பதைக் கண்டுபிடிக்கக் கடந்த காலங்களில் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த NRSC ஆராய்ச்சியாளர்கள், ஆதாம் பாலம் பற்றிப் பல நுணுக்கமான விபரங்களை அறிந்துகொள்வதற்காக நாசா செயற்கைக்கோள் எடுத்த படங்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பாலத்தின் 99.98% பகுதிகள் மிகவும் ஆழமற்ற நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்தனர். ஆகவே கப்பல் மூலம் இப்பகுதியை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என்றும் அறிவித்தனர்.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திக்கு இடையே 2 அல்லது 3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியியல் சான்று என்ன சொல்கின்றன என்றால் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டும் பழங்கால கண்டமாக இருந்த கோண்ட்வானாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளன என்பதாகும்.
அது டெதிஸ் கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து என்றும், 35-55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நகர்ந்தபோது லாராசியா என்ற மற்றொரு கண்டத்தில் மோதியது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. இத்தகைய டெக்டோனிக் செயல்பாடுகளால் அல்லது சிதைவுகளால் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்தத் தரைப்பாலம் உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கி.பி 9ஆம் நூற்றாண்டில், பாரசீக கடற்படையினர் இதை ‘சேது பந்தாய்’ அல்லது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடல் பாலம் என்று குறிப்பிட்டதாகத் தெரிகிறது. அதாவது 1480 ஆம் ஆண்டு வரை இந்தச் சேது பாலம் தண்ணீருக்கு மேலாகத் தெரியும்படி இருந்ததாகவும், புயலின் போது நீரில் மூழ்கியதாகவும் இராமேஸ்வரத்திலிருந்து கோயில்களில் உள்ள பதிவுகள் கூறுகின்றன.