தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 50 இற்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தையடுத்து ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
நேற்று வரை 52 பேர் மரணமடைந்துள்ளனர். நச்சுமதுபானம் அருந்தியவர்களில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்று அஞ்சப்படுகின்றது.
நேற்றுவரை 52 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 100 இற்கும் அதிகமானவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபான பலி தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. நேற்று தமிழகத்தின் பல இடங்களில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ள போதிலும், விஷமதுபான மரணங்களையடுத்து தி.மு.க மீது கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சட்டவிரோத மதுபானத்துக்கு தி.மு.க அரசே பொறுப்பேற்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்திலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மெதனோல், அங்கிருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு எடுத்து வரப்பட்டு, அவை விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலையில் இருந்து மூலிகைச் சாராயம் எனப்படும் கடுக்காய் சாராயம் கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வரப்பட்டு போதை கூடுதலாக கிடைக்க மெதனோல் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டதால்தான் இம்மரணங்கள் இடம்பெற்றன என்று தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை வைத்து எதிரணிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, சமூகவிரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்” என்று கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் சுமார் 100 பேர் உள்ளக நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த ராஜ் என்ற கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லீட்டர் மெதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மூவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பெண்களும் உள்ளனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பொலித்தீன் பக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் அமோகமாக நடைபெற்று வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பக்கெட் மதுபானம் குடித்த 50 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
விஷ சாராய விற்பனையை கட்டுப்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்ககத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ள மதுபானம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்யும் மலை கிராம மக்கள், விளைச்சலில் போதிய அளவுக்கு வருவாய் இல்லாத காரணத்தால் இது போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் இருந்துதான் இந்த கள்ளச்சாராயம் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடர்ந்த காட்டுப் பகுதியான கல்வராயன் மலையில், ஆள் நடமாட்டமே இல்லாத மலைக் குன்றுகளில் தண்ணீர் பாய்ந்து ஓடக்கூடிய ஓடைகளில் ஓரமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுள்ளது.
கள்ளச்சாராம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட அடுப்புகளும், கள்ளச்சாராய பாக்கெட்டுகளும் அங்கே சிதறி கிடக்கின்றன. குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளனர். கள்ளச்சாராயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கடுக்காய் உள்ளிட்டவையும் அங்கு கொட்டி கிடந்தன.
ஆள்நடமாட்டம் இல்லாத மலைக்குன்றுப் பகுதிகளில் இந்த கும்பல் கள்ளச்சாராயத்தை காய்ச்சி அந்தக் கிராமங்களில் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்து வருவதாக அங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.
80 முதல் 100 ரூபாய் வரை கள்ளச்சாராய பக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. மலை கிராமங்களில் உள்ள சிலர் இதை பல ஆண்டுகளாக தொழிலாகவே செய்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
“ஐயோ… என் குடும்பமே அழிஞ்சு போச்சு… ஊரே அழிஞ்சு போச்சு.” எனக் கதறும் குரல்களே எங்கும் கேட்கின்றன. அநாதையாகி நிற்கும் குழந்தைகள் ஏராளம். மொத்தத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்டம்!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை மோசமாகி வருவது, பலி எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டே போகிறது.
இதேவேளை மதுவிலக்கை உடனே அமுல்படுத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று போராட்டம் நடத்த ஒன்று கூடுமாறு சமூகவலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்ததாக தகவல் பரவியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவமானது தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.சாரங்கன்