ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், வாக்குகளைச் சேகரிப்பதற்கான முனைப்புகளில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
விசேடமாக சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரும் விதமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிறுபான்மைக் கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்னமும் உறுதியாக அறிவிக்கப்படாத போதிலும், தேர்தலில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் பிரதான வேட்பாளர்களே இவ்வாறான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுவார்கள் என்பது ஓரளவுக்கேனும் உறுதியாகியுள்ளது.
மறுபக்கத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதுடன், அண்மையில் அரசியல் பணிமனையொன்றைத் திறந்துவைத்து இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் இந்தப் பிரதான அரசியல்வாதிகள் வடக்கிற்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களை நேரடியாகச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக வடக்குக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிகழ்வுகளில் தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இது மாத்திரமன்றி யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய வீடு தேடிச் சென்று சந்தித்திருந்தார் ஜனாதிபதி.
இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்பட்டிருந்தாலும், இது தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு விஜயமாக இருக்கவில்லை. ஜனாதிபதி என்ற ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களுக்காகக் கையளிக்கும் நிகழ்வுக்கான விஜயமாக அமைந்திருந்தது.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஏனைய இரண்டு அரசியல் தலைவர்களும் வடக்கின் வாக்குகளை தமக்குச் சாதகமாகப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இவர்களின் விஜயத்தின் போது அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தபோதும், நேரடியாகத் தமக்கு ஆதரவு வழங்குகள் என்ற கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இருந்தபோதும், சந்திப்புக்களின் நோக்கம் ஆதரவைப் பெற்றுக் கொள்வது என்பதாகவே அமைந்திருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளன. அரசியலமைப்பில் திருத்தங்கள் பல செய்யப்படவேண்டியுள்ளன என்பது இந்தச் சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், தற்பொழுதிருக்கும் மாகாணசபை முறைமைதான் முற்றுமுழுதான தீர்வு இல்லையென்பதும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமது தெளிவான நிலைப்பாட்டை அவர் எடுத்துக் கூறியிருப்பதாகவும், எதிர்வரும் காலத்தில் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதுபற்றிய விடயங்கள் உள்ளடக்கப்படும் பட்சத்தில் அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
தமிழரசுக் கட்சி மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் உள்ளிட்ட சில கட்சிகளையும் அநுரகுமார திஸாநாயக்க சந்தித்திருந்தார். புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் நடத்திய சந்திப்பில் தாம் தமிழ் பொதுவேட்பாளருக்குத் தான் ஆதரவு வழங்குவோம் என்ற விடயத்தைத் தெளிவாகக் கூறியிருப்பதாக புளொட் அறிவித்திருந்தது.
அது மாத்திரமன்றி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சைவசமயத் தலைவர்களையும் வடக்கில் சந்தித்துள்ளனர். நாட்டில் நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய சைவ சமயத் தலைவர்கள், “போரில் எந்தக் குற்றமும் செய்யாத பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தபோது, இடதுசாரித் தலைவர்களாக இருந்த நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை? நீங்கள் அப்போது எங்கே போயிருந்தீர்கள்” என சைவசமயத் தலைவர்கள் இச்சந்திப்பில் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இக்கேள்வியானது ஜே.வி.பியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வினாவுக்குப் பதிலளிப்பதில் அவர்கள் தடுமாறியிருந்தனர்.
அது மாத்திரமன்றி, “யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு உங்களால் தீர்வை வழங்க முடியவில்லையே” என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், மதத்தை வைத்து அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியில் அதிக பங்கை வகிக்கும் ஜே.வி.பியின் கடந்தகால செயற்பாடுகளை எடுத்துப் பார்க்கும்போது, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் அவர்கள் நாட்டம் கொண்டிருக்கவில்லை என்பது பகிரங்கமான விடயமாகும்.
முன்னர் இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படுவதற்கும் பின்னணியில் இருந்தது ஜே.வி.பி ஆகும்.
விமல் வீரவன்ச ஜே.வி.பியின் உறுப்பினராக இருந்தபோதே வடக்கு- கிழக்கு இணைந்த மாகாணத்தைப் பிரிப்பதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். அது மாத்திரமன்றி, இறுதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மஹிந்தவுடன் கைகோர்த்திருந்த ஜே.வி.பியினர், தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளைக் கடந்த காலத்தில் முன்னெடுத்திருக்கவில்லை என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இதேவேளை, நான்கு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்குக்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர், பாடசாலைகளுக்குப் பல்வேறு உதவித் திட்டங்களைக் கையளித்திருந்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி எனப் பலபகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் வழங்கியிருந்தார்.
அது மாத்திரமன்றி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார். இவருடைய யாழ் விஜயத்தின் ஓர் அங்கமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பும் அமைந்தது.
இந்தச் சந்திப்பிலும் அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றிய தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருப்பதாக சஜித் பிரேமதாச ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார். “13 பிளஸ், மைனஸ் பற்றி நான் எதுவும் கூறவில்லை. 13 ஆவது திருத்தம் என்பது அரசியலமைப்பில் உள்ள ஓர் விடயம். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” எனக் குறிப்பிட்டிருந்த சஜித் பிரேமதாச, ஜனநாயக நாடு என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் போட்டியிடுவதற்கான உரிமை உள்ளது எனக் கூறிருந்தார்.
அதேவேளை வடக்குக்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இனப்பிரச்சினைக்கான தீர்வை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தாதது ஏன் என்ற வினாவும் இங்கே முன்வைக்கப்படுகின்றது.
பொதுவேட்பாளர் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். அதிகாரப் பகிர்வு விடயத்தில் தமது தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருப்பதாகவும், கடந்த காலத்தில் அவருக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவை மீண்டும் நினைவுபடுத்தியதாகவும் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தேர்தல் களத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களிலும் இவ்விடயம் தேர்தலுக்கான முக்கிய கோஷமாக முன்வைக்கப்பட்டிருந்த போதும், இதற்கான தீர்வைக் காண்பதில் எந்தவொரு தலைவரும் முன்வந்திருக்கவில்லை. அது மாத்திரமன்றி 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடக்கில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடியிருந்த நிலையில், கொழும்பில் அவருடைய தலைமையகத்துக்கு வெளியே ஒரு சிலர் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர்.
‘இலங்கைப் பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு’ என்று தம்மை அழைத்துக் கொண்டு, தேசியக் கொடிகளை ஏந்திய குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு எதிராக ஒரு அறிக்கையை கையளிப்பதற்காக தாம் வந்துள்ளதாகவும், சஜித் பிரேமதாச அலுவலகத்துக்குள் இருந்தால், வெளியே வரவேண்டும் என்றும் மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் இயக்கத்தின் தலைவர் ஜமுனி கமந்த துசார இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முதலில், வடக்கு மற்றும் கிழக்கைப் பிரித்து விட்டுக் கொடுப்பதன் மூலம் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதைச் சொல்லுங்கள் என்று மற்றொரு எதிர்ப்பாளர் சத்தமிட்டார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது தேர்தல் என வரும்போது மீண்டும் இது போன்ற விடயங்களைக் கையில் எடுப்பதற்கு அடிப்படைவாதப் போக்கைக் கொண்ட சிலர் இன்னமும் தயாராக இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற தரப்பினர் வெளிப்பட்டிருந்தனர்.
“நாடு பிரிக்கப்படப் போகின்றது, நாடு விற்கப்படப் போகின்றது. இதனைக் காப்பாற்ற வேண்டும்!” என்ற கோஷங்களை முன்நிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.
நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் இன்னமும் இதுபோன்ற கோஷங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்வது எந்தளவுக்கு நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அத்துடன், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களுக்கு அப்பால் சென்று மக்கள் அன்றாடம் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள் போன்ற தொலைநோக்கான சிந்தனைகளை மக்கள் இந்த அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டும்.
அதனை விடுத்து வழமையைப் போன்று அரசியல் தீர்வு போன்ற விடயங்களை மாத்திரம் மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியலில் மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என்பதுதான் நாட்டை நேசிப்பவர்களின் கருத்தாக இருக்கின்றது.