Home » டி20 உலகக் கிண்ணம்: திருத்தங்கள் தேவை…

டி20 உலகக் கிண்ணம்: திருத்தங்கள் தேவை…

by Damith Pushpika
June 30, 2024 6:00 am 0 comment

எதிர்பாராத முடிவுகள், எதிர்பார்த்த சிக்கல்கள் என்று டி20 உலகக் கிண்ணப் போட்டி நிறைவடைந்தது. அடுத்து 2026 ஆம் ஆண்டு பத்தாவது டி20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தப்போகிறது.

இம்முறை முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை போட்டியை நடத்தும் நாடு என்பதால் எந்தப் பிரச்சினையும் இன்றி அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுவிட்டது. முதல் சுற்றில் வெளியேறிய மற்ற முன்னணி நாடுகளான பாகிஸ்தான், நியூசிலாந்து நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) தரவரிசையில் முன்னிலை பெற்றிருப்பதால் அடுத்த தொடருக்கு இடத்தைப் பிடித்துவிட்டன.

இம்முறை போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் உலகக் கிண்ணத்திற்கு முதல் முறை தகுதி பெற்ற அமெரிக்கா சுப்பர் 8 சுற்று வரை முன்னேறியதால் அடுத்த உலகக் கிண்ணத்தில் தமது இடத்தை உறுதி செய்திருக்கிறது.

அடுத்த உலகக் கிண்ணத்திலும் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில் இம்முறை சுப்பர் 8 இற்கு முன்னேறிய அணிகளுடன் ஐ.சி.சி. தரவரிசையில் முன்னிலை பெற்றிருக்கும் அயர்லாந்து அடுத்த தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறது.

இதன்படி 2026 உலகக் கிண்ணத்திற்கு 12 அணிகள் நேரடி தகுதி பெற்றிருக்கும் நிலையில் மற்ற எட்டு அணிகளும் பிராந்திய மட்டத்தில் நடைபெறும் தகுதி காண் சுற்றில ஆடி தனது தகுதியை உறுதி செய்ய வேண்டி இருக்கும்.

மற்றபடி அடுத்த டி20 உலகக் கிண்ணமும் இம்முறை நடந்த வடிவத்திலேயே நடைபெறப்போகிறது. இருபது அணிகளும் ஐந்து அணிகளாக பிரித்து ஆரம்ப சுற்றில் ஆடி, தொடர்ந்து சுப்பர் 8, பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்பது தான் திட்டம்.

டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் பங்கேற்றது இந்தத் தடவையே முதல் முறை, அமெரிக்காவில் உலகக் கிண்ணம் நடந்தது இம்முறை தான் முதலாவது. எனவே எத்தனையோ சாதக பாதகங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஏற்பட்ட குறைகளை அடுத்த உலகக் கிண்ணத்திலாவது சரி செய்வது முக்கியம்.

ஆடுகளம்

இம்முறை உலகக் கிண்ணத்தில் பெரிதாக எழுந்த பிரச்சினைகளில் ஒன்று ஆடுகளங்கள். குறிப்பாக ஆரம்ப சுற்று நடந்த அமெரிக்காவின் ஆடுகளங்கள் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கவில்லை என்பது பொதுவான குறை. அதிலும் நியூயோர்க் ஆடுகளம் பற்றி கூறவே தேவையில்லை.

உலகக் கிண்ணத்திற்காகவே அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட அந்த ஆடுகளத்தில் பந்து தன்னிஷ்டத்திற்கு வருகிறது. அங்கே எடுக்க முடியுமான அதிகபட்ச ஓட்டங்களே 120க்கும் குறைவு. இது டி20 கிரிக்கெட்டுக்கு பொருத்தமானதாக இல்லை.

பந்து துடுப்பாட்ட வீரர்களை நோக்கி அபாயகரமாக வருவதால் வீரர்கள் காயமடைவதற்கான சாத்தியங்களும் அதிகமாக இருந்தன. ஆரம்பப் போட்டிகளில் இந்த நிலை மோசமாக இருந்தபோதும் பிந்திய போட்டிகளில் ஐ.சி.சி. நிலைமையை சற்று சரி செய்தது. இதனால், நல்லவேளை துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பந்து பட்டு காயத்திற்கு உள்ளாகவில்லை.

அமெரிக்காவின் மற்ற மைதானங்கள் இந்த அளவுக்கு மேசமாக இல்லாதபோதும், டி20 கிரிக்கெட்டுக்கான தரத்தை கொண்டதாக இருக்கவில்லை.

அமெரிக்காவில் உலகக் கிண்ணத்தை நடத்துவது கிரிக்கெட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்தாலும், போட்டி ஏற்பாடுகளில் இதனை விடவும் கரிசணை காட்ட வேண்டி இருந்தது. அதிலும் கிரிக்கெட்டுக்கு முக்கியமாக இருக்கும் ஆடுகளங்கள் பற்றி அவதானம் முக்கியம்.

அடுத்த உலகக் கிண்ண போட்டிகள் சம்பிரதாயமாக கிரிக்கெட் ஆடும் நாடுகளில் நடைபெறுவதால் இந்தக் குறைகள் பெரிதாக இருக்க வாய்ப்பு இல்லை. என்றாலும் இந்தியாவின் சில ஆடுகளங்கள் கூட கடந்த காலத்தில் மோசமான தரத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்ததால் போட்டியின் உற்சாகத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

போட்டி அட்டவணை

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் போட்டிகளை நடத்துவது என்பதே கிரிக்கெட் உலகுக்கு சற்று அசௌகரியமானது. ஏனென்றால் கால அட்டவணை கிரிக்கெட் ஆடும் பெரும்பாலான நாடுகளுக்கு பொருந்துவதில்லை.

அமெரிக்காவில் இரவு என்றால் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பகலாக இருக்கும், அங்கே பகலாகும்போது இங்கே இரவாக இருக்கும். அதிலும் ஆபிரிக்க, ஐரோப்பிய பிராந்தியங்களைப் பொறுத்தவரை இம்முறை உலகக் கிண்ணம் நள்ளிரவு வாக்கிலேயே நடைபெற்றதால், கண் முழித்து பார்ப்பது சற்று கடிமாக இருந்தது.

என்றாலும் கிரிக்கெட் பார்க்கும் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஏற்ப போட்டிக்கான கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக இந்திய ரசிகர்களை இலக்கு வைத்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதனாலேயே கிரிக்கெட் பார்ப்பதற்கு கச்சிதமான நேரமான இரவு 8 மணிக்கு முக்கிய போட்டிகளை நடத்துவதற்கு ஐ.சி.சி. வகை செய்தது. என்றாலும் பாதி அளவான போட்டிகள் அதிகாலையில் நடந்ததால் விடுபட்டுப்போனது அதிகம்.

மற்றது அமெரிக்காவில் புயல் காற்று வீசும் பருவத்தை பார்த்து போட்டிகள் நடத்தப்பட்டதால் சில முக்கியமான ஆட்டங்கள் மழையோடே வடிந்து போயின. குறிப்பாக புளோரிடாவில் ஒரு வாரத்துக்கு மேலாக புயல், மழை தாக்கி பேரும் பாதிப்புகள் ஏற்பட்ட பருவத்திலேயே அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதனால் அங்கு நடைபெற வேண்டிய இலங்கை–நேபாளத்திற்கு இடையிலான ஆட்டம், அமெரிக்கா–அயர்லாந்துக்கு இடையிலான ஆட்டம், கனடா–இந்தியாவுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டன. குறிப்பாக இதனால் அமெரிக்காவுக்கு கிடைத்த மேலதிக ஒரு புள்ளி அந்த அணி பாகிஸ்தானை வெளியேற்றி சுப்பர் 8 இற்கு முன்னேற பெரிதும் உதவியது.

ஹரிகன் புயலால் இலங்கை அணி ஒரு நாள் வெளியேற முடியாமல் புளோரிடாவில் சிக்கிக் கொண்டது.

மற்ற முக்கியமான விடயம் போட்டி அட்டவணையில் சமநிலை போக்கு இருக்கவில்லை. ஆரம்ப சுற்றில் சில அணிகளுக்கு ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு மைதானங்களிலும் வேறு சில அணிகளுக்கு பெரும்பாலான ஆட்டங்கள் ஒரே மைதானத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் சில அணிகள் பயணச் சுமைக்கு மத்தியிலேயே போட்டியில் ஆட வேண்டி இருந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அணியாக இலங்கையை குறிப்பிடலாம். இலங்கைக்கு ஆரம்ப சுற்றின் நான்கு போட்டிகளும் தொலை தூரங்களில் வௌ;வேறு மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நியூ யோர்க்கில் நடந்த முதல் போட்டி முடிந்த கையோடு இலங்கை வீரர்களால் ஹொட்டல் அறைக்கு ஓட்டம் பிடிக்க வேண்டி இருந்தது. அந்த ஹோட்டல் புரூக்லியில் இருந்தது. அது போட்டி நடந்த மைதானத்தில் இருந்து ஒன்றரை மணி நேர தூரம். உடனடியாக புறப்பட்டால் தான் டலாஸ் செல்வதற்கு விமானத்தை பிடிக்க முடியும். டலாஸிலேயே பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது போட்டி இருந்தது.

இதன் பின்னரும் ஓய்வெடுக்க நேரம் இருக்கவில்லை. புளொரிடாவில் நேபாளத்திற்கு எதிரான போட்டிக்கு புறப்பட வேண்டி இருந்தது. அங்கே புயல், மழை நெருக்கடியை தந்தது. கடைசி போட்டிக்கு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்ல வேண்டி இருந்து. இலங்கை போன்று நெதர்லாந்தின் போட்டிகளும் ஒவ்வொரு தொலைவில் இருந்தன.

இந்தியா–பாகிஸ்தான்

அண்டை நாடுகளாக இருந்தாலும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரு தரப்புக் கிரிக்கெட் போட்டிகள் நடப்பது என்பது இன்றைய சூழலில் சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விட்டது. 2013 ஆம் ஆண்டிலேயே இந்த இரு அணிகளும் கடைசியாக இரு தரப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆடி இருக்கின்றன.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு இருக்கும் கேள்வி அதிகம். சர்வதேச விளையாட்டில் மிக முக்கியமான போட்டியாக இன்றைய திகதியில் அது மாறி இருக்கிறது. வர்த்தக ரீதியில் இந்தியா–பாகிஸ்தான் போட்டி என்பது பெருத்த இலாபத்தைத் தரும் ஆட்டம்.

எனவே, ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஆட வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இம்முறை உலகக் கிண்ணத்திலும் இதனைப் பார்க்க முடிந்தது.

ஆரம்ப சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குழுவில் சேர்க்கப்பட்டு இரு அணிகளும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு ஏற்ப இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியை விடவும் பரபரப்புத் தந்தது. அரங்கு நிரம்பிய ரசிகர்கள், பலத்த பாதுகாப்பு என்று அமெரிக்காவே ஆட்டம் கண்டது.

இயல்புக்கு அப்பால் சில நேரங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் திணிக்கப்படுவது ஒட்டுமொத்த தொடரின் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே போட்டிகளுக்கான அணிகளை பிரிக்கும்போது சமநிலையான அளவுகோல் ஒன்றை கையாள்வது ஆரோக்கியமானது.

என்றாலும் பொருளாதார மற்றும் நிர்வாக நிர்ப்பந்தங்கள் இருக்கும்போது அடுத்த உலகக் கிண்ணத்திலேனும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சந்திக்கும் போட்டியை தவிர்ப்பது என்பது சற்று அசாத்தியமானது தான். ஆனால் அது ஒட்டு மொத்த தொடரின் சமநிலையை பாதிக்காமல் இருப்பது நல்லது.

முன் திட்டமிடல்கள்

போட்டிகளை நடத்தும்போது முன் திட்டமிடல்கள் அவசியம். ஆனால் அது ஏற்பட்டு ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டிகளின் முடிவை முன் கூட்டியே கணித்து அதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்வது நல்லதல்ல. ஆனால், இம்முறை உலகக் கிண்ணத்தில் போட்டிகளின் முடிவை முன்கூட்டியே கணித்து அட்டவணை வகுக்கப்பட்டது போன்ற தோற்றம் தெரிகிறது.

பலமான அணி, பலவீனமான அணி, பொருளாதார ரீதியில் வளமான அணி மற்றும் வளமில்லாத அணி என்று இருந்தாலும் அது போட்டி ஏற்பாட்டில் தாக்கம் செலுத்தக் கூடாது. ஆரம்பச் சுற்றில் பொதுவாக எதிர்ப்பு நிலை வலுத்த அணிகளான இந்தியா எதிர் பாகிஸ்தான், இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை எதிர் பங்களாதேஷ் அணிகள் ஒரே குழுவில் சேர்க்கப்பட்டது தற்செயலானது என நினைக்க முடிவதில்லை.

சுப்பர் 8 சுற்றிலும் இதே கதை தான். அதாவது சுப்பர் 8 சுற்றுக்கு பிரதான எட்டு அணிகளான இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை முன்னேறும் என்ற அனுமானத்துடனேயே போட்டி அட்டவணை வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிகள் முன்னேறாத பட்சத்தில் அந்த இடத்தில் முன்னேறும் அணி குறித்த குழுவில் சேர்க்கப்பட்டது.

இதனால் சுப்பர் 8 சுற்றில் இரு குழுக்களிலும் சமநிலை போக்கு சற்று குறைவாகவே இருந்தது. என்றாலும் ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்ததை விடவும் திறமையை வெளிப்படுத்தியதால் அந்தக் குழுவில் அவுஸ்திரேலிய அணி வெளியேறியது அந்த ஏற்றத் தாழ்வை சரி செய்வதாக இருந்தது.

ஆனால் ஆப்கான் அணி அரையிறுதியில் எந்த விறுவிறுப்பும் காட்டாமல் தென்னாபிரிக்காவிடம் தோற்றது, ஒப்பீட்டளவில் பலவீனமான அணி ஒன்று உயர்மட்டப் போட்டிகளில் காண்பிக்கும் சொதப்பலாகவே தெரிகிறது.

கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியா தான் வல்லரசு. அதன் ரசிகர்கள் அதனை ஒட்டி உருவாகி இருக்கும் பொருளாதார பலத்தால் இந்தியாவை மையப்படுத்தி அட்டவணை வகுக்கப்படுவது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியா சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் அதன் போட்டி அட்டவணை எப்படி இருக்க வேண்டும், அரையிறுதியில் எப்படி இருக்க வேண்டும், இறுதிப் போட்டி எப்படி அமைய வேண்டும் என்பது எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறினால் அது இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆட வேண்டும் என்பது முன் திட்டமிடப்பட்டது. இந்தியா தொடரில் இறுதிக் கட்டம் வரை முன்னேறுவது என்பது இலாபத்தைத் தரும் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு ஏற்ப போட்டி அட்டவணையும் முன் கூட்டியே திட்டமிடப்படுகிறது.

எனினும் போட்டியின் முடிவு, மற்ற அணிகளின் திறமை அடிப்படையில் அட்டவணை மாறுகிறது.

அடுத்த உலகக் கிண்ணம் இந்தியாவிலும் நடைபெறப் போவதால் முன்கூட்டிய திட்டமிடல்கள் போட்டிக்கு ஆரோக்கியமான வகையில் இருப்பது நல்லது.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division