அமெரிக்காவின் கிரிக்கெட் வரலாறு நூற்றாண்டுக்கு மேல் பழையது. என்றாலும் அதற்கு கிரிக்கெட் மரபு ஒன்று இல்லை. பேஸ்போல், அமெரிக்க புட்போல் என்று அதன் விளையாட்டுகள் தனித்துவம் கொண்டவை. பெரும்பாலும் அமெரிக்காவுக்கு அப்பால் விளையாடப்படுவதில்லை.
இதனாலேயே அமெரிக்காவில் டி20 உலகக் கிண்ணம் நடத்தப்பட்டு அந்த அணியும் உலகக் கிண்ணத்தில் ஆடி முதல் போட்டியில் கனடாவை ஏழு விக்கெட்டால் வீழ்த்தும்போது கூட கிரிக்கெட் உலகம் அலட்டிக்கொள்ளவில்லை.
என்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சுப்பர் ஓவர் வரை சென்று சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்தியபோது உண்மையிலேயே அது வரலாற்று முக்கியம் வாய்ந்த வெற்றிதான். இந்த வெற்றி அமெரிக்காவை சுப்பர் 8 வரை அழைத்துச் சென்றது. இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற பலம்மிக்க அணிகள் ஆரம்ப சுற்றுடன் வெளியேறியபோது அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் ஆட்டப் போக்கும் எந்த அணிக்கும் சளைத்ததாக தெரியவில்லை. அது ஆரம்ப சுற்றில் பலம்மிக்க இந்தியாவை எதிர்கொண்டபோதும் சுப்பர் 8 இன் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொண்டபோதும் எதற்கும் பயப்பட்டதாகவோ, தடுமாறியதாகவே தெரியவில்லை.
அமெரிக்காவால் இது எப்படி சாத்தியமானது?
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் இணை அங்கத்துவ நாடுகளுக்கு ஒருநாள் சர்வதேச அந்தஸ்த்து வழங்கும் காலம் ஐந்தில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்பட்டபோது, 2019 ஆம் ஆண்டு அமெரிக்க கிரிக்கெட்டுக்கு அந்த அந்தஸ்த்து கிடைத்தது.
அப்போதே அமெரிக்க கிரிக்கெட் திறமையான வீரர்களை தேட ஆரம்பித்தது. உள்நாட்டில் முறையான கிரிக்கெட் கட்டமைப்பு இல்லாதபோது அது வீரர்களை உலகெங்கும் தேடியது. அதிர்ஷ்டவசமாக அண்டைய கரீபியன் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் போன்ற கிரிக்கெட் மரபு கொண்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் மக்கள் அமெரிக்காவில் ஏகத்துக்கு இருக்கிறார்கள். அவர்களே அமெரிக்க கிரிக்கெட்டின் உயிர் நாடிகள்.
இப்படியக பல வீரர்கள் தேசிய அணிக்காகவே அழைக்கப்பட்டார்கள். மேலும் சிலர் நாட்டுக்குள் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் காட்டும் திறமை அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள்.
குறிப்பாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கொரி அன்டர்ஸர் அமெரிக்க அணியில் ஆடுவதற்கான தகுதியை 2023 ஆம் ஆண்டு பெற்றார். அவரை பற்றி பிரத்தியேகமாக குறிப்பிட வேண்டியதில்லை. அதிரடியாக துடுப்பெடுத்தாடுவார். பயனுள்ள பந்துவீச்சாளரும் கூட. சர்வதேச மற்றும் லீக் கிரிக்கெட்டில் அனுபம் பெற்றவர்.
இதே ஆண்டில் தான் ஹார்மீத் சிங்கும் அமெரிக்க அணியில் சேர்ந்தார். மும்பையில் பிறந்து வளர்ந்த சகலதுறை வீரரான ஹார்மீத் இந்தியாவுக்காக 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஆடியவர். தொடர்ந்து இந்திய பிரீமியர் லீக்கிலும் இடம்பெற்றார். என்றாலும் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் சிக்கி பின்னர் விடுதலை பெற்றார். அது அவரது கிரிக்கெட் வாழ்வை ஸ்தம்பிக்கச் செய்தது. பின்னர் கொவிட் பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவுக்குச் சென்றார்.
ஷயான் ஜஹங்கீர் காராச்சியில் வளர்ந்த பெரும் நம்பிக்கை தந்த இளம் துடுப்பாட்ட வீரராக இருந்தவர். அவர் 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணிக்கு ஆடியவர். பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் இல்லாத காலத்தில் அமெரிக்கா போய் கழக மட்ட கிரிக்கெட்டில் ஆடினார். கடைசியில் 2018 ஆம் ஆண்டு நிரந்தரமாக அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு குடிபெயர்ந்தார்.
அமெரிக்க அணியில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு திறமையான வீரரான சான்ட்லி வான் செல்க்விக் தென்னாபிரிக்காவில் உள்ளூர் கிரிக்கெட் ஆடியவர். கிட்டத்தட்ட 500 விக்கெட்டுகள் மற்றும் 4,000 ஓட்டங்களை பெற்றபோதும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெறத் தவறினார். விரக்தியில் அமெரிக்க அணியில் சேர்ந்துவிட்டார்.
அமெரிக்க நட்சத்திர வீரர் ஆரோன் ஜோன்ஸ் துடுப்பாட்டத்தில் பந்துகளை பறக்கவிட்டு வருபவர். அவர் பார்படோஸ் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பார்படோஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்து ஆடி வந்தார். மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அவரது இரத்தத்தில் இருப்பது அவரது ஆட்டத்தை பார்த்தாலேயே புரிந்துவிடும்.
புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவன் டெய்லர் 2019 தொடக்கம் அமெரிக்க அணியின் முக்கிய வீரர். ஆனால் ஒரு காலத்தில் அவர் ஜமைக்கா அணியில் அடியவர். எனவே அவருக்கு கிரிக்கெட் பற்றி புதிதாக எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
அமெரிக்க அணியின் முதுகெலும்பாக இருப்பவர் சவுராப் நட்ராவால்கர். இவர்தான் பாகிஸ்தானுக்கு எதிராக சுப்பர் ஓவரில் அமெரிக்காவின் 18 ஓட்டங்களை காத்து பந்து வீசியவர். மும்பையில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நட்ராவால்கர் தொழில்நுட்ப நிறுவனமான ஒரேகலில் முதன்மை பொறியியலாளர் ஒருவராக வேலை பார்ப்பவர். பொறியியல் வேலைக்கு அப்பால் ஒரே இரவில் கிரிக்கெட் உலகில் ஹீரோ ஆகிவிட்டார்.
நட்ராவால்கர் 2010 இல் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஹாமீத் சிங்குடன் சேர்ந்து இந்திய அணிக்காக ஆடியவர். அந்தத் தொடரில் அவர்தான் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவராவார். அந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் மிச்சல் மார்ஷ், ஜோஷ் ஹேசல்வூட் மற்றும் அடம் சம்பா, அதேபோன்று இங்கிலாந்தின் பென் ஸ்டொக்ஸ் உடன் நட்ராவால்கரும் இருந்தார்.
என்றாலும் நட்ராவால்கரால் இந்திய கிரிக்கெட்டின் உச்சத்தை தொட முடியாது என்றபோது மேற்படிப்புக்காக 2015 இல் அமெரிக்கா புறப்பட்டார். படிப்பு, வேலைக்கு மத்தியில் கிரிக்கெட்டும் ஆடிய அவருக்கு அமெரிக்க தேசிய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கவில்லை.
அமெரிக்க அணி கட்டமைக்கப்பட்ட பின்னர் அந்த அணிக்கு சர்வதேச தரத்திலான பயிற்சியாளர் ஒருவர் உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் சேர்க்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல அஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டுவட் லோ.
திறமை படைத்த ஆனால் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அற்ற இந்த அணியை அவர் கச்சிதமாக கட்டமைத்தார்.
‘இந்த வீரர்கள் வேறு நாடுகளில் இருந்த சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்கா வந்தவர்கள். இவர்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு அன்றி தமது குழந்தைகள் அல்லது தமது கல்விக்காக இங்கு வந்தவர்கள். கிரிக்கெட்டை அமெரிக்க மயப்படுத்துவதற்கு நாம் முயன்று வருகிறோம்’ என்கிறார் ஸ்டுவட் லோ.
அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் அடைவது மற்றும் வளர்வது கிரிக்கெட்டின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக இருக்கும். இப்போது ஆடும் அமெரிக்க அணி இதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட இருக்கலாம். என்றாலும் இதற்கு அமெரிக்கா திறமைகளை நாட்டுக்கு வெளியில் தேடுவதை விட உள்நாட்டில் தேடும் நிலைக்கு முன்னேறுவது எல்லாவற்றையும் விட முக்கியமானது.