Home » இலங்கை படுகுழிக்குள் மீண்டும் விழுவதை தடுக்கும் ஒரேயொரு நிவாரணி IMF மட்டுமே

இலங்கை படுகுழிக்குள் மீண்டும் விழுவதை தடுக்கும் ஒரேயொரு நிவாரணி IMF மட்டுமே

by Damith Pushpika
July 14, 2024 6:06 am 0 comment

கேள்வி: நாட்டிற்கு நற்செய்தி கொண்டுவந்தாலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் பதில் என்ன?

பதில். (மத்திய வங்கி ஆளுநர்)

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமைக்கு அமைய கடன் மறுசீரமைப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அன்றைய சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமை அதிகரித்தமையினால் குறிப்பாக வெளிநாட்டு கையிருப்பு குறைந்ததால் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சகல பிரச்சினைகளுக்கும் இது முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு கடன் மறுசீரமைப்பு தான் தீர்வாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்துக் கிடையாது. எவ்வாறு இதனை மேற்கொள்வது?

இவ்வாறான கடன் மறுசீரமைப்பை, இலங்கை இதற்கு முன்னர் செய்ததில்லை. இந்த விடயத்தில் போதுமான தெளிவோ அனுபவமோ எவருக்கும் கிடையாது. எனவே, முதன் முதலில் நிபுணர் அறிவைப் பெறுவதற்காக, உலகின் இரண்டு சிறந்த நிறுவனங்களான லாசார்ட் நிதி ஆலோசனை நிறுவனம் மற்றும் சட்ட ஆலோசனைக்கான கிளிஃப் சான்ஸ் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டன.

இலங்கையானது உள்நாட்டு, வங்கிகள், EPF இலிருந்து கடன் பெற்றுள்ளதோடு ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் கடன் பெற்றுள்ளது. வணிகக் கடனும் பெறப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைக்கையில் சுயாதீன நிறுவனம் ஒன்றினால் அதற்கான அளவுகோல்கள் வெளியிடப்பட வேண்டும்.

எமது நாட்டின் கடன் ஸ்திரமற்றது என 2022 இல் அறிவிக்கப்பட்டது. எனவே மறுசீரமைப்பை செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் 2022 செப்டம்பரில் அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியபோது, மொத்த மொத்தக் கடனை உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆகக் குறைக்க வேண்டும் என்று அது கூறியது. அந்த அளவுகோல்கள் அடுத்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டுக் கடன் 128 வீதமாக இருந்து பின்னர் குறைவடைந்தது.

அந்நியச் செலாவணியில் செலுத்தப்பட்ட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4% ஆக இருந்தது. அப்போது நாட்டின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆக இருந்தது. கடன் செலுத்துவது 9.4 வீதமாக இருந்தது. இதுதான் ஸ்திரமற்ற நிலை எனக் கூறப்பட்டது. ஸ்திர நிலையை அடைவதற்கு இதனை அடுத்த பத்தாண்டுகளில் 4.5%க்கு கொண்டு வர வேண்டும். அரசாங்கம் கடன் பெறும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34% ஆக இருந்தது. அதனை ஆண்டுக்கு 13.2% ஆக குறைக்க வேண்டும்.

அடுத்த கட்டம் வெளிநாட்டுக் கடனாகும். அதில் முதன்மையானவை, இருதரப்பு கடன்களாகும். ஜப்பான், பிரான்ஸ், இந்தியா என்பன இணைந்து உத்தியோகபூர்வ கடன் குழு ஒன்றை உருவாக்கின. சீனாவின் எக்ஸிம் வங்கி தனியாக பேச்சுநடத்தியது. இந்த செயற்பாட்டின் ஊடாக நாம் 2022 டிசம்பர் மாதமளவில் இரண்டாவது தவணையைப் பெறுகையில் நிதிஉத்தரவாதம் கிடைத்தது.

அடுத்த கட்டமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும். இது தான் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய செயற்பாடாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குறிப்பாக இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் பிரான்ஸ் என்பவற்றின் தலைமையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. இவ்வாறு இருதரப்பு கடன் மறுசீரமைப்பு நிறைவு செய்யப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நியதிகளுக்கு அமைய அடுத்த இருபது வருடங்களில் எவ்வாறான கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியிருந்தது. பின்னர் வணிகக் கடன்களிலும் அதே பொறிமுறையின் கீழ் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாடுகளை எட்டும் அதேநேரம் அவர்கள் கடன் சலுகை வழங்குவதற்கான பல முறைமைகளைக் கொண்டுள்ளனர். இதனால் முழுமையான கடனை 10 வருடங்களில் செலுத்த வேண்டியிருந்தால் அதற்காக 20 வருட கால நீடிப்பு கிடைக்கும். மேம்போக்காக பார்க்கும் போது இதில் கடன் இரத்துச்செய்யப்டபவில்லை என்பது விளங்கும். இந்த கால நீடிப்பின் போது பணத்தின் பெறுமதி பெருமளவில் குறைவடையும். நாளைய தினம் 100 ரூபாயை செலுத்துவதற்கும் 10 வருடங்களின் பின்னர் அதே 100 ரூபாவை செலுத்துவதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. அதுதான் எமக்கு கிடைக்கும் சலுகையாகும். இவ்வாறு இருதரப்பு கடன் செலுத்தும் காலத்தை நீடிப்பது ஒரு வகைச் சலுகையாகும்.

தற்பொழுது 3, 4, 5, 6 வீதம் வட்டி அறிவிடப்படுவதாயின் அது 2 வீதம் வரை குறைக்கப்படும். இவை இரண்டையும் இணைத்தால் நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை பெருமளவினால் குறையும். உதாரணமாக 28-30 வீதத்தினால் குறையும். கடன் ரத்து செய்யப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டாலும் இந்த முறைமைகளில் சில சலுகைகள் கிடைக்கின்றன.

அடுத்த வர்த்தகக் கடன் வழங்குநர்களும் இருதரப்பு கடன் வழங்குநர்களினால் கிடைக்கும் சலுகைக்கு ஏற்றவாறு சலுகை வழங்க வேண்டும். இது தான் ஒப்பீட்டளவிலான கடன் சலுகை, வர்த்தகக் கடன் வழங்குநர்களுடனும் சில உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இருதரப்பு கடன் வழங்குநர்களினால் கிடைத்த சலுகையை ஒத்த சலுகையைப் பெற உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால் சலுகை வழங்கும் முறைமை மாற்றமானது.

பெற்ற கடன் 100 ரூபா எனின் 28 வீதத்தை குறைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக கடன்களில் மாத்திரம் இந்த முறைமை பின்பற்றப்படுகிறது. இவை இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இரண்டிலும் 28 வீத குறைப்பு உள்ள போதும் இரண்டும் இரண்டு முறைகளில் வழங்கப்படுகிறது. இருதரப்பு கடன் சலுகை ஒரு விதமாகவும் வர்த்தகக் கடன் சலுகை வேறுவிதமாகவும் கிடைக்கிறது. வர்த்தகக் கடனில் மொத்தத் தொகையில் இருந்து கழிவு கிடைக்கிறது. அது மட்டுமன்றி வட்டியும் குறைக்கப்பட்டு காலஎல்லையும் நீடிக்கப்படுகிறது.

இரு தரப்பும் சமமான சலுகையை வழங்க வேண்டும் என்பதே எமது நியாயமான கோரிக்கையாகும். நாம் பெற்ற கடனுக்காக எமக்கு கடன் வழங்குநர்களிடமிருந்து சலுகை கோருகிறோம். இது எமது உரிமையல்ல.

28 வீத கடன் ரத்து அல்லது சலுகை எனின் 40 வீதத்தை எமக்கு கோர முடியாது. கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்தி கடனை மீளச் செலுத்த 30 வீதம் போதுமானது என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. எமக்கு கடன் வழங்கும் இயலுமை கிடைக்கிறது. அவர்களுக்கு கடன் மீளப் பெறும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதற்கு 30 வீத குறைப்பு மாத்திரமே அவசியம். 30 வீதம் அன்றி 40 வீதம் கோர எமக்கு உரிமை கிடையாது. கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்த போதுமான சலுகையை வழங்குமாறு தான் கோருகிறோம். அவர்களும் வழங்கிய தொகையில் இருந்து ஒரு தொகையை குறைக்கின்றனர்.

கேள்வி : செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பில் மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்ட 2024 கடன் என்ற அறிக்கை. அதற்கமைய 2023 டிசம்பர் இறுதியில் இலங்கையின் மொத்க் கடன் தொகை 96 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மார்ச் இறுதியில் இலங்கையின் மொத்தக் கடன் 100 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்படுவதில் இருந்தே இந்தப் விவகாரம் எழுந்தது. 70 பில்லியனில் இருந்து 100 பில்லியனாக அதிகரித்ததாக சிலர் விளக்கம் கொடுத்தனர். இடைப்பட்ட காலத்தில் கடன் பெற்றதாகவும் அது எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டது. உங்கள் பதில் என்ன?

பதில் : திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன

ஆளுநர் சொன்ன விடயங்களுடன் சில விடயங்களை இணைக்க விரும்புகிறேன்.நமக்கு ஏன் கடன் மறுசீரமைப்பு அவசியம்? முன்னாள் ஜனாதிபதி 2022 மார்ச் மாதத்தில் எமது பிரச்சினையில் தலையிடுமாறு ஐ.எம்.எப் இற்கு அழைப்பு விடுத்தார். அந்த கோரிக்கையுடன் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்று தான் கடன் நிலைத்தன்மை. இதற்கு முன்னர் எமது நாட்டில் கடன் நிலைத்தன்மை கிடையாது என ஐ.எம்.எப் கூறியது. நாட்டில் கடன் நிலைத்தன்மை இல்லாமல் ஐ.எம்.எப் இனால் தலையீடு செய்ய முடியாது. கடன் நிலைத்தன்மை இல்லாதபோது கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இம்முறையும் நாம் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்குச் சென்றோம். இதற்கு முன்னர் ஜ.எம்.எப் இற்குச் சென்றதை விட, இம்முறை சென்ற செயற்திட்டம் வேறுபட்டுள்ளது. இம்முறை கடன் நிலைத்தன்மை இன்றியே சென்றிருந்தோம். கடன் நிலைத்தன்மையற்ற நாடுகளுக்கு ஐ.எம்.எப் இனால் கடன் வழங்க முடியாவிட்டால் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். அத்தோடு பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தனியான திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். நாம் மூன்றாவது தவணை தொகையையும் பெற்றோம். நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தவாறே கடன் மறுசீரமைப்பையும் செற்படுத்தி வருகிறோம். இரு பாதைகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதில் ஒரு அங்கமாகவே கடன் மறுசீரமைப்பை மேற்கொள்கிறோம்.

அடுத்து நீங்கள் முன்வைத்த கேள்வி. 2024 மார்ச் மாதமளவில் கடன் நிலைமையை கடன் அறிக்கையின் ஊடாக வெளியிட்டோம். அதில் உள்ள ஒரு அட்டவணையில் 100 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் சரியானது தான். முழுக் கடன்தொகையும் அமெரிக்க டொலர்களிலே பெறப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டுக் கடன், வெளிநாட்டுக் கடன் என்பன பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டுக் கடன்கள் பொதுவாக டொலர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். உள்நாட்டுக் கடனை அந்த அட்டவணையில் சேர்க்கையில் அவை டொலர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. டொலர்களுக்கு மாற்றுகையில் முன்பிருந்த அந்நிய செலாவணிப் பெறுமதி 325 ரூபாய். பெறுமதி மாற்றுகையில் ரூபாவின் பெறுமதி 301 ஆகும். அது நல்ல நிலைமையாகும். 325 ரூபாவினால் கணிப்பிட்டதை 301 ரூபா என்ற அடிப்படையில் கணிப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. வெளிநாட்டுக் கடன் தொகையையும் சேர்த்துக் கொண்டால் நாம் கடன் பெறாத போதும் அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தின் வீழ்ச்சியானது டொலர்களில் அதிகரித்துக் காட்டும்.

கேள்வி: நாம் இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. கடனை செலுத்த ஆரம்பித்தவுடன் தான் அதன் சுமை நேரடியாக மக்களுக்கு விளங்க ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது? இதுகுறித்து உங்கள் பதில் என்ன?

பதில்:(மத்திய வங்கியின் ஆளுநர் )

மக்களின் மனதில் பயம், சந்தேகம் இருக்கலாம். கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் நிச்சயமாக கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிப்போம். மீண்டும் அந்தப் பழைய குழிக்குள் விழுவோமா என்ற நியாயமான சந்தேகம் மக்களுக்கு இருக்கலாம்.

அடுத்த 10 -– 20 வருடங்களுக்கு மூச்சு விட வழி செய்வதாக கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு, மக்களுக்குத் தேவையான பணிகளையும் செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுக்கு இலகுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிகள் அமைந்துள்ளன.

நீண்ட காலம் நாடு மூச்சு விட முடியும். தனியொரு நாட்டிடம் இந்த தொகையை பெற்றுக்கொண்டு இந்த நிலைமையை மாற்றியமைத்துவிட முடியாதா என்ற கேள்விகளும் உள்ளன.

கேள்வி:(மத்திய வங்கி ஆளுநர்) கடந்த காலத்தில் அரசாங்கம் புதிய 42 சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 30இற்கும் மேற்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக மத்திய வங்கிச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதிசார் புதிய சட்டங்கள் மூன்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. பொருளாதார மாற்றச் சட்டமூலம், அரச நிதி நிர்வாகம் மற்றும் கடன் முகாமைத்துவச் சட்டமூலம் என்பனவும் சமர்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான அவசியம் என்ன, இதனால் எதிர்பார்க்கப்படுவது என்ன?

பதில்: மத்திய வங்கியின் சட்டம் செயற்படுத்தப்படுகிறது. நாட்டின் நிதிக் கொள்கைகள் அதனால் செயற்படுத்தப்படுகின்றன. மத்திய வங்கியும் சுயாதீனமாகியுள்ளது. அடுத்ததாக அரச நிதி அமைப்புக்கள். நிதி தொடர்பில் மத்திய வங்கியும், அரச நிதி தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். மத்திய வங்கியை போலவே அரச நிதிச் செயற்பாடுகளுக்கும் வலுவான பொறிமுறையொன்று தேவைப்பட்டது. அரச நிதி நிர்வாகச் சட்டமூலத்தினால் அதனையே செய்ய முயற்சிக்கிறோம். நாட்டில் அரச நிதி ஒழுக்கம் தொடர்பிலான பிரச்சினைகள் உள்ளன. நல்லதொரு அரச நிதி ஒழுக்கம், நல்லதொரு நிதி மேற்பார்வை என்பவற்றுடன் அரச நிதிச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதனால் நிதிக் கொள்கையை செயற்படுத்தும் இயலுமையும் எமக்கு கிட்டும். வரவு செலவுத் திட்ட தயாரிப்பு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விடயங்கள் என்ற அனைத்தும் இதன் கீழ் செயற்படுத்தப்படும்.

அடுத்தபடியாக, அரச கடன் முகாமைத்துவத்தை முதல் முறையாக மத்திய வங்கியிடமிருந்து விடுவித்து நிதி அமைச்சின் கீழ் முன்னெடுத்துச் செல்கிறோம். 75 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு செய்யப்படுகிறது. வலுவான வகையில் கடன் முகாமைத்துவம் செய்வதே இதன் நோக்கமாகும். அந்த வகையில் மத்திய வங்கிச் சட்டமும், அரச நிதி மற்றும் கடன் முகாமைத்துச் சட்டங்களும் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வலுவான மூன்று அடிக்கற்களாகும்.

அடுத்ததாக பொருளாதார மாற்றச் சட்டமூலம். இதனால் மேற்கூறிய மூன்று அடிக்கற்களும் ஒன்றாக கட்டமைக்கப்படப் போகிறது. தனியொரு பலமான அடிக்கல் இந்த நாட்டில் நடப்படும். நல்ல வியூகமும், கட்டமைப்பும் கிடைக்கும். வலுவான பின்னணியிலிருந்து பொருளாதாரத்தை நகர்த்த முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும். பொருளாதார மாற்றச் சட்டமூலம் குறித்து பெருமளவில் பேசப்பட்டது. அது நல்ல விடயமாகும்.

(மத்திய வங்கி ஆளுநர்)

நிச்சயமாக இது கிடைக்கும். முதல்சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இதன்போது எமது யோசனைகளுக்கும், அவர்களின் யோசனைகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்தது. எனவே தான் இணக்கப்பாடுகள் இன்றி பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வந்தன.

ஐ.எம்.எவ். அல்லது பாரிஸ் கிளப் ஆகிய தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாத யோசனைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் இம்முறை பேச்சுவார்தைகளில் ஏற்கனவே இருந்த இடைவெளியை நாம் குறைத்திருக்கிறோம்.

கேள்வி: கடந்த காலத்திற்கு சென்றுபார்த்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர், நாம் அனுபவித்த, நாம் கடந்துவந்த அனுபங்கள் மூலம் நாம் தற்போது குறிப்பிடத்தக்க நல்ல நிலைக்கு வர முடிந்துள்ளது. ஆரம்பத்தில், அடுத்த மாதம் சம்பளத்தை எவ்வாறு வழங்குவது என்ற கேள்விகளுடன் இருந்த காலமும் இருக்கிறது. சில நேரம் கட்டம் கட்டமாக செலுத்துவோம் என்ற யோசனைகள் இருந்தன. தற்போது 10,000 ரூபா சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அனைத்தும் கிரமமாக முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் சம்பளத்தை அதிகரிக்குமாறு வீதியில் இறங்கி கோருகின்றனர். சம்பள முரண்பாடுகளைக் களையுமாறு கோருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: (நிதியமைச்சின் செயலாளர்) நான் இந்தப் பதவியை ஏற்று திறைசேரிக்குச் செல்லும்போது, எங்களுக்குத் தேவையான டொலர்கள் இருக்கவில்லை. ரூபா இருக்கவில்லை. அவ்வாறான நிலையில் இருந்து பல சிரமங்களுடன் நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.

சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு கோருகின்றனர். அந்தக் கோரிக்கைகள் நியாயமானவை. தொழிற்சங்கங்களின் அந்தக் கோரிக்கைகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை. காரணம், அவர்களுக்கும் தொழில் பிரச்சினைகளைப் போலவே வருமானம் குறித்த பிரச்சினைகளும் இருக்கின்றன.

உண்மையில், வருமானம் குறித்த பிரச்சினை நாட்டில் அனைவருக்குமே இருக்கிறது. நீங்கள் கூறியதைப் போல நாம் ஒரு நிலைக்கு வந்திருந்தாலும்கூட, எமக்கிருக்கும் அழுத்தங்கள் இன்னமும் முழுமையாக குறையவில்லை. நாம் இதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப் போகிறோம் என்ற கேள்வி இருக்கிறது.

இந்தக் காலகட்டம் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டிய காலமாக இருக்கிறது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நாம் இந்த நிலையை எட்டியிருக்கிறோம்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே சம்பளம் வழங்குவது உட்பட ஏனைய பணிகளை முன்னெடுத்து வருகிறோம். முன்னர் இருந்ததைப் போல மத்திய வங்கி பணத்தை அச்சிடும் சந்தர்ப்பமும் தற்போது எமக்கு இல்லை.

இன்னமும் குறிப்பிடத்தக்களவு மட்டுமே வெளிநாட்டுப் பணம் கிடைக்கிறது. கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டுப் பணம் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டம் கட்டமாகவே இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். எனவே, வெடித்துச் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.

வருமானமே எங்களுக்கு இருக்கும் மிகப் பெரிய குறைபாடு. வருமானத்தையே நாம் அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கிறோம். 8 வீதத்தில் இருந்து 15 வீதம் வரை வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இல்லாமல் போகும் பட்சத்தில் எமக்கிருக்கும் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும். இது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது. இதனை சரியாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொழிற்சங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. அதற்கான தீர்வுகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களையே நான் கூறுகிறேன். அவர்கள் கேட்பதைக் கொடுக்க எமக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையே இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நெருக்கடியின் போது சம்பளத்தை குறைக்காது வழங்கினோம். எனவே, தற்போதிருக்கும் நிலையில் இருந்து நல்ல நிலைக்கு செல்ல வேண்டுமாயின் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும். 2025ஆம் ஆண்டளவில் வருமானம் அதிகரிக்கும் வகையில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. நாம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: தற்பொழுது அரசியல் அரங்கும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இனிவரும் காலம் தேர்தல்கள் வரும் காலம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே, நாம் நாட்டை பணயம் வைக்கப் போகிறோமா? அல்லது அரசியல் ரீதியாக ஜனநாயகத்திற்குட்பட்டு அரசியல் தரப்பினருடன் இணைந்து பணிகளை முன்னெடுக்கப் போகிறோமா?அரச அதிகாரிகளுக்கும், பொதுவாக பொதுமக்களுக்கும் மத்திய வங்கி ஆளுநர் என்ற வகையில் சொல்லவிருப்பும் செய்தி என்ன?

பதில்: (மத்திய வங்கி ஆளுநர்) உண்மையில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில படிப்பினைகள் இருக்கின்றன. முதலாவது, கஷ்டத்தில் இருந்து நாம் இந்த இடத்திற்கு வருவதற்கு எமக்கொரு செயல்திட்டம் இருந்தது. இந்த செயல்திடத்தின் பிரதான அங்கமாக, நான்கு வருடகால செயல்திட்டத்திற்கமைய உதவிகளைச் செய்ய சர்வதேச நாணய நிதியம் சுயாதீனமாக இணக்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது, அடுத்த நான்கு வருடங்களில் நாம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுப்போம் என்ற உறுதியை வழங்குவதன் மூலம் ஏற்படும் நம்பிக்கையின் மூலமே எமக்கு கடன் வழங்கிய ஈ.பி.எவ். உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதனை மையப்படுத்தியே தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன.

நாம் இந்த செயல்திட்டதை தொடர்ந்து முன்னெடுப்போம், அதற்கமைய எமக்கு கடனை மீளச் செலுத்தும் திறன் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் கடன் வழங்குனர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடன் வழங்குனர்கள் சலுகைகளை வழங்கியிருந்தால், நாடென்ற வகையில் எமக்கொரு பொறுப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கையை பாதுகாத்துக் கொண்டு, இணக்கம் கண்ட அந்த பாதையில் பயணித்து கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைக் காத்துக் கொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டும்.

கேள்வி: நாம் கண்ட நெருக்கடியை மீண்டும் காண யாரும் விரும்ப மாட்டர்கள். மீண்டும் அந்த நிலையும், நெருக்கடியும் ஏற்படுவதை யாரும் விருப்ப மாட்டார்கள். பொது மக்களுக்கும், நிதியைக் கையாளும் அரச அதிகாரிகளுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பதில்:(நிதியமைச்சின் செயலாளர்) நாம் பயணிக்கும் இந்தப் பயணத்தை மிகவும் கவனமாக, நிதானமாக தொடர வேண்டும். 2022ஆம் ஆண்டு ஏன் நாம் ஐ.எம்.எப் சென்றோம் என்ற கேள்வியை நாம் எப்போதும் கேட்பதுண்டு.ஐ.எம்.எவ். செல்லத் தேவையில்லை எமக்கு மாற்று வழி இருப்பதாக சிலர் கூறினார்கள். ஆனால் இறுதியில் எமக்கு ஐ.எம்.எவ். செல்ல நேரிட்டது.

ஐ.எம்.எவ். இங்கு வரவில்லை. உண்மையில் நாம் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டோம். நாட்டில் நாம் பொருளாதாரத்தில் செய்ய வேண்டிய மறுசீரமைப்புக்களைச் செய்யாததால் இந்த நிலை ஏற்பட்டது. பொருளாதாரத்தை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகளை செய்ய வேண்டும். அந்தப் பணிகளை தற்போது முன்னெடுத்து வருகிறோம்.

இந்த மறுசீரமைப்புப் பணிகளின் போது அரசாங்கம் கொள்கை ரீதியாக எடுக்கும் சில தீர்மானங்கள் மிகவும் வேதனையானவை. மக்களுக்கும் மிகப் பெரிய அழுத்தங்கள் ஏற்படுகின்றன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division