வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு இந்த நாட்களில் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து அது தொடர்பில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அண்மையில் மக்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார். இதேவேளை, ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், மாகாண சபை முறைமைக்கு தாம் உடன்படுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் நீரோட்டத்தில் போட்டியிடும் மூன்று பிரதான கட்சிகளில் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபை முறைமையிலும் 13வது திருத்தச் சட்டத்திலும் இணக்கமாக இருப்பது இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கான சிந்தனையில் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. நாட்டின் பல பிரதான அரசியல் கட்சிகள் தற்போது மாகாண சபை முறைமை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதே இதற்குக் காரணம். 1987 இல் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் நிறுவப்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக காட்டப்படலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்காக மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் விளைவு அது. அன்றைய பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச, ஜே.ஆர் மற்றும் ராஜீவ்காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேளையில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர் ஆரம்பத்தில் அதற்கு எதிரானவர். அப்படியிருந்தும் அரசாங்கம் மாகாண சபைகள் தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்ததன் பின்னர், பிரதமர் பிரேமதாச மாகாண சபை முறைமை தொடர்பில் சாதகமான நிலையைப் பேணியதாக தெரிகிறது.
இருந்தபோதிலும், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தலைப் புறக்கணித்து அதில் போட்டியிடவில்லை. மாகாண சபைகள் தொடர்பான ஜே.வி.பியின் அணுகுமுறை இன்னும் பயங்கரமானது. முதலாவது மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அக்கட்சி, மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க வன்முறையில் ஈடுபட்டது. அத்துடன், மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். 13ஆவது திருத்தத்தை பாதித்த இந்திய- – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர், இலங்கை மீது இந்தியா திணித்த மாகாண சபை முறைமை எனக் கூறி அக்கட்சி தனது எதிர்ப்பைத் தொடங்கியது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது நடவடிக்கைகளை தக்கவைத்துக் கொள்வதற்குப் போதுமான அதிகாரப் பரவலாக்கம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றன. மொழியைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருந்தன. எனினும் அந்தக் கோரிக்கைகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாததன் விளைவாக இனங்களுக்கிடையில் இடைவெளியை உருவாக்கும் நிலை படிப்படியாக உருவாகி வந்ததை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. காலாகாலமாக இடம்பெற்ற இனவாதக் கலவரங்களால் நிலைமை மேலும் வளர்ந்தது. பல்வேறு அரசுகள் சில ஒப்பந்தங்களைச் செய்து அதனைத் தீர்வாக நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. இனப்பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வை வழங்க இயலாமையின் மற்றுமொரு விளைவே முப்பது வருட யுத்தம் எனவும் கூறலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போரை முடிவுக்கு கொண்டு வந்து, பயங்கரவாத நெருக்கடியிலிருந்து பொதுமக்களை காப்பாற்றினார். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருந்தும் பல்வேறு தரப்பு மக்களிடையே நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை எட்டமுடியவில்லை எனத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க நீண்டகாலமாக உழைத்தார். அந்த நெருக்கடிக்கு நல்லிணக்கத்தின் மூலம் தீர்வைக் காணமுடியும் என நம்பிய அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தனது அரசியல் வாழ்க்கைக்கு சவாலாக இருந்தாலும் அதற்காக உழைக்க முன்வந்தார். டிசம்பர் 09, 2001 மற்றும் ஏப்ரல் 06, 2004 க்கு இடையில் அவர் பின்பற்றிய நடவடிக்கைகள் மூலம் இந் நிலைமை மேலும் தெளிவாகிறது.
ஜூலை 21, 2022 அன்று ஜனாதிபதியான பின்னர், தற்போதைய காலகட்டம் வரையில், அவர் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதன்மையாக கவனம் செலுத்தினார். இரண்டாவதாக, இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதிலேயே அவரது கவனம் இருந்ததாகத் தெரிகிறது. நாடு எதிர்நோக்கும் சில பிரச்சினைகளே அதற்கான காரணங்களாக நான் நினைக்கிறேன். போருக்குப் பின்னரான ஒன்றரை தசாப்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்களில் தொடர்ச்சியாக இலங்கையை அவமதிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றன. போரின் விளைவாக தமிழர்கள் மேற்குலகின் பல நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். அதிலிருந்து உருவான தமிழ் டயஸ் போரா அமைப்பு இலங்கைக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இலங்கை தொடர்பான எந்தச் செயற்பாட்டிலும் அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுகின்றன.
இப்போது போர் முடிந்து நீண்ட காலமாகிவிட்டது. தமிழ் சமூகத்தினரிடையே நிலவும் அதிருப்தியை நீக்கி அனைத்து சமூகத்தினரிடையேயும் ஒற்றுமையை வளர்ப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தரும். பல்வேறு நாடுகளில் அகதிகளாகவோ அல்லது அந்நாட்டுப் பிரஜைகளாகவோ மாறிய தமிழ் மக்கள் மீண்டும் சொந்த மண்ணுக்கு வந்து தாய் நாட்டில் வாழும் திருப்தியைப் பெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவும் இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்க முன்வந்தார்.
2022 டிசம்பரில் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்காக அனைத்துக் கட்சிகளின் மாநாட்டிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும், 2023 பெப்ரவரி சுதந்திர தினத்தன்று அறிவிக்கக்கூடிய ஆக்கபூர்வமான தீர்வை எட்ட முடிந்தால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார். அதன்படி, 2023 பிப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் 75ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காண்பதில் ஏனைய அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. ஜூலை 26, 2023 அன்று, அனைத்து அரசியல் கட்சிகளின் மாநாட்டிற்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் அதன் மூலம் கூட, பிரச்சினைக்கான தீர்வு குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. அதற்குக் காரணம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதில் இருந்து சில கட்சிகள் விலகியதேயாகும். இந்த முயற்சி அரசியல் ஆதாயத்திற்காக என்று தெரிவித்தார்கள்.
2022ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு இறுதிவரை அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க முயற்சித்து வருகிறார். இது அவரது அரசியல் புரளி என்று கூறி, மக்கள் விடுதலை முன்னணியும் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஆதரிக்கவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் 13ஆவது திருத்தமும் மாகாண சபைகளும் உடனடியாக மிக முக்கியமான விடயங்களாக மாறியுள்ளன.
இப்போது அவர்களின் வாக்குறுதிகள் தொடரில் 13ஐ அமுல்படுத்துவது மற்றும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது போன்ற வாக்குறுதிகள் உள்ளடக்கப்படுகின்றன. இதற்குக் காரணம், தங்களின் ஜனாதிபதி கனவுகள் நனவாகுவதற்கு நாட்டின் தமிழ் மக்களின் வாக்கு இன்றியமையாதது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்காக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏலம் விடவும் வாங்கவும் சில கட்சிகள் இப்போது தயாராக உள்ளன.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மீண்டும் ஒருமுறை இந்த இரண்டு மாகாண மக்களும் உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளுக்கு பலியாகிவிடக் கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூறி ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களில் யார், அதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் தமிழ் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் அரசியல் நாடகங்களும் வாக்கு ஏலங்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை.
களனி பல்கலைக்கழக பொருளியற்றுறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் சுனந்த மத்துமபண்டார. தமிழாக்கம் வீ.ஆர்.வயலட்