இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது தவணையை வெளியிட சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
சர்வதேச நாணய நிதியம் கடன் தவணையை வழங்குவது தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாம் பல்வேறு அரசியல் கட்சிகளாக பிரிந்திருந்தாலும் இது தேசிய பிரச்சினை. நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அது அவசியமாகும். இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களிலும் நாம் உடன்படவில்லை.
ஆனால் இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு உலகின் கடைசி கடன் தீர்வான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் இல்லாமல் வேறு வழி இல்லை என்று இலங்கை மத்திய வங்கி கூறுகிறதே?
ஒரு கட்சியாக நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. அப்போது நாடு இருந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நல்லெண்ணத்தில் எதிர்க்காமல் இருந்தோம். எனினும் அப்போது IMF க்கு எதிராக வாக்களித்த சில கட்சிகள் தற்போது நாமும் IMF உடன் முன்னோக்கி செல்கிறோம், IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் போன்ற கதைகளைக் கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. இந்தக் கடன் தவணை கிடைத்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஒப்புக்கொண்ட விடயங்கள் அனைத்தும் சட்டமாக பாராளுமன்றத்தில் கொண்டு வந்து சட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு நாங்கள் முற்றிலும் எதிரானவர்கள்.
அவ்வாறு எதிர்த்துக் கொண்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேற முடியும் என்று நினைக்கிறீர்களா?
கொடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தவறானவை. தெரிந்து கொண்டே தவறான விடயங்களுடன் எம்மால் இணங்க முடியாது. ஒப்புக்கொண்ட விடயங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டால், அது பெரிய பிரச்சினையாக மாறும். உதாரணத்திற்கு, இன்னும் 4 மாதங்களில் ஆட்சி அமைக்க எதிர்பார்க்கின்றோம். அப்போது எமது அரசாங்கம் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்க்கின்றது. இந்த தவறான முடிவுகளைக் கொண்டு நாம் அதைச் செய்ய முடியாது.
எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கும், IMF க்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அரசாங்கம் மாறினால் இந்த ஒப்பந்தம் இரத்தாகாதா?
இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் இருந்து எங்களுடைய வேலைத்திட்டம் வேறுபட்டது. இங்கே இருப்பது ஒரு புதிய தாராளவாத வேலைத்திட்டமாகும். ஜே.வி.பியிடம் இருப்பது சோசலிச வேலைத்திட்டமாகும். எங்களிடம் சமூக சந்தைப் பொருளாதார திட்டம் உள்ளது. எனவே இதனை மாற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு உரிமை இருக்க வேண்டும். அடுத்தது, இன்று நாங்கள் குறித்த விடயங்களுடன் இணங்கிவிட்டோம் என்றால், எமக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை வந்தால் என்ன ஆகும்? உதாரணமாக, 2007- – 2008 காலத்தைப் போன்று நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என எடுத்துக் கொள்வோம். அது எங்கள் தவறு அல்லவே. அப்படி ஒரு நெருக்கடி வந்தால் அதை முகாமைத்துவம் செய்வதற்கு சில விஷயங்களை மாற்ற வேண்டும். அதன்போது மேற்சொன்ன விடயங்களுடன் வேலை செய்ய முடியாது. ஆனால் அவை ஒரு சட்டமாக மாறியிருந்தால், அந்தச் சட்டங்களை நாம் மீறியதாகிவிடும். அதனால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.
IMFஇன் மூன்றாவது கடன் தவணை கிடைத்த போதிலும் தம்மீது இன்னும் வரிகள் சுமத்தப்படும் என்ற பயம் மக்களிடத்தில் உள்ளதுதானே?
அரசாங்கம் இலக்கங்களில் நாட்டை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது. வரி வருமானம் அதிகரித்துள்ளது என இலக்கங்களில் கூறுகிறார்கள். வரி வீத அதிகரிப்பே அதற்குக் காரணம். வரி சதவீதத்தை அதிகரித்தால், வரி வருமானம் பெரும்பாலும் அதிகரிக்கும். அதைச் செய்துவிட்டு இலக்கங்கள் அதிகரித்துள்ளன என்பதை பெரிய அதிசயமாக நான் பார்க்கவில்லை. வரி அதிகரிப்பு சாதாரண மக்களையும் பாதிக்கிறது. வரி செலுத்தாதவர்கள் எப்படியும் செலுத்தப்போவதில்லை. எனவே, வரி வருவாய் அதிகரித்திருப்பதையிட்டு எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.
நாடு முன்னர் இருந்த நிலையிலிருந்து இன்னமும் மீளவில்லை என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?
இல்லை, சில விடயங்களில் நிலைத்த தன்மையை அடைந்துள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இதனை இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாம் மோசமானவர்கள் அல்ல. ஆனால் நியாயமான முறையில் வருமானத்தைப் அதிகரித்துக் கொண்டே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் இங்கு வரி முறைகளின் மூலமே சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எங்கள் கட்சியின் திட்டங்கள் இதைவிட மாற்றமானவை. அடுத்த தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். எமது அரசாங்கத்தின் கீழ் இந்த முறையை மாற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அந்த நடைமுறையினை மாற்றுவதற்கு உங்கள் கட்சியின் திட்டங்கள் எவை?
ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வெவ்வேறு திட்டங்கள் இருக்கும். இதை நாங்கள் நல்லெண்ணத்துடன் செய்கிறோம். நமது நாடு இன்னும் பொருளாதார அபாய வலயத்திலேயே உள்ளது. அந்த ஆபத்து வலயத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும். IMF வேண்டாம், எம்மிடம் மாற்று வழிகள் உள்ளன என நாங்கள் பொய்யாகக் கூச்சலிடவில்லை.
மக்களுக்குப் பொறுப்புக்கூறும் ஜனரஞ்சக எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். எனவே, பூமியின் யதார்த்தத்திற்கு ஏற்ப அதை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. இதை சட்டமாக கொண்டு வந்தால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது.
அதாவது, ஐக்கிய மக்கள் சக்தி கண்டிப்பாக அந்தக் கொள்கைகளை மாற்றும். அப்படித்தானே?
ஆம். நாம் மாற்றுவோம். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட நடவடிக்கை பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையிலான பிரதிநிதிகளைச் சந்தித்தபோது நாம் இதனை அவர்களிடம் கூறினோம். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றே நாம் தொடர்ந்து கூறி வருகிறோம்.
நாடு பாதாளத்தில் வீழ்ந்திருந்த சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கம் IMF இடமிருந்து உதவியைப் பெறச் சென்ற போது கட்சி என்ற வகையில் நாம் அவர்களுக்கு குழி தோண்டவில்லை என்பது IMF க்கும் நன்றாகத் தெரியும்.
சில நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அந்நாடுகளின் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவேயில்லை. அந்த நாடுகள் உணவின்றி மக்கள் இறக்கும் இடமாக மாறியது.
எனினும் அவ்வாறான எதுவும் இடம்பெற நாம் இடமளிக்கவில்லை. அரசியல் ரீதியில் பாதகங்கள் இருந்தாலும் அந்த நேரத்தில் நாம் நாட்டைப் பற்றியே சிந்தித்தோம்.
எனவே, எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அதை மாற்ற அனுமதிக்க வேண்டிய பெரிய பொறுப்பு அவர்களுக்கும் உள்ளது.
ஏனெனில் இது ஒரு அரசியல் கட்சியின் பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பற்றி நீங்கள் பெருமையாகக் கூறுகின்றீர்கள். உங்கள் கட்சி தேர்தலுக்கு ஆயத்தமாக உள்ளதா?
தேர்தலுக்கு நாம் தயார். நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்.
சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்