மழைவிட்ட பின்பும் தூறல் நிற்கவில்லை என்பது போல இந்திய மக்களவை. தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பின்பும் சபாநாயகர் பொறுப்பு யாருக்கு வழங்குவது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. முன்பு போல தனிப் பெரும்பான்மையில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று எல்லா முடிவுகளையும் தனித்தே எடுத்திருப்பார்கள். இப்போது கூட்டணி ஆட்சி என்பதால். கூட்டணிக் கட்சிகளின் கருத்தையும் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சுபாநாயகரை நியமிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.
நாளை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இருவரின் பெயர்கள் பரீசிலனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாளை ஜூன் 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட இருக்கிறது. அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 26 ஆம் திகதி சபாநாயகரை அரசு நியமிக்கலாம் எனவும் அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.
பீஹாருக்கும், ஆந்திரத்திற்கும், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அம்மாநிலங்களில். அரசியல் தலைவர்கள் இதை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம், மாநில சட்டமன்றத்தில் பிஹாருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும். என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வென்றதன் மூலம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவும் கடந்த காலங்களில் ஆந்திரத்திற்கு மாநில சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமாரும் சந்திரபாபு நாயுடுவும் அங்கம் வகிக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் மாநில அந்தஸ்து கோரிக்கை மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு கையாளப் போகிறார் என்பதை எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி உளவியல் ரீதியாக உடைந்து போயிருக்கிறார். ஆட்சியை நடத்த முடியாமல் தடுமாறுகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களை அச்சத்தில் வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்த மோடியால் தற்போது அப்படி செய்ய முடியாமல் இருக்கிறது. அதனால் தான் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று ராகுல் விமர்சிக்கிறார்.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் பிரதமர் சொல்வதுதான் நடைமுறைக்கு வந்ததாக இருந்த நிலைமாறி கூட்டணி ஆட்சியில் வார்த்தைகளை கவனமாக வெளியிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் தான் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார். கனத்த மௌனத்துடன் பிரதமர் இருப்பதால் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியை நடத்தவே தடுமாறிக் கொண்டிருக்கும் ஜனநாயக கூட்டணியினர் இந்தியா கூட்டணியினர் முன்வைக்கப் போகும் வினாக்களுக்கு எவ்வாறு பதில் சொல்லப் போகிறார்கள் என்று அரசியல் நோக்கர்களும். எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியபோராட்டமாக மாறினால் பிஹார், ஆந்திர மாநில இளைஞர்களும் இதில் தீவிரமாக பங்கெடுத்தால். அது கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கலாம் என்ற பயமும் ஆளும் கட்சியினரிடம் இருக்கிறது.
நீட் குழறுபடிகள் பற்றி வாய் திறக்காத பிரதமர் நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது. கல்வியை மனித நலனுக்கான கருவியாக கருதும் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும். என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் இந்தியா, தனது கல்வி முறையையும், அதற்கேற்ப மேம்படுத்தி வருகிறது. உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்பதே எனது நோக்கம். உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்படும் நிலையை அடைய வேண்டும்.
இதற்காக மிகத் தரமான ஆய்வு சார்ந்த உயர்கல்வியை உருவாக்குவதில் ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்படுவதாக பேசியுள்ள பிரதமர், நீட் தேர்வு மோசடிகள் பற்றி கருத்து கூறாமல் இருப்பது, நாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது, புதிய கல்விக் கொள்கை இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய பரிணாமத்தை அளித்துள்ளது என்று கூறும் பிரதமர், நீட்தேர்வுப் பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் பற்றி கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது கவலை தருவதாக இருக்கின்றது என்ற பொதுமக்களின் கருத்தும் எதிர்ப்பு அலையை உருவாக்குகிறது.