- அதுவே ஜனாதிபதியின் நிலைப்பாடு
- என்கிறார் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேயவர்தன
காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் 1.5 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் ஏற்படும் நீண்ட கால மாற்றங்களாகும். சர்வதேச ரீதியிலான இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பில் தற்போது முக்கிய இடம்பெற்றுள்ளது. இந்த மாற்றம் என்பது வளிமண்டலம், ஹைட்ரோஸ்பியர், உயிர்க்கோளம் மற்றும் புவிக்கோளம் மற்றும் அவற்றின் தொடர்புகளை குறிக்கின்றன.
காலநிலை மாற்ற தாக்கங்களைக் குறைப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு ஜனாதிபதியின் வழ்காட்டலில் சுற்றுச்சூழல் அமைச்சு, விவசாயம், காணி மற்றும் வனவள அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு போன்ற பல அமைச்சுக்கள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற பாதிப்புகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. உடனடியான வானிலை நிகழ்வுகளாக கருதப்படும் கடும் மழையைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் சில நீண்ட கால வரட்சி அல்லது கடல் மட்ட உயர்வு போன்றவை. காலநிலை மாற்ற அழுத்தங்கள் நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மனித பாதுகாப்பு, ஆரோக்கியம், பொருளாதாரம், அரசியல், உணவு, சுற்றுச்சூழல், தனிநபர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்
இலங்கையில் வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் டெங்கு ஆகியவை பொதுவான நோய்களாகும், அவை காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
இலங்கைக்கு மாத்திரமல்ல, இன்று உலக நாடுகளுக்கும் இது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க படிப்படியாக மேம்படுத்தி வருகின்றார். இந்தநிலையில் இப்பாதிப்புகளுக்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த பாதிப்பு காணப்பட்ட போதிலும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. விசேடமாக இலங்கையைப் பொறுத்தவரையில் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் இதற்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி சில நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பாக நடைபெற்ற EXPO– 20 கூட்டத்தில் Climate Justice Forum என்ற அமைப்பை முன்னெடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். EXPO மாநாடு சவுதி அரேபியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்றது. வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த விடயத்தில் எவ்வாறு நிதியுதவி அளிப்பது என்பது குறித்து ஜனாதிபதி முன்வைத்த Climate Justice Forum இல் தற்பொழுது சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கலந்துரையாடவும் முன்னுரிமை அளிக்கவும் அரசாங்களுக்கிடையேயான நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஒரு தளமாக இது முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதபதியின் நோக்கமாகும்.
காலநிலை மாற்றம் பாடசாலைகளில் ஒரு பாடமாக முன்னெடுக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு இது விடயத்தில் தெளிவு வேண்டுமென்பதனாலேயே இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த விடயம் சார்ந்த ஆய்வாளர்கள் புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் அளித்துள்ள சில நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பில் சில நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன. அதாவது பெற்றுள்ள கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பயன்களை பெற்றுக்கொள்ள கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். இது அடுத்த வருடங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
படிம எரிபொருள் பாவனையை குறைப்பதில் சகலருக்கும் சமத்துவமான நடைமுறை வேண்டும் என்பதை சர்வதேசத்தின் கவனத்துக்கு ஜனாதிபதி கொண்டு வந்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கையில் பொதுமக்களிடையே போதிய தெளிவில்லை என்று தெரிவித்த அவர், தான் ஜனாதிபதியின் காலநிலை தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் சில ஊடகங்களைச் சேர்ந்த சிலர் நாளை மழை பெய்கின்றதா, நேற்று மழை பெய்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்களா என்று கேட்டனர்.
அந்தளவிற்கு நாட்டின் காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ முறையான தெளிவில்லை என்பது தெரிகிறது. இதனால்தான் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. இதற்கான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
காலநிலை தொடர்பான விடயங்கள் சர்வதேச ரீதியில் ஆங்கில மொழியிலேயே வெளிவருகின்றன. ஆங்கில மொழியில் உள்ள ஆக்கங்களை சிங்களம், தமிழ் மொழிகளில் பலரும் இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்து கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கென இது தொடர்பில் விளக்கம் அளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தினால் பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் தற்பொழுது தெற்குப் பகுதியில் மழை பெய்கின்றது. அம்பாறை போன்ற பகுதிகளில் அதிக வெப்பம் நிலவுகின்றது.
அது மாத்திரமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தற்பொழுதும் வழமைக்கு மாறாக நாட்டின் உஷ்ண நிலை அதிகரித்திருப்பதினால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இதற்கான காரணத்தை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்க்கட்சியினர் அவ்வளவாக விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் வர்த்தக சமூகம் திருப்தி தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் நிலையான தீர்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.
விசேடமாக வர்த்தக சமூகம் மாத்திரமின்றி புத்திஜீவிகளும் ஜனாதிபதி தலைமையிலான நிர்வாகம் தொடர வேண்டுமென்று தெரிவித்துள்ளமை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தனது சொந்த நலனுக்கோ அல்லது குடும்ப நலனுக்கோ திட்டங்களை முன்னெடுக்கவில்லை.
நாட்டை வளம் மிக்கதாக முன்னெடுப்பதே முக்கிய நோக்கமாகும். அதேவேளை ஜனாதிபதி பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டுமென்பதிலும் அக்கறையுடன் செயற்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாவை செலவு செய்ய வேண்டும். அதுமாத்திரமின்றி போட்டியிடும் எதிர்த் தரப்பாக இருந்தாலும் ஆளுந் தரப்பாக இருந்தாலும் சரி போட்டியிடுவோர் பெருந்தொகை பணத்தை செலவிடுவர்கள்.
இவை அவர்களது சொந்த பணமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்துக்கு உட்பட்டதாகும். இதனால் மீண்டுமொரு எரிபொருளுக்கான வரிசை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதல்லவா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை இலக்காகக் கொண்டே செயற்படுகின்றனர். அவர்களுக்கு நாடு தொடர்பிலோ பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலோ பொருளாதார மேம்பாடு தொடர்பிலோ எந்தவித அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. அதிகாரத்தை கைப்பற்றினால் போதும். இதுதான் அவர்களது நிலைப்பாடு.
இந்த நிலையில் தேர்தலை கோருவதால் ஜனாதிபதி அதற்கு மதிப்பளித்துள்ளார். சுயேட்சை வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தலை ஒத்திப்போடும் நோக்கம் எள்ளளவேனும் ஜனாதிபதிக்கு இல்லை.
தமது அதிகாரத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதில் எந்தவித உண்மையுமில்லை என்பதை தெட்டத்தெளிவாக ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் என்ற ரீதியில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஜனாதிபதியின் நடவடிக்கையினால் தற்பொழுது இலங்கையின் கையிருப்பு 5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சேமிக்கப்பட்டுள்ளது. இவற்றால் கொடுப்பனவை மேற்கொள்ளலாம். இருப்பினும் இது ஒரு பொருளாதார சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பது உண்மை.
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் அதன் உயரதிகாரி இலங்கையின் தேர்தல் நடைபெறுவதை தாம் வரவேற்பதாகவும். ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதாகவும் கூறியதுடன், நிதியத்தின் நிதியுதவி தொடர்பிலான கால அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் நோக்கம் என்ன?
நாணய நிதியமும் உடனடியாக தேர்தல் நடைபெறுவதில் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் என்பதே அவர்களது தொலைநோக்காகக் காணப்படுகின்றது. பதவிக்கு வரும் அரசாங்கம் நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இருப்பினும் தற்போது கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரம் பின்னடைவைக் காணும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இதனால் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியமா என்பது பொதுமக்களைச் சார்ந்த விடயமாகும்.
தற்பொழுது தொடர் வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக சம்பள அதிகரிப்பை முன்னிலைப்படுத்தியே இவை மேற்கொள்ளப்படுகின்றன. தற்பொழுதுள்ள பொருளாதார நிலையில் சம்பள அதிகரிப்பு என்பது உடனடியாக செய்யக் கூடிய விடயமல்ல என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் பின்னணியில் ஏதோ அரசியல் பின்னணி இருப்பதாகத் தோன்றுவதாகவும், இது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளமை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் வரிவிலக்களித்த போதிலும் அதன் நன்மைகள் பொதுமக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு என்ற விடயத்திற்கு பதிலளித்த அவர் இது விடயத்தில் நிதியமைச்சுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சில விதிமுறைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இடைத்தரகர்களினால் இந்த நிலை உண்டு. இதனால் வரிச் சலுகை அளித்தாலும் அதனை இவர்களே பயன்படுத்துகின்றனர் என்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்குரிய நடவடிக்கைக்கும் அவர் திட்டமிட்டுள்ளார். அதனை விரைவில் நடைமுறைபடுத்துவார் என்றார்.