‘பொருளாதாரப் பரிமாற்றச் சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இதுபற்றிக் கலந்துரையாடுவதற்கு எமது கட்சி தயாராக உள்ளது’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கே: எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதாரப் பரிமாற்றச் சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?
பதில்: முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பொருளாதாரக் கொள்கைகளை ஆராய்வதற்காக இதன் ஊடாக ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும், முதல் பகுதியில் சில வீதம் காணப்படுகின்றது. அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சதவீதம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை இச்சட்டமூலத்தில் சேர்ப்பது பொருத்தமற்றது என்பதே எனது நிலைப்பாடாகும். ஏனெனில் இந்த விடயங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தேசியக் கொள்கைகள் மற்றும் அது போன்ற இலக்குகளை அடைவதற்காக இவற்றை முன்வைப்பது எத்தனை தூரம் பொருத்தமானது?
நமக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகளில் இதுவும் ஒன்று. மேலும், இதன் ஊடாக ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பன்னிரண்டு சட்டங்கள் உள்ளன. நாட்டு மக்களுக்குப் போதுமான வாழ்க்கைத் தரத்தை வழங்குதல், பொருளாதார நெருக்கடிகளைத் தடுப்பது போன்றவையே இவற்றின் நோக்கமாகும். ஆனால் இந்த ஆணைக்குழுவில் 6 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதில் கூட்ட நடப்பெண் 5 ஆகும். ஆணைக்குழுவாக இருந்தாலும் ஜனாதிபதியின் கருத்து மாத்திரமே அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுவதாயின் அதன் உறுப்பினர்களின் பெயர்களை முன்மொழிவதை மாத்திரமே நிறைவேற்று ஜனாதிபதியால் மேற்கொள்ள முடியும்.
ஆனால் அவர் தகுதியானவரா, இல்லையா என்பது சுயாதீனமாகவே தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு சில அளவுகோல்கள் இருக்கலாம். இதில் உள்ள மற்றுமொரு விடயம் சபைகள் பல உருவாக்கப்படவுள்ளமையாகும். ஈசி போர்ட் ஊடாகவே நிர்வாகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது. தற்பொழுது முதலீட்டு ஊக்குவிப்புச் சபை இது தொடர்பான விடயங்களை நிறைவேற்றும் அமைப்பாக உள்ளது. இன்வெஸ்ட் ஸ்ரீலங்காவின் ஊடாக முதலீடுகளை ஈர்ப்பது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள சபைகள் பற்றி இதில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு ஸ்திரமின்மை நிலவுகிறது. மேலும், முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இவை அரசால் நடத்தப்படுகிறதா? தனியாரால் செய்யப்படுமா என்பது தெரியவில்லை. இவற்றைக் கொண்டு வருவதால் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்காது. இவை வெறும் நிறுவனப் பிரச்சினைகள் அல்ல.
கே: இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு எவ்வாறானதாக இருக்கும்?
பதில்: வெவ்வேறு திருத்தங்களை நாங்கள் முன்மொழிய எதிர்பார்க்கின்றோம். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால் இது பாரியதொரு பிரச்சினையாகத் தோன்றிவிடும்.
கே: அதாவது, இச்சட்டமூலத்தில் நல்ல விடயங்கள் பல இருக்கின்றபோதும், சிலவற்றைத் திருத்த வேண்டியிருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்களா?
பதில்: ஆம், பல குறைபாடுகள் திருத்தப்பட வேண்டியுள்ளன. இவை பெரிய நோக்கங்களைக் கொண்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்திற்கான தூதர்களின் நியமனங்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்தி ஆணைக்குழுவை அமைப்பது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனம் ஒன்றை நிறுவுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்க கட்டளைச் சட்டம், கம்பனிச் சட்டம், உள்நாட்டு வருமானம் மற்றும் நாணயச் சட்டம், அந்நியச் செலாவணிச் சட்டம், தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சட்டம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டம் இவற்றில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளின் தேசிய உற்பத்தி ஆணைக்குழு யாரிடம் பொறுப்புக் கூறுவது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை நாம் ஆராய வேண்டும். முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தற்போதைய விதிகள் இரத்து செய்யப்படுமா என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
கே: இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் எதிர்க்கட்சிகள் இச்சட்டமூலத்தை ஆதரிக்குமா?
பதில்: ஆம், குறைபாடுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அதற்கான எந்தவித கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்படவில்லை.
கே: எதிர்க்கட்சிகள் விவாதத்திற்கு தயாரா?
பதில்: எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் குழுநிலை விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
கே: சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஒரு கட்சிக்கு சாதகமாக இல்லாத முறையில் தலைகீழாக மாற்ற முடியுமா?
பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இது மிகவும் பரந்த கொள்கை ரீதியான இணக்கப்பாடாகும். நாங்கள் பரந்த கொள்கை உடன்பாட்டில் இருக்கிறோம். சர்வதேச நாணய நிதியம் வரவுசெலவுத்திட்ட இடைவெளியைக் குறைத்தல், தொகையைக் குறைத்தல் போன்ற விடயங்களையே எதிர்பார்க்கின்றது. வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசாங்கத்தினால் பணத்தைச் சேர்க்க முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், எமது முன்மொழிவுகள் என்ன என்பதைக் கூறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு இடமளிக்கின்றது. இங்குதான் அரசுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
கே: பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாட்டுப் பணத்தைக் கடன் வாங்கவோ முடியாத அரசாங்கத்தின் கீழ் அத்தியாவசியச் செலவுகளை எப்படிச் சந்திப்பது?
பதில்: இந்த அரசு வருமானத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டது, செலவு அடிப்படையில் அல்ல. செலவைக் குறைக்க வேண்டும். செலவினங்களைக் குறைக்க, அரசாங்கத் துறையில் காணப்படும் வீண்விரயம் மற்றும் ஊழலைக் குறைக்க வேண்டும். அவை ஒவ்வொன்றுக்கும் எங்களிடம் வேலைத்திட்டம் உள்ளது.
கே: ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தொடர முடியுமா?
பதில்: அதை விருப்பப்படி செய்ய முடியாது. இது ஒரு பொய்யான கதை. நாங்கள் ஒரு விரிவான பணி ஒழுங்கு மற்றும் சரியான கொள்கையில் இருக்கிறோம். அவற்றைச் செயற்படுத்தும் போது பெரிய மாற்றங்களைச் செய்யலாம்.
கே: ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், எதிர்கால கடன் செலுத்துதல் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?
பதில்: இந்தக் கடனை செலுத்துவது குறித்து அரசு இப்போது ஆலோசித்து வருகிறது. ஒரு அரசைப் பொறுத்தவரை உடன்பாடு ஏற்பட்டால், அதை ஒதுக்கி வைக்க முடியாது. அந்த உடன்படிக்கைக்குள் நாம் இருக்க வேண்டும். இல்லையெனில் பேசி ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். அது இல்லாமல், நம்பிக்கை முற்றிலும் உடைந்துவிடும். சில அரசியல் கட்சிகள் இந்த முட்டாள்தனமான கதைகளைக் கூறுகின்றன, அப்போது இந்த நாட்டிற்கு கடன் கிடைக்காது. முதலீடு இல்லை. நாடு முன்னேற, ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கான சர்வதேச நம்பிக்கை இருக்க வேண்டும். சர்வதேச தரம் இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு இது புரியவில்லை.