இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சியமைத்துள்ள போதிலும், மோடியின் ஆட்சி நிலைத்து நீடிக்குமா என்பது ஐயத்துக்குரியதாகவே உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.கவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைத்திருந்ததால், இந்திய அரசியலில் ‘கிங் மேக்கர்கள்’ இல்லாமல் போனார்கள். சிறிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகளுக்கு தேசிய அரசியலில் இடம் இல்லாமல் போனது.
ஆனால் இப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 16 எம்.பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் 12 எம்.பிக்கள் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு முக்கியமாகியுள்ளார்கள். அதனால் இந்த இரண்டு தலைவர்களும் கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளார்கள்.
சந்திரபாபு நாயுடுவுக்கு நிதிஷ் அளவுக்கு பா.ஜ.கவுடன் பிணைப்பு இல்லை. பா.ஜ.க தயவு இல்லாமலே அவர் ஆந்திராவை ஆட்சி செய்ய முடியும். ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பது அவரின் வெளிப்படையான கோரிக்கை.
`பா.ஜ.கவை நாங்கள் உடைக்க மாட்டோம்.. ஆனால் அவர்களது கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும். அது ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்றே தெரிகிறது” என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மோடி பிரதமரானாலும், இனி அவரால் தன்னிச்சையாக செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளுடன், அதிலும் முக்கியமாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தே திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதாவது முழுமையான அதிகாரமற்ற தலைவராகவே அவர் ஆட்சியில் இருப்பார்.
இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு மற்றும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், தோழமைக் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம். ஏனென்றால், பிரதமர் மோடிக்கு இந்த கூட்டணிக் கட்சிகளோடு இணங்கி ஆட்சி செய்த அனுபவம் சுத்தமாக இல்லை. மேலும், அவர் இன்றுவரை முதலமைச்சர் தேர்தலிலும் சரி, பிரதமர் தேர்தலிலும் சரி மிகப்பெரிய கூட்டத்தை தன்பக்கம் வைத்துக்கொண்டு தான் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்து 10 ஆண்டுகளாக அவர் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்திருக்கலாம். இனி அவருக்கு அந்தச் சுதந்திரம் இல்லை. இனி அவர் எடுக்கப்போகும் முடிவுகள் கண்டிப்பாக அனைவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் எடுக்கப்பட முடியும்.
அதிலும் குறிப்பாக, இந்தியக் குடிமக்கள் பதிவேடு (NRC), பொது சிவில் சட்டம் (Uniform Civil Code), நிதித்துறை மற்றும் மாநிலங்கள் மீதான ஆளுநர்களின் தலையீடு ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றம் கண்டிப்பாக இருக்கும். அப்படி மாற்றம் இல்லை என்றால், மாநிலங்கள் வாரியாக மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு இது முதல் தோல்வி என்றே கூறலாம். கூட்டணிக் கட்சிகளோடு வேறு வழியின்றி சகித்துக்கொண்டு ஆட்சி நடத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடியின் அரசியல் போக்கில் இனி கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பா.ஜ.க அரசுடன் இணங்கி செயல்பட எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது? என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மனிதர். தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ள திறமையான அரசியல் தலைவர்.
அதேபோல, என்னதான் கூட்டணியில் இருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் தலைவர்களின் மிக முக்கியமானவர் நிதிஷ்குமார். இப்படியான தலைவர்களுடன்தான் பா.ஜ.க இனிமேல் ஆட்சி செய்தாக வேண்டும்.
மற்றொரு பக்கம், என்னதான் கூட்டணி அமைத்து ஆளும் கட்சியோடு இணைந்து ஆட்சி செய்தாலும், பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரால் முழுமையாக உடன்பட முடியாது. அப்படி உடன்பட்டால் அவர்களின் அரசியல் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்பதும் உண்மை.
இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியும் சரிசமமாக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மக்கள் இந்தியா கூட்டணியை நன்கு ஆதரித்துள்ளனர்.
மேலும், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இந்த வருடத் தேர்தலில் நன்றாக முன்னேறி இருக்கிறது. இனிவரும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
திருப்தியில்லாத வெற்றியுடன் மோடி ஆட்சி தொடங்கியிருக்கிறது. ஆனால், மோடி தலைமையிலான முன்னைய அரசுகளைப்போல அல்லாமல், இது மாறுபட்ட ஓர் ஆட்சியாக இருக்கப்போகிறது.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என்ற இரண்டு கிங் மேக்கர்களின் கண்ணசைவுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப இயங்கக்கூடியதாக இந்த ஆட்சி இருக்கப்போகிறது என்பதற்கு நிறைய அறிகுறிகள் தென்படுகின்றன.
சுதந்திர இந்திய வரலாற்றில், `ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து மூன்று முறை பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவர்’ என்ற பெருமையை மோடி பெற்றிருக்கிறார் என்று குதூகலிக்கிறார்கள் பிரதமர் மோடியின் அபிமானிகள். ஆனால், ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பா.ஜ.க பெறாமல் போன சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசியல் கண்டிராத பல காட்சிகள் தற்போது அரங்கேறி வருகின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் திகதி மாலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வீதிக்காட்சி நடத்தியபடி பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு வருவார் என்று முன்கூட்டியே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அப்படி ஒரு வீதியுலா காட்சி நடக்கவில்லை. மறுநாள் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ) தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தின் புகைப்படமே, வெற்றியின் அடையாளமாக வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவால் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றம் இதுதான்.
ஜூன் 4 ஆம் திகதி பா.ஜ.க அலுவலகத்தில் பேசிய மோடியின் முகத்தில் உற்சாகம் இல்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி வெற்றி’ என்றெல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திப் பேசிக்கொண்டிருந்த அவர், ‘‘இது என்.டி.ஏவுக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.
ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 59 எம்.பிக்கள் என்றிருக்கும் அளவுக்கு மக்களவை மாறியிருக்கிறது. கூட்டணியின் பலத்தில் மோடியின் ஆட்சி மூன்றாவது முறையாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.
எஸ்.சாரங்கன்