சர்வதேச அரசியலில் ஜனநாயகம் பற்றிய உரையாடல்கள் முதன்மைபெறும் அளவிற்கு இராணுவ சதிப் புரட்சி, எதேச்சதிகார ஆட்சி, சிறுகுழு ஆதிக்கம் எனும் ஜனநாயக முரண் ஆட்சிமுறைகளும் சர்வதேச செய்திகளை தொடர்ச்சியாக நிரப்பிக்கொண்டே வருகின்றன. நாளடைவில் அது சாதாரணமாகிவிடும் நிலைமைகளும் காணப்படுகின்றன. கொவிட்-19 காலத்தில் மியான்மார் மற்றும் ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் இராணுவப்புரட்சி இடம்பெற்றிருந்தது. இன்றுவரை தொடர்கின்றது. எனினும் அவை சாதாரண அரசியல் சூழலாகவே காணப்படுகின்றது. சமகாலத்தில் பொலிவியாவில் ஏற்பட்டிருந்த இராணுவ சதிப்புரட்சியும் முறியடிப்பும் ஜனநாயகத்தின் வெற்றியாக அவதானிக்கப்படுகின்றது. மறுதளத்தில் பொலிவியாவின் இராணுவப்புரட்சி, ஆட்சியாளரின் சதி முயற்சி என்ற குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதி முன்வைத்துள்ளமை, ஜனநாயகம் சார்ந்த உரையாடலை கேள்விக்குட்படுத்துகிறது. பொலிவியாவின் கடந்த கால அரசியல் காலாசாரமும் மரபும் ஜனநாயகத்திலிருந்து நீண்ட இடைவெளியையே பேணுகின்றது. சோசலிச புரட்சி மற்றும் இராணுவ சதிப்புரட்சிகளுக்குள்ளேயே பொலிவியாவின் நீண்டகால அரசியல் மரபு கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை சமகாலத்தில் முதன்மைபெறும் இராணுவ சதிப்புரட்சியின் அரசியலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பொலிவியா நீண்ட அரசியல் புரட்சி மரபுகளை பேணுகின்றது. வரலாற்றில் மகத்தான புரட்சியாளராக கருதப்படும் சேகுவேராவின் மரணமும் பொலிவியிய புரட்சியின் ஒரு பகுதியாகவே அமைகின்றது. 1950களில் இருந்து பல அரசியல் புரட்சி முயற்சிகளைக் கண்டுள்ளது. அமெரிக்க கல்வியாளர்களான ஜொனாதன் பவல் மற்றும் கிளேட்டன் தைன் ஆகியோரின் தரவுப் பகுப்பாய்வின்படி, பொலிவியா 1950 முதல் 23 ஆட்சிக் கவிழ்ப்புகளை எதிர்கொண்டுள்ளது. அவற்றில் 12 தோல்வியடைந்தன. பொலிவிய வரலாற்றாசிரியரும் பத்திரிகையாளருமான ராபர்ட் ப்ரோக்மேன் “எப்படி கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து, அசாதாரண எண்ணிக்கையிலான ஆட்சிக்கவிழ்ப்புகள் உள்ளன. அது ஜனாதிபதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இருந்தால், நீங்கள் உண்மையில் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் சிலர் அரை மணி நேரம் மட்டுமே நீடித்தனர்” எனக்குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் 2019ஆம் ஆண்டு மொரேல்ஸின் கட்டாய இராஜினாமாவை சோசலிசத்துக்கான இடதுசாரி இயக்கம் சதியாகவே விளக்கியிருந்தது. மீள ஐந்தாண்டு இடைவெளிகளில் ஜூன்-26, 2024அன்று இராணுவ சதிப்புரட்சி முயற்சி இடம்பெற்றுள்ளது.
பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி மாளிகை பலாசியோ கியூமாடோ, இராணுவத் தலைவர் ஜுவான் ஜோஸ் சூனிகா தலைமையிலான கிளர்ச்சி வீரர்களின் குழுவால் ஜூன்-26 வன்முறையில் தாக்கப்பட்டது. பலாசியோ கியூமாடோ மாளிகை எரிந்த அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இந்த புனைப்பெயர் 1875ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பிலிருந்து வந்தது. ஒரு கும்பல் அருகிலுள்ள கதீட்ரலில் இருந்து தீப்பந்தங்களை எறிந்து, அரசாங்கத்தின் இருக்கையை முடக்க தீயை ஏற்படுத்தியது. லா பாஸில் பிளாசா முரில்லோவில் உள்ள தற்போதைய கட்டிடம் மீண்டும் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர், அதன் வரலாற்றைக் குறிக்கும் பல வன்முறை அணிதிரட்டல்கள், எழுச்சிகள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்புகளை அது கண்டுள்ளது. இந்த வரிசையில் தற்போதைய வன்முறை கிளர்ச்சி புதியதொரு பதிவாகியுள்ளது. எனினும் இராணுவ சதிப்புரட்சிக்கான முயற்சி மக்கள் அணிதிரட்டலால் தடுக்கப்பட்டுள்ளது. ஈவோ மொரால்ஸ் நிர்வாகத்தின் போது, அரசாங்கத்தின் இருக்கையாகக் கட்டப்பட்ட பலாசியோ கியூமாடோவிற்கு அடுத்துள்ள நவீன கட்டடமாகிய காசா கிராண்டே டெல் பியூப்லோவில், பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், சதி முயற்சிக்கு எதிராக பொலிவிய மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ச்சியாக புதிய இராணுவத் தலைமையை நியமித்தார். மக்களின் அணிதிரட்டலால், கிளர்ச்சி வீரர்கள் பின்வாங்கினர். இராணுவ சதி முயற்சி நீண்ட நாட்கள் நீடிக்காவிடினும், பொலிவியாவின் அரசியல் ஸ்திரமின்மையின் நீண்ட வரலாற்றில் இது மற்றொரு அத்தியாயமாக அமையப்பெற்றுள்ளது.
இராணுவ சதிப்புரட்சி முறியடிப்பை பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் ஜனநாயக வெற்றியாக அறிவித்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாட்டில் இராணுவத்தின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திய பிறகு, “பொலிவிய மக்களுக்கு மிக்க நன்றி. வாழ்க ஜனநாயகம்” எனத் தெரிவித்திருந்தார். அதேவேளை இராணுவ சதிப் புரட்சியை மேற்கொண்ட இராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் சூனிகா பொலிவிய ஜனாதிபதியின் கட்டளையிலேயே சதிப்புரட்சியை அரங்கேற்றியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். 2025ஆம் ஆண்டு பொலிவியா ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வலுவிழந்துள்ள ஆதரவை மீட்பதற்காகவே லூயிஸ் ஆர்ஸ் இராணுவ சதிப்புரட்சிக்கான தூண்டுதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எனினும் ஆர்ஸ், தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக சதி முயற்சியை திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். கூற்றுக்களை பொய் என்று முத்திரை குத்தியுள்ளார்.
பொலிவிய வரலாறுதோறும் ஆட்சி மாற்றங்கள் ஸ்திரமற்ற அரசியல் சூழலுக்குள்ளேயே தொடர்வதை மரபாக பேணுகின்றது. 1950களிலிருந்து ஆட்சி கவிழ்ப்புகள், கிளர்ச்சிகள், புரட்சிகள் பொலிவியாவில் சாதாரணமாகியுள்ளது. உலக வரலாற்றிலேயே சோஷலிச புரட்சிகளுக்கு பின்னர், அமெரிக்காவின் தலையீட்டுகளுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் பலவும் சர்வதிகார அல்லது இராணுவ சகதிக்குள் பயணிக்கும் ஆட்சியாகவே உருமாற்றம் பெற்றுள்ளது. நிலையானதொரு ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியவில்லை. இது அமெரிக்காவின் தாராள கொள்கையுடன் பொருந்தக்கூடியதாக இல்லாத போதிலும், சோசலிசத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற முனைப்பில் சர்வாதிகார, இராணுவ ஆட்சிகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தாராண்மைவாத போலிகளின் வெளிப்பாடாகும். இத்தகைய அரசியல் கலாசாரத்தையே பெருமளவு இலத்தீன் அமெரிக்க நாடுகள் பகிர்கின்றன.
பொலிவியாவில் 2020ஆம் ஆண்டு இறுதியாக ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அரசியல் கொந்தளிப்புக்கள் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற சூழலின் தொடர்ச்சியாகவே அமைந்திருந்தது. 60 வயதான தற்போதைய பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் நவம்பர்- 2020இல் பொலிவியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 2006 முதல் நீண்டகால இடதுசாரி ஜனாதிபதியாக இருந்த ஈவோ மோரல்ஸ் இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட அரசியல் கொந்தளிப்புக்குப் பிறகே ஆர்ஸ் ஜனாதிபதி பதவியை பெற முடிந்தது. அப்போதைய எதிர்க்கட்சி செனட்டர் ஜீனைன் அனெஸ் தன்னை இடைக்கால ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஜனாதிபதி பந்தயத்தில் இருந்து அனெஸ் வெளியேறினார். 2022ஆம் ஆண்டு தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்த சதியை நடத்தியதற்காக 10 ஆண்டுகள் அனெஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
லூயிஸ் ஆரஸ் முதலில் ஒரு பொருளாதார நிபுணராக 2005இல் மொரேல்ஸின் முதல் ஜனாதிபதி முயற்சிக்கான பொருளாதாரத் திட்டத்தை வடிவமைத்தார். 2006இல், மொரேல்ஸ் அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சராகவும் ஆர்ஸ் செயற்பட்டிருந்தார். எனினும் சமீபத்திய ஆண்டுகளில், ஆர்ஸ் மற்றும் மோரல்ஸ் பதற்றங்கள் உருவாகின. அவர்கள் ஒவ்வொருவரும் சோசலிசத்துக்கான இடதுசாரி இயக்கத்தினை இரு பிரிவாக வழிநடத்துகிறார்கள். 2020 தேர்தல் மற்றும் அதன் பின்னர் ஆர்ஸின் ஆலோசகராக செயற்பட்டிருந்த மொரேல்ஸ், 2025ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு தற்போதைய ஜனாதிபதி ஆர்ஸை சவால் செய்வேன் என்று கூறியுள்ளார். இது சோசலிசத்துக்கான இடதுசாரி இயக்கத்திற்குள் இரு பிரிவு மேலாதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால் அரசியலமைப்பு நீதிமன்றம் மொரேல்ஸ் நான்காவது முறை போட்டியிடுவதைத் தடுக்கிறது.
ஆர்ஸின் 2020 ஜனாதிபதித் தேர்தல், பொலிவியா ஸ்திரத்தன்மைக்கு திரும்புவதைக் குறித்தது. இருப்பினும், பொலிவியா அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை சமகாலத்தில் எதிர்கொண்டது. பொருளாதார மந்தநிலை, கொடுப்பனவு நெருக்கடி, உயர் பணவீக்கம் மற்றும் அதிக வேலையின்மை விகிதங்கள் ஆகியவற்றுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இரண்டு தசாப்தங்களில் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. பொலிவியன் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயம், குறிப்பாக அமெரிக்க டொலர்கள், நிதி நிலைத்தன்மை மற்றும் சந்தை முன்கணிப்பு ஆகியவற்றிற்காக பொலிவிய நடுத்தர வர்க்கத்தின் பெரும்பகுதியை நம்பியிருக்கிறது. பொலிவியாவின் மின்சார உற்பத்தியில் சமீபத்திய ஊழல்கள், தொலைதூரப் பகுதிகளில் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தின் நீண்டகால பற்றாக்குறை உட்பட, கொந்தளிப்பை உண்டுபண்ணியிருந்தது.
இந்நிலையில், பொலிவியாவின் பொருளாதார நெருக்கடிக்குள் சமகாலத்தில் வல்லாதிக்க போட்டியில் ஈடுபடும் அமெரிக்காவும் சீனாவும் தமது நலன்களை தேட முயற்சிக்கின்றன. லா பாஸில் உள்ள சோஷலிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்துடனான அதன் மோசமான உறவுகளைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா பொலிவியாவை முதன்மைப்படுத்திய நிலையில், பொலிவியாவின் உதவிக்கு வரவும், பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் சீனா விரைவாக அணிதிரட்டுகிறது. கொவிட்-19 தொற்றுநோய் உட்பட சமீப காலங்களில் பொலிவியாவிற்கு பிற நெருக்கடிகளை சமாளிக்க சீனா உதவி செய்துள்ளது. அங்கு பீஜிங்கின் மக்களுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகளைப் பரிசளித்தது. சீனாவின் நிதியுதவி மற்றும் மூலோபாய முதலீடுகள் பொலிவியாவை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் அதேவேளையில், தென் அமெரிக்க நாட்டின் பொருளாதார சார்புநிலையை அமெரிக்காவிடம் இருந்து மாற்றும் என்பதால், கூட்டாண்மை மூலம் சீனா அதிக லாபம் ஈட்டுகிறது. சீனா- செலாங் மன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில், பீஜிங்கிற்கும் லா பாஸுக்கும் இடையிலான பேச்சுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் அடிக்கடி நடந்துள்ளன.
ஏப்ரல் பிற்பகுதியில், பொலிவியாவின் வெளியுறவு அமைச்சர் செலிண்டா சோசா லுண்டா சீனாவிற்கு விஜயம் செய்து அவர்களின் வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வளர்ப்பது குறித்து ஆலோசித்தார். சீனா சார்பு பொலிவியாவின் உறவு வளர்ச்சி, அமெரிக்காவுக்கு பிராந்திய நெருக்கடி சார்ந்தாகும். இந்த பின்னணியில் பொலிவியாவின் ஸ்திரமின்மை அமெரிக்காவின் தேவைப்பாடாக அமையக்கூடியதென்று கடந்த கால அமெரிக்க வெளியுறவுக்கொள்கைகளை முதன்மைப்படுத்தும் சர்வதேச அரசியல் அவதானிகளிடையே உரையாடல் காணப்படுகின்றது.
எனவே, பொலிவியாவின் இராணுவ சதிப் புரட்சியின் முயற்சிகளுக்கு பின்னால் பல்வேறு குழப்பகரமான செய்திகள் காணப்படுகின்றன. அரசியல் ஸ்திரத்தன்மைசார் குழப்பங்கள் இலத்தின் அமெரிக்காவின் அல்லது பொலிவியாவின் அரசியல் கலாசாரமெனவும் கடந்து செல்ல முடியாது.
பொலிவியாவின் விம்பம் அமெரிக்க ஊடகங்களால் கட்டமைக்கப்படுவதாக இலத்தின் அமெரிக்க நிபுணர்கள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பத்திரிக்கையாளர் ரபேல் கூறுகையில் “ஆர்கோண்டோ, 2019 நெருக்கடியின் போது அல்லது ஜூன்- 26அன்று கூட இராணுவம் ஒரு நிமிடம் கூட ஆட்சி செய்யவில்லை. பொது ஒழுங்கு பராமரிக்கப்பட்டதில் இருந்து ஒரு சதி கூட இடம்பெறவில்லை “எனவாதிடுகிறார். ஆளும் சோஷலிசத்திற்கான இயக்கத்தின் உள் மோதலின் ஒரு பகுதியாக பிளாசா முரில்லோவில் ஜூனிகா தலைமையிலான கிளர்ச்சியை பத்திரிகையாளர்கள் ரபேல் ஆர்கோண்டோ மற்றும் ப்ரோக்மேன் பார்க்கிறார்கள். ஐதரோகார்பன்கள் மற்றும் டொலர் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் முன்னாள் ஜனாதிபதி மொரேல்ஸுக்கும் அவரது வாரிசான லூயிஸ் ஆர்ஸுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் வெளிப்பாடாக அதனைச் சுட்டுகின்றார்கள். இதில் பொலிவியாவின் ஸ்திரமின்மைசார் விம்பத்தை கட்டியெழுப்ப மேற்கு ஊடகங்கள் வலிந்து நிற்கின்றன என்ற குற்றச்சாட்டும் ஆழமாக பொதிந்துள்ளது.